கீதாஞ்சலி (23) உனக்காகக் காத்திருக்கிறேன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 24 in the series 20050520_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


பகலில் காரிருள்
மிகுந்து கொண்டே போகிறது,
முகில் மேல் முகில் அப்பி
மோதிய வண்ணம்!
என் அன்பே!
வாடும்படி என்னைத் தனியே
தவிக்க விட்டு
வாசற் கதவின் வெளியே ஏன்
வெகுநேரம் காக்க வைக்கிறாய் ?
சுறு சுறுப்பான
பகற் பொழுதில்
வேலை செய்யும் சமயம்
ஆரவாரக் கூட்டத்தில் நான்
அடங்கி உள்ளேன்!
ஆயினும் ஏகாந்தமாய்
இருண்டு போன இன்றைய தினம்,
நின்முகம் காண்பேன்
என்று நம்பிக்
கொண்டிருக்கிறேன்!

நின் திருமுகத்தை
நீ காட்டாது போனால்,
நிரந்தரமாய் ஒதுக்கி என்னை,
நீ ஒருங்கே
புறக்கணித்து விட்டால்,
எப்படி வாழ்வே னென்று,
தவிக்கிறேன்,
குளிரும் மழை வேளைகளில்!
அங்குமிங்கும்
அலையும் காற்றைப் போல்
நிலைமாறிக் கலங்குமென்
நெஞ்சு!
எப்போது முகம் காட்டுவாய்
என் அன்பே ?
கண்ணிமை கொட்டாது,
கவலையில் சோர்ந்து போய்
விண்வெளிக்கு அப்பால் நோக்கிய வண்ணம்
நிற்கிறேன்,
விழித்துக் கொண்டு!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 15, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா