கொக்கி-22

This entry is part [part not set] of 3 in the series 19991219_Issue

ஜோசப் ஹெல்லரின் நாவல்


ஜோசப் ஹெல்லர் தன் 76-வது வயதில் டிசம்பர் 12-1999 அன்று மரணமடைந்தார்.

ஜோசப் ஹெல்லரின் ‘கேட்ச்-22 ‘ என்ற நாவல் 1961-ல் வெளிவந்தது. கொக்கி-22 என்ற சொற்றொடரை ஆங்கில அகராதியில் நிரந்தரப் படுத்திய அந்த நாவல், மிக அதிக அளவிலும் விற்றது. இரண்டாம் உலகப் போரை ‘நல்ல யுத்தம் ‘ என்று வழங்குவதுண்டு. ஆனால் நல்ல யுத்தமோ, கெட்ட யுத்தமோ போருக்குச் செல்லும் தனி மனிதன் பலிகடாவாகத் தான் போகிறானே தவிர, பெரும் லட்சியங்களைக் கொண்டு அல்ல. இந்த நாவல் முழுதுமே யோசாரியான் என்ற போர் வீரன் போர்முனைக்குத் தான் அனுப்பப் படாமல் தப்பிக்கச் செய்யும் முயற்சிகளும், அந்த முயற்சிகள் தோல்வி யடைவதும் தான் கதை.

வியட்நாம் போருக்கு அமெரிக்காவில் எழுந்த எதிர்ப்பிற்கு இருந்த பல காரணிகளில், ‘கொக்கி-22 ‘ -ஐயும் குறிப்பிட வேண்டும்.

கொக்கி-22 என்ற சொற்றொடரைப் புரிந்து கொள்ள தமிழில் ஒரு அழகான பழமொழி உள்ளது– ‘கல்யாணம் ஆனால் பைத்தியம் தெளியும். பைத்தியம் தெளிந்தால் கல்யாணம் ஆகும். ‘ பைத்தியமும் தெளியாது, கல்யாணமும் ஆகப் போவதில்லை என்பது போலத் தான். உலக வரலாறே பொது மக்களைப் பொறுத்த வரையில் கொக்கி-22 சூழ்நிலை தான் என்பது ஹெல்லரின் கருத்து. தப்ப முடியாத படியாத படி தன்னால் உருவாக்கப் படாத சூழ்நிலைகளின் கைதியாக மாட்டிக் கொண்டுவிட்ட ஸ்ரீமான் பொது ஜனம், வேறு யாருடய நோக்கங்களையோ நிறைவேற்றும் யந்திரமாகத் தான் பயன் படுத்தப் படுகிறான்.

யோசாரியான் தனக்குப் பைத்தியம் என்று நிறுவ மிகவும் முயற்சி செய்கிறான்.

யோசாரியான் பைத்தியம் என்று நிரூபணமானால் அவன் போர்முனைக்குச் செல்லவேண்டியதில்லை. போர்முனையைத் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பு உள்ள ஒருவன் பைத்தியமாய் இருக்க முடியாது. எனவே யோசாரியான் போர் முனைக்குச் சென்று தானாக வேண்டும். வேறு வழியே இல்லை. 20 முறை போர்முனை வேலைக்குச் சென்று திரும்பினால் நீ மீண்டும் போக வேண்டியதில்லை என்று ஒரு விதி. 20 முறை முடிந்தவுடன் அந்த 20 என்கிற மந்திர எண் திடாரென்று 30 ஆகிப் போகிறது. 30-முறை அவன் போய்விட்டு வந்து அப்பாடா என்று போர்முனையை விட்டு வெளியேற ஆயத்தங்கள் செய்யும் போது அந்த மந்திர எண் 40 ஆகிவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்த விதிகளை யார் ஏற்படுத்துகிறார்கள் ? ஏன் ஏற்படுத்துகிறார்கள் ?

போரின் கொடுமைகளை விவரிப்பதில் இரண்டு முறைகள் இருக்கின்றன. ஒன்று அது விளைவிக்கும் பேரழிவு, மனிதக் கொலைகள், சுற்றுப் புற அழிவு, பொருளாதாரச் சேதார விபரீதம், அனாதைகளாய் விடப்பட்ட குழந்தைகள் என்று பட்டியல் நீள்கின்றது. இன்னொன்று, தனி மனிதனின் ஆன்மாவை அது அழிக்கும் விதம். கொல்வது சரிதான் என்கிற நினைப்பு நிரந்தரமாய் மனிதனுக்குள் இருக்க போர்கள் வழி செய்து விட்டன. ‘சரியான ‘ காரணங்களால் கொல்லலாம் என்றால், போர்முனையில் மட்டுமல்ல வேறெங்கும் -பஸ் ஸ்டாண்டில், சந்தையில்-, யாரையும் – குழந்தைகளை, பெண்களை, என்ன நடக்கிறது என்றே தெரியாத அப்பாவிகளை – கொல்வதிலும் தவறில்லை என்பது கருத்தியல் ரீதியாய் ஒப்புக் கொள்ளப் படுகின்றது. ‘சரியான ‘ காரணங்களை மக்களுக்கு அளிப்பதில் மத வெறியும், மொழி வெறியும், நிற வெறியும், தேசப் பற்று வெறியும் ஒன்றுக்கொன்று போட்டியிடுகின்றன.

கறுப்பு ஹாஸ்யமாய் விரியும் இந்த நாவலுடன் வைத்து எண்ணப்பட வேண்டி ய மற்றொரு நாவல் ‘பலிபீடம்-5 ‘ (Slaughterhouse -5) குர்ட் வான்கட் எழுதியது. அங்கதமும் கிண்டலும் கிட்டத் தட்ட ‘கொக்கி-22 ‘ போலவே உள்ள நாவல் இது. இன்னொரு நாவல் நார்மன் மெய்லரின் ‘நிர்வாணிகளும் இறந்தவர்களும் ‘ (The Naked and the Dead). இதில் ஜோசப் ஹெல்லரிடம் காணப்படும் அங்கதம் இல்லை. ஆனால் தாம் விரும்பாத ஒரு போருக்குள் பலிகடாக்களாகத் தள்ளப் பட்ட மனிதர்களின் பயமும், வெறுப்பும், மனிதத் தன்மை இழந்து போதலும் உள்ளன.

Gopal Rajaram

Thinnai 1999 December 19

திண்ணை

Series Navigation

ஜோசப் ஹெல்லரின் நாவல்

ஜோசப் ஹெல்லரின் நாவல்