காந்தாரி

This entry is part [part not set] of 24 in the series 20070719_Issue

கௌரிகிருபானந்தன்


கணவன் மிகவும் பிரியமுடன் தனக்கு வாங்கித் தந்த நவீன வீட்டு உபகரணங்களை தூசி இல்லாமல் பளிச்சென்று துடைத்து, அதனதன் இடத்தில் அழகாக, கம்பீரமாக காட்சி தரும் விதமாக வைத்து விட்டு, எறும்பு. கரப்பு மாற்றும் பல்லி போன்ற ஜீவராசிகளுடன் இடைவிடாமல் போராடி ஜெயித்துவிட்டு, எந்த ஒச்சமும் இல்லாத மகா சாம்ராஜ்ஜியத்திற்கு மகுடம் சூடாத மகாராணியாக ஒளி வீசும் சரஸ்வதி, இயற்கையாக வீசும் காற்றை கொஞ்சம் சுவாசிப்பதற்காக வராண்டாவிற்கு வந்து நின்றாள்.
மங்கி வரும் மாலை வெயில் வெளிச்சத்தில் அப்பொழுதுதான் தண்ணீர் பாய்ச்சப்பட்ட செடிகொடிகள் பசுமையாக மின்னிக் கொண்டிருந்தன. மாலை நேரத்தில் வீசும் காற்று உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துயிர் அளிப்பது போல் இதமாக இருந்தது. கேட்டுக்கும் வராண்டாவுக்கும் நடுவில் போடப்பட்ட சிமெண்ட் தரையில் சரஸ்வதியின் மகள் கீதா தன்னுடைய சிநேகிதி ரஷீதாவுடன் ஷெட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். ரஷீதா தேர்ந்த விளையாட்டு வீராங்கனைப் போல் ஆடிக் கொண்டிருக்கையில் கீதா பேட்டை கூட சரியாக பிடிக்கத் தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள். ரஷீதா கேலி செய்யச் செய்ய கீதாவுக்கு அழுகை ஒன்றுதான் பாக்கியாக இருந்தது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதியின் முகத்தில் இரத்தம் வேகமாக பாய்ந்தது. ஆவேசமாக இரண்டு அடிகள் முன் வைத்தவள், சட்டென்று நின்று பின்னால் திரும்பினாள். பாபு வரும் வேளையாகிவிட்டது. நல்ல பசியோடு வருவான். முன்னாடியே தயாரித்து வைத்திருந்த உணவுகள் அவனுக்குப் பிடிக்காது. அவன் வந்து உட்கார்ந்து கொண்ட பிறகு சுடச் சுட ஹோட்டல் தோசையைப் போன்று மெலிதாக, மொறு மொறுவென்று தோசைகளை வார்த்துப் போட வேண்டும். கீதா விளையாடிவிட்டு வந்த பிறகு அவளுக்கும் டிபன் தர வேண்டும். அவள் தோசையைச் சாப்பிட மாட்டாள். சப்பாத்திதான் விரும்புவாள். தொட்டுக் கொள்ள சன்னா மசாலாதான் வேண்டும் என்பாள். சரவணன் இரவு நேரத்தில் சாதம் சாப்பிட மாட்டான். சப்பாத்திதான் சாப்பிடுவான். அதற்காக இப்பொழுதே தயாரித்து வைத்தால் அப்படியே வீசியெறிந்து விடுவான். ஆறிப் போன சப்பாத்திகளை மாடு கூட திங்காது என்பான். அதனால் இப்பொழுது கீதாவுக்காக சப்பாத்தி சன்னா செய்துவிட்டு பிறகு பாபுவுக்காக தோசை வார்க்க வேண்டும். இத்தனை வேலைகளை வைத்துக் கொண்டு வராண்டாவில் நின்றபடி ஆவேசப்பட்டால் எப்படி முடியும்?
குழந்தைகளுக்கு வேளா வேளைக்கு சரியாக உணவு அளிக்கவில்லை என்றால் அவர்களால் நன்றாக படிக்க முடியாது. அவர்களுடைய எதிர்காலம் அவள் சரியானபடி சமைத்துப் போடுவதில்தான் இருக்கிறது என்பான் சரவணன். உண்மைதான் போலும் என்று சரஸ்வதியும் நினைத்துக் கொள்வாள்.
“சூப்பர் மணம் ஆண்டீ!” என்று சொல்லிக் கொண்டே சமையலறைக்குள் வந்தாள் ரஷீதா.
“அம்மா எது செய்தாலும் ரொம்ப சூப்பராக இருக்கும். அதான் அப்பாவுக்கு யார் வீட்டுக்குப் போனாலும் எதுவும் பிடிக்காது” என்றாள் கீதா.
சரஸ்வதி பதில் ஒன்றும் சொல்லாமல் மௌனமாக இருவருக்கும் சப்பாத்திகளை பரிமாறினாள். அதற்குள் பாபு வந்தான். அவனுக்கு சூடாக தோசை வார்த்துப் போட்டாள். அம்மாவாக இருந்தாலும் கேட்டால்தான் கிடைக்கும் சொல்வழக்கு உண்டு. ஆனால் இந்த வீட்டைப் பொறுத்தவரையில் அது உண்மையில்லை. அம்மாவை எதுவும் கேட்கத் தேவையே இல்லை. மனதில் நினைத்துக் கொண்டால் போதும். கண் முன்னே பிரத்யட்சமாகிவிடும்.
பாபுவுக்கு மட்டும்தான் என்று இல்லை. சரஸ்வதி எல்லோருக்கும் பார்த்துப் பார்த்து செய்வாள்.
மாஸ்டர் ஆ·ப்தி ஹவுஸ் மிஸ்டர் சரவணன்! மாலை ஏழுமணிக்கு வீட்டுக்கு வருவான். கணவன் வந்ததுமே பளபளவென்று தேய்த்து வைத்த ஸ்டீல் டம்ளரில் காய்ச்சி வடிகட்டி பிரிஜ்ஜில் வைத்த தண்ணீரை கொண்டு வந்து தருவாள். அவன் வரும் போது வீட்டை கண்ணாடியைப் போல் துப்புறவாக, நேர்த்தியாக வைத்திருப்பாள். அப்படி இல்லை என்றால் மனைவியை பழிப்பான். சொல்லிக் காட்டுவான். அந்த வார்த்தைகளைக் கேட்டால் ஆரம்ப காலத்தில் சரஸ்வதிக்கு எரிச்சலாக இருக்கும். இப்போ வெறுப்பும் சேர்ந்து கொண்டுவிட்டது. அதனால் அவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லத் தேவையில்லாதவாறு நடந்து கொள்வாள். அவன் வந்து சோபாவில் அமர்ந்து கொண்டதும் ·பேனை போடுவாள். சூடாக காய்ச்சிய பாலில் புதிதாக இறக்கிய டிகாக்ஷனைக் கலந்து நுரை ததும்ப சைனா கோப்பையில் காபி கொண்டு வந்து தருவாள். ஒரு நிமிடம் அங்கேயே நிற்பாள். காபியில் எந்த குறையும் இல்லையென்று உறுதிப் படுத்திக் கொண்ட பிறகு உள்ளே போவாள்.
சரவணன் வீட்டுக்கு வரும் நேரத்தில் சரஸ்வதி அழுக்குப் புடைவையில், வீட்டு வேலைகளை செய்தபடி காட்சித் தரக்கூடாது. தனக்காக உணவு தயாரிப்பதை தவிர வேறு எந்த வேலையும் பாக்கி வைத்திருக்கக் கூடாது. எல்லா வேலைகளையும் முடித்து விட்டு பளிச்சென்று புடவையை உடுத்தியிக்க வேண்டும். எட்டரை மணிக்கு அவன் டி.வி.யை போடுவான். அதற்குள் குழந்தைகள் வீட்டுப் பாடத்தை முடித்திருக்க வேண்டும். சரவணன் டி.வி.யைப் பார்க்கும் பொழுது சரஸ்வதி அருகிலேயே அமர்ந்துகொண்டு அவன் செய்யும் விமரிசனங்கள் தனக்குப் பிடித்தாற் போல் முகத்தை வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரவும், ஹொம்வர்க் செய்ய வைக்கவும் ட்யூஷன் மாஸ்டர் இருக்கிறார். குழந்தைகள் ரேங்க் இறங்கிவிடாமல் பார்த்துக் கொள்வது அவருடைய பொறுப்பு.
சரவணன் எல்லா பொறுப்புகளையும் தன் மீதே வைத்துக் கொள்ளாமல் மற்றவர்களிடம் சில வேலைகளை ஒப்படைப்பான். குழந்தைகளின் கல்வி பற்றிய பொறுப்பு ட்யூஷன் மாஸ்டருடையது என்றால், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது, நாவிற்கு ருசியாக சமைத்துப் போடுவது, சிக்கனமாக இருப்பது சரஸ்வதியின் பொறுப்பு. குரலை உயர்த்தி பேசாமல், நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வராமல், ரகளை செய்து வீட்டை களேபரமாக்காமல், சொன்னபடி கேட்டு நடந்து கொண்டு, நன்றாக படித்து நல்ல ரேங்க் வாங்குவது குழந்தைகளின் பொறுப்பு. பின்னே சரவணனுக்கு எந்தப் பொறுப்புகளும் இல்லையா என்றால், தாராளமாக இருக்கு. குழந்தைகளையும், சரஸ்வதியையும் தன் கண்ட்ரோலில் வைத்துக் கொள்வது, வீட்டில் தனக்கு விருப்பமில்லாத காரியங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்வது, தன்னுடைய ஆதிக்கத்திற்கு எந்தக் குறையும் வராமல் கவனமாக இருப்பது போன்ற தலைச் சிறந்த பொறுப்புகளை அவன் தனக்காக ஒதுக்கிக் கொண்டான்.
கீதா வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டு சோபாவில் தாயின் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்டாள். பாபுவின் வீட்டுப் பாடம் இன்னும் முடியவில்லை. கணக்கு ஒன்று சரியாக வராமல் அவனை திண்டாட வைத்துக் கொண்டிருந்தது. ட்யூஷன் மாஸ்டர் நான்கு நாட்களாக வரவில்லை. பாபு புத்தகத்தை எடுத்துக் கொண்டு தந்தையின் அருகில் சென்றான்.
“என்ன கண்ணா? என்ன வேண்டும்?” அன்பு ததும்பும் குரலில் கேட்டான் சரவணன்.
“இந்த கணக்கு சரியாக வரவில்லை டாடீ” என்றான் பாபு.
இவ்வளவுதானா என்பது போல் மகன் கையிலிருந்து அலட்சியமாக புத்தகத்தை வாங்கி ஒரு நிமிடம் கூர்ந்துப் பார்த்தான். கடினமான கணக்குத்தான் என்று புரிந்ததும் முகத்தை கம்பீரமாக வைத்துக் கொண்டு “ட்யூஷன் மாஸ்டர் வரவில்லையா?” என்றான் குரலை உயர்த்தி.
“அவருடைய மனைவிக்கு பிரசவமாகி பெண்குழந்தை பிறந்திருக்கிறதாம். நான்கு நாட்களாக வரவில்லை.” சரஸ்வதி பதில் சொன்னாள்.
“நன்றாகத்தான் இருக்கு. மனைவிக்கு பிரசவம் என்றால் இவர் வராமல் இருப்பானேன்? உனக்குக் கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை. சம்பளம் மட்டும் கேட்டு வாங்கித் தந்துவிடுவாய். உனக்கென்ன வந்தது? சம்பாதிப்பவனுக்குத்தானே தெரியும்” என்று சரஸ்வதியின் மீது எரிந்து விழுந்தான். கணக்குப் பாடத்தைப் பற்றி பேச்சே எடுக்கவில்லை.
அந்தக் கணக்கு அவனுக்கு போட வராது என்று சரஸ்வதிக்குத் ¦திரயும். பாபுவுக்கும் தெரியும் போலும். மெதுவாக அங்கிருந்து நகர்ந்து விட்டான். கணவனுக்கு சூடாக சப்பத்திகளை செய்வதற்காக சரஸ்வதி சமையலறைக்குள் சென்றாள். ஒன்பரை மணிக்குள் இரவு சாப்பாடு முடிந்து விடவேண்டும் என்பது சரவணனின் ஆணைகளில் ஒன்று.
“அப்பாவுக்கு கணக்கு போடத் தெரியாது கீதா! அதான் அப்படி எரிந்து விழுகிறார். பாடம் சொல்லித் தரமாட்டார். அம்மாவைக் கேட்டால் படித்த படிப்பு மறந்து விட்டது என்பாள். எப்போ பார்த்தாலும் அம்மாவுக்கு வேலைதான்.” பாபு அக்காவிடம் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
குழந்தைகள் சின்ன வகுப்புகளில் இருந்த போது சரஸ்வதிதான் அவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வந்தாள். ஆனால் சரவணனுக்கு அது பிடிக்கவில்லை. “இத்தனை வேலைகளை உன்னால் செய்ய முடியாது சரஸ¥! ட்யூஷன் மாஸ்டரை ஏற்பாடு செய்கிறேன். அவரே பார்த்துக் கொள்வார். நீ உன்னுடைய வேலைகளை மட்டும் பார்த்தால் போதும்” என்றான். ‘உன்னுடைய வேலைகள்’ என்றால் சமைப்பது, வீட்டை சுத்தப் படுத்துவது போன்றவை. வேலைக்காரி மட்டம் போட்டு படுத்திய போதெல்லாம் சரவணன் மனைவிக்கு ஏதாவது ஒரு கருவியை வாங்கித் தருவான்.
“உன்னால் கஷ்டப்பட முடியாது சரஸ¥! நிம்மதியாக இந்த மிஷினில் துணிகளை தோய்த்துக் கொள். இந்த வாக்குவம் க்ளீனரால் வீட்டை பெருக்கு. கிரைண்டரில் மாவை அரைத்துக் கொள். வேலைக்காரியை எதிர்பார்க்காதே.” அறிவுரை வழங்கினான்.
வண்ணாத்தி சரஸ்வதியைப் போல் துணிகளை சுத்தமாக வெளுக்க மாட்டாள். வேலைக்காரி சரஸ்வதியைப் போல் வீட்டை நன்றாக பெருக்க மாட்டாள். “நம் வேலைகளை நாமே செய்து கொண்டால்தான் வீடு நன்றாக இருக்கும்” என்று சரவணன் எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பான். நாளடைவில் சரஸ்வதிக்கு வீட்டு வேலைகளை தான் செய்தால் தவிர மற்றவர்கள் யார் செய்தாலும் பிடிக்காமல் போய் விட்டது.
அந்த விதமாக சரஸ்வதிக்கு, குழந்தைகளுடைய படிப்புடனும், தன்னுடைய படிப்புடனும், வெளி உலகத்துடனும் உறவு துண்டிக்கப்பட்டு விட்டது. குடும்பத்திற்காக மட்டுமே வாழும் சரஸ்வதியாக மாறிவிட்டாள்.
“அம்மா! அப்பா அவ்வளவு பெரிய படிப்பு படித்திருக்கிறார் இல்லையா. கணக்கு போட வரவில்லை என்று பாபு கேட்டால் சொல்லித் தராமல் இருப்பனேன்? அவரை விட குறைவாக படித்திருந்து நீ எனக்கு ஒரு தடவை இங்கிலீஷ் கிராமர் சொல்லித் தந்தாயே?”
“தப்பு கண்ணம்மா! அப்படியெல்லாம் பேசக் கூடாது. அப்பா பகல் முழுவதும் கஷ்டப்பட்டு ஆபீஸில் வேலை செய்து விட்டு வருகிறார் இல்லையா? மறுபடியும் யோசித்து பாடம் சொல்லித் தரணும் என்றால் அவருக்கு சிரமமாக இருக்கும். அவ்வளவு பெரிய வேலையில் இருப்பவருக்கு கணக்குப் பாடம் வராமல் இருப்பதாவது?” என்று சரஸ்வதி மகளுக்கு பதில் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இன்று அவளால் அப்படிச் சொல்ல முடியவில்லை.
“அப்பா ரொம்ப உயர்ந்தவர். நம்மை எல்லாம் சுகமாக வைத்திருக்கிறார். எல்லாம் வாங்கித் தருகிறார். அவரை நாம் எப்போதும் மதிக்க வேண்டும். எதிர்த்து பேசக் கூடாது. அவர் சொல்ல வேலைகளை வாயைத் திறக்காமல் செய்து முடிக்கணும்” என்று சரஸ்வதி எப்போதும் குழந்தைகளிடம் சொல்லி வந்தாள். அப்படி சொல்லச் சொல்லி ஒருமுறை சரவணன் மனைவியிடம் சொல்லியிருந்தான்.
இன்று ஏனோ அவளால் அப்படிச் சொல்ல முடியவில்லை. கடந்த சில நாட்களாகவே அவள் மனதில் இனம் புரியாத திருப்தியின்மை கொந்தளித்துக் கொண்டிருந்தது. எல்லோரும் படுத்துக் கொண்ட பிறகு பாபுவின் கணக்குப் புத்தகத்தை கையில் எடுத்தாள். அவளுக்கும் கல்வி தேவதையான சரஸ்வதிக்கும் தொடர்பு விட்டுப் போய் பதினேழு வருடங்கள் ஆகிவிட்டன.
யோசித்து …. யோசித்து பதினேழு வருடங்களுக்கு முன்னால் படித்த படிப்பை நினைவுப் படுத்திக் கொள்ள முயன்றாள். இருட்டில் தட்டுத் தடுமாறி வழியைக் கண்டு பிடித்து விட்டது போல் அரைமணி நேரம் முயற்சி செய்த பிறகு சரஸ்வதி அந்த கணக்கை போட்டுவிட்டாள். அதாவது தான் இன்னும் படிப்பை மறக்கவில்லை. ஆமாம், தன்னுடையது ஒப்புக்கு சப்பாணி படிப்பு இல்லையே. ஆழமான படிப்பு! கணிதத்தை மெயின் பாடமாக எடுத்துக் கொண்டு பட்டப் படிப்பை முடித்திருந்தாள். கல்லூரியில் முதல் இடமும், யூனிவர்ஸிடீயில் நான்காவது இடமும் பெற்றிருந்தாள்.
“நல்ல திறமை இருக்கு. மேலும் படி. முன்னுக்கு வருவாய். எதிர்காலம் நன்றாக இருக்கும்.” கல்லூரி முதல்வர் பரிசு அளித்துக் கொண்டே வாழ்த்துக்களையும், ஆசிகளையும் வழங்கினாள்.
ஆனால் அந்த ஆசிகள் பலிக்கவில்லை.
“நன்றாகத்தான் இருக்கு. படித்த வரையில் போதும். இதைவிட கூட படித்தால் உன்னை விட அதிகம் படித்த மாப்பிள்ளையைத் தேடணும். உனக்கும் வயசு ஏறிக் கொண்டே போகும். வரதட்சணையும் கூடும். என்னால் முடியாதும்மா.” தந்தை சொல்லிவிட்டார்.
சரவணன் பெண் பார்க்க வந்தான். நிறம் கொஞ்சம் மட்டு. அதனால் என்ன? எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. அம்மா அப்பாவுக்கு அடங்கி நடப்பவன். பார்க்கக் கொஞ்சம் அசடு போல் காட்சி தருவான். அது ஒரு குறையா என்ன? பட்டணத்தில் அவனுக்கு எவ்வளவு பெரிய வீடு இருக்கு தெரியுமா? இப்போ அது போன்ற வீடு கட்ட வேண்டுமென்றால் இருபத்தைந்து லட்சமாவது வேண்டும். பெயரும் புகழும் நிறைந்த வம்சம் அவர்களுயைது. அதனால்தான் அவனுடைய அப்பா கொஞ்சமோ நஞ்சமோ பணத்தை செலவழித்து மகனுக்கு வேலை வாங்கித் தந்தார். இந்தக் காலத்தில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமா என்ன? நல்ல வேலை. சொந்த வீடு, தந்தைக்கு செல்வாக்கும் இருக்கிறது. வேறு என்ன வேண்டும்? சரஸ்வதியின் அழகைப் பார்த்து (சுறுசுறுப்¨ப் பார்த்து இல்லை) வரதட்சணையைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டார்கள். ஏதோ ஆசைப் பட்டாள் என்பதற்காக பட்டப் படிப்பு வரையில் சொல்லிக் கொடுத்தோம். மேலும் படித்து என்ன செய்யப் போகிறாள்? பெண்ணுக்கு அழகும், பணிவும் முக்கியம். ஜாதகப் பொருத்தமும் நன்றாக அமைந்திருக்கு. எப்படியோ மகளை கரையைச் சேர்த்தாகி விட்டது. அப்பாடா! நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டார்கள் சரஸ்வதியின் பெற்றோர்கள்.
“சரஸ்வதீ! நீயும் உன் கணவனும் சேர்ந்து வெளி ஊர்களுக்கு போயிட்டு வாங்க. மகாபலிபுரம், சென்னை, காஞ்சிபுரம், திருப்பதி, பெங்களூர் என்று எல்லா இடங்களையும் சுற்றிப் பாருங்கள். வரதட்சணையில் கொஞ்சம் பணம் மிச்சப் பட்டது இல்லையா. இந்தப் பணத்தை எடுத்துக் கொள்” என்று தம்பதிகள் இருவரையும் தேன் நிலவுக்கு அனுப்பி வைத்தார் சரஸ்வதியின் தந்தை.
மகாபலிபுரத்தில் செம்பட்டை நிற முடியும், நீல நிற கண்களும் கொண்ட வயலெட் என்ற அமெரிக்கன் இளம்பெண் சரஸ்வதியின் கூந்தலைப் பார்த்து வியப்படைந்தாள். கண்களுக்கு இடப் பட்டிருந்த மையை, கைகளில் மருதாணியின் சிவப்பு நிற டிசைனை, கால்களில் வெள்ளிக் கொலுசை எல்லாவற்றையும் தொட்டுப் பார்த்தாள். அவளும், சரஸ்வதியும் கல் ரதங்களுக்கு முன்னால் நின்றபடி புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள். ரொம்ப நேரம் அளவளாவினார்கள்.
“என்னுடன் நீங்க இருவரும் லஞ்சுக்கு வாங்க.” வயலெட் அழைப்பு விடுத்தாள்.
“நான் வர மாட்டேன். வேண்டுமானால் நீ போய்க் கொள்.” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான் சரவணன்.
தங்களால் வர முடியாமல் போனதற்கு நொண்டிச் சாக்கு சொல்லிவிட்டு வயலெட்டிடமிருந்து விடைபெற்றுக் கொண்டாள் சரஸ்வதி.
“உனக்கும் வெளிநாட்டு மனிதர்களிடம் மோகம் இருக்கா? இல்லை உனக்குத்தான் இங்கிலீஷ் பேசத் தெரியும் என்று காட்டிக் கொள்ளும் நோக்கமா? அந்த வெளிநாட்டு பெண்ணிடம் எதற்காக அப்படி ஈஷிக் கொள்ளணும்?” எரிந்து விழுந்தான் சரவணன்.
அப்பொழுதுதான் சரஸ்வதிக்குப் புரிந்தது, சரவணன் வயலெட்டிடம் “எஸ் … நோ” என்ற வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் பேசவில்லை என்றும், அவனுக்கு அங்கிலம் சரளமாக பேச வராது என்றும், தான் ஆங்கிலத்தில் பேசுவது அவனுக்குப் பிடிக்கவில்லை என்றும்.
சென்னையில் மெரினா பீச்சுக்குக் கிளம்பும் போது சல்வார் கமீஸ் உடுத்திக் கொண்டு, தலைக்கு கிளிப் போட்டு விட்டு கூந்தலை அப்படியே விட்டு விட்டாள். “இந்த மாதிரி உடைகளை எல்லாம் இனி மேல் நீ போட்டுக் கொள்ளக் கூடாது. என் தங்கைககளும் கல்யாணம் ஆன பிறகு விட்டு விட்டார்கள். எங்க அம்மா அப்பா சம்மதிக்க மாட்டார்கள். எனக்கும் பிடிக்காது” என்றான் சரவணன்.
பெங்களூரில் லால்பாக் பார்க்க போனபொழுது எதிர்பாராமல் கிரீஷ்கர்னாட் தென்பட்டார். அவரிடம் சரஸ்வதிக்கு மதிப்பும், வரியாதையும் அதிகம். வேக வேகமாக அருகில் சென்று ¦ன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினாள்.
“இவரை உங்களுக்குத் தெரியாதா? கிரீஷ்கர்னாட்! துக்லக் என்ற நாடகம் எழுதியிருக்கிறார். சிறந்த நடிகர்.” சந்தோஷத்தில் திக்கு முக்காடிய சரஸ்வதி வேகவேகமாக மூச்சு விட்டுக் கொண்டாள்.
“இன்னும் கல்லூரி மாணவி என்ற எண்ணமா உனக்கு? திருமணம் ஆகிவிட்டது என்ற நினைப்பாவது இருக்கா இல்லையா? இனி நீ கண்ட கண்டவர்களுடன் பேசக் கூடாது. நான் யாருடன் பேசுகிறேனோ அவர்களிடம் மட்டும்தான் நீ பேச வேண்டும்” என்றான் சரவணன் பற்களை கடித்துக் கொண்டே. பப்ளிக் ·பிகர்கர்களைப் பற்றிக் கூட அவனுக்குத் தெரியாது போலும். ஹோட்டலுக்கு போவதற்காக கையை நீட்டி டாக்ஸியை நிறுத்தினாள் சரஸ்வதி.
“அதுதான் வேண்டாம் என்கிறேன். ஆண்பிள்ளை நான் இருக்கும் போது உனக்கென்ன அவசரம்?”
தேன் நிலவு முடிந்து விட்டது. சரஸ்வதிக்கு கணவனின் சுபாவம் புரிந்துவிட்டது. சரவணன் அவளையும் விட அதிகமாக படித்திருக்கிறான். ஆனால் அந்தப் படிப்பு லஞ்சம் கொடுத்து வேலை வாங்குவதற்கு தவிர வேறு எதற்கும் லாயக்கு இல்லை. அவனிடம் இருப்பது வெறும் சர்டி·பிகெட் மட்டும்தான். சரஸ்வதியை விட தான் அதிக புத்திசாலியாகவும், திறமை மிகுந்தவன் போலவும், அவளுடைய மெய்காப்பாளன் போலவும் தென்பட வேண்டும் என்பது சரவணனின் விருப்பம்.
போகட்டும் சர்ஸவதீ! இப்பொழுது நீ பொறுப்புகள் மிகுந்த இல்லத்தரசி. வீட்டை பார்த்துக் கொள். குழந்தைகளை பார்த்துக்கொள். எந்தப் பெண்ணுக்கும் வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்? இருக்கும் பணத்தில் நிம்மதியாக வாழணும். வீடுவாசல் வாங்கணும், பணம் காசு சேர்த்து வைக்கணும். இதுதான் முக்கியம். பைதாகரஸ் தீரம் நினைவில் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்? உன் குடித்தனத்தில் பிரச்னைகள் வந்தால் அல்ஜீப்ரா தீர்த்து வைக்கப் போகிறதா என்ன? பதினெட்டு வயது முடிந்தால் தவிர பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாதுன்னு அரசாங்கத்தில் சட்டம் போட்டிருப்பதால் படித்துக் கொண்டே பொழுதை போக்கினாய். படிப்பு சொல்லிக் கொடுத்ததற்கு நல்ல மதிபண்கள் பெற்று பெற்றோரின் பெயரை காப்பாற்றினாய். பரிசுகளை வாங்கிக் குவித்தாய். அவையெல்லாம் இப்போ தேவையே இல்லை. இனி குழந்தைகளை பார்த்துக் கொள். கணவனின் கண்ணசைவின்படி நடந்து கொண்டு அவனுடைய பாராட்டை பெறவேண்டும். அதுதான் நீ செய்ய வேண்டியது.
சரவணன் நல்லவன்.
சரவணன் நல்லவன்தான். அவன் வீட்டில், கால் கோடி பெறுமானமுள்ள வீட்டில் தன்னுடைய மெடல்களுக்கும், கோப்பைகளுக்கும், ஷீல்டுகளுக்கும் இடம் இல்லை என்று மறுத்தவன். பிறந்த வீட்டிலேயே அவை இருக்கட்டும் என்றவன்.
சரவணன் நல்லவன்தான். தன்னுடைய அறிவை வண்ணான் மற்றும் பால் கணக்கிற்கும் மட்டுமே பயன்படுத்த அனுமதி தந்தவன்.
சரவணன் நல்லவன் இல்லை என்று யார் சொன்னார்கள்?
வீட்டுக்கு உபயோகப்படும் எல்லா கருவிகளையும் வாங்கிப் போட்டவன். அந்தக் கருவிகளுக்கும் சமையலறை சாதனங்களுக்கும் நடுவில் அவளை ஓட ஓட விரட்டியவன். இதயத்தில் எழும் ராகத்தை ரசிக்கத் தெரியாதவன். இதயத்தை தகிக்கச் செய்யும் ராகத்தை இசைப்பவன். தன்னை காந்தாரியின் நிலைக்கு தள்ளியவன்.
“அம்மா! காந்தாரி இவ்வளவு முட்டாளாக இருக்கிறாளே? குருட்டுக் கணவனுக்கு வழி காட்ட வேண்டியது போய் தானும் குருட்டுத் தனத்தை வர வழைத்துக் கொண்டிருக்கிறாள். இருவரும் தட்டுத் தடுமாறி கீ§ழு விழுந்து மண்டையை உடைத்துக் கொள்ளவா?” கல்லூரியில் படிக்கும் நாட்களில் ஒரு தடவை சரஸ்வதி தாயிடம் கேட்டாள்.
“தப்பும்மா. அப்படியெல்லாம் பேசக் கூடாது. அவள் மகா பதிவிரதை. கணவனுக்கு இல்லாத கண்பார்வை தனக்கு எதுக்குன்னு தியாகம் செய்தாள். தட்டுத் தடுமாறி நடந்து போக வேண்டிய தலையெழுத்து அவர்களுக்கு என்ன வந்தது? ராஜபரம்பரையைச் சேர்ந்தவர்கள். சேடிப் பெண்கள் எல்லாவற்றையும் கையில் கொண்டு வந்து தருவார்கள். அவர்களே வழி நடத்திச் செல்வார்கள்.” மகளின் சார்பில் கன்னத்தில் போட்டுக் கொண்டே அந்த தாய் சொன்னாள். தியாகமோ, இயலாமையோ, பகையோ எதுவாக இருந்தாலும் பதிவிரதைகளிடமிருந்து இந்த நாட்டைக் காப்பாற்றியாக வேண்டும்.
இப்படி காலங்காலமாக குருட்டுத்தனத்தை தொடரந்து கொண்டிருந்த காந்தாரியின் கண்கட்டுகள் சமீபகாலமாக சரஸ்வதியின் முகத்தில் சரியாக பொருந்தவில்லை. அவற்றை அவிழ்த்து விட வேண்டுமென்ற பலமான விருப்பம் இதயத்தின் ஆழத்திலிருந்து எரிமலையாக பொங்கி வந்து கொண்டிருந்தது.
“எந்தக் கடவுளோ வந்து சக்குபாய்க்கு இரவோடு இரவாக மாவு அரைத்துக் கொடுத்தது போல் எனக்கு கணக்கை பொட்டுக் கொடுத்துவிட்டார் கீதா!” பாபு சந்தோஷமாக குதித்து கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தான்.
அன்று மாலை ஷெட்டில் ஆடுவதற்காக ரஷீதா மறுபடியும் வந்தாள்.
“கீதா! இப்படி வா.” சரஸ்வதி வராண்டாவில் நின்றுகொண்டு அழைத்தாள்.
“இரும்மா.” இடத்தை விட்டு அசையாமலேயே கீதா சிணுங்கினாள்.
ஆமாம். அம்மா அழைத்தாள் என்றால் ஏதாவது சாப்படுவதற்காகவோ, இல்லை விளையாடியது போதும், உள்ளே போய் படி என்றோ, அதுவும் இல்லை என்றால் அப்பா வரும் வேளையாகிவிட்டது. அவர் வரும் போது குதித்து கும்மாளம் போட்டுக் கொண்டிருக்காதே என்று சொல்வதற்காகவோ … இந்த காரணங்கள்தான் இருக்கும் என்பது கீதாவின் எண்ணம்.
சரஸ்வதி மகளின் அருகில் சென்று அவள் கையிலிருந்து பேட்டை வாங்கிக் கொண்டாள். “இதோ பாரு. பேட்டை இப்படி பிடித்துக் கொள்ளணும். ஷெட்டிலை இப்படி அடிக்கணும். சர்வீஸ் இப்படி போடணும்” என்று செயல் முறையில் விளக்கினாள்.
கீதா நம்ப முடியாதவள் போல் தாயின் பக்கம் பார்த்தாள்.
“என்னுடன் விளையாடுங்கள் ஆண்டீ.” ரஷீதா சொன்னாள்.
பதினேழு வருடங்களாக வீட்டு வேலைகளைத் தவிர வேறு எந்த உடற்பயிற்சியும் இல்லாததால் பலூன் போல் ஊதி விட்ட உடல் அவளை ஒரு அடி எடுத்து வைக்க அனுமதிக்கவில்லை. பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டே தரையில் உட்கார்ந்து விட்ட முன்னாள் ஸ்டேட் பேட்மின்டன் சாம்பியன் சரஸ்வதியின் விழிகளில் நீர் சுழன்றது.
ஒரு நிமிடம் கழித்து எழுந்து நின்றாள். “நாளை முதல் நானும் விளையாடுவேன்” என்று சொல்லிவிட்டு விருட்டென்று திரும்பி உள்ளே போனாள்.

முற்றும்
தெலுங்கிலிருந்து P.Sathyavathi
email id psathyavathi@yahoo.com
மொழிபெயர்ப்பு கௌரிகிருபானந்தன்
email : tkgowri@gmail.com

Series Navigation