குறுநாவல் தொடர்ச்சி – கானல் நதிக்கரை நாகரிகம் (2)

This entry is part [part not set] of 26 in the series 20050722_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


பிச்சுமணியின் அப்பா சைக்கிள் கடை வைத்திருக்கிறார். பிச்சுமணி அப்பாவுக்கு ஒத்தாசையாய்க் கடையில் இருப்பான்.

அவன் பெரியப்பா ஒரு ஜோசியர். வெள்ளக் காவலுாரில் இருக்கிறார். எப்பவாவது அவர் சென்னை வருவார். மவுண்ட் ரோடில் – பாரி மூலையில் – மயிலாப்பூர் குளக்கரையில்… என்று எங்காவது அவரைப் பார்க்கலாம். முதல் முறை அவரை சைக்கிள் கடையில் நாங்கள் சந்தித்தோம்.

சிவாவையே பார்த்துக் கொண்டிருந்தார். ‘ ‘இங்க வாப்பா ‘ ‘ என்றார்.

‘ ‘ஒன்னோட சாமுந்திரிகா லெட்சணத்துக்கு லவ் மேரேஜ்தான்! ‘ ‘ என்றார்.

எனக்கு, என்று கேட்க உடன் நான் கொந்தளிப்பு கண்டேன். வயசு அப்படி. பண்ணாகரக் களை சொட்டியது சிவா முகத்தில். அவனிடம்தான் இந்தப் பெண் சனியங்கள் பல்லைக் காட்டும்…

சிவா புளகாங்கிதமான ஆச்சரியத்துடன், ‘ ‘எப்பிடிச் சொல்றீங்க ? ‘ ‘ என்றான்.

‘ ‘சொல்றேன். நீ வேணாப் பாரேன்!… ‘ ‘

சிவா பைத்துட்டை அவர் பார்த்திருந்தார் போலும்!

‘ ‘ஒங்களுக்கு சாமுந்திரிகா லெட்சணம் தெரியுமா ? ‘ ‘

அட உனக்குத் தெரியாதில்ல… அப்ப எனக்குத் தெரிஞ்சாப்லதான்!

‘ ‘சாமுந்திரிகா லெட்சணம் – ரேகை சாஸ்திரம் – புஷ்ப ஜோதிஷம் – நியூமராலஜி – ஜாதகம்… எல்லாந் தெரியும்… ‘ ‘

எவனாவது இளிச்சவாயன் மாட்னா ஏமாத்தவும்!…

மணி உள் விக்கலுடன் – பாவம் – ‘ ‘எனக்கு எப்ப வேலை கிடைக்கும் சார்! ‘ ‘ என்று கேட்டான். முகம் கறுத்து கவலை கட்டியது.

‘ ‘அதெல்லாம் உடனே சொல்ல முடியாது. நிறைய கால்குலேஷன்ஸ் இருக்கு… ‘ ‘

லவ்னா உடனே சொல்லீருவேளாக்கும்…

உங்க கால்குலெஷன்ஸ் முடியுங்குள்ள அவனுக்கு வேலையே கிடைச்சிருமய்யா ?

‘ ‘நீங்க எங்க தங்கீர்க்கேள் ? ‘ ‘ என்று கேட்டான் மணி.

‘ ‘இன்னிக்கு சாயங்காலம் அவரு ஊருக்குப் போறாரு… ‘ ‘ என்றான் பிச்சுமணி.

மணிக்கு உள்ளே காத்து பிடுங்கி விட்டாப் போல இருந்தது. சைக்கிள் கடைதான். திரும்ப அடைச்சிக்கலாம்!

நான் மெட்றாஸ் வந்தா பிச்சுமணிக்குத் தெரியும்… ‘ ‘ என்றார் பெரியப்பா.

‘ ‘எவ்வளவு ? ‘ ‘ என்றேன் நான் பையைப் பிதுக்கியபடி.

அம்மா ரேஷனுக்குப் பணம் தந்திருந்தாள். ‘ ‘இன்னிக்குக் கடைசி நாள்டா. இன்னிக்கு விட்டால் அப்றம் மித்த நாள்ல தர மாட்டான்… ‘ ‘ அம்மா யாரிடமோ கடன் வாங்கிக் கொடுத்திருந்தாள்.

‘ ‘எவ்ளவு ? ‘ ‘ நான் கேட்டேன்.

‘ ‘அது – கையைப் பொறுத்தது. சுக்ரீவ ரேகை ஓடினா நான் காசே வாங்கறதில்லை… ‘ ‘

அதே எடத்ல நின்னுட்ருந்தா வங்குவேளாக்கும்.

எனக்கு ஓடுதா இல்லையா, அதைத் தெரிந்து கொள்ள பரபரப்பாய் இருந்தது.

‘ ‘வாடா போகலாம்… ‘ ‘ என்று மணி எழுந்து கொண்டான்.

சிவாவும் எழுந்து கொண்டான். ‘ ‘நீங்க அடுத்த தடவை வரும்போது பாக்கறோம்… ‘ ‘

‘ ‘சரி… அதைப்பத்தி என்ன. இதெல்லாம் தெரிஞ்சிக்காம இருக்கறது நல்லது ‘ ‘ என்றார் அவர்.

நான் சிரித்தேன். ‘ ‘கரெக்டு மாமா நீங்க சொல்றது. எப்பிடியும் நடக்கறது நடக்கப் போறது. தெரிஞ்சண்டு நாம என்ன பண்ணப் போறோம்… ‘ ‘

சிவா இப்போது பேசினான். ‘ ‘இப்ப ஒராளு சாகப் போறான்னு வெய்யுங்க… அவன் விதி முடிஞ்சி போச்சின்னா… அவனைக் காப்பாத்த முடியுமா ? ‘ ‘

‘ ‘என்னடா விதி கிதின்னுக்கிட்டு… அதையெல்லாம் நான் நம்பல ‘ ‘ என்றான் மணி.

‘ ‘முடியாது. ஆனா அதே சமயத்துல முன்கூட்டியே தெரிஞ்சிக்கிட்டா ஒரளவு முன்னேற்பாடுகள்லாம்… ‘ ‘

‘ ‘என்னடா முன்னேற்பாடு ? வெட்டியானுக்குச் சொல்லப் போறியா! ‘ ‘

‘ ‘-தபாரு. நீ புரியாமப் பேசற… ‘ ‘

சிவா கையமர்த்தி ‘ ‘விடுங்கடா ‘ ‘ என்றான். ‘ ‘அடுத்த தடவை பார்க்கலாம் சார் ‘ ‘

‘ ‘ம்… ‘ ‘ என அவர் தலையாட்டினார். ‘ ‘உன் முகராசிக்கு… வர்றவ கருப்புதான். ஆனா லெட்சணமா இருப்பாள் ‘ ‘

மாமாவுக்குப் பொண் இருக்கா ஒருவேளை… கருப்பா… ?

‘ ‘பேரு ? ‘ ‘ என்றேன் நான் அடக்க முடியாமல்.

‘ ‘டேய் சும்மா இர்றா… ‘ ‘ என்றான் சிவா – ஆர்வமாய் ஜோசியர் முகத்தைப் பார்த்தபடியே.

‘ ‘பேர் சொல்ல முடியாது. மொதல் எழுத்து எஸ் இல்லன்னா எல். ‘ ‘

சிவாவுக்கு லதா என்ற ஒரு முறைப்பெண் இருந்தது ‘எ ன க் கு ‘ உடனே ஞாபகம் வந்தது. அவனுக்கும் வந்திருக்கும்! உடனே!

திரும்பி நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. அவரவர் சிந்தனைப் போக்கில் இருந்தோம். எங்க அத்தை பொண்ணு குசலாம்பாள். பாட்டி பேர் கொண்டவள். குசல் என்று வீட்டில் செல்லமாய் அழைப்பார்கள். சின்ன வயசிலேயே மூக்கு குத்தி பித்தளை மூக்குத்தி போட்டுக் கொண்டவள். வால்வு சரியில்லாத குழாய் போல மூக்கு. எப்பவும் ஒழுகும். என்னைவிட வயசில் பெரியவள். ரேஷன் கடை அரிசி – அரிசியில் புழு மாதிரி இருப்பாள்.

மணி என்ன நினைத்துக் கொண்டு வந்தானோ ? அவனுக்கு வேலைக் கவலை பெரிய கவலை… இப்ப யாராவது அவனிடம் வந்து ஐ லவ் யூ-ன்னு சொன்னா அறைஞ்சாலும் அறைஞ்சிருவான். புண் வந்த நாயைப் போல ஆகியிருந்தான்.

ஆளாளுக்கு பயங்கரக் குழப்பம். ஜோசியத்தை நம்வுவதா வேணாமா ?

‘ ‘சிவா ? ‘ ‘

‘ ‘என்னடா ? ‘ ‘

‘ ‘ஒங்க லதா இல்ல… ? ‘ ‘

‘ ‘லதாவா ? ‘ ‘

‘ ‘அதாண்டா … ‘ ‘

‘ ‘டேய்! ‘ ‘ என்று சிரித்து வயிற்றில் குத்தினான்.

‘ ‘அவ கறுப்பா சிவப்பாடா ? ‘ ‘

‘ ‘தெர்ல! ‘ ‘

‘ ‘தெரிலயா… டேய் புளுகறான்… ‘ ‘

‘ ‘பிராமிஸா! அவளை நான் மூணு வயசில் பார்த்தது… ‘ ‘

‘ ‘அப்ப எப்பிடி இருந்தா ? ‘ ‘

சிவா இப்போது எரிச்சல்பட்டு ‘ ‘விடுங்கடா. அந்தாளு ஆத்தமாட்டாம என்னமோ சொன்னான். மேல விழுந்து புடுங்கறீங்களே ? ‘ ‘ என்றான்.

பிறகு நாங்கள் பேசாமல் நடந்து வந்தோம்.

சிவாவுக்குக் கோபம் வந்து விட்டது. கோபம் பணக்காரர்களின் சுபாவம். பேசிக்கொண்டிருக்கும்போதே சட்டென்று அவன் கோபப் பட்டு விடுவான்.

மணியின் அப்பாவுக்கு எத்தனை அதட்டினாலும் திட்டினாலும் கோபம் வராது. வெறும் ரெண்டு ரூபாய் பர்சில் வைத்திருந்தால் கூட திருட்டு பயத்துடன் நடந்து வருவார். பணம் பெரிசில்லை. பணம் இருக்குன்னு பர்சை எடுத்தவன் உள்ளே பணம் இல்லாத ஆத்திரத்தில் பளார்னு விட்டான்னா… என அவர் கவலை. கவலைப் படுகிறவர்கள் புதிது புதிதான காரணங்களுக்காகக் கவலைப் பட்டுக் கொண்டே யிருக்கிறார்கள்!

பிறகு நாங்கள் பேசாமல் நடந்து வந்தோம். என் மனசில் மாத்திரம் மினுக் மினுக் என ஒரு வாக்கியம்.

எஸ் இல்லைன்னா எல்!

செருப்படி இல்லைன்னா வெளக்கு மாத்து அடி!

சிவா ஒரு பெட்டிக்கடையில் சிகெரெட் வாங்கினான். ‘ ‘ஒனக்குடா ? ‘ ‘ என மணியிடம் கேட்டான்.

‘- ச். வேணாம். ‘ ‘

‘ ‘ஏன் ? ‘ ‘

மணி அவனைப் பார்த்தான். ‘ ‘ச் ‘ ‘ என்றான்.

நான் சிகெரெட் பிடிப்பதில்லை. பிடிக்கக் கூடாது என்பதில்லை. முன்பு பிடித்துக் கொண்டிருந்தவன்தான். வேலை கிடைக்கும் வரை சிகெரெட் குடிப்பதில்லை என சபதம் எடுத்திருந்தேன்.

அதற்கும் காரணம் உண்டு. சில சந்தர்ப்பங்களில் சிகெரெட் வேண்டும் என உள்ளரிப்பு காணும் போது கையில் பணம் இராது. அட ஒரு சந்தர்ப்பத்தில் கடன் வாங்க ஆரம்பித்து வீட்டுக்குத் தெரிந்து…

சபதம்!

‘ ‘யார் துட்டைடா ஊதறே நாயே… ‘ ‘ அப்பா பளார் என்று அறைந்தார்.

வேலை கிடைக்கட்டும் ஐயா. மை ஃபாதர்! உங்க மின்னாடியே சம்பளத்ல சிகெரெட் வாங்குவேன். சம்பள ருவாயையே பத்த வைத்து சிகெரெட் கொளுத்தி உம்ம மூஞ்சிலயே விடறேன்!…

என்னால் முடியாதுதான். அப்ப அது ஒரு ஆத்திரம்!

அது ஒரு சபதம்!

சிவா விரலிடுக்கில் சிகெரெட்டை ஆட்டியபடியே இப்போது பேச ஆரம்பித்திருந்தான். ‘ ‘இங்க பாரு இவனே, நமக்குல்லா இப்ப வேலையும் இல்ல. வெட்டியும் இல்ல. இப்பப் போயி என்னாத்துக்குக் கல்யாண நெனைப்பு. மொதல்ல வேலை கிடைக்கட்டும்டா. கல்யாணம் ‘க ரு ம ா தி ‘ எல்லாம் அதுக்கடுத்துதான்! ‘ ‘

பிறகு நாங்கள் பேசிக் கொள்ளவில்லை. மணி ‘ ‘வரேண்டா ‘ ‘ என்று சொல்லியபடி ஓடிப்போய் பஸ்ஸேறினான். பஸ் ஒன்று கிளம்புவதற் கிருந்தது.

கூடல்நகர் தபால் ஆபிசில் ஒரு பெண் வேலை பார்க்கிறாள்.

சுத்தமாய் மடித்த பருத்தி ஆடைகள் அணிவாள் அவள். எங்கிருந்துதான் கிடைக்கிறதோ, தினசரி ஒரு ரோஜாப்பூ வைத்துக் கொண்டு வருவாள். சொல்ல விட்டுட்டேனே, அவள் கருப்பாய், ஆனால் ஒரு மினுமினுப்புடன் இருந்தாள்.

சிவாவின் பார்வையில் ஒரு விசேஷ மாற்றம்! அதை நான் தற்செயலாக கவனித்தேன். எப்பவும் தான் போய் ஸ்டாம்ப் கியூவில் சிவா நிற்க மாட்டான். ஒருநாள் போய் நின்றான்.

போஸ்டல் ஆர்டர் கவுண்டருக்குப் பக்கத்து கவுண்டர் ஸ்டாம்புக்கு. அவள் அநேகமாக அங்கே உட்கார்வாள். சில சமயம் SB பார்ப்பதும் உண்டு. பொதுஜனங்களுடன் அவாள் தமிழில் உரையாடிப் பார்த்ததே இல்லை. எப்பவும் இங்கிலீஷ்தான், வெள்ளைக்காரி போல.

அட ஆள் மாத்திரம் கர்ருப்பு!

நான் அவளிடம் ஆங்கிலத்தில் என்ன பேச ?

வாட்டாஸ் யுவர் நேம் ?

எஸ் இல்லைன்னா எல் ?

நம்மாள் சிவாவுக்குப் பைத்தியம் பிடித்தது. நாங்கள் கவனித்தது அவனுக்கு வெட்கமாய்ப் போயிற்று. பிகு பண்ணிய பிறகு கடைசியில் ஒப்புக் கொண்டான். எங்களுக்குச் சிரிப்பாய் இருந்தது. எல்லாமே வேடிக்கையாய் இருந்தது. உண்மையைச் சொல்கிறேன். எனக்கு அவனிடம் பொறாமை இல்லை.

சிவா உன் காதல் வாழ்க!

கருப்பழகி. பரவாயில்லை. பாலில்லாத காபி போல!

சிவாவுக்கு ஒரு தைரியமுங் கிடையாது. பேச்சு மட்டும் ஆகா ஓகோவென்றிருக்கும். ஆள் புல் தடுக்கி பயில்வான். தன் காதலை அவளிடம் தெரிவிக்க பல குழப்பங்கள் எற்பட்டன அவனுக்கு.

‘ ‘நேரா ஒருநாள் அவளைப் பார்த்துச் … ‘ ‘

‘ ‘செருப்பைக் கழட்டிட்டான்னா ?… ‘ ‘

‘ ‘அதெப்டி ? பயப்டாதே. அதெல்லாங் கதைலதாண்டா வரும். ‘ ‘

‘ ‘அவளும் அந்தக் கதைல்லாம் படிச்சிருந்தாக்க ? ‘ ‘

‘ ‘பிரதர்… காதல்ன்றது தைரியசாலிங்களோட விஷயம்… ‘ ‘ என்றான் மணி.

‘ ‘வீரன் ஒருமுறை சாகிறான். கோழை… ‘ ‘

‘ ‘அறுக்காதீங்கடா! ‘ ‘

இதைவிட முக்கியமான விஷயம் இடையில் நடந்தது…

/தொ ட ர் கி ற து…

—-

எழுதியது 1999

நன்றி – எஸ் ஷ குறுநாவல்கள்/2 தொகுதி

வெளியீடு அலர்மேல்மங்கை சென்னை 83

டிசம்பர் 2004

storysankar@rediffmail.com

:

Series Navigation