காற்றாடிகளுடன் உறவாடிய நாட்கள்

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

புதியமாதவி, மும்பை


(பயணக்கட்டுரை)

பெருநகர வாழ்க்கை என் மண்ணையும் மனிதர்களையும் பார்க்கும்
ஏக்கத்தை என் போன்றவர்களுக்கு நிரந்தர வியாதி ஆக்கியிருக்கிறது.
வியாதி முற்றிவிட்டால் கோடைவெயில் என்று கூட பார்க்காமல்
ஓடிப்போய் எம் மண்ணில் கால்வைத்து திருவிழாவுக்கு வந்தக்
குழந்தை போல எல்லாவற்றையும் வாங்கி அப்படியே முழுங்கி..
புஞ்செயிலும் நஞ்செயிலும் கை அசைக்கும் காற்றாடிகளுடன்
சேர்ந்து நாமும் கை அசைத்து நட்சத்திரங்களை எண்ணி அடுக்கி
மாங்காய், பப்பாளி, புளி சாப்பிட்டு இளநீரையும் மோரையும்
பருகி வேப்பம் பூ மணத்தை அனுபவிக்கும் சுகம் இன்றைக்கும்
இருக்கத்தான் செய்கிறது. அந்த சுகமான அனுபவங்களின் ஊடாக
வள்ளியூருக்கு அருகிலிருக்கும் பாம்பன்குளத்தில் சில நாட்கள்…
உண்டதும் கண்டதும் உணர்ந்ததும்..

வள்ளியூரில் நுங்கு சர்பத்
————————–
.நண்பர் எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் தினப்பாடு கவிதையை யுகமாயினியில்
வாசித்தது முதல் எங்க ஊரு நுங்கு சாப்பிடும் ஆசை நாளுக்கு நாள்
அதிகமானது. நினைத்தவுடனேயே நுங்கு அப்படியே வாய்க்குள்
‘லபக்டபக்’ என்று வழுக்கி வழுக்கி அப்படியே தொண்டைக்குள்
இறங்கும்போது ஒரு சுகம் வருமே…ம்ம்ம்ம் ஆஅ.. அனுபவித்தால்
மட்டுமே அந்தச் சுவையைப் புரிந்து கொள்ள முடியும்!

சந்தர்ப்பம் கிடைத்தவுடன் அப்படியே சென்னைக்கு அக்கா மகன் திருமணத்திற்கு
போனவள் வள்ளியூருக்கு ஒரு ஓட்டம் ஓடி வள்ளியூர் கடையில் நுங்கு சர்பத்
வாங்கி கரண்டியால் எடுத்து உறிஞ்சி உறிஞ்சி குடித்துக் கொண்டே
யுகமாயினி சித்தனுக்கு ஒரு போன்போட்டு நுங்குசர்பத் குடித்துக் கொண்டிருப்பதைச்
சொன்னபிறகுதான் ஒரு சின்ன சந்தோஷம்!

அனாதையாகிப்போன சாமி:
—————————–

எங்க ஊருக்கு கால்நடைகளுடன் வந்து குடியேறிய மூதாதையர் குடியேறிய
இடத்தில் கும்பிட ஒரு தெய்வம் வேண்டுமென்று மலையாளத்து சாமியார்களிடம்
கேட்டார்களாம். அவர்களும் மண்கலயத்தில் சாமியைப் பிடித்து அடைத்து
கொடுக்க அதைக் கொண்டுவந்து தோட்டத்தில் வைத்து கும்பிட்டு வந்தார்களாம்.
சேவல் கோழி பலி கொடுத்து கும்பிடுவது வாடிக்கை. காலப்போக்கில் அவர்கள்
சாமியைக் கொண்டு வைத்த இடத்தில் என் கணவரின் மூதாதையர் வீடுகட்டி
குடியேறினார்கள். வழக்கம்போல சாமிக்கு சேவல் அறுத்து பூஜை செய்வது
தொடர்ந்தது. பின்னர் சாமியைக் கும்பிட்ட அந்தக் குடும்பத்தார் அனைவரும்
கிறிஸ்தவர்களாக மதம் மாறிவிட்டார்கள். சாமியை யாரும் கவனிக்கவில்லை.
சாமி அனாதையாகிவிட்டாரே என்று கவலைப்பட்ட என் மாமியாரும் பக்கத்துவீட்டு
இப்படி நம்ம இரண்டு வீட்டு திண்ணைகளுக்கும் நடுவிலிருக்கு சாமியை
அம்போ என்று விட்டுவிடலாமா.. கொண்டுவந்தவர்கள் சாமியைக் கைவிட்டுவிட்டாலும்
நாம கைவிட்டுவிட்டால் நல்லாயிருக்கா என்று சாமி மீது பரிதாபப்பட்டு
இனிமேல் அவரைக் கவனித்துக் கொள்வது நம் பொறுப்பு என்று ஓர் எழுதாத
தீர்மானத்தை போட்டுக்கொண்டார்களாம். அதன்படி… இன்றுவரை
பசு மாடு ஈனினால், கன்னுக்குட்டிக்கு வயிற்றுவலி வந்து ரத்தம்ரத்தமா சாணிப்
போட்டால் மேயப்போன மாடு காணாமல் போய்விட்டால்… இப்படியாக கால்நடைச்
சம்பந்தப்பட்ட சகல கோரிக்கைகளையும் சாமியிடம் வைத்து கும்பிட்டுக்கொண்டு
இருக்கிறார்கள். என்ன இப்போது நாங்கள் சேவல் பலி கொடுப்பதில்லை!
சர்க்கரைப்பொங்கல் டேஸ்ட்டுக்கு சாமியை மாற்றிவிட்டோம்.

கருப்பட்டி புண்ணாக்கு
————————
இந்த எங்கள் சாமிக்கு பூஜை செய்ய இந்த முறை சாமான்கள் வாங்க நானே
முன்வந்தேன். எப்படியோ நுங்குசர்பத் சாப்பிட வள்ளியூருக்கு ஆட்டோவில்
போகிறோம் வாங்கிவந்துவிடலாம் என்று எண்ணி ஒத்துக்கொண்டேன்.
தேங்காய் மூன்று, இரண்டு இளநி, இரண்டு சீப் வாழைப்பழம், பத்தி, சந்தணம், குங்குமம், திருநீறு, சாம்பிராணி, மூனு மாலை, கொஞ்சம் விடுபூ, வாழைஇலை,
வளக்கெரிக்க எண்ணெய் , திரி இத்தியாதிகளுடன்
பயாச சாமான்கள் இத்துடன் சாமிக்கு வைத்துக்கும்பிட கருப்பட்டி புண்ணாக்கு.
இதில் லிஸ்ட் எழுதும்போதே கருப்பட்டி புண்ணாக்கு என்பது எனக்குப் புதிதாக
இருந்தது. சாமிக்கு வச்சி கும்பிடற கருப்பட்டி புண்ணாக்கு என்று சொல்லுமா
எந்தக் கடையிலுல் குடுப்பாங்க… என்று சொல்லி அனுப்பினார்கள்.
வள்ளியூரில் கடை கடையா கருப்பட்டி புண்ணாக்கு கேட்டு அலைந்தேன்.
திடீரென பெய்த கோடை மழையில் வள்ளியூர் ரோட்டில் தண்ணீர் ஓடியது.
ஒர் ஆட்டோவை வைத்துக்கொண்டு ஒவ்வொரு கடை கடையாக கருப்பட்டி
புண்ணாக்கு கேட்டால்…

“ஏம்மா.. கருப்பட்டி புண்ணாக்கா.. அப்படி நாங்க கேள்விபட்டதே இல்லியே.
எள்ளுப் புண்ணாக்குத்தான் இருக்கு. வாங்கிட்டுப்போங்க..”
இல்ல.. இல்லா எனக்கு நல்லா தெரியும். அத்தை கருப்பட்டி புண்ணாக்குனுதான்
சொன்னாங்க..னு உறுதியாக நான்.
ஆட்டோ டிரைவரும் ‘கருப்பட்டி புண்ணாக்கு கேள்விப்படலியே, அக்கானு”
சொல்ல வேறுவழியின்றி எள்ளுப்புண்ணாக்கு வாங்கிக்கொண்டு போனேன்.
வள்ளியூரில் பெய்த மழை பாம்பன்குளத்தில் பெய்யவில்லை.
ஏன் தெரியுமோ..? நாங்க எங்க திண்ணையிலிருக்கும் சாமிக்கு பூஜை
செய்யப்போறதாலனு அத்தை சொன்னார்கள். ம்ம்ம் அவர்கள் சொன்னால்
சரியாகத்தான் இருக்கும்.

ஒருவழியாக பூஜை முடிந்தப் பின் தெரிந்தது… கருப்பட்டி புண்ணாக்கு கதை.
கருப்பட்டியும் புண்ணாக்குமாம். கருப்பட்டி + புண்ணாக்கு.
அவர்கள் சொன்னவுடன் என் முகத்தில் அசடு வழிந்ததை அப்படியே சாமிமீது
பயபக்தியுடன் இருப்பதாகக் காட்டிக்கொண்டு சர்க்கரைப் பொங்கலை
ஒரு வெட்டு வெட்டுவதில் குறியாக இருந்தேன்.
ஊருக்குப் போனால் “ந்நோ டு டயட் கண்ரோல்”

எங்க ஊரு விளம்பரங்கள்:
—————————

விளம்பரங்களில் பிதுங்கி கசிந்து சிந்தி சிதறி சந்தி சிரிக்கிறது
எம் தமிழகச் சாலைகள்.
பெருநகரங்கள் மட்டுமல்ல, குக்கிராமங்களிலும் பிஸ்லரி பாட்டிலும்
இலவசமாக எம் தமிழனத்தலைவர் வழங்கிய தொலைக்காட்சியில்
மாமன் மச்சான் நண்பன் திருமண வாழ்த்துகள் தனித்தனி செய்திகளாக
வண்ண வண்ண புகைப்படங்களுடன் ஓடி என்னை ஆச்சரியப்படுத்தியது.
மட்டுமல்ல..
இவர்களுடன் சேர்ந்து அவரவர்களின் சினிமா கதாநாயகர்கள்,
விஜய், தல, சிம்பு, ஏன் வடிவேலு வரை… வந்து இவர்களுடன் சேர்ந்து வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
வழக்கம்போல கொடைவிழா அழைப்பிதழ்களுடன் பூப்புநன்னீராட்டு
விழா அழைப்புதழ்களும் பெரிய போஸ்டர்களாக அச்சிடப்பட்டு நீக்கமற
நிறைந்திருந்தது எங்கள் கிராமத்து சுவர்கள்.

சென்னை பெருநகரத்தில் தொல். திருமாவின் சுவரொட்டிகள், விளம்பரங்கள்
கொஞ்சம் அதிகமாகவே கண்ணில் பட்டது என்றால் தமிழனத்தலைவருடன்
தளபதியும் சேர்ந்திருக்கும் போஸ்டர்கள் ..இது புதிதாக எழுதப்படாத சட்டமாக
வந்திருக்குமோ.. மாவட்ட வட்ட நகர பெருநகர பஞ்சாயத்து சகலத்திலும்
சக்கரவர்த்தியுடன் சேர்ந்திருக்கும் இளவரசர் .. தெற்கே போகப்போக…
சக்கரவர்த்தியுடன் சேர்ந்து எங்க மதுரை இளவரசு படமும் போஸ்டராக
இருந்தது. இதுவே தமிழ்நாட்டின் வடக்கு தெற்கு மாநிலங்களுக்கான மிகப்பெரிய
வேறுபாடாக சரித்திர பேராசிரியர்கள் என்னுடைய இந்தப் பயணக்கட்டுரையிலிருந்து
முடிவுக்கு வரலாம்.

தோழர் முதுபெரும் எழுத்தாளர் தி.க.சி அவர்களைச் சந்திக்க வள்ளியூரிலிருந்து
நெல்லை. வயக்காடெல்லாம் வீட்டுமனைகளாகி அடுக்குமாடிகளாகி..
ரொம்பவே மாறித்தான் இருக்கிறது எங்க ஊரு.
ஆனால் திகசி மாறவே இல்லை. தள்ளாத வயதிலும் மாத்திரைப் போட்டுக்கொண்டு
சமுதாய மாற்றங்கள் குறித்தும் செம்மொழி மாநாடு குறித்தும் மாவோயிஸ்டுகள் குறித்தும் நிறையவே பேசுகிறார். அவரிடம் தமிழகத்தின் விளம்பரங்கள்
குறித்து பேசிய போது திகசி க்குத் துணையாக இருக்கும் தோழர் வள்ளி
புதிதாக இன்னொரு செய்தியையும் பகிர்ந்து கொண்டார்.
மதுரையில் இழவு வீட்டு நிகழ்ச்சிக்கு மூன்றுமணி நேரத்துக்கு மேல் ஓடுகிற
திரைப்பட சோகப்பாடல்களின் குறுந்தகடு கடைகள் இருக்கிறதாம்.
குறுந்தகடை வாங்கி இழவு வீட்டில் சோக ராகத்தை ஒலிக்க வைத்துவிடுவார்களாம்.
ஒப்பாரிப் பாடல்களும் குறுந்தகடாக கிடைக்கிறதாம்.

அடுத்தமுறை நான் ஊருக்குப் போகும்போது மாமன்மகள் வயசுக்கு வந்ததை
போஸ்டர் போட்டு கொண்டாடும் மக்கள், அவள் முழுகாமல் இருப்பதையும்
போஸ்டர் போட்டு அறிவித்தாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை!

பேருந்தில் ஊனமுற்றவர்கள் என்று எழுதப்பட்டிருந்த எல்லா பெயர்ப்பலகைகளும்
எடுக்கப்பட்டு ” மாற்றுத்திறனாளிகள்” என்று மாற்றப்பட்டிருந்தது.
மிகவும் குறுகிய காலத்தில் இந்த நல்லதும் செய்யப்பட்டிருக்கிறது என்பதற்காக
பாராட்ட வேண்டும் அரசை.
அத்துடன் பேருந்தில் பயணம் செய்யும் போது திருவள்ளுவரின் திருக்குறளுடன்
சேர்ந்து இன்னொருவரின் பொன்மொழிகளும் வாசிக்க கிடைக்கின்றன.

நான் வாசித்த பொன்மொழி:
——————————-

” நான், நீ என்று சொன்னால் ஒட்டாத நாக்கு நாம் என்று சொல்லிப்பாருங்கள்.
ஒட்டும் – கலைஞர்”

இப்படி புதிதாக முளைத்திருக்கும் பொன்மொழிகளை அரசு பேருந்துகளில் வாசித்த
அனுபவத்தை மட்டும் ரகசியமாக சொல்லுகிறேன். நீங்களும் எல்லோரும்
வாசித்திருப்பீர்கள். என்னை விட பாக்கியசாலிகள் நீங்கள். இப்படி புதிய பொன்மொழிகளை நிறைய அரசு சார்பாகவே வாசிக்கும் அனுபவம் என்னைவிட
உங்களுக்கு அதிகம் கிடைக்கிறது. இதெல்லாம் சரியா தவறா என்று யோசிக்க
உங்களுக்கு நேரம் இருந்திருக்காது. பிறகென்ன… இலவசமாக தொலைக்காட்சி
மட்டுமா.. கேஸ் அடுப்பும் கொடுக்கப்போகிறார்களாம் எங்கள் ஊரில்.
எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சிகள் இருப்பதால் இப்போதெல்லாம் யாரும்
திண்ணையில் உட்கார்ந்து பழங்கதைகள் பேசுவதில்லை!

பக்கத்து வீடுகளுக்குப் போனால் எல்லாரும் ரொம்ப ப்ஸியாக இருக்கிறார்கள்
மெகாத்தொடர்கள் பார்த்துக்கொண்டு. நாம்தான் அவர்களுக்குத் தொந்தரவாக
வந்துவிட்டோமோ என்று சொரணை வந்து நாமே எழுந்துவந்துவிட வேண்டியதுதான்.
ஒருதாய் ரொம்பவும் வருத்தப்பட்டுக் கொண்டார் அவருடைய மகனுக்கு அறுவைச்சிகிச்சை நடக்க இருப்பதைச் சொல்லி. என்னவென்று விசாரித்தப்போது
மகனுக்கு வியாதிவந்துவிட்டதையோ அறுவைச்சிகிச்சையையோ நினைத்து
வருத்தப்பட்டதைவிட கலைஞரின் காப்பீட்டு திட்டத்தில் இந்த வியாதி, இந்த
அறுவைச்சிகிச்சை இடம் பெறவில்லையே என்றுதான் ரொம்பவும் வருத்தப்பட்டுக்கொண்டார். அவரே சொன்னார்..
“கவலையை மறக்க டி.வி. இருக்கு,
எவகிட்டேயும் போயி பாடு பழக்கம் பேசனும்னு இல்ல”

வாழ்க அரசு.. வளர்க… அவர்களின் இலவசத் திட்டங்கள்.
———-

விலைமதிப்பில்லாத
வாழ்க்கை
மிதக்கிறது.
இலவசங்களில்

யாருக்கும் நீந்திக்
கரையேறுவது பற்றி
அக்கறையில்லை.
மிதப்பதே சுகம்
உதவி 24X7 டாஸ்மார்க்

எதிர்நீச்சலென்று
எவன் பேசினாலும்
எதிரி.
அடி தடி வெட்டு
எரி எரி
உயிருடன் எரி.
எவனிருக்கான்
ஏன் என்று கேட்க.

அன்புடன்,

புதியமாதவி,
மும்பை.
12/05/2010

Series Navigationவிஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று >>