கணினிக்கட்டுரைகள் – 7 – மா.பரமேஸ்வரன்

This entry is part [part not set] of 5 in the series 20000820_Issue

7. Computer Virus என்பதைப்பற்றி எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள்


Computer Virus என்பது பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், இதனை நாம் தமிழில் கிருமி நிரல்கள் என்று கூறுகிறோம். இத்தகைய கிருமிநிரல்களும் நாம் கணினியில் பயன்படுத்தும் மற்ற நிரல்கள்(Programs) போன்றவையே. அப்படி இருக்க இதனை ஏன் நாம் கிருமி நிரல்கள் என்று சொல்லவேண்டும் ?..

சில நிரல்கள் அழிவுப்பணிக்காக எழுதப்படுகின்றன, எப்படி கிருமிகள் நமது உடலில் புகுந்தால் அது நமது உடலுக்கு உபாதைகளை விளைவிக்கிறதோ அதுபோல இத்தகைய அழிவுப்பணிக்காக எழுதப்பட்ட நிரல்களும் நமது கணினிக்குள் புகுந்தால் அதற்குப் பல உபாதைகளை விளைவிக்கிறது. இங்கு கணினிக்கு உபாதைகள் என்று நான் கூறுவது கணினியில் உள்ள தரவுகளை, மென்பொருள்களை அழிப்பது, அதிகமான இடத்தை நினைவகங்களில் ஆக்கிரமிப்புசெய்து அதன்மூலமாக கணினியின் செயல்பாட்டு வேகத்தை குறைப்பது, நாம் கணினியில் வேலை செய்யும்போது பல விதமான தொந்தரவுகளைச் செய்வது என்று பட்டியல் நீளும்…

இத்தகைய நிரல்களை நாம் கிருமி நிரல்கள் என்று கூறுவதற்கு பல காரணங்கள் உள்ளன அவையாவது

1. இந்த நிரல்கள் எப்படி கிருமி ஒரு கிருமியிலிருந்து பலவாகப் பல்கிப்பெருகுகிறதோ அதுபோல பல்கிப்பெருகவல்லவை. ஒரு கிருமி நிரல் தானாகவே தன்னைப்போன்ற கிருமிநிரலை உருவாக்கவல்லது இதனை ஆங்கிலத்தில் Self Replication என்று சொல்வதுண்டு.

2. எப்படி கிருமிகள் ஏதாவது ஊடகங்களைப்பயன்படுத்தி பரவுகின்றனவோ, அதுபோல இத்தகைய நிரல்களும் கணினியின் பல ஊடகங்களின் வழியாக ஒரு கணினியில் இருந்து மற்றொன்றுக்கு பரவுகிறது எடுத்துக்காட்டாக நெகிழ்வட்டுக்கள் (Floppy disk), மற்றும் வலையமைப்புகளின் மூலம் கோப்புகளை ஒரு கணினியிலிருந்து வேறு கணினிக்கு மாற்றும் போது அதன் வழியே இத்தகைய கிருமிநிரல்களும் அந்த கணினிக்கு பரவிவிடுகின்றன அங்கிருந்து அடுத்த கணினி என்று அதனுடைய பரவல் நடந்துகொண்டே இருக்கும்.

3. மனித உடலில் கிருமி புகுந்ததும் அது அதனுடைய குறிகளை நமக்கு உணர்த்தி நாம் நோய்வய்ப்பட்டுள்ளதை உறுதிசெய்யுமோ அதுபோல இந்த கிருமி நிரல்களும் நமது கணினியில் புகுந்தவுடன் அது தன் செய்யவேண்டிய அழிவுப்பணிகளையும், தொந்தரவு களையும் தந்து அதனுடைய இருப்பை நமக்கு உணர்த்தும்.இதனை ஆங்கிலத்தில் Symptoms of Virus Attack என்று கூறுவது உண்டு.

4. இத்தகைய கிருமிகள் நமது உடலில் புகுந்து விட்டதை அறிந்தும் நாம் அதனை நமது உடலை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் எப்படி நோய் முற்றி நாம் சாவும் நிலைக்கு செல்லுகிறோமோ அதுபோல கிருமிநிரல்களை அப்படியே தொடரவிட்டால் நமது கணினியில் உள்ள முக்கிய தகவல்கள் மற்றும் மென்பொருள்கள் ஆகியனவற்றை நாம் இழக்க,(உயிர் போய்விடும்)வெறும் கணினி மட்டும் தான் மிஞ்சும்.

இத்தகைய கிருமி நிரல்கள் ஆரம்பத்தில் ஒரு விளையாட்டுக்காக மென்பொருள் பொறியாளர் களால் எழுதப்பட்டன அவர்கள் வலையமைப்பில் உள்ள தம்முடைய நண்பரின் நிரல்களை அழிப்பதற்கும், விளையாட்டாக அவர்களைத்தொந்தரவுசெய்து மகிழ்வதற்குமே எழுதப்பட்டன. இத்தகைய அளவுக்கு அவை வளர்ச்சியடைந்து கணினி உலகையே எப்பொழும் அவதிக்குள்ளாக்கிவரும் என்று அவர்கள் அந்தநேரத்தில் நினைத்திருக்கவில்லை!.

ஆரம்பகாலத்தில் வந்த கிருமிநிரல்கள் அதிகம் ஆபத்தானவைகளாக இல்லை அவைகள் நம்மிடம் விளையாடிவிட்டு மறைந்துபோய்விடும். ஜோசி என்னும் கிருமி நிரல் நமது கணினியில் புகுந்தால், அது எப்போதாவது நாம் பிற வேலையாக இருக்கும் போது திரையில் தோன்றி எனக்கு பிறந்த நாள் வாழ்த்துச்சொல் என்று கட்டளையிடும் அது கூறியவாறு நீங்களும் ‘Happy Birthday Josi ‘ என்று எழுதினால் பின்னர் மறைந்துவிடும். இத்தகைய கிருமி நிரல்கள் நமது கணினிக்கும் அதில் உள்ள மென்பொருள்களுக்கும் எப்பொழுதும் தீங்கு விளைவிப்பவை அல்ல.

ஆனால் சில கிருமிநிரல்கள் மிகவும் ஆபத்தானவை நமது Hard diskஐயே மொத்தமாக அழித்து விடும் அத்தோடு நமது மொத்த தகவல்களும், மென்பொருள்களும் அழிந்து விடும். இது பெரிய நிறுவனங்களைப் பொருத்தவரையில் மிகப்பெரிய இழப்பாக இருக்கும் நமது தனிக்கணினியைப்பொருத்தவரையில் நாம் மிகவும் விலைமதிக்க முடியாத தகவல்கள் எதனையும் அதிகம் கணினியில் வைத்திருக்கப்போவது இல்லை -மென்பொருள் அழிந்துபோய்விட்டாலும் மீண்டும் நாம் அவற்றை ஏற்றிக்கொள்ளலாம் அது சிரமும் இல்லை.

எத்தகைய வகையில் இந்த கிருமி நிரல்கள் செயல்படுகின்றன ?

இத்தகைய கிருமிநிரல்களை எழுதும் வல்லுனர்கள் எந்த விதமான முறைகளில் கணினியை அந்நிரல் தாக்கவேண்டும் என்று அதில் எழுதியுள்ளார்களோ அதன்படி அந்த நிரல்கள் செயல்படும் எடுத்துக்காட்டக நான் ஒரு கிருமிநிரலை எழுதுகிறேன். அதில், அந்த நிரல் கோப்புகளை பிரதி எடுக்கும்பொழுது அது கணினியில் இருந்து நெகிழ்தட்டுக்கும், அதிலிருந்து கணினிக்கும் செல்வதற்காக கட்டளைகளை அமைக்கிறேன். அதுமட்டுமல்லாது அந்நிரல், கணினி வினைக்கலனை தனது நினைவகத்தில் ஏற்றியவுடன் செயல்பட்டு அதாவது தன்னைத்தானே கணினியின் இராம் நினைவகத்தில் ஏற்றிக்கொண்டு அந்த கணினியின் தேதியை கவனித்துவருமாறும் கட்டளைகளை அமைக்கிறேன். அவ்வாறு கணினியின் தேதியைக்கவனித்து வரும் அக்கிருமிநிரல் மே மாதம் 5 ஆம் தேதி கணினியின் தேதியாக வரும் நேரத்தில் அதில் உள்ள தகவல்களை (format) மொத்தமாக அழிக்கும் கட்டளையைக்கொடுக்கிறேன்.

இதுதான் ஒரு கிருமிநிரல் செய்யும் வேலை. இங்கு நான் கணினியின் தேதியை கவனித்து அதில் நான் கொடுக்கும் தேதி வந்தால் அது தனது வேலையைச் செய்யக் கட்டளையிட்டிருப்பது போல பல வல்லுனர்கள் பலவிதமாக கட்டளையிடுகின்றனர். இத்தகைய கிருமிநிரல்கள் அதை எழுதும் வல்லுனரைப்பொருத்து வேறு வேறு விதமாக அமைகின்றன, வெவ்வேறு வழிகளில் செயல்படுகின்றன.

இத்தகைய கிருமிநிரல்களை நாம் பொதுவாக இரண்டுவகையாகப்பிரிக்கிறோம் அவை

1. (File Virus)கோப்புகளைத்தாக்கும் கிருமிகள்

2. BootSector மற்றும் Partition Table கிருமிகள்

இவற்றில் கோப்புகளைத்தாக்கும் கிருமிகள், நிரல்களையும் தகவல் கோப்புகளையும் தாக்கி அழிக்கின்றன.இன்னும் நமது கணினியில் பயன்படுத்தும் நெகிழ்வட்டு(floppy) மற்றும் வண்தட்டு(Hard disk) போன்றவட்டில் நாம் பதிந்துவைத்துள்ள கோப்புகளின் சரியான முகவரி, மற்றும் அந்த hard disk எத்தனையாகப்பிரிக்கப்பட்டுள்ளது அந்த ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு கொள்ளளவு போன்ற தகவல்கள் இந்த Boot Sector மற்றும் Partition table போன்றவற்றில் உள்ளன. இவைகளைக் கிருமி நிரல்கள் தாக்குவதால் நாம் அந்த Hard diskல் உள்ள மொத்த சேமிப்புகளையும் இழந்துவிடுவோம்.

தற்காலத்தில் பல புதிய வகைக்கிருமி நிரல்கள் பரவுகின்றன. அவை மேற்கூறிய வகையில் செயல்படுவதோடு, இணையத்தின் வாயிலாக Credit Card Numbersகள் மற்றும் கடவுசொற்கள் (Passwords) போன்றவற்றை கவர்ந்து செல்வதற்கும் எழுதப்படுகின்றன.

ஒருவகை கிருமி நிரல்களை நாம் ‘த்ரோசான் குதிரைகள் ‘ என்று கூறுகிறோம் இவை கிருமிநிரல்களை ஒவ்வொருகணினிக்கும் கொண்டு செல்லும் வேலையைச்செய்கின்றன இதில் எடுத்துச்செல்லப்படும் கிருமிநிரல்கள் அந்தந்த கணினிகளில் தங்கி அவர் அக்கணினியில் செய்யும் வேலைகளைக் கவனித்துவருகின்றன அவர் எப்போதாவது Credit card Numberகளைத்தரும்போது அவற்றைக் குறிப்பெடுத்துக்கொள்கின்றன சில சயம்களில் இணையவங்கியத்தில் பயன்படுத்தும் கடவுச்சொற்களையும் எடுத்து வைத்துக்கொள்கின்றன பின்னர் அவைகளத் தனது எஜமானனுக்கு(Owner of that virus) இணையத்தின் வாயிலாக அனுப்பி விடுகின்றன.

கிருமிநிரல்களை நமது கணினியில் நுலைந்து விடாமல் தடுப்பது எப்படி ?

சில முனெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். அவைகளாவன

1. பிறரிடமிருந்து வாங்கிப்பயன்படுத்தும் Floppy disk, CD போன்றவைகள் முறையாக சோதித்த பின்னரே உபயோகிக்கவேண்டும்.(முடிந்த அளவுக்கு அவைகளைத்தவிர்க்க வேண்டும்.)

2. வேண்டாத விளையாட்டு மென்கலன்களை(Software) இலவசமாகக் கிடைக்கிறதே என்று இணையத்தில் இருந்து இறக்கிக்கொளவதோ அல்லது நண்பர்களிடம் இருந்து வாங்கி உபயோகிப்பதோ கூடாது.

3. முடிந்த அளவுக்கு கணினியை அடிக்கடி கிருமிச்சோதிப்புக்கு உடப்டுத்தவேண்டும்.

4. மின் அஞ்சலில் வரும் இணைப்புகளை அனுப்பியவர் தமக்கு வேண்டியவரா இல்லாத பட்சத்தில் கவனமுடன் கையாள வேண்டும். இவைகள் பெரும்பாலும் கிருமி நிரல் களைத்தாங்கி வரப்பயன்படுத்தப்படுகின்றன.

மேலும் இத்தகைய கிருமிநிரல்களை அழிப்பதற்கு அல்லது தடை செய்வதற்கு என்று கிருமி அழிப்பான்கள் கிடைக்கின்றன. இந்த கிருமி அழிப்பான்களை நாம் நமது கணினியில் பதிந்து வைத்துக்கொண்டு அவற்றை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனாலும் இங்கு பல விசயங்களை நீங்கள் மனதில் கொள்ளவேண்டும். அவைகளாவன

எல்லா கிருமிநிரல்களையும் எல்லா கிருமிஅழிப்பான்களும்(Antivirus Programs) அழித்துவிடுவதில்லை காரனம் ஏற்கனவே வந்த ஒரு கிருமிநிரலுக்குத்தான் அதை அழிக்ககூடிய நிரல்களை எழுதமுடியும். இன்று புதிதாக வரும் கிருமிநிரல்களுக்கு நாளைதான் மருந்து கண்டுபிடிக்க முடியும். அதற்கு காரனம் ஒவ்வொரு கிருமி எழுத்தாளர்களும் புதுப்புதுவிதமான முறைகளைக்கடைபிடிப்பதால் தான். அந்தமுறைகளை நன்கு ஆராய்ந்து அந்த புதிய கிருமி எவ்வாறு செயல்படுகிறது என்பனை பகுத்தாய்ந்து தான் அதற்கு அழிப்பான்கள்(vaccines) எழுதப்படுகின்றன.

ஆதலால் நேற்றைய கிருமி அழிப்பான்கள் நாளய கிருமிகளை அழிக்கப்போவதில்லை எனவே அடிக்கடி உங்களது கிருமிஅழிப்பான் மென்கலன்களை புதுப்பித்துக்கொண்டிருக்க வேண்டும். இன்னுமொரு விசயம் இந்த கிருமி அழிப்பான் மென்கலன்களை எழுதுபவர்கள் பல கிருமிநிரல்களை புதிதுபுதிதாக உலவவிடுகிறார்கள். அதன்பின் அதற்காண அழிப்பானைதயார்செய்து விற்பனை செய்துவிடுகிறார்கள். அந்த சம்யத்தில் வேறு புதிய கிருமிகளை வெளியே அனுப்புகின்றனார்.

ஒரு கிருமியை எழுதியவருக்கு அது எவ்வாறு செயல்படும் என்பது தெரிந்துவிடுவதால் அதனை அழிக்க எழிதில் அழிப்பனை உருவாக்க முடியும். அதேசமயத்தில் ஒரு புதிய கிருமிநிரலை எடுத்துக்கொண்டு அது எவ்வாறெல்லாம் தாக்குகிறது, பரவுகிறது எனபதை நன்கு ஆய்ந்து அதனை அழிப்பதற்கு, தடுப்பதற்கும் நிரல்களை உருவாக்குவது கடினமான பணி.

 

 

  Thinnai 2000 August 20

திண்ணை

Series Navigation

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர

4. இணையத்தை உறுவாக்கியவர்கள் யார் ? எந்த நோக்கில் உறுவாக்கப்பட்டது ? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம் ? போன்றவை உங்களுக்குத் தெர