கடித இலக்கியம் – 50 – தொடர் முடிவு

This entry is part [part not set] of 32 in the series 20070322_Issue

வே.சபாநாயகம்


கடிதம் – 50
திருப்பத்தூர்.வ.ஆ.
1-3-65

பிரிய நண்பர் ஆதிராஜ் அவர்களுக்கு,

வணக்கம்.

ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவன்’ படம் அருமையாக வந்திருக்கிறது.

“இந்தப் படம் சேரிவாழ் மக்களைப் பற்றியது; அவர்களின் உணர்ச்சிகளைப் பற்றியது; அவர்களின் ஆத்மாவைப் பற்றியது. எனவே இதுவும் அவர்கள் வாழ்வைப் போலவே மெதுவானது; மந்தமானது; தேக்கமானது.” – என்கிற சிறு விளக்கத்தோடு படம் ஓடத் துவங்குகிறது.

சரியாக இரண்டு மணி நேரம் ஐந்து நிமிஷம் படம் ஓடுகிறது. 11145 அடி.

சில விமர்சனங்களைச் சுட்டிக் காட்டுகிறேன். படத்தின் சிறப்பை அவை விளக்கும்.

காமராஜ்:

“இந்த மாதிரிப் படங்களையெல்லாம் அரசாங்கமே விலை கொடுத்து வாங்கி, ஜனங்களுக்கு இலவசமாகக் காட்டி அவர்கள் ரசனையை மாத்தணும்.”

ஸாதூல் என்கிற உலகப் பிரசித்தி பெற்ற பிரெஞ்சு விமரிசகர்:

“மனித மனத்தில் பெரிய அளவுக்குச் செயல் விளைவுக¨ª உண்டாக்குகிற படங்களின் வகையைச் சேர்ந்தது அது.”

இல்லஸ்ரேட்டட் வீக்லி (7 – 2 -65) :

யதார்த்தம் என்பது – ஜெயகாந்தன் சத்யஜித்ரேயை வழிகாட்டியாகக் கொண்டிருந்த போதிலும் – ரேயை விட ஜெயகாந்தனிடம்தான் உண்மையில் உள்ளது. இதைப் போன்ற படங்கள் இந்தியாவிலேயே மிகக் குறைவு. ஜெயகாந்தன் நேர்மை
யானவர்; துணிவு மிக்கவர்; புரட்சிகரமானவர். விரைவில் இவர் ரேயைப் போல் இன்னொரு தனி நட்சத்திரம் ஆகிவிடுவார்”

அநேகமாக இவ்விஷயங்களை நீங்கள் பத்திரிகைகளில் பார்த்திருக்கலாம். மொத்தத்தில், படத்துக்கு ஜனாதிபதி பரிசு நிச்சயம் கிடைத்தே தீரவேண்டும்.

இன்னொரு மகிழ்ச்சிகரமான விஷயம். ஜெயகாந்தன் சமீபத்தில் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகி இருக்கிறார்.

விவேகாநந்தரின் ‘ஞானதீபம்’ படித்ததாக எழுதியிருந்தீர்கள். எந்தச் சமயத்தின ருக்கும் பொதுவாகப் பயன்படக்கூடிய சொத்துக்கள் ஹிந்துசமயத்தில் சில உள. அவைகளுள் சரஸ்வதி, கவிதை, சமஸ்கிருதம் போலவே விவேகாநந்தரும் ஒருவர்.

‘ஞானதீபம்’ இரண்டாவது பாகம் படியுங்கள். இந்தியாவின் வரலாறு, இந்தியா வளர்ந்தவிதம், இந்தியாவின் சமண பௌத்த சாக்த சமயங்களுக்கு, ஹிந்து சமயத்தோடு உள்ள உறவு – இவைகளையெல்லாம் பிரமிக்கத்தக்க வகையிலே ஆராய்ந்து
சொல்லியிருக்கிறார்.

விவேகாநந்தரைப் படிப்பதால் ஹிந்து சமயத்தினருக்குச் சமய ஞானமும் அது பற்றிய பலமுமே லாபமாகக் கிடைக்கிறது என்பது பலரது அறியா முடிவு. ஆனால், உண்மையில் விவேகாநந்தர் ஹிந்து சமயத்தினருக்கு மட்டும் பயன்படக் கூடியவரல்ல. வாழ்வுத் தத்துவங்களில் நம்பிக்கையுள்ள ஹிந்து சமயமும், அறிவுபூர்வமான – ஆஸ்திகத்திற்கு ஒருவகையில் நாஸ்திக ‘எதிர்விளைவு மருந்தை’ அளிக்க வந்த சமண சமயமும், மனிதன் இறுதியில் ஆசையை நிராகரிக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்த வேண்டி அவன் பருவங்களின் வேறு இயல்புகளுக்கு வழிவகுக்கத் தவறிய பௌத்த சமயமும் – எல்லாம் விவேகாநந்தரால் பயன்பட முடியும்.

இந்தியாவில் ஒர் ஆன்மீகவாதிக்குச் சமுதாயத்தில் உள்ள பொறுப்பும், சமுதாய வாதிக்கு ஆன்மீகத்தில் உள்ள பொறுப்புமே விவேகாநந்தர் அறிவுறுத்துபவை.

சமுதாயமும், ஆத்மாவும் எல்லா சமயங்களுக்கும் பொது அல்லவா?

கம்பராமாயணம் படித்து வருகிறீர்களா? கவிஞர்களுக்கு அது ஒரு தெய்வீக மருந்து. தேவர்கள் ஒரு காலத்தில் அமிர்தம் உண்டதை நான் சிறுவயதில் கேட்டு அதற்காகப் பொறாமைப் பட்டதுண்டு. ஆனால் கவிஞனுக்கு கம்பராமாயணத்திலி
ருக்கிற விருந்து தேவர்களுக்குக் கூட வேறெங்கும் இருக்காது. எனவே எப்பாடு பட்டாவது கம்பனை முதலிலிருந்து கடைசிவரை ஒருமுறை படித்துவிடுங்கள். பாரதி யின் ‘பாஞ்சாலி சபதத்தை’யும் அவ்வாறே சிபாரிசு செய்கிறேன்.

நீங்கள் ஆற்காட்டிலிருந்து கொண்டுவந்ததாக எழுதிய புஸ்தகங்களுள் ‘சித்தார்த்தன்’ அவ்வளவு நன்றாயிருக்காது. மற்றவை பயனுள்ளவையே! படித்து முடியுங்கள்.

என்னிடம் ஜவஹர்லால் நேருஜியின் ஆங்கிலப் பிரசங்கங்கள் முழுத் தொகுதியாக இருக்கிறது. மெள்ள மெள்ளப் படித்து வருகிறேன். மற்றபடி, வேறு புஸ்தகங்களெதுவும் சமீபத்தில் படிக்கவில்லை. Hindu Marriage Bill பார்லிமெண்டில் கொண்டு வரப்பட்டபொழுது நேருஜி ஆற்றியிருக்கிற உரை மிகப் பிரமாதமாயிருக்கிறது. ஒரு பெரும் தத்துவ ஞானியினுடைய உரை அது.

‘புதுமைப்பித்தனின் கட்டுரைகள்’ அங்கு லைப்ரரியில் இருந்தால் எடுத்துப் படியுங்கள்.

நமது நண்பர்களைப் பற்றி எழுதுங்கள். நண்பர்கள் பெருஞ்செல்வம் என்று எழுதினேன். அப்படி இருந்த போதிலும் யாரிடத்தும் என்னை நான் பூர்ணமாக வெளிப் படுத்திக் கொள்ளவில்லை. நானோ அல்லது நண்பர்களோ – யார் காரணம் என்று என்னால் சொல்ல முடியாது. எதுவோ அதற்குக் காரணம். நம் சிதம்பரம் அடிக்கடி கடிதம் போடுகிறது.

புதிய நண்பர்களுள் ஒருவரை, இன்னும் உங்களுக்குச் சரிவரத் தெரியப் படுத்தவில்லை என்று நினைக்கிறேன். சிதம்பரத்தின் ஹெட்மாஸ்டர் – தற்போது மங்கலம்பேட்டை(தெ.ஆ)யில் இருக்கிறார் – சபாநாயகம் என்பவரைப் பற்றிச் சொல்லி
இருக்கிறேனா?

நல்ல நண்பர். நமது ரகம். ஓவியம், புகைப்படம், சங்கீதம், எழுத்து, ரேகை என்று பல விஷயங்களில் – பரிச்சயமுள்ளவர். எழுத்து சம்பந்தமாக நம்மோடு பூர்ண ஒற்றுமையுள்ள அபிப்பிராயங்களைக் கொண்டவர். ‘சபா’ என்கிற பெயரில் கதைகள்எழுதியிருக்கிறார். எனக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறார். நானும் பதில் போடுகிறேன். சற்று அந்தரங்கமான நண்பராக விரைவில் அமைவார். சந்தர்ப்பம் நேரும்போது தங்களுக்கு நேரடியாக அறிமுகம் செய்விக்கிறேன்.

தங்களது அந்த நீண்ட கடிதத்தில் ஒரு அருமையான வரி இருந்தது – “வாழ்க்கை எவ்வளவோ மாறிவிட்டது” என்று.

வாழ்க்கை மாறித்தான் விட்டது. மிக மிக மாறிவிட்டது.

கடிதம் எழுதுங்கள்.

தங்கள்,
பி.ச.குப்புசாமி.

( இத்துடன் இக் கடிதஇலக்கியத் தொடர் முடிவுறுகிறது. – வே.சபாநாயகம் )

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்