கோடிட்ட இடங்களை நிரப்புக :

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

கே ஆர் மணி


பழைய கோப்புகள், புத்தகம் – போன்றவற்றை கிண்டிப்பார்ப்பதில் இருக்கும் சுகமே அலாதி. அவை அவ்வப்போது செய்யவேண்டிய
நிகழ்வுகளும் கூட, நம்மை இறந்த காலத்துக்கு எடுத்துசென்று அதனோடு ஒட்டிய நிகழ்வுகளை ரீவைண்ட் (மறுஒட்டம்)
செய்யமுயலும்போது கிடைக்கும் சிற்றின்பம் அலாதியானதுதான். இப்போது என் மடி-கணனியில் (லேப்டாப்) அவ்வப்போது அதன் தகட்டிலிலுள்ள சேமிப்பில் பழையவற்றை தூசு தட்டி, கிழித்து, அழித்து தூர எறியும் வேலையும்பிடித்தோ, பிடிக்காமலோ செய்யவேண்டியிருக்கிறது.(Hard Disk Space cleaning, deleting)

அப்படி செய்தபோதுதான் கீழேயுள்ள மின்னஞ்சல் கிடைத்தது. அனுப்பியபின் ஏதோஒரு காரணத்தால் மறுபடி எகிறி (Bounce) என் அனுப்புநர் பெட்டியிலே (Inbox) தஞ்சம் அடைந்துவிட்டது. நானும், என் கவனக்குறைவால் மறுபடி அனுப்பாது விட்டிருக்கலாம். நாலு வருட காலம் கழித்து, அதைப்படித்து பார்த்தேன். அது அனுப்பாததில் நிகழ்ந்த விளைவுகள் பின்னே..கட்டுரையின் கடைசியில். இந்த மின்னஞ்சல் என் அமெரிக்கதோழிக்கு.

என் தோழி, நீண்ட காலத்தோழி. நெருக்கமான இறுக்கமான தோழமை.. புதிதாய் திருமணமாகி.. ஒரு வருடத்தில் அங்குமிலாது.. இங்குமிலாது கொஞ்சம் தனியாளய், தவிப்பாய் உணர்ந்த நேரங்கள். புதிய பூமி, மண், இடம், காற்று. வேரூன்றாத நேரம்.. புதியிடத்தில் பாத்தி நடலில்.. கொஞ்சம் சிராய்ப்புகள் வேறு. என்னிடம் அதை நீண்ட (மிக நீண்ட) மின்னஞ்சலாய் கொட்டினதாய் ஞாபகம். அதைப்படிக்கவே அரை மணிக்குமேல் நேரம் எடுத்துக்கொண்டதாய் என் ஞாபகச்செல் கூறுகிறது. அப்போது அந்த மின்னஞ்சலுக்கு பதில் சொல்லும்விதமாய், இலக்கியத்தனமாய் – பதில் மின்னஞ்சல் தட்டினேன்.

மின்னஞ்சலே அநேகமான நேரம், செளகரியமானது. தொலைபேசியில் சில விசயங்கள் உணர்வுபூர்வமாய் பேசமுடிவதில்லை. முகம் தெரியாது வாய் வார்த்தைகளின் கணத்தை கணித்து பேசுவது கடினம். மிகச்சாதாரணமான செய்திப்பரிமாற்றத்திற்கு தொலைபேசி சரியானது. ஆழமான உணர்வு பரிமாற்றத்திற்கு ரிலையன்ஷோ, ஷ்கைப்போ (skype) கதைக்குவாது. சாட்- வெறும் வெட்டி அரட்டைக்கு, வெப்காமிலும் அதே தொல்லைதான். மின்னஞ்சல் இருப்பதிலே ஒரளவு சரியானது என தோன்றுகிறது. சாதாரண நிலையிலிருந்து கருத்துப் பரிமாற்றம் மேலெழும்போது ஒரளவு நல்லவாகனமாய் மின்னஞ்சல் பயன்படலாம். மதம் போல, மொழி போல – அறிவியலும், மனிதனுக்கு எப்போதும் எல்லா நேரங்களிலும் முழுவதுமாய் பயன்பட்டுவிடுவதில்லை. தீர்க்கப்படாத பக்கங்கள் – மனித வாழ்வில் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்போலும்..

போதும் நம் மின்னஞ்சல் விசயத்திற்கு வருவோம்.. படிக்க.

—–Original Message—–
From: MAILER-DAEMON@mailpro5.rediffmailpro.com [mailto:MAILER-DAEMON@mailpro5.rediffmailpro.com]
Sent: Thursday, October 19, 2002 8:24 AM
To: mani@techopt.com
Subject: failure notice

Hi. This is the qmail-send program at mailpro5.rediffmailpro.com.
I’m afraid I wasn’t able to deliver your message to the following addresses.
This is a permanent error; I’ve given up. Sorry it didn’t work out.

அவளின் – இருமுகங்கள்

அசாத்திய துணிச்சல் அந்த பெண்ணுக்கு. சற்று கருத்த தோல். சுமாருக்கு கொஞ்சம் குறைவான உடலமைப்பு. அழகாய் ஏதாவது தேடவேண்டும் என்றால் அந்த கண்ணாடி மட்டுமே அகப்படும். நீளமாய், குச்சியாய் இருந்தாலும் முன்னேற்றத்துடிக்கும் ஏதோ ஒன்று அவளை வித்தியாசப்படுத்தும். மெல்லியதாய் போர்வை போர்த்திய மத்திய குடும்பத்து கீழ்தட்டு ஏழ்மை. ஜெராக்ஷ் எடுக்க கூட தயங்கியபடி கையாலே எழுதும் அளவுக்கு பணத்தின் தேவை.

ஊரிலிருந்து புலம் பெயர்க்கப்பட்டவிதமே அலாதி. யாரோ தெரிந்தவருக்கு கடிதம் எழுதி, அவர் ‘வா’ என்க ஒரு இருபது வயது பெண், புறப்பட்டு வந்திருப்பது, இயலாமை தாண்டிய முன்னேறத்துடிக்கும் வெறிதான். எங்காவது அந்த ஊரிலே சின்னவேலையில் ஜல்லியடித்திருக்கலாம். அரசாங்க வேலைக்கு மனு போட்டிருக்கலாம். சின்ன சின்ன சினிமா கனவுகளில் சிறகடித்திருக்கலாம். அப்படி செய்திருந்தாலும் யாரும் அவளை குறை சொல்லிருக்கமாட்டார்கள். வயசு அப்படி என்று சொல்லியிருப்பார்கள். ‘கடனோ’ , உடனோ’ வாங்கி யாரிடமாவது (நல்ல இடமாய்) தள்ளி விட்டிருப்பார்கள்.

எது அந்த பெண்ணை தனியாளய் ‘ஊர்’ ‘மனுஷாள்’ தெரியாத இடத்திற்கு புறப்பட உந்திற்று. வெறும் பணக்கஷ்டமா ? புதிய முயற்சியா ? விட்டால் போதும் என்ற வெறுப்பா ? அந்த பெரிய மாற்றம் எப்படி சாத்தியப்பட்டது. சின்ன சின்ன டியூசன்கள், சைக்கிளில் நெடுந்தொலைவு பயணம், மாற்றார் வீட்டில் தங்கியிருப்பு, தற்காலிக வேலை, பெண் விடுதியில் தங்கல், மற்றவர்களது வாழ்க்கையை அருகிலிருந்தபடி பார்த்தல், தேவைப்பட்ட போது மறுபடியும் மாற்றம், குடும்பத்தின் தேவைக்காக தான் கட்டியிருந்த தற்காலிக வேலைக் கோட்டையயை விட்டுவிட்டு மறுபடியும் தான் புறப்பட்ட இடத்திற்கு புலம் பெயர்வது என ஒவ்வொரு மாற்றத்தையும் உந்தி தள்ளியது எது?

மனநலம் சரியில்லாத அப்பாவா ? தெளிவான அம்மாவா ? ஏதோவோரு குடும்பத்து ஜீனா ? சூழலா ? அக்கா கல்யாணம், குழந்தை, தன் கல்யாணம் என நடத்துதலில் பெண்மை மறந்து ஆண்மை வேடம் தரிசிக்க வேண்டி, தன்னுள்ளே தன் பெண்மை குழந்தையை புதைத்துக் கொண்டது தியாகமா? மாற்றமா? வெறும் கட்டாயாமா?

பத்து வருட வாழ்க்கையும், அனுபவமும் அவளை மாற்றி விட்டது. மாற்றங்கள் எப்போதும் நல்லவற்றிகே. ‘ இன்னமும் நீ மாறக்கடவாய்’ என்று சந்தோசமாய் சாபமிட தோன்றுகிறது. என் சாபங்கள் அவளுக்கு வரம் என்று எங்களிருவருக்கும் தெரியும். அமெரிக்க வீடு, குழந்தை என புதிய தோற்றத்தை அவள் உலகுக்கு அளித்தாலும், எனக்கு மட்டுமே தெரியும் அவளின் இருமுகங்கள்.

ஒன்று – கண்மூடி, வாள் எடுத்து, காற்றை கிழித்து, அணு துளைத்து ஒயாது போராடும் தீவிரவாத முகம். இங்கு தோல்விகள்
தற்காலிகமானவை. வெற்றிகள் வெறும் மைல்கட்டுகள். மாற்றம் மட்டுமே உண்மையானது. இந்த யுத்தத்தில் உள்ளும், வெளியும்
ரணமிருந்தாலும் ஒடிக்கொண்டிருப்பதும், ஜெயித்துக்கொண்டிருப்பதும் ஓயாத நிகழ்வுகள்.

மற்றது, தந்தை அன்பும், ஆண் அரவணைப்பும், ஏங்கித்தவிக்கும் ரோசாக்குழந்தை. தன்னை தாங்கும் மனிதர்களுக்காய் தவம் கிடக்கும். மறுகித் தவிக்கும். மடி தேடும். கண்மூடி சாய தோள் கேட்கும். கண்ணீர் நிலம் படாது தேங்க கை கேட்கும். காமமின்றி அணைக்கும் உடல் கேட்கும். எதையும் எதிர்பார்க்காத, அளவிடமுடியாத பெரும் அன்பு வேண்டி கதறி அழூம்.

எந்த முகம் நான் எடுக்க ? என்று என்னிடம் கேட்காதே. சுயநலமாய் பதில்கள் சொல்வதில்லை, அதுவும் உனக்கு சொல்லக்கூடாது என உறுதி பூண்டிருக்கிறேன். நீ எந்த முகத்தில் இருந்தாலும் அரிதாரம் பூச ஆசையாய் என்னால் முடியும்.

மாற்றத்தை தேடி ஒடும் பாங்கு, அமைதியாய் அடக்கி வைத்திருக்கும் அக்னிக் குஞ்சு, சுயம் இழக்காது முன்னேறதுடிக்கும் வலுவான எண்ணம், உன் வேர்கள் நிறம் மாறாவிட்டாலும், உன் இலைகளும் தழைகளும் எனக்கு புதியது. பெண்மை வெறும் சதை மட்டுமின்றி உணர்வும் கூட என்று எனக்குள் இருக்கும் சித்தார்தனுக்கு புரியவைத்த ‘பல’ போதிமரங்களில் நீ முக்கியமான ஒன்று. வாத்தியாரை துன்பப்படுத்திய வன்மையான மாணவனாகத்தான் நான் இருந்திருக்கிறேன். என் சுயநல அதிவேக வண்டி, உன்விழுமிய (Value) தடைகளை பலமுறை இடித்திருப்பினும் நீ எனக்காய் வலிதாங்கி, நேர்படுத்த முயற்சித்திருக்கிறாய்.

மற்றவர்களையும் அவர்களது பலவீனங்களோடு ஏற்றுக் கொள்ளமுடியும் என்று புரியவைத்திருக்கிறாய். பழகிய எல்லா மனிதர்களிடமும் பசைபோல் ஒட்டிக்கொள்ளும் உன் குணத்தை காப்பியடிக்க முயல்வேன், தோற்றுக்கொண்டேயிருந்தாலும்.

என்னை நானே புரட்டிப்பார்க்கும், கவிதையாய் இருந்து கொண்டுருக்கிறாய்…! இப்போது எங்கோ படித்த கவிதை ஒன்று, நினைவுக்கு வருகிறது. நீயும் இதை படித்திருக்கிறாய். உனக்காக மறுபடியும் வெட்டி, ஒட்டுகிறேன். ( Ctrl c + Ctrl V )

=== கவிதை முற்றுபெறுகிறது ==============

கவிதையை விட்டு குறைக்கு வருகிறேன். குறை சொல்லாத விமர்சனங்கள் நிறைவு பெறாது என்ற இலக்கணத்திற்கு ஒப்ப – தோண்ட எடுத்து, சில மோதிர குட்டுகள் (!)

உன் பலம் தெரியாது, நீ முடங்கி போகிறாய். சில சமயங்களில் நீ அசாதாரணமானவள். சில்லி உறவுகள், கண்டு கொள்ளாத அவசர கம்பியூட்டர் கணவன், அடிக்கடி படுத்தும் உடல் உபாதைகள் – உன்னை கொஞ்சநேரம் காயப்படுத்தலாம். ஆனால் உன்னுள்ளே ஆத்மா, அக்னிக்குஞ்சு, அந்த தீவிரவாத முகம் – உன் பலம். அந்த பலம் தெரியாது, தங்கக்கட்டிகளை காக்கை துரத்த எறிகிறாய். காக்கைகளுக்குத்தான் தங்கத்தின் விலை தெரியாது, உனக்குமாவா ?

நீ சூரியன். எங்காவது எப்போதும் ஒளி தர வேண்டியவள், ஏன் நிலாவாக ஆசைப்படுகிறாய் ? அனுமான் மாதிரி நீ (உன் பழைய புகைப்படத்தை நினைவில் வைத்துக் கொண்டு சொல்வதாய் கருத வேண்டாம்..) பலம் பொருந்தியவள்.

எந்த மலையை பெயர்க்கப்போகிறாய் ? எந்த கடலை கடக்கப்போகிறாய் ? உன் பின்னே எப்போது வானரப்படைகள் வரப்போகின்றது ? உன் வாழ்க்கையில் இராமர் யார் ? இராவணன் யார் ? எந்த சீதைக்காய் ‘ரிஷ்க்’ (தீக்குளிக்கப்போகிறாய்) எடுக்கப்போகிறாய் ? உன் பட்டாபிஷேகம் எப்போது ?

எனக்கு தெரியாது. நான் இப்போது வால்மிகீயுமல்ல. உன் இராமாயணத்திற்கு என் வாழ்த்துகள் !

வாழ்க வளமுடன்..

வாழ்த்தும்
அணில்.

=====மின்னஞ்சல் முடிவுபெற்றது =========================

எங்களுக்குள்ள தோழமை பற்றிய கருத்துகள் எங்களுக்குள்ளேயே மாறியும், வளர்ந்தும் வந்திருக்கிறது. நமக்கு தெரிந்த, வழக்கமான
ஆண்-பெண் தோழமையைத்தவிர நமது இலக்கியம் நகரமுயன்றதில்லை. தோழமை சிக்கலுக்குள்ளே நுழைந்து சிக்கெலெடுக்க
விரும்புவதில்லை.

நட்பா – பிடி ; துரியோதனன் – கர்ணன் ( கோர்க்கவா ? எடுக்கவா ?) , ஒருவர் வடக்கிருந்து நோன்பிருந்து உயிர்துறக்க, மற்றவர் சாவில் ஒடிவந்து ஒட்டிக்கொள்ளுதல் ..இப்படியான இலக்கிய சாண்டமிருதங்கள், பேரிகைகள்.. ராசராச சோழன் காலத்து – அநுக்கிகள், ஒரளவு அறிவுசார்ந்த தோழமை. இதிகாச இலக்கிய துருப்பிடித்த தூண்களை தாண்டி, நிகழ்கால சிறுகதை, பின்/முன் நவீனத்துவ இலக்கிய ஜல்லிகள், தற்கால சினிமாக்களில் குதித்தாலும் அதேநிலைதான். தோழமைக்குழப்பம்..

நண்பனுக்காக உயிரை கொடு.. அவன் காதலை அமரத்துவம் அடையச்செய்ய நீ எதைவேணாலும் இழ.
ஆண்-பெண் தோழமைக்குழப்பமா ? கூடிய விரைவில் அக்கா, தங்கச்சியாக்கிவிடு.
எங்கிருந்தாலும் வாழ்க, தாடி வளர், பாட்டுப்பாடு, கலியாணமாகி ஒடிப்போ, அதில் ஆறுதல் அடை.
கல்யாணமாகியும் தொடர்கிறாதா.. பரவாயில்லை.. ‘கொஞ்சமுன்னபின்னயிருக்கா.. அப்புறம் சரியாயிரும்’
‘இரத்தம் சுண்டிரவறைக்கும்தான் எல்லாம்.. அப்புறம் எல்லாம் சரியாரும்.. ‘
‘இல்லையா, உடம்பு உறவு தொடர்கிறதா ? கொலைசெய்வாள் பத்தினி ‘
பழைய காதலி, இரண்டு பெண்டாட்டி, முறைசேர காதல், சின்னவீடு குழப்பம்..
ஆட்டோகிராப், சில்சில, கேபிகேஹ், புதுவசந்தம் –
எல்லாம் பார்த்துட்டோமே.. ஏதாவது பெயர்கொடுத்து ஆறுதல் அடை.

சமூகத்திற்கு ஏதாவது ஒரு கட்டம்கட்டி உறவை அடைத்துவிடுதலில் ஆனந்தம். அதற்கு ரொம்பநாள் குழம்பிக்கொண்டிருக்கயிலாது. உறவுக்கு பெயர்வைத்து அதில் அதன் விழுமியங்களை திணிப்பதில் குரூர திருப்தி.

ஆனால் நிஜவாழ்க்கை அப்பிடியில்லை. எல்லா உறவுகளிலும் குழப்பமும் கூடவந்தே ஒட்டிக்கொள்கிறது. எல்லா உறவுகளில் விளிம்புகள் விரிந்தும், சுருங்கியும் அண்டத்தின் பருப்பொருள்போல மாறிக்கொண்டேயிருக்கிறது. எந்தபுரிதலுக்குப் பின்னுமே ஒரு புரியாதலும், தேடலும் ஆரம்பமாகிறது. அது சுழற்சி போலும். அது போலத்தான் ஆண்-பெண் தோழமையும். ஏன் எல்லா தோழமைகளும், உறவுகளும். மனித வாழ்க்கையே உறவுகளும் அதோடு நம் கொள்ளும் உறவுகளும் என்று ஜே.கே. சொன்னது இதைத்தானோ ? ( Life is relationship) அப்படியானால் வாழ்க்கை உறவுகளுக்கு சமூகம் செய்யும் கட்டம்கட்டி வேலை சரிதானோ ? குழப்பமில்லாது வாழ்க்கை ஒடை ஒடிக்கொண்டிருக்குமோ? தெரியாது.. Clarity with ambiguity ..

பொறாமையோடும், கோபத்தோடும், சொல்லில் கொட்டமுடியாது மாறும் பல எண்ணக் குவியல்களோடும், ஊசலாட்டமாய்த்தான் என் தோழமை தொடர்கிறது. மிருகங்கள் எழுந்து நடக்க, அது பூச்சியம் பக்கத்திலும், ஓ! இறையே, ஏதாவது செய்து இவளைக்காப்பாற்று, என நான் நம்பாத கடவுளிடமும் கர்ஜீக்கும்போது ஒன்றுக்கு (1) பக்கத்திலுமாய் ஊசலாடும் உறவு பெண்டுலங்கள்.. நானே புரிந்து கொள்ளமுடியாத என் மனித மனச்சிக்கல்களை.. யாரால் எழுத்தில் வடிக்கமுடியும்.? ஆனால் அதற்குப் பக்கத்திலோ, நான் ஆதர்சமாய் விரும்புகிற ஒன்றுக்கு (1) பக்கத்திலோ எப்போதும் குடிகொள்கிற பெண்டூல நிலை. பார்க்கும்போது, படிக்கும்போது சீலீர் என மார்கழிக்குளிரில் பச்சைத்தண்ணி பட்டதான சில்லிப்பு.


புதியமாதவியின் ‘பிச்சிப்பூ’ – அதுமாதிரியான கதை.
புதியமாதவியின் மற்ற படைப்புகள் : நிழல்களை தேடி – கவிதை தொகுப்பு ; விலை : ரூபாய் – 60
puthiyamaadhavi@hotmail.com

என்ன உயரத்தில் எழுதப்பட்ட கதையது !.

உறவுகளை கட்டம்கட்டி, காட்டாமல் இதுவரை பேசப்படாத , எழுதப்படாத பாதையில் பயணிக்கும் கதாபாத்திரங்கள். ஆண் – பெண் கதாபாத்திரங்கள். நட்பு தாண்டி ஏதோ ஒரிழை. ஒருவர் மற்றவரை பற்றி சதா நினைக்கும் இரு கதாபாத்திரங்கள். ஒன்று மற்றொன்றை சந்திக்கிறது. அவர்கூடவே ஒரு நாள் தங்கியிருந்து, ஏதோ பேச நினைத்து, ஒன்றும் பேசாமல் வந்துவிடுகிறது, வெறும் நினைவுகளுடன். கதையின் சுருக்கம் மட்டுமே சொல்வது என்பது எனக்கு கடினமான ஒன்றாய் அமைகிறது. அது குருடனின் யானை விமர்சனம்போல் ஆகலாம். கதையின் கருவும், தளமும், பெயரில்லா பாத்திரங்களும் – என்னுள் எழும்பி, எழும்பி முட்டுகிறது. இது காற்றில் வரையப்பட்ட கதை. ( It is story on air) எந்த பெரிய திடுக்கிடும் திருப்பமோ, சுழிவுகளோ கதையின் இலக்கணமேயில்லாத கதை. ஆனாலும் நமக்குள்ளே கதாபாத்திர உறவுகள் எழுப்புகிற கேள்விகள் நம்மை நிர்மூலமாக்கும். சுய பரிசோதனையில் சுத்தமாக்கிக்கொள்ள உதவும்.

நல்ல உறவுகளுக்காக நாம் ஏங்குகிறோம். ஒவ்வொரு உறவுக்கும் நம்மூள் ஒரு இடம், துண்டு உண்டு. ( Every relation has its own space.) சில உறவுகள் அதையும் தாண்டி புனிதமானதாய், நெருக்கமானதாய், கோரமானதாய் மாறிவிடுகிறது. இந்த உறவுகள் நமது மனிதத்தேவைகள் – ஏற்கனவே கட்டம்கட்டி விடப்பட்ட உறவுகளால் பூர்த்தி செய்யமுடியாத கோடிட்ட இடங்களை நிரப்புகிறது. சமூகம் அதற்கும் ஏதாவது பெயர் கொடுக்கலாம். என்னை பொறுத்தவரையில் அதை ‘பூச்சிப் பூ ‘ என்பேன்.

குறிப்பு : அ) மின்னஞ்சல் போகதலால் என் தோழிக்கு எந்த இழப்புமில்லை. உடல்நலம் பெற்று, செடி புதிய மண்ணில் கால் ஊன்றி
டாலர் இலைவிட்டு, புதிய குருத்துக்களோடு மலர்ந்து கொண்டுதானிருக்கிறது. ‘இண்டியால ஹைஜின் ரொம்ப கம்மி.. ஒவர் சம்மர்..அங்கெல்லாம்.. ‘. பிஷ்லரி பாட்டில்களோடும், அமெரிக்க உணவுகளோடும்.. வருடாந்திர இந்திய சுற்றுலா குழந்தைக்கு இந்திய கலாச்சாரம் காட்டி, புகட்ட வேண்டி நடந்து கொண்டுதானிருக்கிறது.

ஆ) புதிய மாதவியின் கதைத்தொகுப்பு. புதிய மாதவி திண்ணைக்கு நன்றாகவே அறிமுகமானவர். ஒரு சில நல்ல கதைகளையும், பல சாதரண கதைகளையும் கொண்டது இந்த தொகுப்பு. அவரது மின்சார வண்டித்தொடர்கதை – மும்பாய் பற்றிய நல்ல பதிவு. நல்ல ஆரம்பமும், தொய்வான நடுப்பகுதியும், நல்ல முடிவும் கொண்ட கதையது. தினப்பத்திரிக்கைக்கு எழுத வேண்டிய கட்டாயத்தினால் அப்படி வந்திருக்கலாம் என்று யூகிக்கவைக்கிறது. பிச்சிப்பூ, ஆண்டாளும் ஆத்தங்கரைச்சாமியும் ( தாழ்த்த-பிற்படுத்தப்பட்ட காதலித்து மணந்து கொண்ட கணவன் மனைவியிருவரும் கிராமம் செல்ல அங்கு சாகாமலிருக்கும் சாதிகளும், ஆண்டாளின் காதலும் கேள்வியாக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. அதேபோலத்தான் அவரது திண்ணையில் வந்த பெரியாரிஷ்ட் என்ற கதையும்.. இவைகள் போலி சமூக சாதி ஒழிப்பு பற்றிய வேர்களை குலுக்கும் கேள்விகள்..)

ஒரு சின்ன பயிற்சியாய் படிக்கும் எல்லா கதைக்களுக்கும் ஆனந்தவிகடனின் பாணியில் மதிப்பெண் போட்டலென்ன, என்கிற
எண்ணத்தில் விளைத்ததுதான் http://arabickadaloram.blogspot.com/2006/08/blog-post_18.html

[பிச்சிப்பூ : 53/100 ] எனது மதிப்பில் 50க்கு மேலேயுள்ள கதைகளெல்லாம் வாசிப்புக்கும், சிறந்த கதை தொகுப்புக்கும் பயன்படவேண்டும்.

தலித்தியம், பெண்ணியம் போன்ற தலையணை உறைகள், சின்ன பத்திரிக்கைகளுக்கு அவசரமாய் எழுதித் தரவேண்டிய நிர்பந்தங்கள், மேடை கைத்தட்டலுக்கான கவிதைகள் – போன்றவை களையப்பட்டால், இன்னும் நன்றாய் எழுதுவாரோ என்று நம்மை போல் தாகமெடுத்த இலக்கிய வாசகனை ஏங்கவைக்கிறார். நல்ல எழுத்துக்காய் தவமிருந்து நம் கூட்டிலிருந்து வெளியே வர முயற்ச்சித்தால் கண்டிப்பாய் தமிழ் எழுத்துக்கள் லார்வா பருவம் தாண்டி சிறகுவிரிக்கும். கூண்டுக்கிளிகளும் சிறகசைக்கலாம்.

மற்ற நகரங்களை போல, மும்பாய் பற்றி நல்ல ஆரோக்கியமான, அரசியல் கலப்பில்லாத இலக்கிய அலைகள் எழுவதேயில்லை – என்று என்னுள் ஏக்கம் அதிகம். பொருளாதார நகரமானதலால் இலக்கியத்திற்கு இடமில்லையோ என்னவோ ? மும்பாய் பன்முகம் கொண்ட கலாச்சார, வர்த்தக நகரம். இதைப்பற்றிய, குஜராத்தி, மராட்டிய எழுத்தாளர்களின் பதிவுகள் எல்லாம் கூரையைத் தொடுகிறது. மும்பாய் பற்றிய ‘ மேக்சிமம் சிட்டி : மும்பாய் லாஷ்ட் அண்ட் பைண்ட்’ சுகேது மேத்தாவின் ஒரு அண்மைக்கால நாவல்…. போடு போடு எனப்போடுகிறது.( நாஞ்சில் நாடன். சார்.. கேட்கிறாதா ?) கொஞ்சம் மேய்ந்திருக்கிறேன். மிக ஆழமான தளத்தில் நாவல் பரந்திருப்பதாய் படுகிறது.


mani@techopt.com

Series Navigation