சக்கரியாவுக்கு உள்ள மரியாதை எனக்கு ஏன் இல்லை ?

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

மலர் மன்னன்


சிறுபான்மையினர் மனம் புண்பட இடங் கொடுத்துவிடலாகாது, எவ்வளவு நிர்ப்பந்தமானாலும், என்ன விலை கொடுத்தும் மத நல்லிணக்கம் காக்கவேண்டும் என்றெல்லாம் நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு, கடைந்தெடுத்த கோழைத்தனமான பயங்கர வாத நாசவேலைகளை உறுதியோடு ஒடுக்குவதற்குப் பதிலாக அடக்கி வாசிப்பது எதில் கொண்டுபோய் விடும் என்பதற்கு ‘காலச்சுவடு ‘ டிசம்பர் 2005 இதழில் வெளியாகியுள்ள சக்கரியாவின் பத்தி ஒரு சரியான எச்சரிக்கை.

தாம் பிறந்து வளர்ந்து, வசதியாக வாழவும் வழிசெய்திருக்கும் தாயக மண் என்கிற அபிமானம் சிறிதுமின்றித் தொடர் குண்டு நாசவேலைகளில் இறங்கி, நூற்றுக் கணக்கான அப்பாவி உயிர்களைக் காவு வாங்கி, பலரை நிரந்தரமாக உடல் ஊனமுறச் செய்து, பெரும் பொருள் சேதத்தையும் விளைவித்து, அதற்காக மனமும் வருந்தாமல் மகிழ்ந்திருக்கும் பயங்கரவாதச் சிறு கும்பல் ஒன்று கோவைச் சிறையில் சகல வசதிகளோடும் வைக்கப்பட்டிருக்கிறது. வெளியே விட்டால் தனக்கு உள்ள ஆதரவின் பலத்தோடும், பணச் செழிப்பின் துணையோடும் அரசியல் செல்வாக்கோடும் அது தலைமறைவாகிவிடும் என்பதால்தான் வழக்கு முடியுமட்டும் அதை உள்ளே வைத்து பிரியாணிபோட்டுப் பராமரிக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு கோவை மத்திய சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருக்கும் அப்துல் நாசர் மதனியும் அவருடைய கூட்டாளிகளும் ஒழுங்கு செய்ய முற்படும் வார்டர்களை அடித்துப் படுகாயப்

படுத்துவதும், எதற்கெடுத்தாலும் ரகளை செய்துகொண்டும், விதிமுறைகளுக்கு விரோதமாகப் பல பொருள்களை உள்ளே வரவழைத்துப் பயன்படுத்திக் கொள்வதுமாக அட்டகாசம் செய்துவருகிறார்கள். சிறுபான்மை மனம் கோணாமை, மத நல்லிணக்கம், வாக்கு வங்கி அரசியல் போன்ற பலவாறான நோக்கங்களுக்காகவும், அச்சுறுத்தல்கள் காரணமாகவும் இந்த அத்துமீறல்கள் சகித்துக் கொள்ளப்படுகின்றன.

யார் இந்த மதனியும் அவர் சகாக்களும் ?

ஹவாலா மோசடி, அடாவடி அடிதடி, மதத்தின் பெயரால் தம் மதத்தைச் சேர்ந்த வணிகப் பெருமக்களிடம் கட்டாய மாமூல் என்று திரியும் வெறும் ரவுடிக் கூட்டம்! இக்கும்பலைத்தான் ஏதோ சிறையில் வாடும் அரசியல் கைதிகளைப் போல ஒரு சித்திரம் வரைந்து அவர்கள் மீது அனுதாப அலையைத் தோற்றுவிக்க முற்படுகிறார் மலையாள எழுத்தாளர் சக்கரியா, தமது பத்தியில்! தமிழ் நாட்டில் மலையாளிகளுக்குத் துன்பம் என்பது போலவும் ஓர் எண்ணம் உருவாக மிகவும் சாமர்த்தியமாக முனைகிறார்! விவரம் தெரிந்த எழுத்தாளரான சக்கரியாவே இப்படி வினையாற்றினால் மற்றவர்கள் போக்கு எப்படி இருக்கும் என்பதை விவரிக்கத் தேவை இல்லை.

மதனியும் அவர் சகாக்களும் மட்டுந்தானா, சில ஹிந்து முன்னணியினருங் கூடச் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். அவர்களுக்காகக் குரல் கொடுக்க நாதியில்லை. என்னைப் போன்றவர்களாவது இதுபற்றி எழுதலாம் என்றால் அதற்கு விரிவான ஒரு தளம் இல்லை. இவ்வளவுக்கும் விகடன், கல்கி, தினமணி என்று தொடர்ந்து எழுதி வந்த பிரபல எழுத்தாளன் என்கிற பூச்சுவேறு, என் மீது! எனக்கே இது பற்றி எழுதப் பெரிய பத்திரிகைகளில் இடம் இல்லை. காரணம், மதச் சார்பின்மை, மத நல்லிணக்கம், மதவாதிகளின் கண்மூடித்தனமான தாக்குதல் பற்றிய அச்சம் எனப் பல தயக்கங்கள்!

இங்கே சக்கரியா போன்ற எழுத்தாளர்கள் மனித உரிமை என்ற சாக்கில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகத் தங்கு தடையின்றி உரத்த குரல் எழுப்பமுடியும். ஆனால் நியாயமான பாதிப்புகளுக்காக வாதாடக் கூட எனக்கு வாய்ப்பு மறுக்கப்படும். ஏனென்றால் சக்கரியா சிறுபான்மையினரான கிருஸ்துவர். நானோ பெரும்பான்மையினனான ஹிந்து. அப்படித்தானா ?

—-

Series Navigation