கேரள தேசத்தில் தலித்துகளின் பள்ளி நுழைவுப் போராட்டம்

This entry is part [part not set] of 2 in the series 20000918_Issue

எ.எம்.சாலன்


‘தலித்துகள் பொதுப்பாதையில் நடக்கக் கூடாது. நல்ல ஆடை – அணிகலன்களை அணியக்கூடாது. நல்ல பெயர்களைச் சூட்டக்கூடாது. பெண்கள் தலையில் பூ வைத்துக் கொண்டு நடமாடக்கூடாது. மார்புகளை மறைக்கக்கூடாது. ஆண்களும் பெண்களும் முழங்கால் மறையும்படியாக வேட்டி – சேலை கட்டக் கூடாது. காலில் செருப்பு அணியக்கூடாது. நிலவுடமையாளர்கள் ‘முதலிரவில் ‘ வந்து அனுபவித்த பின்பே, ஒரு தலித் தன் மனைவியோடு வாழத் துவங்க வேண்டும்! ‘

இவைகளெல்லாம் (நம்நாட்டில் – குறிப்பாக கொச்சி திருவிதாங்கூர், சென்னை மாகாணங்களில் நடந்ததாக) 19ம் நூற்றாண்டும் 20ம் நூற்றாண்டும் நமக்குத் தரும் வரலாற்றுச் சித்திரங்களாகும்!

மேற்கண்ட சமூகக்க் கொடுமைகளுக்கு எதிராகப் போராடியது போலவே பள்ளிக்கூட நுழைவுப் போராட்டத்திலும் இவர்கள் கால் எடுத்து வைக்கிறார்கள்.

குறிப்பாக இவர்களின் அன்றைய வீர நாயகனான அய்யங்காளி (திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 13 கி.மீ தூரத்திற்கு அப்பால், தெற்கே வெங்கானூர் என்னும் இயற்கை எழில் நிறைந்த கிராமத்தில் பெருங்காற்று விளையிலுள்ள, பிலா வட்டத்துக் குடும்பத்தில், மேல் சாதியினருக்கு அடிமை வேலை செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த புலையர் சாதியைச் சேர்ந்த அய்யன் என்பவருக்கும் மாலா என்ற பெண்மணிக்கும் 23-8-1863இல் பிறந்த செல்ல மகன். முதன் முதலில் திருவிதாங்கூரில் சாதிப் பேய்க்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து தலித்துகளைத் திரண்டெழச் செய்த பண்பாட்டுப் போராளி!) அன்றைய வெள்ளை அதிகாரிகளிடம் ‘எங்களுக்கும் படிக்க வாய்ப்பளிக்க வேண்டும் ‘ என ஒரு மனு கொடுக்க, அதன் பலனாக ‘தலித்துகளுக்கும் பள்ளிக் கூடங்களில் படிக்க வாய்ப்பளிக்க வேண்டும் ‘ என அங்கிருந்து ஒரு உத்தரவு பிறக்கிறது. இந்த விஷயம் திருவிதாங்கூர் சமஸ்தானத்து திவான் கவனத்துக்கு கொநு வரப்படவே, அவர் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன! காரணம், இது சம்பந்தமாக அவர் ஏற்கெனவே ஒரு உத்தரவை வெளியிட்டிருந்தார். (வருடம் 1910). அப்போதுதான் அந்த உத்தரவு ஏதோ ஒரு அலுவலகத்தினுள் திட்டமிட்டு அமுக்கப்பட்டிருக்கிறது என்ற விவரம் வந்து அவர் பொறியில் தட்டியது. இதையொட்டி (மூன்று வருடங்களுக்கு முன்பு அமுக்கி வைத்திருந்த ) அந்த பள்ளிக்கூட நுழைவு சம்பந்தமான உத்தரவு மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கெதிராக மேல் சாதியினரிடமிருந்து கடுமையான எதிர்ப்பும் கிளம்பியது.

உதாரணத்திற்கு ..

‘நம் (மேல்சாதியினருடைய) ஆசாரங்களிலும் கூட தலித்துகளுக்கு சமத்துவம் வேண்டும் என வாதிடக்கூடியவர்கள் ஒரு காரியத்தை மறந்து போகிறார்கள். அதாவது, நம் பாடசாலைகளில் சேர்ப்பதற்காக வேநி கொண்டுவரக்கூடிய பிள்ளைகளின் யோக்கியதையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வருவது நல்லது. அவர்கள் தங்கள் மனதில் என்ன நினைத்துக் கொண்டு இப்படி முன்வரத் துவங்குகிறார்கள் எனத் தெரியவில்லை. தலைமுறை தலைமுறையாக தங்கள் அறிவை, சேற்றில் இறங்கி வேலை செயவதிலேயே ஈடுபடுத்தி வந்த இந்த சாதிக்காரர்கள், காலங்காலமாக மேல்நிலையிலேயே இருந்து வருகின்ற சாதிக்காரர்களுடைய பிள்ளைகளுக்கு சரி-நிகர் சமானமாக உட்கார்ந்து படிப்பதென்பது – ஒரு குதிரையையும் ஒரு எருமை மாட்டினையும் பிடித்து ஒரே நுகத்தடியில் கட்டுவதற்கு சமம் அல்லவா…! ‘ என்று சுதேசாபிமானி என்ற மலையாள இதழில் , 1910இல், நெய்யாற்றின் கரையிலுள்ள கே. ராமகிருஷ்ணப்பிள்ளை என்ற அறிவு ஜீவியின் தலையங்கம் இங்கு குறிப்பிடத்தகுந்ததாகும்.

இவை ஒருபுறமிருக்க, ‘கீழ்ச்சாதியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கும் பள்ளிகூடத்தில் படிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் ‘ என்ற உத்தரவு வெளியானதும், கீழ்ச்சாதியை சேர்ந்தோர் தங்கள் பிள்ளைகளைத் தொட்டெடுத்துப் பள்ளிகூடங்களில் கொண்டு சேர்ப்பதற்காக வேண்டி அழைத்துச் சென்றனர்.

அரசாங்க உத்தரவு வெளியான அதே வருடத்தில் தலித் பண்பாட்டுப் போராளியான அய்யங்காளியும் பாலராமபுரத்தைச் சேர்ந்த ஊரூட்டம்பலத்திலுள்ள பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்காக வேண்டி , பூசாரி அய்யன் என்பவருடைய மகளான பஞ்சமியைக் கூட்டிக்கொண்டு சென்றார்.

இந்நடவடிக்கை மேல்சாதியினரின் கோபத்தைக் கிளறிவிட்டது. அவர்களில் சில சட்டம்பிமார்கள் ஒன்றுதிரண்டு அய்யங்காளியையும் அவரது சகாக்களையும் தடுப்பதற்காக வேண்டி வழியில் தயாராக நின்று கொண்டிருந்தார்கள். இந்த இடத்தில் வைத்து இருதரப்பினருக்கும் உக்கிரமமான மோதல் ஏற்பட்டது.

‘கல்வி கற்றே தீருவோம் நாங்கள்! ‘ எனக் கீழ்ச்சாதியினரும், ‘ஒரு போதும் உங்களை கல்வி கற்க அனுமதிக்க மாட்டோம் ‘ என மேல்சாதியினரும் விடாப்பிடியாக நின்று மோதினார்கள்.

தலித்துகளின் பள்ளிக்கூட நுழைவைச் சொல்லி இந்த மண்ணில் நடந்த ‘முதல் கலகம் ‘ இது.

ஊரூட்டம்பலத்தில் பள்ளிக்கூடம் தொடங்கப்பட்டது 1907இல். அதில் கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர்களுடைய பிள்ளைகளை 1910 வரையிலும் படிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதற்குரிய தலையாய காரணம், மிகப்பெரிய சமூகக் கொடுமைகளில் ஒன்றான தீண்டாமையே! எனவேதான் கீழ்ச்சாதியினர் தங்கள் கனவில் கூட கண்டறியாத பள்ளிக்கூடசம்பந்தமான உத்தரவு, அவர்களை இந்த மாதிரி பரவசத்துடன் ஓடும்படிச் செய்தது. இருட்டில் நின்று கொண்டு வழி தெரியாமல் தத்தளிப்பவர்களுக்கு சிறிய அளவில் வெளிச்சம் தென்பட்டாலே போதும். சிலசமயம் அதுவே அவர்களை லட்சியத்தின் பக்கம் கூட்டிக்கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

காலங்காலமாக மலையோரங்களிலும் ஊருக்கு வெளியேயுள்ள சந்து பொந்துகளிலும் வாழ்ந்துவந்த கீழ்ச்சாதியினரின் பிள்ளைகள், இப்போது வாயில் வெள்ளிக் கரண்டிகளுடன் பிறந்த தங்கள் பிள்ளைகளுக்குச் சரிநிகர் சமானமாக உட்கார்ந்து படிக்கபோவதையறிந்த மேல்சாதியினருக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது.

அன்று அவர்களது தலைவராக இருந்தவர் கொச்சப்பி பிள்ளை என்பவராவார்.

‘எங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களில் கீழ்ச்சாதியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு படிப்பதற்காக அனுமதி வழங்கக் கூடாது. அதையும் மீறி அவர்கள் உள்ளே அனுமதிக்கப் படுவார்களேயானால், அப்பள்ளிக்கூடம் அடித்து நொறுக்கப்படும் ‘ என மேல்சாதியினர் ஓர் அணியில் நின்று கொண்டு, ஒரே குரலாக எச்சரிக்கை செய்தனர்.

இதையும் மீறி அய்யங்காளி பஞ்சமியை கூட்டிக் கொண்டு பள்ளிக் கூடத்துக்குப் போகும்போதுதான் – வழியில் வைத்து தலித்துகளுக்கும் (குறிப்பாக புலையர்கள்) நாயர்மார்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அத்தோடு நின்று விடவில்லை தலித்துகளின் பள்ளிக்கூட நுழைவைச் சொல்லி இருதரப்பினரும் ராத்திரியும் பகலும் மோதிக்கொண்டார்கள், நடக்கக்கூடாத காரியம் நடந்து விட்டதைப் போல எண்ணி வெறி கொண்ட மேல்சாதியினர் தலித்துகள் வாழும் பகுதிக்குள் நுழைந்து, அவர்களது ஆடு மாடு கோழி முதலியவைகளையும் கண்ணில் பட்ட அவர்களது அத்தியாவசியமான பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். அதில் அவர்களுக்குத் தேவையில்லாதவை சேதப்படுத்தப்பட்டன. கண்ணில் பட்ட தலித் பெண்களை அவர்களுடைய காமத்தீக்கு இரையாக்கிக் கொண்டனர். அத்தோடும் கோபம் அடங்காததால் தலித் மக்களுடைய குடிசைகளை தீ வைத்துக் கொளுத்தினார்கள். சில வீடுகளிலுள்ள பெண்களும் குழந்தைகளும் இருப்பிடங்களை விட்டு துரத்தப்பட்டார்கள். அக்குடும்பங்களைச் சேர்ந்த ஆண்களோ ‘எங்களை ஜீவனோடு விட்டால் போதும் ‘ என காடுகளை நோக்கி ஓடினார்கள். ஓடி ஒளிந்த பிறகும்கூட மேல்சாதி சட்டம்பிகளால் தேடிப்பிடித்துக் கொண்டுவரப்பட்டார்கள். இம்மாதிரியான அக்கிரமங்களைத் தட்டிக் கேட்க வந்த தலித் போராளிகள் ரத்தத்தில் கிடந்து துடிதுடித்துச் செத்தார்கள்.

கொச்சப்பி பிள்ளை முன்பொருமுறை சபதம் செய்தது போலவே ஊரூட்டம்பலத்திலுள்ள பள்ளிக்கூடம் அக்னிக்கு இரையாக்கப்பட்டது. ஆனால் கேஸ் எடுக்கப்பட்டதோ, ஒன்றும் தெரியாத சில தலித்துகளின் பேரில் மாத்திரமாக இருந்தது.

இது சம்பந்தமாக Trivancore State Maual Vol 11 இல் டி. கே வேலுப்பிள்ளை கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

‘ஸ்ரீமூலம் திருநாளினுடைய காலகட்டத்தில் உண்டான அசம்பாவிதங்களில் ஒன்றாகும் இப்புலையர் போராட்டம். இப்போராட்டம் நெய்யாற்றின் கரை தாலுக்காவைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் படர்ந்து வீசியது. அது அக்காலத்தில் உண்டான போராட்டங்களில் எல்லாம் மிக மூர்க்கத்தனமாக நடந்த போராட்டமாக இருந்தது ‘

ஆக பள்ளிக்கூட நுழைவின் பேரில் நடந்த இப்போராட்டம் ஒரு வார காலமாக தொடர்ந்து நடந்தது.

ஊரூட்டம்பலத்தில் தொடங்கிய இப்போராட்டம் தற்காலிகமாக அடங்கியிருந்தாலும் கூட, அது எழுப்பிவிட்ட புதிய ஓசைகள், அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களான மாராயமுட்டம், வெங்கானூர், பெரும்பழுதூர், குன்னத்துக்கால் போன்ற இடங்களிலெல்லாம் போய்ச்சேர்ந்திருந்தன. எங்கேயெல்லாம் நாயர் சாதியினரும் தலித்துகளும் இருந்தார்களோ அங்கேயெல்லாம் இப்போராட்டத்தையும் அதன் விளைவையும் சொல்லி அவரவர் நிற்கும் சாதிப்படிகளில் நின்று முணுமுணுத்துக் கொண்டார்கள்

இப்போராட்டத்தில் நாயர் சாதியினரோடு வேறுசில சாதியினரும் தோளோடு தோள் சேர்ந்து நின்றதாகத் தெரியவருகிறது.

**

Thinnai 2000 January 18

திண்ணை

Series Navigation

Scroll to Top