கண்ணம்மா

This entry is part [part not set] of 10 in the series 20000924_Issue

கு. அழகிரிசாமி


முதன் முதலாகக் கோலாலம்பூருக்குப் போன நாளிலிருந்தே நான் அவளைத் தேடிக் கொண்டிருந்தேன். இன்னும் சொல்லப் போனால், பினாங்குத் துறைமுகத்தில் நான் கப்பலை விட்டு இறங்கும் போதே, பிராயாணிகளை வரவேற்க வந்திருக்கும் கூட்டத்தில் அவளும் தன் பெற்றோர்களுடன் யாரையாவது எதிர்ப்பார்த்துக் கொண்டு நிற்கக் கூடுமோ என்று சுற்றுமுற்றும் துழாவிப் பார்த்தேன். சென்னையில் கப்பல் ஏறும் போது எனக்கு அவள் ஞாபகம்தான் முதலில் வந்தது. மலாயாவில் எனக்குத் தெரிந்தவர்களாக அப்போது இருந்தவர்கள் அவளும், அவளுடைய தமையனும், பெற்றோர்களும்தான். இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் மலாயாவுக்குப் போய் நிரந்தரமாகக் குடியேறிவிட்டார்கள். அப்புறம் நான் அவர்களை பார்க்கவுமில்லை; அவர்கள் எந்த விலாசத்தில் இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள், என்பதைக் கேள்விப்படவும் இல்லை. அப்போது எனக்கு எட்டு வயது. கண்ணம்மாவுக்கும் எட்டு வயது ஏறக்குறைய ஒரு தலைமுறைக்காலம் கழிந்துவிட்டது.

அவர்களை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியுமா, என்னைப் பார்த்ததும் இன்னான் என்று அவர்கள் தெரிந்து கொள்வார்களா, அப்படியே தெரிந்து கொண்டாலும் எனக்குள்ள ஆசையும் பாசமும் அவர்களுக்கு இருக்குமா என்றெல்லாம் எனக்குச் சில சந்தேகங்கள் இருந்தன. என்றாவது ஒரு நாள் சந்திக்க நேர்ந்து, என்னை அவர்கள் பொருட்படுத்தாமல் போய் விட்டாலும் சரி, நான் சின்னஞ்சிறு வயதில் சேர்ந்து விளையாடிய கண்ணம்மாவும் பெருமாளும் இப்பொழுது எப்படி இருக்கிறார்கள் எனபதை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன்.

கோலாலம்பூரில் எனக்கு ஒரு லாயர் ஆபிசில் வேலை கிடைத்தது. செந்தூலைச் சேர்ந்த காசிப் பிள்ளை கம்பம் என்ற குடியிருப்புப் பகுதியில் வீடு பிடித்து ஜாகை அமர்த்திக் கொண்டேன். ஏறக்குறைய ஒரு வருஷம் அங்கே வாசம் செய்துவிட்டு, நவீன வசதிகளோடு கூடிய ஒரு புது வீட்டுக்கு மாற்றிப் போனேன். அது, நகரைவிட்டு ஒரு மைல் தள்ளி, ஈப்போ ரோட் நாலாங்கட்டையில் (மைலில்) இருந்தது. பிரதான சாலைக்கு இடதுபுறத்தில் கால் பர்லாங் தூரத்துக்குள் ஒரு சீனர் புதிதாகக் கட்டியிருந்த நான்கு வீடுகளில் இரண்டாவது வீடு அது. என் வீட்டுக்கு முன்புறம் சாலை வரையிலும் பல வீடுகள் இருந்தன. அதே போல் பின்புறத்திலும் தகரமும் அத்தாப்புக் (நாணல்) கூரையும் வேய்ந்த வீடுகளைக் கொண்ட ஜன நெருக்கடியான ஒரு பகுதி இருந்தது. அங்கே பெரும்பாலும் சீனர்களே வசித்து வந்தார்கள். ஏதோ ஒரு குக்கிராமத்தின் நடுவே பங்களாவில் வசிப்பது போன்ற ஒரு உணர்ச்சி ஏற்பட்டது எனக்கு. வாழ்நாளில் பெரும் பகுதியைக் கிராமத்திலேயே கழித்த எனக்கும் என் மனைவிக்கும் இந்தச் சூழ்நிலை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

கோலாலம்பூர் நகரில் அந்த ஒரு வருஷ காலமும் நான் கண்ணம்மாவைத் தேடிக் கொண்டுதான் இருந்தேன். அதற்காக இதுவே வேலையாக அலைந்தேன் என்று அர்த்தமல்ல, எங்கே போனாலும், யாரைப் பார்த்தாலும் அவளை நினைத்து ஒரு பார்வை பார்ப்பேன். இது நித்திய வழக்கமாகவே ஆகி விட்டது. ஈப்போரோட் நாலங்கட்டைக்குக் குடித்தனம் வந்த பிறகும் இதுதான் நிலை. இப்படி அன்றாடம் கண்ணும் கருத்துமாகக் கவனம் செலுத்தி வந்த இந்த விஷயத்தைப் பற்றி என் மனைவியிடம் நான் ஒரு வார்த்தை கூடச் சொன்னதில்லை. வெளியே சொல்லிவிட்டால், காற்றுப்பட்ட மாத்திரத்திலேயே அந்த விஷயம் சுவையற்று, பொருளற்று, வாழ்வும் அற்றுப் போய்விடுமோ என்று எனக்கு ஒரு பயம்.

புது இடத்துக்கு வந்து சுமார் இருபது நாட்கள்தாம் ஆகியிருக்கும். அதற்குள்ளாகவே அவளை நேரில் காண வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் கனவில்கூட நினைத்ததில்லை. சாயங்காலம் ஆபிஸிலிருந்து திரும்பி, பஸ்ஸை விட்டு இறங்கினேன். ஈப்போ ரோட்டிலிருந்து என் வீட்டுக்குச் செல்ல இடது புறம் திரும்பினேன். திரும்பும்போது எப்பொழுதும் போல் ஏதேச்சையாக வலது பக்கம் சாலையை நோக்கியுள்ள சீனர் கடையை ஏறிட்டுப் பார்த்தேன். அப்போது கடை வாசலில் இரண்டு சீனர் சிறுவர்களும் ஒரு தமிழ் பெண்ணும் நின்று சாமான் வாங்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டு அடி நெருங்கி வந்ததும் நான் ஆச்ரியத்தால் ஸ்தம்பித்து நின்றுவிட்டேன். அந்தப் பெண்ணுடைய முகத்தின் பக்கத் தோற்றத்தையே என்னால் பார்க்க முடிந்தது என்றாலும் அதே மூக்கு; அதே வாய் அமைப்பு கண்களால் பார்க்கும் அலாதித் தோரணையும் அப்படியே இருந்தது. இருபத்திரண்டு வருஷங்களுக்குப் பிறகும் முகத் தோற்றத்தில் யாதொரு மாறுதலும் இன்றி, இப்படிப் பார்த்த மாத்திரத்தில் அடையாளம் கண்டுகொள்ளக் கூடியவாறு இருக்க முடியுமா ? இவள் கண்ணம்மா தானா என்று நான் சந்தேகிப்பதும், தெளிவதுமாகக் குழம்பிக் கொண்டு நின்றேன். அவள் கடைக்காரனிடமிருந்து இரண்டொரு பொட்டலங்களை வாங்கிக்கொண்டு திரும்பினாள்: என்னை நோக்கித் திரும்பினாள். அப்போது அவள் முகத்தைப் பூரணமாகப் பார்க்க முடிந்தது. அரை முகத்தினால் காட்டிய அடையாளத்தை முழு முகத்தினால் ஊர்ஜிதமே செய்தாள். கதையா இது என்று திகைத்தேன்.

ஒரு கணம் எங்கள் கண்கள் சந்தித்தன. ஒருவரை ஒருவர் பார்த்தோம். ஆனால் நான்தான் அவளுடைய முகத் தோற்றத்தில் கண்ணம்மாவைப் பார்த்தேனே ஒழிய, என்னுடைய தோற்றம் அவளுக்கு எந்த வித நினைவையும் உண்டு பண்ணியதாகத் தெரியவில்லை. வலப் பக்கமாக திரும்பினாள்; பாதை வழியாக நடக்கத் தொடங்கி விட்டாள். அவளுடைய பின் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டே நானும் நடந்தேன்.

மிகவும் மலிவான, மிகவும் பழைய, மிகவும் அழுக்கடைந்த ஒரு புடவையை அவள் உடுத்தியிருந்தாள். கழுத்திலோ கைகளிலோ ஒரு பொட்டுத் தங்கம்கூட இல்லை. கொண்டை போட்டிருந்த கூந்தல் வறண்டிருந்தது. காலில் செருப்பு இல்லை என்பதையும் கவனித்தேன்.

கண்ணம்மா இந்த நிலையில் இருப்பாள் என்று என்னால் நினைக்க முடியவில்லை. ஏனென்றால், ஊரில் எவ்வளவோ நல்ல நிலையில் இருந்தவர்கள் மலாயாவுக்கு வந்து அதைவிட பன்மடங்கு உயர்ந்த நிலையில் இருப்பார்கள் என்பதுதான் சகஜமாக எதிர் பார்க்கக் கூடிய விஷயம். தாழ்ந்திருந்தாலும் இந்த அளவுக்குத் தாழ்ந்திருக்க முடியாது…. இவள் கண்ணம்மாவாக இருக்க முடியுமா ?

சற்று வேகமாகச் சென்று விசாரித்து விடுவோமா என்றுகூட ஒரு சமயம் தோன்றியது. ஆனால் அவ்வாறு செய்ய என்னால் முடியவில்லை. என் நிலைக்கும் அவள் நிலைக்கும் இடையே இருந்த தூரம் அப்படி. அவள் உடன் பிறந்த சகோதரியாக இருந்தாலும் பகிரங்கமாக பலர் முன்னிலையில் அதைக் காட்டிக் கொள்ளக் கூசும் அளவுக்கு அவள் பஞ்சையாக இருந்தாள். ‘பார்ப்போம்; இந்த பகுதியில்தான் இவளும் குடியிருப்பதாக தெரிகிறது. மறை முகமாக மற்றவர்களை விசாரித்து தெரிந்து கொண்டு, அப்புறம் அவசியமானால் இவளோடு பேசலாம் ‘ என்று நினைத்தபடி வீடு வந்து சேர்ந்தேன்.

அவளை பார்த்த செய்தியைச் சரஸ்வதியிடம் — என் மனைவியிடம் நான் சொல்லவில்லை.

மறு நாள் மாலையிலும் அதே இடத்தில் பஸ்ஸை விட்டு இறங்கினேன். சீனர் கடையையும் திரும்பிப் பார்த்தேன். சாலையிலிருந்து என் வீட்டுக்குப் பிரியும் நடைபாதையிலும் தேடினேன். எங்கும் அவள் தென்படவில்லை. பேசாமல் வீட்டுக்கு வந்தேன். அன்றும் சரஸ்வதியிடம் அவளைப் பற்றி சொல்லவில்லை.

அதற்கு மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. ஒரு பகல் முழுவதையும் கண்ணம்மாவுக்காக நான் செலவழிக்க முடியும். வீட்டில் வேறு வேலையும் இல்லை.

மத்தியானச் சாப்பாடுக்குப் பிறகு, ‘சரஸ்வதி இப்போ ஒரு சமாசாரம் சொல்லப் போகிறேன். உனக்கு ஆச்சரியமாயிருக்கும். சொல்லட்டுமா ? கடல் கடந்து ஆயிர்த்தைந்நூறு மைல்களுக்கு இப்பால் நாம்ப குடியிருக்கிற இந்தப் பகுதியிலேயே என் சினேகிதி ஒருத்தி இருக்கிறா ‘ இருபத்திரண்டு வருஷங்களுக்கு முன்னாலே என் சொந்த ஊரிலே என்னோடு சேர்ந்து விளையாடிய பக்கத்து வீட்டுச் சினேகிதி ‘ சொல்லப் போனா, எட்டு வயசு வரையிலே நாங்க இணை பிரிஞ்சதே கிடையாது…… ‘

‘இங்கே இருக்கிறாளா ? ‘ என்று ஆச்சரியத்தோடு கேட்டாள். சரஸ்வதி.

‘இங்கேயேதான் இருக்கிறாள்……முந்தாநாள் சாயங்காலம்தான் அவளைப் பார்த்தேன் ‘ ஆனா…பேசல்லை ‘ ‘

‘ஏன் ? ‘

‘திடார்ன்னு பேசிற முடியுமா ? எவ்வளவோ காலத்துக்குப் பிறகு பார்க்கிறோம் ‘ ‘

‘பேசுறதிலே என்ன தப்பு ? ‘

‘தப்பு ஒண்ணுமில்லே. பேச வாய் வரல்லே. அவ்வளவுதான். அதோட ஒரு சின்ன சந்தேகம். அவள் வேறு யாராவது ஒரு பெண்ணா இருந்துவிட்டால் என்ன பண்றது ?…. ரொம்ப ஏழையாயும் இருந்தாள். ‘

‘அது இருக்கட்டும். அவளை எங்கே பார்த்தீர்கள் ? ‘ என்று கேட்டாள் சரஸ்வதி.

‘இங்கே இந்தச் சீனன் கடையிலே நம்ப வீட்டைத் தாண்டித்தான். நடந்து போனா, அதே ஜாடை, அதே மூக்கு, அதே நடை…….. ‘

‘அட பாவமே ‘ நீங்கள் பேசியே பார்த்திருக்கலாம். ‘

‘என்ன அவசரம் ? இன்னிக்குச் சாயங்காலத்துக்குள்ளே இன்னொரு தடவை அவளைப் பார்த்துட முடியும்னு நினைக்கிறேன். இந்த வழியாத் தானே அவள் கடை கண்ணிக்குப் போகணும்…… ? ‘

‘பார்த்தால் என்னைக் கூப்பிடுங்க. போய்ப் பேசறேன். இங்கேயே கூட்டிக் கிட்டு வர்றேன். உங்க பேர் அவளுக்கு ஞாபகம் இருக்குமோ ? ‘

‘என் பேர் மட்டுமில்லை. என்னையே அவளுக்கு ஞாபகம் இருக்கிற மாதிரித் தெரியல்லை. என்னைப் பார்த்துட்டு அவபாட்டிலே போயிட்டா ‘ ‘

‘அப்படின்னா அது வேற யாரோ ? நல்ல வேளை ‘ நீங்க திடார்னு கூப்பிட்டுப் பேசாம வந்தீங்க. அவ எப்படிப்பட்டவள்னும் தெரியாது. அவ புருஷன் எப்படிபட்டவன் என்கிறதும் தெரியாது. ஆசாமி தண்ணி போடுறவனாயிருந்தா, பெரிய வம்பு ‘ ‘

எனக்குச் சிரிப்பு வந்தாலும் சங்கடமாக இருந்தது. கண்ணம்மாவைச் சுற்றி எப்படிப்பட்ட மோசமான விஷயங்களையெல்லாம் நினைக்க வேண்டியிருக்கிறது என்று கஷ்டப்பட்டேன். தாங்க முடியாத வறுமை, குடிக்காரக் கணவன், அவளும் அப்படிப்பட்டவளாக இருப்பாளோ என்ற ஒரு சந்தேகம்…..அழகான சித்திரத்தில் தூசியும் ஒட்டடையும் படிந்து, முன்பக்கம் ஒரு சிலந்திக் கூடும். பின்பக்கம் ஒரு தேளும் இருக்க வேண்டுமா என்று வருந்தினேன்.

மணி நான்கு அடித்தது.

காப்பியை குடித்துவிட்டு வாசலில் சிமெண்ட் தளத்தில் ஒரு ஈசிச் சேரைப் போட்டு உட்கார்ந்து கொண்டேன். மேலே கட்டுமானம் இருந்ததால் அங்கே வெப்பமில்லை. நடைபாதையில் பார்வையைச் செலுத்தியவனாக உட்கார்ந்து கொண்டிருந்தேன்.

ஆறு மணி சுமாருக்குக் கண்ணம்மா—-அப்படித்தானே சொல்ல வேண்டும் ?—-காட்சி தந்தாள் ‘ பிரதான சாலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்தாள். நான் அவசர அவசரமாக, ‘சரஸ்வதி ‘ என்று கூவி அழைத்தேன். அவளும் உடனே ஓடி வந்து நின்றாள்.

‘அதோ ‘ ‘

கையை நீட்டிக் காட்டினேன்.

சரஸ்வதி பார்த்தாள். பார்த்துவிட்டு என்னை நோக்கித் திரும்பினாள். ஒரு நிமிஷம் என்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வருவது போல் தெரிந்தது.

‘என்ன சரஸ்வதி ? ‘

உடனே அவள் முகத்தில் சிரிப்பின் சாயல் மறைந்தது,

‘கடவுளே ‘ கடவுளே ‘ எழுந்து உள்ளே வாருங்கோ ‘ ‘ என்றால் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக.

திகைத்துப் போய் நான் உள்ளே எழுந்து சென்றேன்.

சரஸ்வதி கேட்டாள் : இவளைத் தான் சொன்னீர்களா ‘ நிஜமா இவள்தான் நீங்க சொன்ன கண்ணம்மாவா ? ‘

‘இவளேதான். ஆனால், இப்பவும் எனக்கு நிச்சயமில்லை ‘ என்று தடுமாறிக் கொண்டே சொன்னேன்.

‘நிச்சயமில்லாமலே இருக்கட்டும். இவள் கண்ணம்மா இல்லேன்னா ரொம்ப நல்லது ‘ என்று சொன்னாள். அப்பொழுதுதான் லேசாகச் சிரித்தாள்.

‘அதுதான் என் ஆசையும்கூட. என் கண்ணம்மா இந்த ஸ்திதியில் இருக்கக் கூடாது. ‘

‘திரும்பியே பார்க்காதீங்க ஆமாம் ‘

‘ஏன் ? ‘

‘சரஸ்வதி, நீ என்ன சொன்னாலும் சரி, அவ யாராயிருந்தாலும் சரி, இவ்வளவு காலம் நான் ஆவலோடு தேடின தோஷத்துக்கு, ஒரு வார்த்தையாவது அவளோடு பேசினாத்தான் என் மனசு ஆறும். ‘

‘பேசுங்கோ. ஒரு பத்து வெள்ளிநோட்டையும் தயாரா எடுத்து கையிலே வைச்சுக்குங்கோ. ஏன்னா, பின்னாலே அவ புருஷன் வருவான்—-கடன் கேட்கிறதுக்கு ‘ ‘

‘நீ என்ன சொல்றே ? ‘

‘தெரிஞ்சுதான் சொல்றேன். இங்கே வந்து இருபது நாளைக்குள்ளேயே அவரோட கீர்த்தி என் காதுக்கு எட்டிட்டதுன்னா, அவர் எப்படிப் பிரபலமான ஆசாமின்னு பார்த்துக்கோங்க. ‘

‘நீ என்ன கேள்விப்பட்டே ? விவரமாச் சொல்லு ‘ என்று சரஸ்வதியை வற்புறுத்திக் கேட்டேன்.

அவள் சுருக்கமாகத்தான் சொன்னாள். ஆனால் அவளுக்குத் தெரிந்ததையெல்லாம் சொல்லி விட்டாள்.

‘கண்ணம்மா ‘வின் கணவன் ஊரெல்லாம் கடன் வாங்குகிறவன், ஒரு வேலையும் இல்லாத பரம தரித்திரம், வாங்கிய கடனைக் கொடுக்கச் சக்தியில்லாமல் ஒவ்வொரு பகுதியிலும் வீட்டைக் காலி செய்து கொண்டு வேறு எங்காவது ஓடி விடுகிறவன் என்றெல்லாம் சொன்னாள். கடன்காரர்கள் வந்து தினமும் அவன் வீட்டில் கூச்சல் போட்டுவிட்டுப் போவார்களாம். இந்தத் தகவல்களை யெல்லாம் எங்கள் வீட்டு வேலைக்காரி சொன்னதாகவும் கூறினாள். என் வீட்டுக்குப் பின் புறத்தில், பக்கத்திலேயே உள்ள ஓர் அத்தாப்பு வீட்டில், ‘கண்ணம்மா ‘ வின் குடும்பம் ஒரு வருஷமாகக் குடியிருந்து வருவதாகவும் இறுதியில் தெரிவித்தாள்.

என் நிலைமை தர்மசங்கடமாகிவிட்டது, கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் அவள் கஷ்டத்தில் உழல்கிறாள் என்பது உண்மை. அவன் மோசமானவன் என்பதற்காக அவளுடைய கஷ்டத்தை பற்றி கவலைப்படாமல் இருப்பது நியாயமா ? அவள் கண்ணம்மா அல்ல, வேறொருத்திதான் என்று நினைக்கும் போதும் என் தர்ம சங்கடம் தீரவில்லை.

சரஸ்வதியோ, ‘தப்பித் தவறிப் பேச்சுக் குடுத்திடாதீங்க ‘ ‘ என்று கடைசி எச்சரிக்கையையும் விடுத்தாள்.

2

அதற்குப் பிறகு தான் பல முறை ‘கண்ணம்மா ‘ வைப் பார்த்து விட்டேன். நிச்சயமாக அவள் கண்ணம்மா அல்ல என்பதும் நிச்சயமாகி விட்டது. அவள் அவளாக இல்லாதது அவளுக்கும் எனக்கும் நடுவே ஒரு வேலியாக இருந்து தடுப்பது போன்ற உணர்ச்சியும் ஏற்பட்டது. இந்தக் கண்ணம்மாவிடத்திலும் என்னையறியாமல் இன்னதென்று புரியாத ஓர் அக்கறையும் பாசமும் வளர ஆரம்பித்தன.

ஏழெட்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று காலை எட்டு மணிக்கெல்லாம் கண்ணம்மாவின் வீடு இருக்கும் திசையிலிருந்து ஒரு கூச்சல் கேட்டது. ஒவ்வொரு சொல்லும் தெளிவாகக் காதில் விழக்கூடிய தூரத்திலேயே கேட்டது. அப்போது சரஸ்வதி ஒரு வெற்றிப் பெருமிதத்துடன், ஒரு பரிகாசத்துடனும் என்னிடம் ஓடிவந்து, ‘கேட்குதா ? கண்ணம்மாவின் வீட்டிலேதான் இடி முழங்குது ‘ நான் தினம் கேட்கிற முழக்கம் இது. இன்னிக்கு நீங்க வீட்டிலே இருக்கிறதனாலே கேட்கறீங்க ‘ என்று சொல்லிப் பின் பக்கத்துச் சுவரின் ஜன்னல் அருகே என்னை அழைத்துச் சென்றாள். அப்போது அந்தக் கூச்சல் சந்தர்ப்பவசமாகத் திடாரென்று நின்று விட்டது.

‘யார் முழக்கம் தெரியுமா ? நம்ப மளிகைக் கடைக்காரர் முழக்கம் ‘ இப்படிப் பேசாத பேச்செல்லாம் பேசிப் பார்க்கிறார். பாக்கி வசூல் ஆவேனான்கிறது ‘ ‘

சரஸ்வதியின் பரிகாசப் பேச்சு எனக்குப் பிடிக்கவில்லை.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மளிகைக் கடைக்காரர் அந்தப் பாதை வழியாக நடந்து வந்தார். என்னையும் பார்த்தார். உடனே நான் முன்பின் யோசிக்காமல் அவரை அழைத்தேன். அவர் முகத்தில் கோபக் குறியை வைத்துக் கொண்டு, அதே சமயத்தில் எனக்காக ஒரு புன்னகையையும் வரவழைத்தவராக என்னை நோக்கி வந்தார்.

‘உள்ளே வாருங்களேன் ‘ ‘ என்று அழைத்தேன்—-சம்பிரதாயமாகத்தான்.

‘இல்லே சார், வேலை கிடக்கு ‘ என்று சொன்னவர், அப்படியே போகாமல், புறவாசல் வழியாக என்னோடு என் வீட்டுக்குள்ளே வந்தார். முன்பக்கம் கூடத்துக்கு அவரை அழைத்துச் சென்றேன். உட்கார வைத்தேன். இதுதான் சமயம் என்று ஒவ்வொன்றாக விசாரித்தேன்.

‘இந்தக் குபேர நாட்டிலேயும் இப்படி வாங்கின கடனைக் குடுக்க முடியாதவங்க இருக்கிறாங்க என்கிறது எனக்கு ஆச்சரியமாயிருக்கு ‘ ‘ என்று ஆரமித்தேன்.

‘தரித்திரப் பயல்கள் எங்கேயும் தான் உண்டு. இவன், கையிலே இருந்தாலுமே குடுக்க மாட்டான். எத்தன் ‘ இப்போ இல்லவும் இல்லே. ‘

‘ஏன் ? ‘

‘வேலைவெட்டி கெடையாது. பயலுக்குச் சதா நோக்காடு. ஒரு மாதிரி இழுப்பு….. ‘ ‘

‘இழுப்புன்னா ‘ ‘

‘காசமா இருக்கும்….வேலையில்லாமல் இப்படிக் கடன் வாங்கியே காலத்தைத் தள்ளிக்கிட்டு வர்றான். ‘

‘இந்த ஊர்தானா ? ‘

‘எந்த ஊரோ ? இங்கேதான் ஒரு வருஷமா இருக்கிறான். எப்பவோ—எஸ்டேட்டிலே கிராணி (குமாஸ்தா) வேலை பார்த்திருக்கிறானாம். நெஜமோ ? பொய்யோ ? ‘

‘அந்த பொம்பிளைதான் வேலை வெட்டி செஞ்சி குடும்பத்தைக் காப்பாத்தணும் போலிருக்கு ? ‘

‘அப்படித்தான். நாலு வீட்டிலே துணி தொவைச்சுப் போடறா. நல்ல குணந்தான். இவனுக்கு வாக்கப்பட்டுட்டு அவ கெடந்து சீரழியறா. ‘

நான் அவள் பெயரை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, ‘நம்ப வீட்டிலேயும் அவளை வேலை செய்யச் சொல்லலாமே ‘ இங்கேயும் ஆள் தேவைதான் ‘ என்று சொல்லிவிட்டு , ‘அவ பேரு ? ‘ என்று பேச்சோடு பேச்சாகக் கேட்டு வைத்தேன்.

உடனே அவர் சிரித்தார். ‘தங்கம் ‘ தங்கம்மா ‘ எப்படி ‘ பித்தளைப் பானைக்கே வழியில்லே ‘ பேரு தங்கம் ‘ ‘

தங்கம் ‘

தங்கம்மா ‘

மளிகைக் கடைக்காரருடன் அப்புறம் நான் அதிக நேரம். உட்கார்ந்து பேசவில்லை. அவரை அனுப்பி விட்டேன்.

தங்கம்மா ‘ கண்ணம்மா அல்ல ‘ ஆனாலும் பெயர் மட்டுமே மாறியிருக்கிறது என்று எனக்கு ஒரு பிரமை ‘

‘சரஸ்வதி ‘ கேட்டியோ, கடைக்காரர் சொன்னதை ? பேரும் தங்கமாம்; குணமும் தங்கமாம் ‘ ‘

‘அது இருக்கட்டும். இங்கே வேலைக்கு ஆள் தேவைன்னு சொன்னீங்களே, எதுக்கு ? ‘

‘சும்மா சொல்லி வச்சேன். ‘

‘அவ நாளைக்கு வந்து நின்னா ? ‘

‘அப்படியெல்லாம் வந்துட மாட்டா. நீ பயப்படாதே ‘ ‘

‘நான் அவளுக்கு பயப்படல்லியே ‘ அவ புருஷனுக்குக்கில்லே பயப்படுறேன் ‘ ‘

மளிகைக் கடைக்காரர் அப்புறம் எனக்குத் தெரிய இரண்டாவது தடவையும் கூச்சல் போட்டு விட்டார்.

‘அதன்பின் மூன்று நாட்கள் கழிவதற்குள்ளாகவே, நான் தங்கம்மாவின் வீட்டுக்குப் போக வேண்டிய— அதுவும் இரவு நேரத்தில் ஊர் அடங்கினபின் ஓடிப் போக வேண்டிய ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டது.

அன்று நிசப்தமான நிசி வேளையில் தங்கம்மாவும் அவள் குழந்தைகளும் திடாரென்று, ‘குய்யோ முறையோ ‘ என்று கூப்பாடு போட்டார்கள்.

உடனே சரஸ்வதியை எழுப்பினேன். ‘நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன். இந்த பக்கத்திலே நாம்பதான் தமிழாட்களா இருக்கிறோம். நாம்ப போய் எட்டிப் பார்க்கலேன்னா, அது….அது நல்லா இல்லே ‘ ‘ என்று சொல்லிவிட்டு ஓடினேன்.

நான் போய்க் கதவைத் தட்டியதும் திறந்து விட்டார்கள். தங்கம்மா அழுகையை நிறுத்தி என்னைத் திகைப்போடு பார்த்தாள். குழந்தைகளும் அழுவதைப் பயத்தினால் நிறுத்திவிட்டார்கள்.

‘என்ன விஷயம் ‘ என்று கேட்டேன்.

கணவன் படுத்திருக்கும் இடத்தைக் கையால் சுட்டிக் காட்டினாள். அவன் பேச்சு மூச்சில்லாமல் எலும்பும் தோலுமாக ஒரு பாயில் படுத்துக் கிடந்தான்.

‘என்ன இவருக்கு ? ‘

‘ஆஸ்துமா இழுப்பு ‘ என்று சொல்லி விட்டு அவள் மீண்டும் அழலானாள்.

நான் அவனைத் தொட்டுப் பார்த்தேன். உயிர் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு. ‘அழாதீங்க…. இப்போ என்ன செய்யணும் ? வழக்கமா என்ன செய்வீங்க ‘ என்று அவளைக் கேட்டேன்.

‘இப்படி ஒரு நாளும் ஆனதில்லையே ‘….கடவுளே ‘ ‘ என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்.

‘அப்படியெல்லாம் நடந்துடாது. பயப்படாதே ‘ ‘

இன்னும் சில நிமிஷங்களில் அவன் செத்துப் போய் விடுவான் என்று நினைத்து விட்டவளைப் போல அவள் அழுதாள். எனக்குமே அப்படித்தான் நினைக்கத் தோன்றியது.

‘சரி, இப்பவே ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிறணும்…..கொஞ்சம் இருங்க. நான் வர்றேன். அழாதீங்க ‘ என்று சொல்லிவிட்டு வெளியே ஓடி வந்தேன்.

அங்கிருந்து மூன்று மைல் தூரத்துக்கு அப்பால் பஹாங் ரோடில் உள்ள அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அவனைக் கொண்டு போக வேண்டும். ஆனால் அது டாக்ஸி கிடைக்காத இடம். ஏறக்குறைய காட்டுப் பகுதி. எனக்குத் திடாரென்று அப்போது ஒரு யோசனை உதயமாயிற்று. நான் முன்பின் பேசியறியாத என் பக்கத்து வீட்டுச் சீனனிடம் போய்க் கார் கேட்டால் என்ன என்று நினைத்தேன். தைரியமாகப் போய் அவன் வீட்டுக் கதவைத் தட்டி விட்டேன். ‘தவுக்கே ‘ தவுக்கே ‘ ‘ (ஐயா, ஐயா) என்று கூப்பிட்டேன். அவனுக்குப் பதிலாக அவன் மனைவிதான் எழுந்து வாசல் விளக்கைப் போட்டு ஜன்னலைத் திறந்து என்னைப் பார்த்தாள்.

‘என்ன ? ‘ என்று மலாய் மொழியில் அதட்டலாகக் கேட்டாள்.

‘நான் பக்கத்து வீட்டில் தான் குடியிருக்கிறேன். ‘

‘தெரியும் ‘

‘தயவு பண்ணி உங்க காரைக் கொஞ்சம் இரவல் கொடுக்க முடியுமா ? ஆஸ்பத்திரி வரைக்கும் போகணும் ‘

‘டிரைவர் இல்லையே ‘ என் புருஷன் படுத்துத் தூங்கறார். நல்லாக் குடிச்சிருக்கிறார். இப்போ அவராலே கார் ஓட்ட முடியாது. ‘

‘அப்படியா ?….அர்ஜெண்ட் கேஸ் ‘ ‘

‘யாருக்கு ? ‘

‘இங்கே ஒருத்தர் பிரக்ஞையில்லாமல் கிடக்கிறார். ‘

‘உங்க அண்ணனா ? ‘ என்று எதற்கோ ஓர் உறவைக் கற்பித்துக் கொண்டு அவள் கேட்டாள்.

நான் உடனே ‘ஆம் ‘ ‘ என்று சொல்லி விட்டேன்.

அவள் தன் மூத்த மகனை எழுப்பி காரை எடுக்கச் சொன்னாள், அவனும் மறு பேச்சுப் பேசாமல் வந்து சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு காரைத் திறந்தான்.

பத்துப் பதினைந்து நிமிஷங்களுக்குள், ‘கண்ணம்மா ‘ வின் இல்லை, தங்கம்மாவின் கணவனைக் காரில் ஏற்றி விட்டோம். அவளும் குழந்தைகளோடு ஆஸ்பத்திரிக்கு வர விரும்பினாள். எங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்ளவும் செய்தாள். எல்லோரும் காரில் ஏறிக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் பறந்தோம்.

உடனடியாக அவனை ‘அட்மிட் ‘ பண்ணி விட்டேன். அத்துடன் நான் வீட்டுக்குத் திரும்பி விடாமல், அவனுக்குச் செய்யப்படும் முதல் சிகிச்சைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன், அரை மணி நேரத்துக்குப் பிறகு டாக்டரைப் பார்த்து, ‘நிலைமை எப்படி ? ஆபத்து ஒன்றுமில்லையே ? ‘ என்று ஆங்கிலத்தில் கேட்டேன்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை. இரண்டு வாரம் இங்கேயே இருந்து சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் ‘ என்றார் அவர்.

தங்கம்மாவுக்கு விஷயத்தைச் சொன்னேன். அவளும் ஆறுதல் பெற்றாள். ஆனால் வீட்டுக்குப் போகலாம் என்று அழைத்த போது வர மறுத்துவிட்டாள். விடியும் வரையில் அங்கேயே இருக்கப் போவதாக அவள் சொன்னாள். கடைசியில் நான் மட்டும்தான் வெளியில் வந்தேன். அந்த நேரத்தில் ஒரு டாக்ஸி அகப்பட வேண்டுமே என்று கவலைப் பட்டுக்கொண்டு வந்த நான், வெளியே நின்ற காரைப் பார்த்ததும் ஆச்சரியத்துக்குள்ளானேன். அந்தச் சீனப் பையன் இன்னும் அங்கேயே காரோடு காத்திருந்தான். இதை நான் எதிர்பார்க்கவேயில்லை.

இருவரும் காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தோம். அப்போது இரவு மணி இரண்டு.

சரஸ்வதி அப்போது கோபமாக இருப்பாள் என்று நினைத்தேன். ஆனால் ‘இப்போ எப்படி இருக்கிறார் ? ‘ என்று மட்டுமே அவள் கேட்டாள்.

‘ஆசாமி பிழைச்சுக்கிட்டான். இனி பயமில்லை. ஆனா, ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாமல் இருந்திருந்தால், அவனை உசிரோட பார்த்திருக்க முடியாது. ஏதோ நம்மாலே ஆன தர்மம். இதுகூடச் செய்யலேன்னா எப்படி ? நம்ப இனம்; நம்ப தமிழ் ஜாதி….. ‘

இந்த சமாதானமெல்லாம் தேவையில்லை என்று நினைத்தவளைப் போல், ‘சரி, சரி படுங்கோ. நாளை ஆபீசுக்குப் போகணும் ‘ என்று சொல்லி நிறுத்திக் கொண்டாள் சரஸ்வதி.

3

மறு நாள் நான் வேலைக்குப் புறப்படும் நேரம். அப்போது தங்கம்மா தன் குழந்தைகளோடு என் வீட்டுக்கு வந்துவிட்டாள். கணவன் புரக்ஞையடைந்து செளக்கியமாக இருக்கும் தகவலைக் கூறினாள். ‘சந்தோஷம் ‘ என்று நான் சொல்லி வாய் மூடு முன்பே, அவள் கண்ணீரை உகுத்துக் கொண்டு, ‘நீங்கதான் எனக்குக் கடவுள். இந்த மஞ்ச நூலு உங்களாலே தான் பிழைச்சது ‘ என்று சொல்லிக் கும்பிட்டாள்.

அப்போது திடாரென்று என்நெஞ்சில் ஒரு மின்னல் தாக்கியது. தங்கம்மாவுக்குப் பதிலாக அங்கே கண்ணம்மாவே நின்று கண்ணீர் விட்டுக்கொண்டு கும்பிடுவது போல் ஒரு தோற்றம், என்னால் அங்கே நிற்க முடியவில்லை.

‘இது என்ன பிரமாதம் ? ‘ என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு பேசாமல் ரோடைப் பார்த்து நடந்தேன். என் கண்கள் நனைந்ததை அவளும் பார்க்கவில்லை; சரஸ்வதியும் பார்க்கவில்லை.

தங்கம்மாவின் கணவன் பழனி மூன்று வாரங்களுக்குப் பிறகு ஆஸ்பத்திரியிலிருந்து குணமாகி வந்தான். நேரே என் வீட்டுக்குத்தான் வந்தான். வந்தவன் என் கால்களில் நெடுசாண்கிடையாக விழுந்தான். இதை நான் நன்றியறிவிப்பாகக் கருதாமல், அடைக்கலம் புகும் ஒரு செயலாகவே நினைத்து விட்டேன். அவனுடைய—என்னைவிட வயதில் மூத்தவன்—அவருடைய குடும்பத்துக்கு ஒரு எதிர்கால ஏற்பாடு செய்து வைத்துவிட நான் ஆசைப்பட்டேன். செத்துக் கொண்டிருப்பவனைப் பிழைக்க வைத்தால், அவன் ஒரு வருஷமாவது உயிரோடு வாழும்படி செய்யவேண்டும்; ஒரு மாதத்தில் திரும்பவும் சாவதற்காக ஒருவனை பிழைக்க வைப்பது அர்த்தமில்லாத காரியமாக மட்டுமல்ல, கொடுமையான காரியமாகவும் எனக்குத் தோன்றியது. பழனியை விசாரித்தேன். இந்த ஆஸ்த்துமா நோய்க் கொடுமையால்தான் முன்பு வேலையை இழந்ததாகவும், தமக்கு ஆங்கிலமும் டைப்ரைட்டிங்கும் தெரியும் என்றும் சொன்னார். இரண்டே மாதங்களில் என்னுடைய காரியாலயத்திலேயே அவருக்கு வேலை பண்ணி வைத்து முந்நூறு வெள்ளி சம்பளம் கிடைக்கவும் வழி செய்து விட்டேன்.

4

ஒவ்வொரு வருஷமாக இரண்டு வருஷங்கள் ஓடிவிட்டன. எனக்கும் ஒரு பையன் பிறந்து விட்டான். பழனியின் குடும்பம் நான் குடியிருந்த வீட்டு வரிசையிலேயே கடைசி வீட்டுக்கு, நூற்றிருபது வெள்ளி சேவாய் (வாடகை) பேசிக் குடிவந்து விட்டது. அவர் இப்போது நானூறு வெள்ளிக்கு மேல் சம்பாதிக்கிறார் ‘

இந்த இரண்டு வருஷங்களில் என்றோ ஒரு நாள் என் பால்ய சிநேகிதி கண்ணம்மாவைப் பற்றி என் மனைவி ஒரு ஹாஸ்யக் கதை மாதிரி தங்கம்மாவிடம் சிரித்துச் சிரித்துச் சொன்னாளாம். நான் யாரோ ஒரு பெண்ணிடம் கொண்டுள்ள அன்பை அவளுடைய ஜாடையில் இருக்கும் தன்னிடம் சொரிந்ததைப் பற்றிக் கேள்விப் பட்டதும் தங்கம்மா உணர்ச்சிவெள்ளத்தில் மூழ்கி, ‘அப்படியா ? ‘ என்று கேட்டாளாம் கடைசியில் ஆகாயத்தை நோக்கிக் கைகூப்பி ‘அந்தப் புண்ணியவாட்டி யாரோ ?…..தாயே ‘ நீ நல்லா இருக்கணும் ‘ உன் புண்ணியத்திலே என் குடும்பம் இன்னிக்குப் பசியாமல் சாப்பிடுது, தாயே ‘ ‘ என்று சொல்லித் தொழுதாளாம்.

கண்ணம்மாவின் கதை எப்படியெல்லாம் சுற்றி, எந்தெந்த விதமாகவெல்லாம் வடிவெடுத்துக் கொண்டு போகிறது என்று வியந்து கொண்டிருந்த நான் சீக்கிரத்திலேயே அந்தக் கதையை முடித்துவிடுவதற்கும் எனக்குச் சந்தர்ப்பங்கள் துணை செய்தன. ‘அந்தப் புண்ணியவாட்டியை ‘ நான் நேரிலேயே பார்த்து விட்டேன். அதுவும் ஒரு வருஷத்துக்குள்ளேயே ‘

அவளைப் பார்க்க நேர்ந்தது சாதாரணமாக நம்பமுடியாத ஒரு சந்தர்ப்ப விசித்திரம்தான்.

தைப்பூச உற்சவத்திற்காக நானும் சில நண்பர்களும் பினாங்குக்குப் போயிருந்தோம். உற்சவக் கூட்டத்தில் நான் கண்ணம்மாவைத் தேடினேன் என்று சொல்லத் தேவையில்லை. அவளுடைய அப்பாவின் பெயரைச் சொல்லி ஒரு கடையில் விசாரித்துப் பார்க்கவும் செய்தேன். மறுநாள் எங்கள் கோஷ்டியைச் சேர்ந்த ஒரு நண்பர் சொந்தக் காரியமாகச் சுங்குரும்பைக்குப் போக விரும்பினார். நாங்களும் அவருடன் போனோம். பினாங்கில் விசாரித்தது போலவே சுங்குரும்பையிலும், ‘இந்த ஊரிலே கோவில்பட்டிக்காரர் ஒருவர் இருக்கிறாராமே ‘ துரைசாமி என்கிறவர் ? ‘ என்று கேட்டு வைத்தேன்.

நான் எதிர்பாராவிதமாக அவர், ‘ஆமா, இருக்கிறார். சோத்துக்கடை துரைசாமியைத்தானே கேட்கறீங்க ? ‘ என்று கேட்டார்.

என் ஆச்சரியத்தை மறைத்துக்கொண்டு. ‘சோத்துக்கடையா வச்சிருக்கிறார் ? ‘ என்று ஒரு கேள்வியைப் போட்டுவிட்டு, அவருக்கு இரண்டு பிள்ளைகள் உண்டு….. ‘ என்றேன்.

‘இருக்காங்க, மகன் தைப்பிங்கிலே கடை வச்சிருக்கிறான். மக இங்கேதான் இருக்கிறா ‘.

‘கல்யாணமாயிட்டுதா — மகளுக்கு ? ‘

‘கல்யாணமா ?…. ‘ என்று இழுத்தார். உடனே சிரிக்கவும் செய்தார்.

‘ஏன் ? என்ன விஷயம் ? ‘

‘வேறே ஒண்ணுமில்லை…….அது சரி, அவங்க உங்களுக்குச் சொந்தமா ? ‘

‘சொந்தமில்லே. நம்ப ஊரு. ‘

‘அதுக்கு வயசு முப்பது முப்பத்தஞ்சி இருக்கும் போலே இருக்கு. கல்யாணம் எங்கே ஆகிறது ? ‘

‘அவரைப் பார்க்கணும் ‘ என்று சொல்லிவிட்டு எழுந்தேன். அவரிடமே வழி கேட்டுத் தெரிந்து கொண்டு, நேரே கடைக்குப் போனேன். துரைசாமி அப்போது கடையிலேயே இருந்தார். தலையும் மீசையும் நரைத்து, வயது முதிர்ந்து காணப்பட்டாலும் ஆள் மிகவும் கனத்து ஆஜானுபாகுவாகக் காட்சி அளித்தார். என்னை அவரால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. நான்தான் சொன்னேன். உடனே அவர் ஆவலோடு எழுந்து என் கையைப் பிடித்தார். அவருடைய மகிழ்ச்சி முகமெல்லாம் பொங்கித் ததும்பியது. நான் மலாயாவுக்கு வந்ததையும் உத்தியோகம் குடும்ப நிலை போன்ற விவரங்களையும், என் பெற்றோரின் செளக்கியங்களையும் விசாரித்தார். பிறகு தம்முடைய காரிலேயே என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அவருடைய மனைவி எதிரே வந்து என்னை அன்போடு வரவேற்றாள்.

கண்ணம்மா அப்போது வீட்டில் இல்லை. அரை மணி நேரத்துக்குப் பிறகு தான் வெளியிலிருந்து வந்தாள்.

எட்டு வயதில் பார்த்த கண்ணம்மாவை, அப்போது முப்பத்து நான்கு வயதுப் பெண்ணாக பார்த்தேன் ஆனால், அவள் எப்படியெல்லாம் இருப்பாள் என்று நான் கற்பனை பண்ணியிருந்தேனோ அப்படி இல்லாமல், நேர் மாறாகக் காட்சியளித்தாள். அந்த மூக்கும், அந்த வாயமைப்பும், ஏறக்குறைய அந்தப் பார்வையுமே மாறாமல் அப்படியேதான் இருந்தன. ஆனால் நெட்டையாக — சற்று விகாரமாகவே — வளர்ந்து ஒல்லியாக இருந்தாள். உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை எத்தனையோவித நவநாகரிக ஒப்பனைகள். அவளுடைய தோற்றத்தையும் கோலத்தையும் பார்த்துக் கொஞ்சம் ஏமாற்றமும் அடைந்தேன்.

என்னை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்தார் துரைசாமி.

‘ஓ ‘ ஐ ஸீ ‘ ‘ என்று சொல்லிவிட்டுச் சாயம் பூசிய உதடுகளால் ஒரு சிரிப்புச் சிரித்தாள். பிறகு என் எதிரே உட்கார்ந்தாள். என்னைப் பார்த்து ஏதாவது கேட்பாள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான்தான் பேச்சைத் தொடங்கும்படி ஆயிற்று. பேசினேன். ‘சின்ன வயசிலே ஒண்ணா விளையாடினோம் ‘…… ‘

‘யெஸ் ‘ ‘—ஒரு புன்னகை.

‘அதெல்லாம் ஞாபகம் இருக்கா ? ‘

‘உம்…. ‘ என்று ஒருவித உணர்ச்சிப் பரபரப்புமின்றிப் பதில் சொன்னாள்.

அந்த நிலையிலும்கூட ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை, பரவசத்தோடும் இளமை பிராய நினைவின் இன்ப லயிப்போடும் அவள் வாயிலிருந்து வெளி வராதா என்று ஏங்கினேன். அவளோ எதுவும் பேசாமல் மெளனமாகவே உட்கார்ந்திருந்தாள்.

என்னால் அப்புறம் அங்கே இருக்க முடியவில்லை. டா வந்ததும் குடித்து விட்டுக் கிளம்பிவிட்டேன். துரைசாமியும் அந்த அம்மாவும் விடைகொடுக்கும்போது, குடும்பத்தோடு ஒரு தடவை நான் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். அவளோ, கையை அசைத்ததோடு சரி.

கோலாலம்பூருக்குத் திரும்பும்போது என் நஷ்டத்தை எண்ணி எண்ணிப் பெருமூச்செறிந்தேன்.

கண்ணம்மாவைப் பார்த்தது பற்றி எவ்வளவு முடியுமோ அவ்வளவு கசப்போடும் வெறுப்போடும் என் மனைவியிடம் சொன்னேன்.

‘உங்களுக்கு இப்படிக் கோபம் வருவானேன் ? அவள் உங்களுக்கு என்ன கெடுதல் பண்ணினா ?…. ‘ என்று சரஸ்வதி என்னைப் பரிகாசம் செய்தாள்.

நானும் பேச்சை நிறுத்திவிட்டேன்.

கண்ணம்மாவை நான் வெறுத்துப் பேசிய வார்த்தைகளை அடுத்த நாள் என் மனைவி மூலம் கேள்விப்பட்ட தங்கம்மா, உடனே என்னிடம் ஓடி வந்தாள். வந்ததும் பதைபதைப்போடு பேசினாள்:

‘அந்தப் புண்ணியவாட்டியை நீங்கள் திட்டினீங்களாமே ? ஐயோ, உங்க வாயாலே அப்படிப் பேச வேண்டாம். எங்களுக்காகவாச்சியும் நீங்க திட்டக் கூடாது. இன்னிக்கு நாங்க சாப்பிடுறது அவ சாப்பாடு. ‘

எனக்குச் சிரிப்புத்தான் வந்தது.

அப்பொழுது சரஸ்வதி, உங்களுக்குக் கண்ணம்மா பேரிலே பழையபடியும் பிரியம் வரணும்னா இனி ஒரே ஒரு வழிதான் இருக்கு ‘ அது என்னன்னு உங்களுக்குத் தெரியுமோ ? ‘ என்று கேட்டுவிட்டுச் சிரித்தாள். பிறகு அவளே சொன்னாள்: ‘அவள் தங்கம்மா ஜாடையிலே இருக்கிறாள்னு நினைச்சுக்கோங்க ‘ பிரியம் தானாவரும் ‘ தங்கம்மாவையே கண்ணம்மா ஆக்கிட்ட பிற்பாடு, கண்ணம்மாவை தங்கம்மா ஆக்க முடியாதா என்ன ? பிரியத்தைக் காட்டித்தான் யாரையும் மாத்த முடியும். வெறுப்பைக் காட்டி மாத்த முடியாது. ‘

சரஸ்வதி பேசும் போது நான் மெய் மறந்துவிட்டேன். உள்ளத்தினுள் ஒரு சிலிர்ப்பும் ஏற்பட்டது.

அப்பொழுது எனக்கும் அவளைப் போலவே தத்துவமாகப் பேச எப்படியோ தோன்றிவிட்டது; எப்படியோ தெரிந்தும்விட்டது. நான் சொன்னேன்:

‘சரஸ்வதி, உண்மை நம்மிடத்திலே பிரியம் இருந்தால், உலகத்திலே உள்ள அத்தனை பெண்களையுமே கூடக் கண்ணம்மா ஆக்கிவிடலாம். ஒவ்வொரு பெண்ணோட முகத்திலும் கண்ணம்மாவோட ஜாடை இராது தான். ஆனால் மனசிலே இருக்கும். அது அப்போ தெரியும். இல்லையா சரஸ்வதி ? ‘

கண்ணம்மாவின் கதை திடாரென்று ஒரு புதுத்திருப்பத்தில் திரும்பி, புது வடிவமும் பெற்றதே ஒழிய இந்தக் கட்டத்திலும் முடிவடையவில்லை.

Series Navigation

- கு. அழகிரிசாமி

- கு. அழகிரிசாமி