காரின் மனக்கதவுகள்

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

புதியமாதவி


என்றும்போலவே அன்றும் விடிந்தது. என்றாலும் இந்த வானத்தின் விடியலில் மட்டும்

மனசும் உடம்பும் சந்தோஷத்தில் மிதந்தது. குழந்தைகள் இருவரும் போர்வை

விலகிப்போய் விரித்த இடத்திலிருந்து விலகி எங்கேயோ படுத்திருப்பதைக்

கண்கொள்ளாமல் பார்த்துக் கொண்டிருந்தான். தொட்டில் சேலையை விலக்கிக்கொண்டு

எட்டிப்பார்க்கும் குழந்தைபோல வானம் விடியலில்.

பக்கத்து அறையில் அம்மா என்ன செய்கிறாள் என்று மெதுவாக எட்டிப்பார்த்தான்.

படுத்திருந்தாள், ஆனால் நிச்சயமாக தூங்கவில்லை என்பது மட்டும் தெரிந்தது.

வழக்கம்போல காலையில் ஐந்து மணிக்கு எழுந்து பழக்கப்பட்டவள். இப்போது அவன்

மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தூக்கத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால்

படுக்கையை விட்டு எழுந்திருக்காமல் படுத்திருக்கின்றாள். அவள் கண்கள் தூங்குவது

போல மூடியிருக்கும். ஆனால் அது தூக்கமில்லை.

எழுந்து போய் முகத்தைக் கழுவிவிட்டு பல்லை விளக்கினான்.

‘என்னடா..கிட்டு.. பிரயாண அலுப்பு தீர கொஞ்சம் நேரம் தூங்கேன்.. காபி

போட்டுத் தரவா.. ‘

‘வேண்டாம்மா.. ‘

அவன் தன் வெள்ளைக்கலர் அரைக்கால் சட்டையும் வெள்ளைக்கலர் பனியனும்

கேன்வாஷ் ஷூவும் மாட்டிக்கொண்டு தலையை வாரினான். அவனையே அவள்

வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘அப்படியே காலாற நடந்திட்டு வர்றேம்மா.. நீ படுத்துக்கோ.. நான் சாவியை

எடுத்திட்டுப் போறேன் ‘

அவன் கதவை இழுத்து அடைத்துவிட்டு போவதையே அவள் பார்த்துக்

கொண்டிருந்தாள்.

எவ்வளவு மாறிவிட்டான் கிட்டு. காலையில் பிராக்டிக்கல் வகுப்புகளுக்கு அவனை

எழுப்புவதற்குள் அவள் என்ன பாடு பட்டிருக்கின்றாள். காலையில் ஆறுமணி என்றால்

இவள் மட்டும் அவனிடம் அரைமணி நேரம் அதிகமாக சொல்லித்தான் எழுப்புவாள்.

‘டேய் கடன்காரா.. மணி ஆறரை ஆகப்போவது.. ‘

இந்த அலாரம் மாதிரி பத்து நிமடத்திற்கு ஒருமுறை வந்து அவனை

எழுப்பியாகவேண்டும். கடைசியில் அவன் மூடியிருக்கும் போர்வையை எடுத்து ஒரு

வழியாக எழுப்பி உட்காரவைத்து அவன் டா யைக் குடித்து முழுசா கண்ணைத் திறக்கிற

வரைக்கும் அவன் பின்னாலேயே இருந்தாக வேண்டும். அந்த டாயைக் குடிக்கிற

வரைதான் பிரச்சனை. அப்புறம் அவன் அவளை விரட்டுவான்.

கடைசியா எப்போதும் போல இவள் சுடச்சுட சமைக்கும் காலை டிபனைச் சாப்பிட்டால்

தனக்கு லேட்டாயிடும் என்று கத்திவிட்டு

‘உன்னாலேதாம்மா எனக்கு லேட்டு. நீ என்னை கரெக்ட் நேரத்திற்கு எழுப்பவில்லை ‘

என்று இவள்மீது குற்றச்சாட்டை அடுக்கிவிட்டு அவசரம் அவசரமாக ஓடும் அதே மகனா

இவன். இப்போ என்னடானா விடியலில் எழுந்து வாக்கிங் போறான்! ‘

அவள் கிட்டுவின் கடந்த காலத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். இப்போதெல்லாம்

அவளின் நிகழ்காலம் என்பதே கடந்தகாலத்தின் நினைவுகளில் வாழ்வது

என்பதாகிவிட்டது. வருங்காலத்தைப் பற்றி பெரிதாக நினைப்பதற்கு எதுவுமில்லை

என்றாகிவிட்டால் நிகழ்காலம் கடந்தகாலத்தில் மட்டுமே பயணம் செய்வது

வாழ்க்கைப் பயணத்தில் யதார்த்தமாகவே அமைந்துவிட்டது.

அவன் காலனியில் மூன்று சுற்று சுற்றிவிட்டு எதிர்ப்பட்ட எல்லோருக்கும் ஒரு

வணக்கம், நமஸ்தே, ஹாய், ஹலோ..சொல்லிக்கொண்டே வந்தான்.

எல்லாமுகங்களும் இவனை அடையாளம் கண்டுகொண்டு விசாரிப்பதில் மனசுக்குள்

சின்ன சின்னதாக மல்லிகை மொட்டுகள் பூப்பது போலிருந்தது. அவனைச் சுற்றி

அன்பான விசாரிப்புகள்.. அந்த மனிதர்களின் உறவுகளின் மணம் அவன்

மனசெல்லாம் பரவியது. போனதடவைக்கு இந்த தடவை அவன் காலனியில்

நிறையபேர் கார் வாங்கியிருப்பதைப் பார்க்க்கும்போதும் பெருமையாகத்தான் இருந்தது.

அம்மா சொல்வது சரிதான் போலிருந்தது.

‘இங்கேயே வேலைப் பார்த்தாலும் வசதியாக இருக்கத்தான் முடியும்டா.. நீதான்

என்னவோ வெளிநாடு வெளிநாடுனு அலையறே ‘

எல்லாம் அள்ளிவீசும் கார்லோன் மேளாக்களின் கைவரிசைதான். பின்புறமாக

நடந்தான். அவனையும் அறியாமல் அவன் கண்கள் அந்த பலா மரமிருக்கின்றதா என்று

தேடியது. அவன் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது ஆங்கிலப் பாடத்தில் ‘மை

க்ரியேஷன் ‘ என்ற கதை. அந்தக் கதையில் வருவதைப்போலவே இவனும்

மாங்கொட்டைக்குப் பதிலாக அப்பா வாங்கிவந்த பலாப்பழச் சுளையைச் சாப்பிட்டுவிட்டு

அந்தக் கொட்டையை பால்கனியிலிருக்கும் தொட்டி மண்ணில் புதைத்துவைத்தான்.

வளர்ந்ததுவிட்டது. அந்தச் செடி வளர வளர ‘திஸ் இஸ் மை க்ரியேஷன்..ம்மைன் ‘

என்று அதைப் பார்க்கும்போதெல்லாம் சொல்லுவான். அது வளர்தவுடன்

‘டேய்.. பாவம்டா..அது வேர்விட்டு தொட்டியில் விஸ்தாரமா வளரமுடியுமா

மூச்சுத்திணறிச் செத்துபோயிடும்டா. பேசமா கொண்டுபோய் கீழே வாட்ச்மேன்கிட்டே

சொல்லி பின்புறத்தில் வைக்கச்சொல்லுடா ‘…என்றார் அப்பா.

இந்த அப்பாவே எப்போதும் இப்படித்தான்..அவன் சந்தோஷத்தையும் அவன்

பெருமையையும் கண்டுக்கவே மாட்டார்னு நினைச்சி அம்மாவிடம் கேட்டான்.

‘ஆமாண்டா கிட்டு.. உன்னைமாதிரிதான் அதுவும். முதல்லே நீ தொட்டில்லேதானே

தூங்குவே. அப்புறம் அம்மாகிட்டே. அப்புறம் உனக்குனு இப்போ

தனியறை.தனிபெட்.. நம்மை மாதிரிதானே அதுவும். கீழே வச்சா நல்ல பெரிசா

வளரும். நீ எப்பவும் உன் க்ரியேஷனைப் பார்த்துக்கலாம். ‘

அவன்கிட்டே அம்மா எதையும் சொல்றதே வித்தியாசமாதான் இருக்கும். அவனால்

அம்மா சொல்ரதுக்கு மறுப்பே சொல்லமுடியாதப் படி எப்படித்தான் அவளால்

சொல்லமுடிகின்றதோ .. ‘

அவன் பலாமரத்தின் பக்கத்தில் நிற்கும்போதுதான் அந்த உருவம் மெதுவாக காலை

இழுத்து இழுத்து நடந்து போய் ஒரு கார் அருகில் நிற்பதைப் பார்த்தான்.

பாவம்..வயதாகிவிட்டது. கையில் கம்பை ஊன்றிக்கொண்டு இந்தக் காலையில் எழுந்து

நடக்கவரத்தான் வேண்டுமா என்று அவளைப் பார்த்து நினைத்தான்.

அந்த உருவம் மெதுவாக பக்கத்தில் நிறுத்தியிருக்கும் இண்டிகா காரைத்

தொட்டுத்தடவிக்கொண்டிருந்தது. முன்பக்கத்தில், கார்கதவுகளில், கார்சன்னல்

கண்ணாடிகளில். காரின் பின்பக்கத்து சிவப்பு லைட்டில்.. காரைத் தொட்டுத் தொட்டு

தடவிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். தன் குழந்தையைத் தடவும் தாயைப்போல

அவள் கைகள் அந்தக் காரின் ஸ்பரிசத்தில் சிலிர்த்துப்போய் .. அந்த கும்மிருட்டில்

யார் அந்த தாய் என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஒரு பத்துநிமிடமாவது அவள்

காரைத் தொட்டுத் தடவிக்கொண்டிருந்தாள். அவள் உடையும் தலைமுடியும்

கவனிப்பாரில்லாத அவள் வயதோகித்தில் அசைந்தாடிக்கொண்டிருந்தது.

தன்னையே இவன் பார்ப்பதை அவள் பார்த்தவுடன் அவள் முகத்தில் ஒரு சங்கடமான

புன்னகை. அவள் புன்னகைக்ககூட மறந்துவிட்டாள் என்பது போல முற்றுப்பெறாதப்

புன்னகை. புன்னகையைப் பார்க்கும்போதெல்லாம் நமக்கும் புன்னகைக்க வேண்டும்

போலிருக்கும், ஆனால் அவளுடைய புன்னகையில் சொல்லமுடியாதச் சோகம்.

அதை மறைக்கவே அவள் புன்னகைப்பது போலிருந்தது.

அன்று முழுவதும் அவளின் புன்னகையும் அவள் காரைத்தடவியதும் அடிக்கடி

நினைவில் வந்தது. கொண்டுவந்திருந்த அட்டைப்பெட்டிகள், பெரிய சூட்கேஸ் எல்லாம்

திறந்து தன் உறவினர்களுக்கும் மனைவியின் உறவினர்களுக்கும் வாங்கிவந்தப்

பொருட்களைத் தனித்தனியாக தன் மனைவியுடன் சேர்ந்து பிரித்துவைத்தான்.

இப்படி எல்லோருக்கும் சாமான்களை எடுத்து பிரித்து வைக்கும்போதெல்லாம்

அம்மாவுக்கு என்று எதுவுமே வாங்காமலிருப்பது பெரிய சுமையாக இவனைக்

கஷ்டப்படுத்தும். அம்மா அப்பா போனபிறகு எதற்குமே ஆசைப்படுவதில்லை.

ஆரம்பத்தில் அம்மாவுக்கு என்று இவன் தங்கச்செயின், மோதிரம், வளையல் என்று

வாங்கிக்கொண்டு வந்தான். ஆனால் அம்மா அவளுடைய பழைய செயினையும்

வளையலையும்தான் போட்டிருந்தாள்.

‘எனக்கு கடைசிவரை இது போதும்பா ‘ என்றாள்.

இவன் வாங்கிவந்ததை எல்லாம் லாக்கரில் வைத்துவிட்டு வந்தான். இப்போ

கதர்ப்புடவைகள்தான். ஒரு காலத்தில் அம்மா அப் டு டேட்டாக டிரெஸ் பண்ணுவாள்.

எல்லாத்தையும் எப்படி விட்டுவிட்டாள் .. அம்மாவுக்கு எப்போதுமே

மனத்திடம், வலிமை அதிகம் உண்டு. வேண்டாம் என்றால் வேண்டாம்தான். அது

எவ்வளவுதான் மனசுக்குப் பிடித்தாக இருந்தாலும் வேண்டாம் என்று முடிவு

செய்துவிட்டாள் அப்புறம் அதைப் பார்க்க கூட மாட்டாள்..

இவனுடைய வெளிநாட்டு சம்பாத்தியத்தில் அம்மா எதையுமே அனுபவிக்கவில்லை

அவளுக்கு இதில் இழப்புதான். அவனை, அவன் குடும்பத்தை, அவன் பிள்ளைகள்

பள்ளிக்கூடத்திற்கு போகும் அழகை.. பாடம்படிக்கும் நிகழ்ச்சியை.. வீட்டுப்பாடம்

எழுதுவதை.. மார்க் குறைய வாங்கிவந்தால் இவன் திட்ட அவள் தன் பேத்திகளை

அணைத்துக் கொள்ளும் அனுபவத்தை.. இப்படி இவனுடைய வெளிநாட்டு வாசத்தில்

அம்மா நிறைய இழந்ததுதான் உண்மை.

என்ன.. உடம்புக்கு முடியாவிட்டால் குளிர்காலத்திலும் ஆஸ்பத்திரியில் அம்மாவை ஏசி

ஸ்பெஷல் வார்டில் வைத்து கவனிக்கிறான். அம்பது ரூபாயில் முடியற

மருத்துவச்செலவுக்கு ஐநூறு ரூபாய் அம்மாவுக்குச் செலவு செய்றான். அம்மா

வேண்டாம்னு சொன்னாலும் இவன் இந்த விசயத்தில் மட்டும் கேட்பதில்லை.

உறவுகள் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.

மனைவியின் தம்பி தினமும் வந்து அவன் அக்காவிடம் எதுவோ

பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போனான். எதையும் நேரடியா கேட்கமாட்டான்.

அக்காவிடம் வந்து நச்சரிப்பான். ஆனா எப்படியும் இங்கிருந்து அவர்கள் வெளிநாடு

கிளம்புவதற்குள் தன் காரியத்தைச் சாதித்துவிடுவான். இந்த தடவை என்னவானாலும்

சரி.. இவனுக்கு ஒரு ஐந்துபைசா கூட கொடுக்கக்கூடாது. இதுவரை இவனுக்குச்

செய்ததே அதிகம் ‘

‘என்ன அக்காவும் தம்பியும் என்ன திட்டம் போடறீங்க ? ‘

‘ஆமா நாங்க என்ன திட்டம் போட்டு என்னத்தைச் சாதிக்கப்போறோம் ? ‘ மனைவி

அலுத்துக் கொண்டாள்.

அவன் தலைவிதி.. அவனுக்கு ஒரு நல்ல நேரம் பொறக்க மாட்டேங்கு. ஒரு டிரைவர்

வேலைக்கு கூட நம்மாலே அவனுக்கு விசா எடுத்து அனுப்ப முடியலே ‘

‘ஆமாண்டி.. நம்ம தாத்தா அந்த ஊரு கடல்லே கிணறு தோண்டி எண்ணெய்

கம்பேனி வச்சிருக்காரு., அதிலே வேலைக்குச் சேர்த்துவிட நமக்கு முடியலே. இப்படி

நீ சொல்லிச்சொல்லித்தான் வுன் அண்ணனுக்கு சூப்பர் மார்க்கெட்டில் வேலை வாங்கிக்

கொடுத்தேன். என்ன ஆச்சு.. விசாவுக்கு டிக்கெட்டுக்கும் ஆன செலவுக்கு கூட அவன்

இருந்து சம்பாதிக்கலை.. ‘

‘அவரு கதையே வேற. அவரு உடம்புக்கு முடியாதவரு. இவன் அப்படி இல்லேங்க.

எந்த வேலையும் செய்வான். காய்ச்சல் மண்டை இடினு இவன் படுத்த நாள்

கிடையாது ‘

மனைவி என்னவொ சொல்லப்போகிறாள் என்பது மட்டும் புரிந்தது. இவன் பதில்

எதுவும் சொல்லாமல் அவளே சொல்லட்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தான்.

‘எப்படியும் ஒரு காரு வாங்கிவிட்டு டூரிஸ்ட் டாக்ஸியா அடிச்சா நல்ல வருமானம்

வருமாம்.. அவன் வேலைப் பார்த்த சேட்டு காரை விற்கப்போறாராம். அதையே

வாங்கிடலாம்னு பாக்கான். அதை வாங்கி அவனே ஓட்டினா நல்ல லாபமிருக்குமாம்.. ‘

‘ சரி வாங்கச்சொல்லு.. ‘

‘அப்படியா. ‘. அவள் முகத்தில் சந்தோஷத்துடன் ‘அப்போ நான் அத்தான் சரினு

சொல்லிட்டாருடானு சொல்லட்டுமா ‘

‘என்னது.. அவன் கார் வாங்கறதுக்கு நான் என்ன சரினு சொல்றது. முதல்லே அவன்

வீடு வாங்க வாங்கின கடனைத் திருப்பித் தர்ற எண்ணமிருக்கானு கேளு. அப்புறம்

யோசிக்கலாம் சரி சொல்லவா வேண்டாமானு ‘

‘எல்லாம் என் தலைவிதி.. கொண்டவன் கொடுத்தவன் கிட்டே கடன் வாங்கினா

என்னிக்கும் நமக்கு இழுக்குத்தாண்டானு சொன்னேன். கேட்டானா.. நான் என்ன

அவன் கூடப்பிறந்த அண்ணன் தம்பியா. பொட்டையா பிறந்திட்டேனே. அண்ணன்

தம்பிக்கி அவசரத்திற்கு உதவ எனக்கு என்ன அதிகாரமிருக்கு.. இங்கேயே வேலைப்

பாத்திட்டு இருந்தேன்னா இப்படி யார்க்கிட்டேயும் கை ஏந்த விட்டிருப்பேனா.. ‘

அவள் புலம்பட்டும் என்று கண்டுகொள்ளாமல் கிட்சனிலிருந்து நகர்ந்தான். பிள்ளைகள்

அம்மாவுக்கு போட்டோ ஆல்பத்தைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

‘ இது தான் எங்க புதுக்காரு ‘

‘யாரு ஓட்டுவா ? ‘ அம்மா கேட்டாள்

‘அப்பாதான் ‘

அம்மா அந்தப் புகைப்படத்தையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்

கொண்டிருந்தாள்.

பிள்ளைகள் காரிலிருக்கும் வசதிகள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகச்

சொல்லிக்கொண்டிருந்தார்கள். அம்மா ‘ம்ம்ம் ‘ கொட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்தான்.

அம்மாவின் கைகள் மெதுவாக அந்தப் புகைப்படத்திலிருக்கும் காரைத்

தடவிக்கொண்டிருந்தது. அவளைப் பார்க்கும்போது அவன் கண்களில் கண்ணீர்

நிறைந்தது. நடுத்தரக்குடும்பத்தில் கார் வாங்குவது என்பது மட்டும் அம்மாவுக்கும்

அப்பாவுக்கும் கடைசிவரை கனவாகவே முடிந்துவிட்டது.

‘உங்களுக்கு எப்ப்போ பிரமோஷன் கிடைச்சி நீங்க எப்போ கார் லோன் போட்டு நான்

உங்க கூட காரிலே போக.. அதுக்குள்ளே என் பிள்ளையே கார் வாங்கிடுவான்..! ‘

‘அப்போ உன் பிள்ளை கார் வாங்கின வுடனே அப்படியே உன் அக்கா தங்கச்சி

வீட்டுக்கெல்லாம் ஒரு சுற்று சுத்திட்டு வருவீங்கனு சொல்லு..! ‘ அவனுடைய அப்பா

வழக்கம்போல அம்மா உறவுகளை இழுத்து அம்மாவுடன் விளையாட்டு சண்டை

போடுவதை .. என்னவெல்லாமோ நினைவில் வந்து மனசை இறுக்கியது.

சுவற்றில் போட்டோவில் அவன் அம்மா அக்கா இருவரும் தங்கைகள் இருவரும் காரில்

உட்கார்ந்திருக்கிண்றார்கள்..அப்பா கார் ஸ்டெரிங்கைப் பிடித்தபடி டிரைவர் சீட்டில்.

எங்கேயோ கண்காட்சியில் எடுத்த புகைப்படம். எல்லோர் முகத்திலும் சந்தோஷம்

மத்தாப்பாய். அந்தப் புகைப்படத்தையும் கையில் ஆல்பத்தை வைத்திருக்கும்

அம்மாவையும் மாறி மாறி பார்த்தான்.

ஒரு முடிவுக்கு வந்தவனாக கண்கள் சிவந்திருந்த தன் மனைவியின் அருகில் போய்

‘ சரி மூக்கைச் சிந்தாதே. உன் தம்பிக்கிட்டே சரினு சொல்லு. ஆனா ஒன்னு நாமா

இந்தியா வந்திட்டா காரைக் கொண்டு இங்கே விட்டுடனும் சொல்லிடு. ‘

அவன் மனைவியின் சிவந்தக் கண்கள் சட்டென சந்தோஷத்தில் சிவப்பு ரோஜாவாய்

விரிந்தன. அவன் அம்மாவின் அருகில் போய் உட்கார்ந்து கொண்டான். நிறைய

அம்மாவிடம் பேசவேண்டும் போலிருந்தது. அம்மாவின் மடியில் தலைவைத்து சாய்ந்து

கொண்டான்.அவள் மடியுடன் மனசு ஒட்டிக்கொண்டது. அம்மா தன் மெல்லிய

கரங்களால் அவன் தலைமுடியைக் கோதிக்கொடுத்தாள். இருவரும் கண்காட்சியில்

அமர்ந்த காரின் நினைவுகளில் கடந்த காலத்தையும் வருங்காலத்தையும்

நேர்க்கோடாக்கும் நிகழ்காலத்தில் பயணித்தார்கள்.

—-

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை