காதல் நாற்பது எலிஸபெத் பாரட் பிரௌனிங் (1806-1861)

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

சி. ஜெயபாரதன், கனடா


நானொரு கறுப்பி ! குள்ள மாது !
சா·ப்போ கவிஞனைப் போல,
சாகாவரம் வாங்கியவள் நான் !
ஐந்தடி ஓரங்குலம் உயரம் !
பரிதியொளி பளிங்கு பட்டையில்
பிரிவதுபோல்
வண்ணங்கள் உடையவை என்
கண்களின் நிறங்கள் !
கண்ணாடி முன்னின்று நோக்கினால்
என் தோற்றம்
அழுத்தப் பச்சைப் பழுப்பு !
பச்சை வேலியில் மறையும் பச்சை !
நாசி ஒன்றும் பிரமாத மில்லை,
அது ஒருவித மாதிரி !
அதை ஈடுசெய்ய அகண்ட வாய் !
அந்தோ ! மிக மிகச்
சின்னக் குரல் எனக்கு !

கவிமேதை எலிஸபெத் பிரௌனிங்.

இரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிப் பாக்கலைத் தமிழாக்கம் செய்த பிறகு, புதிதாக “காதல் நாற்பது” என்னும் தலைப்பில் பிரிட்டிஷ் கவிதை மேதை எலிஸபெத் பிரௌனிங்கின் கவிதை மலர்களைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு அளிக்க விழைகிறேன்.

எலிஸபெத் பிரௌனிங் பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா காலத்தில் (1819-1901) வெற்றிகரமாக வாழ்ந்து பெரும்புகழ் பெற்ற கவிதை மாது. ஆங்கிலக் கவிஞர் ராபர்ட் பிரௌனிங்கின் காதல் மனைவி. டென்னிஸன் நினைவுப் பரிசைப் பெற்ற எலிஸபெத் எழுதிய உன்னதக் காவியப் படைப்பு, 1850 இல் வெளியான “போர்ச்சுகீஸின் பதினான்கு வரிக் கவிதைகள்” (Sonnets from the Portuguese). ராபர்ட் “போர்ச்சுகீஸ்” என்ற செல்லப் பெயரால் தன் காதலி எலிஸபெத்தை அழைத்தார். நாற்பத்து நான்கு எண்ணிக்கையுள்ள அந்த கவிதைகள் யாவும் ராபர்ட்டைக் காதலித்த போது எலிஸபெத் தொடராக எழுதியவை. எலிஸபெத்தின் கூரிய ஞானமும், நளினக் கவி நடையும், முகக் கவர்ச்சியும் கார்லைல், ரஸ்கின், தாக்கரே, ரொஸ்ஸெட்டி, ஹாதொரோன் போன்ற கவிதா மேதைகளை ஈர்ந்தன.

எலிஸபெத் 1806 இல் இங்கிலாந்தில் டுரம் நகர்க் கருகில் கோக்ஸொ ஹால் (Coxhoe Hall near Durham) என்னும் ஓர் இடத்தில் ஒரு செல்வத் தம்பதிகளுக்குப் பிறந்தார். சிறு வயதில் எலிஸபெத் தனிப் பயிற்சியாளர் மூலமாகக் கல்வி பயின்றுத் திறமையோடு ஆங்கிலம், ·பிரெஞ், லத்தீன், கிரீக் ஆகிய அன்னிய மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றார். பதினாங்கு வயதிலேயே எலிஸபெத் “மராத்தன் போர்” (The Battle of Marathon) என்னும் தன் முதல் கவிதைத் தொகுப்பைப் படைத்து வெளியிட்டார். அடுத்து வெளியான நூல்கள்: An Essay of mind (1826), Prometheus Bound (1833). The Serapim & Other Poems (1838), Sonnets of the Portuguese (1850). Last Poems (1862) எலிஸபெத் 1835 இல் லண்டனுக்கு வந்து தங்கிய போது பல வெளியீடுகளில் கவிதைகளை எழுதிப் பேரும், புகழும் பெற்றார். 1844 இல் அவரது கவிதைகள் வெளியாகிப் பலரது மனதைக் கவர்ந்து அமெரிக்கக் கவிஞர் எட்கர் அல்லன் போவின் பாராட்டைப் பெற்றார். எல்லாவற்றிலும் உயர்ந்த படைப்பாக எடை போடப்படுவது : போர்ச்சுகீஸின் பதினான்கு வரிக் கவிதைகள் (Sonnets from the Portuguese). போர்ச்சுகீஸ் என்பது ராபர்ட் எலிஸபெத்துக்கு வைத்த செல்லப் பெயர்.

1820 இல் எலிஸபெத் ஓர் மர்ம நோயில் விழுந்து வயிற்று வலியில் மிகவும் வேதனைப் பட்டார். வலியைத் தாங்கிக் கொள்ள அந்தக் காலத்தில் அவருக்கு மருத்துவர் பயங்கர மார்·பின் மந்த மருந்தைக் கொடுத்து வந்தார்கள். மறுபடியும் 1838 இல் எலிஸபெத் இரத்தக் குழாய் ஒன்று அற்றுப் போய் கடும் நோயில் துன்பப்பட்டு மெலிந்து போனார். அதே சமயத்தில் அவரது சகோதரர் ஒருவர் நீரில் முழ்கி, அவருக்கு ஆறாத துயரை உண்டாக்கியது, அதற்குப் பிறகு எலிஸபெத் யாரையும் கண்டு கொள்ள விருப்பற்றுத் தனிமையில் கிடந்தார். அப்போது முழு நேரத்தையும் அவர் தன் அரியக் காவியப் படைப்புகளுக்கே அர்ப்பணித்தார்.

தனது 39 ஆம் வயதில் (1845), தன்னை விட ஆறு வயது இளமையான கவிதா மேதை ராபர்ட் பிரௌனிங்குடன் கடிதத் தொடர்பு கொண்டு, ஆழ்ந்த காதல் வயப்பட்டார். அவர்களது அந்தரங்க ஆத்ம நட்பு பெற்றோருக்குத் தெரியாமல் மர்மமாகவே தொடர்ந்தது. காரணம் அவரது தந்தையார் தனது புதல்வர், புதல்வியர் திருமணமாவதைத் தடுத்துக் கொண்டு வந்தார். அடுத்த ஆண்டு எலிஸபெத் வீட்டை விட்டே வெளியே ஓடிவிட்டார். 1846 இல் ஒரு தேவாலயத்தில் பெற்றோர்க்குத் தெரியாமல் எலிஸபெத் ராபர்ட்டை மணந்து, ரோமுக்குச் சென்று, அங்கே ·பிளாரென்ஸில் குடியேறினார்கள். அவர்களுக்கு 1849 இல் ஓர் ஆண்மகவு பிறந்தது.

இறுதிக் காலத்தில் திடீரென எலிஸபெத்துக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் பெருகிற்று. வட அமெரிக்காவில் கறுப்பு ஏழைகளைப் பிடித்து அடிமைகளாய் வணிகம் புரிந்து வருவதைக் கண்டித்தார். அக்கருத்தை மையமாக வைத்தொரு நூலும் எழுதினார். நோய் முற்றி ·பிளாரென்ஸில் 1861 ஆம் ஆண்டு கனிவுக் கணவரின் கையணைப்புக் கனலில், காதல் ராணி களிப்புடனே விண்ணுலகம் ஏகினாள். அவளது மரணத்துக்குப் பிறகு எழுத்தாள மேதை எட்வெர்டு பிட்ஸ்ஜெரால்டு துயரைக் காட்டாது தன் உன்னத இரங்கல் உரையில் கேலியாகக் குறிப்பிட்டார்: “மிஸிஸ் பிரௌனிங் மரணம் அடைந்ததில் எனக்கொரு பெரிய விடுவிப்பு ! “அரோரா லைஸ்” [Aurora Leigh: Collection of Poems by Elizabeth Browning] போன்ற மாபெரும் கவிதைத் தொகுப்புகள் இனிமேல் வெளிவாரா ! கடவுளுக்கு நன்றி ! அவள் ஓர் உயர்ந்த மேதை ! எனக்குத் தெரியும் அது. எல்லாவற்றுக்கும் முடிவாக நான் என்ன சொல்வது ? அவளும் அவளது பெண்பாலும் அடுப்பறையில் கிடந்து, குழந்தைப் பராமரிப்பைக் கவனித்திருக்க வேண்டும் ! ஏழையர் மீது வேண்டுமானால் இரக்கம் கொள்ளட்டடும் ! இப்படிக் குறுநாவல் எழுதுவது போன்ற பணிகளைச் சிறப்பாகப் படைக்கும் ஆடவர் கைவசம் விட்டுவிட்டுத் தான் தலையிடுவதைத் தவிர்த்திருக்க வேண்டும் !”

*******
காதல் நாற்பது (1)
உன்னை நேசிப்பது எவ்விதம் ?

மூலம் : எலிஸபெத் பிரௌனிங்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

எவ்விதம் நேசிப்பது உன்னை ?
எண்ண வேண்டும் நான்
எத்தனை வழிகள் உள்ளன வென்று !
ஆழமானது என் காதல் !
அகல்வது ! நீள்வது என் காதல் !
உணர்ச்சி கண்மறையும் போது,
உயிரின முடிவாய்,
ஒப்பிலா நளினத்தில்
உன்னை எட்டிவிடும் என் ஆத்மா.
பரிதிச் சுடர், மெழுகுவர்த்தி
ஒளி போல்
அவசியத் தேவை
அனுதினம் காதல் எனக்கு !
மனத் தடங்கலின்றி
காதலிக்கிறேன்,
மானிட உரிமைத் தேடலாய் !
தூய மனதுடன் நேசிக்கிறேன்,
என் புகழின் திருப்பமாய் !
முந்தைத் துக்கங்க ளிடையே
குழந்தையின்
அழுத்த நம்பிக்கை யோடு
பித்தானேன் உன்மேல் !
இழந்த புனிதரிடம்
எனக்கிருந்த காதல் நழுவி
நாடுகிறது உன்னை !
பெருமூச்சு காட்டுது
என் காதலை !
முறுவல் காட்டி விடும்
என் காதலை !
கண்ணீரும் காட்டுது
என் காதலை !
வாழ்வு பூராவும் நேசிப்பேன்.
முடிவிலே
கடவுளின் விதி அதுவாயின்,
அழுத்தமாய் இருக்கும்
காதல் மட்டும்,
உன்மேல்
சாதலுக்குப் பிறகும் !

********************

தகவல் :

1. Sonnets from the Portuguese By: Elizabeth Barrett Browning (1967)
2. The Selected Poetry of Browning (1966)
3. The Works of Robert Browning By: The Wordsworth Lobrary (1994)
4. Robert Browning Selected Works By: Johanna Brownell (2002)
5. Elizabeth Barrett Browning’s Biography

**************

jayabarat@tnt21.com [S. Jayabarathan December 21, 2006] R-1

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா