கீதாஞ்சலி (43) எனக்குப் பூரிப்பளிப்பது! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 22 in the series 20051006_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


இதுதான் எனக்கு
பூரிப்பளிப்பது!
நிழல் எங்கே
ஒளியை விரட்டுகிறதோ,
வேனிற் காலம் விழி திறந்ததும்,
மழை எங்கே
பொழிகின்றதோ, அந்த
சாலைப் புறத்துக்
கோலத்தைக் காத்திருந்து
கண்டு களிப்பதோர் இன்பம்!
அண்ட வெளியில்
கண் காணாது எங்கிருந்தோ
தூதர்கள் செய்தி ஏந்தி
வீதியில் கடந்து,
விரைவாய்ச் செல்வர்,
என்னைப் பாராட்டி! அந்நேரம்
உள்ளத்தின் உள்ளே உவகையில்
துள்ளிக் குதிக்கும்,
என்னிதயம்!
அகண்ட வெளியில் மெதுவாய்ப் பரவி
உலவிடும் தென்றலில்
நிலவிடும் இன்ப மயம்!

கீழ்வானம் வெளுப்பது முதல்
அந்தி வானம் இருட்டுவது வரையில்,
எந்தன் இல்லத்தின் முன்னே
கதவு வாசலில் அமர்ந்து
காத்தி ருக்கிறேன்,
சட்டெனத் தோன்றப் போகும்
மட்டிலாக் களிப்பு வேளை வருமென்று,
கட்டாயம் கண்குளிர அதைக்
காண்பே னென்று!
தருணம்
வரும் வரையில் நான் மட்டும்
தன்னந் தனியாக
ஏகாந்த நிலையிலே
இன்புறுவேன்
புன்னுகையுடன்,
இன்னிசைக் கீதங்களைப்
பாடிக் கொண்டு!
அந்த நேரம் வீசும் தென்றலில்
பொங்கி நிரம்பும் நறுமணம்,
இங்கு நீ வருவது
திண்ணம்
என்பதைப் பரப்பி!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 3, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா