குறுங்கதைகள்

This entry is part [part not set] of 33 in the series 20090212_Issue

விசா


காபி ஆறிக்கொண்டிருந்தது. !!

அவன் எப்போதும் பிசி. வீட்டிலும் அபீஸ் லேப் டாப்…ஷேர்ஸ்..பி.பி.சி…கிளப் கிரிக்கெட்….நடு இரவில் நியுயார்க் பிசினஸ் காள்…படு பிசி….மனைவிக்கு டி.வி விளம்பரம் அளவிற்குத் தான் நேரம் ஒதுக்கியிருந்தான்.
மனைவி ஏங்கினாள்.
” நான் இருப்பதையே மறந்து போகிறானே? அவனுக்கு என் மீது அன்பில்லாமல் இல்லை. மறதி. என்னைத் தவிர மற்ற காரியங்களில் அவனுக்கு இருக்கும் ஆர்வம். சொல்ல வேண்டும்….. ஒரு நாளைக்கு எத்தனை முறை எப்படியெல்லாம் என்னை மறக்கிறாய் சொல்ல வேண்டும்….. நேராக பேசினால் கோபப்படுவான். ….ஆனால்… சொல்ல வேண்டும்…. எப்படி? ”

டீபாயில்
காபி ஆறிக்கொண்டிருந்தது. !!
பேப்பரில் செய்திகள் சுடச்சுட இருந்தன. !!
காபி ஆறிக்கொண்டிருந்தது. !!!
பிசினஸ் செய்திகள் சூடு பிடித்தன.!!!
காபி ஆறிக்கொண்டிருந்தது. !!!!
சினிமா பக்கங்கள் டபுள் சூடாய் இருந்தன. !!!!
ஒரு மணி நேரம் பரபரப்போடு படித்துவிட்டு பேப்பரை சோபாவில் வீசினான். “காபி எங்கே ?”.
டீபாயில் ஆவலாய் தேடினான். காபி இருந்த இடத்தில் அவன் மனைவியின் புகைப்படம் இருந்தது. அவன் உணர்ந்துகொண்டான். கிச்சனுக்கு ஓடிப்போய் அவளை அணைத்து சாரி என்றான்.



ஸ்போர்ட்ஸ் மேன்

நாற்பது வயதிற்கு மேல் ஆகிவிட்டதால் சர்க்கரை கொழுப்பு இவைகளை கரைக்க அவர்கள் இரண்டு பேரும் அந்த பூங்காவிற்கு வாக்கிங் வரத் தொடங்கினார்கள். இரண்டு நாட்கள் சந்தித்ததிலேயே அவர்கள் மிகவும் நெருக்கமாகி விட்டார்கள். அவர்களின் உரையாடலிலிருந்து.

ராமகிருஷ்ணன் : என் பையனுக்கு ஸ்போர்ட்ஸ்ல ரொம்ப இன்ட்ரெஸ்ட்.
சேதுராமன்: அப்படியா. என் டாட்டருக்குக் கூட ரொம்ப இன்ட்ரெஸ்ட்.
ரா: விளையாடுவாங்களா?
சே: இல்ல யாராவது விளையாடினா பாப்பா.
ரா: என் பையன் புட் பாள். கிரிக்கெட். ஹாக்கி. இப்படி எல்லாம் விளையாடுவான்.
சே:அப்படியா.
ரா:ம்ம்ம்….அவன் ரூம் புள்ளா பேட்டும் பாளும் மட்டையும் ஸ்டம்பும் தான் கிடக்கும்
சே: அப்படியா.
ரா: அப்புறம் ஷோ கேஸ் புள்ளா அவன் வாங்கின கப்பு ஷீள்டு தான் நெறஞ்சு இருக்கும். போன வாரம் ஒரு டோர்னமென்ட்ல வின் பண்ணி கப் வாங்கியிருந்தான். பேப்பருல கூட சின்னதா இவன் கப்போட சிரிச்சிட்டு இருக்குற மாதிரி படம் போட்டிருந்தான். நீங்க பாத்தீங்களா?
சே: ஆமா பாத்தேன்………… என் பொண்ணோட சையன்ஸ் புக்குல சின்னதா கட்டிங்க் பண்ணி ஒளிச்சு வச்சிருந்தா.



அவனா நீ

நகரில் அந்த இள வயது சைக்கியாட்ரிஸ்டிடம் தன் பிரச்சனையை விளக்கிக்கொண்டிருந்தான் ஆனந்த். “என் மனைவிய தொடும் போது என் காதலி ஞாபகம் வருது டாக்டர்.”
” கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா மிஸ்டர் ஆனந்த்.”
” காளேஜ் படிக்கும் போது செல்வின்னு ஒரு பொண்ணும் நானும் காதலிச்சோம் டாக்டர். ஆனா அவ ஏமாத்திட்டா. இப்ப என் மனைவிய தொடும் போது அவ ஞாபகம் வருது. அவ ஏமாத்தினது….நான் தாடி வச்சது….அப்புறம் ஒரு வாட்டி தற்கொலைக்கு முயற்சி பண்ணது….பைத்தியக்காரன் மாதிரி சுத்தினது…..”

“என்னால அந்த ஏமாற்றத்த மறக்க முடியல. உடனே தல வலிக்கிது. வியர்க்குது. அதுக்கு மேல எதுவும் முடியல. என் மனைவியோட எனக்கு இன்னும் முழுசா தாம்பத்தியம் அமையல டாக்டர்.”

டாக்டர் ஒரு நிமிடம் அவனை வெறித்து பார்த்துவிட்டு

“யோவ் நீ தானா அது. செல்வி தான் என் மனைவி. அவள நான் ஆசையா எப்ப தொட்டாலும் பாழாப்போன உன் ஞாபகம் வருதாம். உன்ன ஏமாத்தினது…..உன்ன கழட்டி விட்டது….எல்லாம் தப்புன்னு சொல்லி அழுவுறா….நீ பாவமாம்…….நீ எப்படி இருக்கியோன்னு தேம்பி தேம்பி அழுவுறா…..அப்புறம் முதுக காட்டி படுத்துக்குறா. ஏன்யா இப்படி லவ் பண்ணி தொலையுறீங்க. ”

“இப்ப இதுக்கு என்ன தான் டாக்டர் முடிவு”

” வேற என்ன நாம நாலு பேரும் இன்னொரு வாட்டி கல்யாணம் பண்ணிக்கணும்.”

===============

Series Navigation