கே ஆர் அய்யங்காரின் கவிதைகள்

This entry is part [part not set] of 4 in the series 20000118_Issue

அக்கா தங்கை…


‘என் அகத்துக்காரர் சிட்டி பேங்க் ‘
‘என் அகத்துக்காரர் க்ாிண்ட்லேஸ் பேங்க் ‘

‘என் அகத்துக்காரர் மேனேஜர் ‘
‘என் அகத்துக்காரர் உதவி வைஸ் ப்ரசிடெண்ட் ‘

‘என் பையன் டான்பாஸ்கோ ‘
‘என் பெண் சர்ச் பாக் ‘

‘என் மூன்று படுக்கை அறை ப்ளாட் அடையாறில் ‘
‘என் ஒன்றரை க்ரவுண்ட் குடிசை வளசரவாக்கத்தில் ‘

‘என் ஏ.சி அம்பாஸாடர் தான் எனக்கு செளகர்யம் ‘
‘இவருக்கு எப்பவும் புதுக்கார் தான் ‘

‘அருகில் வா.. அருமைத் தங்காய்
என்ன கண்ணில் கலங்கல் ‘

‘ஒண்ணுமில்லேக்கா. தூசு… ‘


மனசுல பட்ட மெளனக் காயங்கள்..


சின்ன வயதில்
மலர்ந்த பின்னர்
பக்கத்து வீட்டுப் பையனை
விளையாட அழைத்தால்
பார்த்த பார்வை….

அலுவலகத்தில்
‘கோப்பை முடிச்சுட்டியாம்மா ‘
மேலதிகாாியின்
ஆங்கில மேல் பார்வை..

புழுதி, புகையில்
பொட்டழிந்து
முகம் கசங்கி
பஸ் ஏறினால்
இடுப்பில் கிள்ளல்..

இரவில்
‘பிடித்து இருக்கிறதா ‘
எனக் கேட்காமல்
புரண்டு படுக்கும்
கணவனின் குறட்டை

‘அவரை ஜாக்கிரதையாய்ப்
பார்த்துக்கோடிம்மா ‘
எனச் சொல்லும்
அம்மாவின் வார்த்தைகள்..

தோட்டத்தில்
பல்லியைத்
துரத்தி அடித்து
விளையாடும் பூனை…

எல்லாம் வலிதான்..
இருந்தும் சுகமாய்……


காதலும் ரூபிக் க்யூபும்….


முன்னது
நிரந்தர வானவில்

பின்னது
கையில் இருக்கும்
வானவில்….

முன்னது
மனம்
சிக்கிக் கொண்டதால்
ஏற்படுவது…

பின்னது
சிக்கலால் தான்
பிரபலமானது….

இரண்டுமே
மனதைக் குழப்பும்…

க்யூப்
சிக்கலை அவிழ்த்தால்
விளையாட்டு முடிந்து விடும்

காதல்
சிக்கலை அவிழ்த்தால்
விளையாட்டு ஆரம்பமாகும்..

வாழ்க்கைக் கண்ணாமூச்சி….

***** Thinnai 2000 January 18

திண்ணை

Series Navigation

அக்கா தங்கை...

அக்கா தங்கை...