கால நதிக்கரையில்……(நாவல்)-10

This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

வே.சபாநாயகம்ராஜக்கண்ணு ரெங்கம் வீட்டுக்கு வருவதை கொஞ்சநாள் நிறுத்தி வைத்தான். அவளது நித்யச் செலவுக்குத் தருவதையும் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தத் தொடங்கினான். எரிவதை நிறுத்தியாயிற்று; ஆனால் கொதிப்பது நின்று விடுமா என்ன? ரெங்கம் அதற்காக எதுவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கோபுவைச் சந்திப்பது தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அதனால் முற்றாக உதவிகளை நிறுத்தியதுடன் வருவதையும் ராஜக்கண்ணு நிறுத்தி விட்டான்.

கோபுவிடம் வீட்டுக் கஜானாப் பொறுப்பு இல்லாததால் அவனால் ரெங்கத்துக்கு உடலைத்தான் தரமுடிந்தது; ரெங்கத்தின் லௌகீகத் தேவைகளுக்கு உதவ முடிய முடியவில்லை. ராஜக்கண்ணுவின் உபயமாக ரெங்கத்தின் வயிற்றில் வளரும் அவனது வாரிசு வேறு கோபுவை உறுத்தத் தொடங்கியது. ஆனால் ரெங்கத்துக்கு உதவ அவனுக்கு எந்த வழியும் தெரியவில்லை.

வறுமைச்சூழல் மெதுவாக வீட்டில் பயங்காட்ட ஆரம்பித்தது. வீட்டில் ரெங்கத்தை விட்டால் சம்பாதிப்பவர் வேறு யாருமில்லை. கோபு அம்மாவுக்குத் தெரியாமல் நெல்களஞ்சியத்திலிருந்து கொஞ்சம் நெல் சாப்பாட்டுக்கு ஒருமுறை அனுப்பினான். ஆனால் அது எப்படியோ அவன் அம்மாவுக்குத் தெரிந்து மீண்டும் தொடர முடியாதபடி வீட்டில் கட்டுக்காவல் அதிகமாயிற்று. இப்படியே இனியும் விடக்கூடாது, கால் கட்டுப் போட்டே ஆகவேண்டும் என்று கோபுவின் அம்மா தீர்மானித்து அவனது திருமணத்துக்கு ஏற்பாடு செய்தாள். தன் அண்ணன் மகளைக் கட்டி வைக்க முடிவு செய்தாள்.

அண்ணன் மகள் தனம் என்கிற தனலட்சுமி – பக்கத்து ஊர்தான். ரெங்கத்தைவிட நல்ல நிறம்தான் என்றாலும் தாட்டியான உடம்பு. லட்சணத்திலும் ரெங்கத்துக்கு ஈடு இல்லை. ஆனால் ஆண்வாரிசு இல்லாத குடும்பம் என்பதால் கணிசமாக சொத்து உடன் வரும். கோபுவுக்கு அவளைச் செய்து கொள்ள விருப்பமில்லை. ஆனால் அவன் பேச்சு அவன் அம்மாவிடம் எடுபடாது. விருப்பமில்லாமல் தாலி கட்ட வேண்டிவந்தது. திருமணம் கோலாகலமாய் நடந்தது.

தனலட்சுமி தன் அத்தையைப் போலவே குடும்ப நிர்வாகத்தில் கெட்டிக்காரி. பிறந்த வீட்டிலேயே பயிற்சி பெற்றவள். எனவே அவளால் கோபுவை வழிக்குக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையால்தான் கோபுவின் அம்மா அவளைத் தேர்ந்தெடுத்தாள்.

தனலட்சுமிக்கு கோபு – ரெங்கம் தொடர்பு கல்யாணத்துக்கு முன்பே தெரியும். தெரியாவிட்டாலும் கிராமத்தில் – தாலிகட்டிய சுருக்கோடு அவளுக்கு அதைத் தெரிவிப்பதில் பலருக்கு ஆர்வமிருந்தது. ஆதாயத்தை எதிர்பாராது செய்யும் சமூகப் பணி மாதிரி அது ஒரு ஆர்வம். எல்லாம் – தான் வீட்டில் வந்து உட்கார்ந்த தும் சரியாகிவிடும் என்பதில் அவளுக்குத் திடமான நம்பிக்கை.

முதல் ராத்திரியிலேயே தனம் களை வெட்ட ஆரம்பித்து விட்டாள். இங்கிதமில்லாமல் எடுத்த எடுப்பிலேயே ரெங்கத்தின் தொடர்பு பற்றிக் கேட்டு கசப்பை உண்டாக்கி விட்டாள். இனிமேல் அதையெல்லாம் விட்டு விடவேண்டும் என்றும் அவளுக்கு எதுவும் தரக்கூடாது என்றும் – அவன் அம்மாகூட அதுவரை அவனிடம் நேரில் பேசாதவற்றைப் பேசி – முதல் இரவை மோசமான இரவாக ஆக்கி விட்டாள். தாயார் நினைத்தபடியே அவள் அவனுக்குக் கால் விலங்காக ஆகிவிட்டாள்.

தினமும் அவளது கண்காணிப்பு அதிகமாயிற்று. வீட்டுச் சாவி அவளது கைக்குப் போய் விட்டது. அவனது செலவுக்கு அவளைத்தான் கேட்க வேண்டி இருந்தது. அவளது பிடுங்கல் அதிகமாகவே அடி உதை என்று ஆரம்பித்தான். தனத்துக்கு அதெல்லாம் கொசுக்கடி போல. அடி அதிகமானால் அசிங்கமாக ரெங்கத்துடனான அவனது உறவை ஊர்கேட்க உரத்துக் கூவ ஆரம்பித்தாள். கோபுவுக்கு தாம்பத்யம் ஆயுள்சிறை மாதிரி ஆகிவிட்டது.

இதெல்லாம் அவ்வப்போது ரெங்கத்துக்கு தெரியத்தான் செய்தது. தன்னால் கோபுவுக்கு வாழ்க்கை பிடுங்கலாகிவிட்டதே என்று வருத்தம் ஏற்பட்டாலும் தன்னிடம் அவனுக்கு பிடிப்பு விட்டுப் போகவில்லை என்றறிந்தபோது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

ரெங்கத்துக்கு கோபுவின் திருமணத்தில் வருத்தம் ஏதுமில்லை. அவள் அவனைத் திருமணம் செய்து கொள்ள ஒருபோதும் விரும்பியதில்லை. அது சாத்யமும் இல்லை என்பது அவளுக்குத் தெரிந்ததுதான். திருமணத்துக்குப் பிறகும் கோபு தன்னிடம்தான் வருவான் என்பதில் அவளுக்கு சந்தேகமிருக்கவில்லை. ஆனால் வெறும் ஆள் வந்து என்ன பயன்? நித்திய சாப்பாட்டுக்கும் தரித்திரம் வந்த பிறகு சுற்றி இருப்பவர்களின் நெருக்குதல் அதிகரிக்க ஆரம்பித்தது. கோபுவிடமிருந்து உதவி எதுவும் கிட்டவில்லை என்பதால் அவனை வெறுத்து விலகவும் அவளுக்கு முடியல்லை. ஆனால் நிறைமாதக் கர்ப்பிணியான அவள் சரியான போஷாக்கின்றி நலியத் தொடங் கினாள்.

அக்கம் பக்கதிலிருந்தவர்கள் இரக்கப்பட்டு ராஜக்கண்ணுவிடம் தூது போனார் கள். ‘அவள் எப்படி நடந்து கொண்டாலும் அவளது வயிற்றில் வளர்வது உன்னுடைய குழந்தை அல்லவா? பிள்ளைத்தாச்சிக்கு வயிறு வாடக்கூடாது. இனிமே அவ வழிக்கு வந்துடுவா; நீ மறுபடியும் வந்தா எல்லாம் சரியாயிடும், இதுதான் நேரம்’ என்றுஅவனைக் கரைத்தார்கள். அவனுக்குப் பிடிவாதம் ஏதுமிருக்கவில்லை. ஆனால் ரெங்கம் தனக்கு மட்டுமே உரிமையாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். அதனால் ஒரு நிபந்தனை விதித்தான். ”இனிமே அவ அங்கே இருக்கக் கூடாது. இங்கேயே வந்துட ணும். தனிவீடு கொடுத்து வச்சிக்கிறேன். அங்கே இருந்தா அவந் தொடர்பு விடாது” என்று கண்டிப்பாகக் கூறி விட்டான்.

முதலில் ரெங்கம் அதை ஏற்பதாக இல்லை. ஆனால் பெரியம்மாக்களும் உற்ற சிலரும் அவளிடம் யாதார்த்த நிலையை எடுத்துச் சொல்லி வற்புறுத்தினார்கள். “வீணாகப் பிடிவாதம் பிடிக்காதே; ராஜக்கண்ணு உன் காலடியிலே கிடக்கிறவரு. இன்னொருத்தனா இருந்தா ‘அது எம் புள்ள இல்லே! யாருக்குப் பொறந்துதோ’ன்னு கையக் கழுவி விடுவான். ஆனா அப்பிடி ஒதறிட்டுப் போகாம – நீ பண்ணுன கூத்துக்கெல்லாம் மனசு வெறுத்துப் போகாம தம் புள்ளதான்னு ஏத்துக்கிட்டு ஒன்னை வச்சிக் காப்பாத்த ஒத்துக்கிட்டிருக்காரு. அரசனை நம்பி புருஷனக் கைவிட்டுடாதே! கோபு இனி ஒனக்கு ஒதவமாட்டான். அவுனுக்குக் கல்யாணம் ஆயிப்போச்சு. அவம் பொண்டாட்டி லேசுப் பட்டவ இல்லே. அவ அவன உங்கிட்ட அண்ட உடமாட்டா. ஆம்படையான முந்தானியிலேயெ முடிஞ்சு வச்சுக்குவா. ராஜக்கண்ணு கட்டுன பொண்டாட்டியாட்டமா உங்கிட்ட ஆசையா இருக்கிறாரு. புத்திக் கெட்டத்தனமா வலிய வர்ர சீதேவிய எட்டி ஒதைக்காதே! இத்தினி நாளுந்தான் தனி ஆளு; இப்பொ ஒரு புள்ளையும் உண்டாயிப் போச்சு. அதக் காப்பாத்த வாணமா? அதை இப்பிடி ஒரு ஆளு தொண இல்லாமே எப்பிடி வளத்து ஆளாக்குவே? நல்லா யோசன பண்ணிப் புத்திசாலித்தனமா நடந்துக்க. இணக்கமா நடந்து பொழைக்குற வழியப் பாரு. உடம்பு ரத்தம் சுண்டுனா, தேவிடியாள ஒரு நாய் கூட சீந்தாது!” என்று பாடம் அடித்தார்கள்.

திரும்பத் திரும்ப உற்ற பலரும் அவளுக்குப் புத்திமதி சொல்லிக் கொண்டே இருந்தார்கள். எதிர் காலத்தை நினத்துப்பார்க்கச் சொல்லிப் பயமுறுத்தினர்கள். ‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்கிறபடி ரெங்கம் சிந்திக்கத் தொடங்கினாள். கோபுவின் மீதாதன மோகம் குறைந்துவிட வில்லை என்றாலும் யதார்த்தம் உறைக்கவே செய்தது. மிகவும் சிந்தித்து கடைசியாக ஒரு முயற்சியை மேற்கொண்டாள். மிகவும் நெருங்கிய ஒருவர் மூலமாக கோபுவுக்கு ஒரு தகவல் அனுப்பினாள். தன் இக்கட்டான நிலைமையை அவனிடம் சொல்லி தனக்குக் கொஞ்சம் நிலமும் ஒரு வீடும் எழுதிக் கொடுப்பதானால் அவள் ராஜக்கண்ணுவை உதறிவிடுவதாகச் சொல்லி அனுப்பினாள்.

கோபுவுக்கு அது அதிர்ச்சியளித்தது. அவனுக்கு அது சாத்யமானது அல்ல. அம்மாவும் மனைவியும் அதற்கு விடமாட்டார்கள். ஆனால் வெறுங்கை முழம்போடாது என்று அவனுக்குத் தெரிந்தானிருந்தது. தனது கையாலாகாத்தனத்துக்காக அவன் மிகவும் குன்றிப்போனான். அவனால் திருப்தியான பதிலை ரெங்கத்துக்கு அனுப்ப முடியவில்லை. கடைசியில் ரெங்கத்துக்கு வேறு வழி இருக்கவில்லை. ஒருநாள் அவள் ராஜக்கண்ணு அனுப்பி வைத்த வண்டியில் புறப்பட்டு அவனது ஊருக்குப் போகத்தான்
நேர்ந்தது.

– பழைய நினைவுகளில் ஆழ்ந்தவராய் நடந்து வந்தவர் வடக்குத் தெருவுக்கு அடுத்த தெருவின் முனையில் நின்றிருந்த கருடக் கம்பத்து மேடையில் வந்து அமர்ந்திருப்பதை வெகு நேரத்துக்குப் பிறகே உணர்ந்தார்.

(தொடரும்)


v.sabanayagam@gmail.com

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்