கடித இலக்கியம் – 17

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

வே. சபாநாயகம்


கடிதம் – 17

நாகராஜம்பட்டி
12.2.77

அன்புள்ள சபா,

வணக்கம். நான் எழுதிய ஒன்றன் பின் ஒன்றான இரண்டு கடிதங்களும் கிடைத்திருக்கும். அவற்றைப் படித்து, நான் ஏதோ மிதமிஞ்சிய சந்தோஷத்தில் இருப்பதாகவோ, அல்லது தவிர்க்க முடியாத பெருந்துயரத்தில் இருப்பதாகவோ கருதிவிட வேண்டாம். இரண்டுமே மாயை என்கிற மனப்பக்குவமும் எனக்கு உண்டு. மரணம் வரைக்கும் வாழ்க்கைக்கு இந்த இரண்டில் ஏதோ ஒன்றை நாம் பூசி இயங்குகிறோம். அதுதான் பிரத்தியட்சமானது.

நில்லாத விளையாட்டின் மகிழ்ச்சியுடனும், நின்று நினைத்தால் எவ்வளவோ துயரமானதுமாக வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது. இதில் ஒன்றை மட்டும் ஊர்ஜிதம் செய்து கொள்ளும் ரஸாயனம் அவரவர் உள்ளத்திலேயே உண்டு. நீங்கள் என் கடிதங்களை எதற்கோ இவ்வளவு எதிர்பார்ப்பானேன்?

***** ***** *****

20-2-77

உங்களுக்கு என் கடிதங்கள் தடைப்படுமானால், உலகவாழ்வின் அலைச்சல்களில் நான் ஊடாடிக் கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம். அதனிடையிலும் ஒரு நேரம் கண்டு உங்களுக்கு எழுதுவதை நிறுத்தமாட்டேன் (இன்ஷா அல்லாஹ்!). ஒருவிதத்தில் உங்களுக்கு எழுதுவது எனக்கும் தேவையான ஒன்றாகத்தான் இருக்கிறது.

உங்களிடமிருந்து பதில் வரத் தாமதமானதுதான் எனக்கு இம்முறை எதிர்பாராததாக இருந்தது. என் ஸ்திதியிலேயே உங்களையும் வைத்துச் சமாதானம் அறிந்து கொண்டேன்.

இம்முறை உங்கள் கடிதம் – இன்னும் வேறு ஏதாவது கூட நீங்கள் எழுதியிருக்கலாம் – பெரும் பகுதியும் உத்தியோகம் பற்றியும் அதை விடுவது பற்றியும் இருந்தது. விட முடியாத, விடக்கூடாத நிலையில் இருக்கிறோம் என்பது உண்மைதான். அவசரப்பட்டு விடமாட்டேன். ஆனால் நமக்கென்று வரம்புகள் உண்டு. விடமுடியாவிட்டாலும், இதில் தொடர்ந்து நீடிப்பதற்காக நாம் தொந்தரவு பட்டுக் கொள்ளத்தான் வேண்டும். அதற்குத் தயாரில்லாமல், ஊமை போல் அடங்கி வாழ்ந்து கணவன் மீது மரியாதையற்ற – பயத்தை மாத்திரம் வைத்திருக்கும் கற்பில்லாத மனைவி போல் நாம் நடந்து கொள்ள முடியாது. நல்ல அதிகாரிகள் நம்மை நன்கு புரிந்து கொள்வார்கள். ஓர் அதிகாரிக்கு, அவர் இதுவரை சந்தித்திருக்கும் எல்லா செகண்டரி கிரேடு ஆசிரியர்களையும் போலவே எதிர் பார்க்க என்ன உரிமை? அவர் அப்படி எதிர்பார்ப்பதும் ஒரு நியாயம் என்றால், அப்படி நான் இல்லாமலிருப்பதும் எவ்வளவு பெரியதோர் நியாயம்?

– கொஞ்சம் பாதிப்புகளுக்கு உட்படலாம். ஆனால், சில நேரங்களில் உடம்பில் ஒரு பாகம் லேசாக வலிக்கும்போது, அந்த வலி ஒரு சுகம் போலவும் துணை போலவும் கூடத் தோன்றுவதுண்டு. அவ்விதமானதாக அந்தப் பாதிப்புகளை எதிர்பார்க்கத் தயாராகி விட்டேன்.

***** ***** *****

24-2-77

வாழ்வின் விசித்திரங்களை – அது அதன் இயல்புமாம் – எவ்வெவ்வாறோ விளக்கிச் சொல்லலாம். உயர்ந்த மகிழ்ச்சிகளும் ஆழ்ந்த துயரங்களும் உண்மையில் தம்முள் என்ன கலப்புகளைக் கொண்டிருக்கின்றன என்று எப்படியும் விவரிக்கலாம். மரணத்திற்கு என்ன சொல்வது? அது பெரும் மகான்கள் தொட்டுப் பரிசீலித்த விஷயம். அதன் விஷயத்தில் முடிவு எடுப்பதில் மட்டும் நான் இப்போது எல்லாம் ‘அம்பேல்’ வைத்து விட்டிருக்கிறேன். இதைத் தவிர என் கணக்கீடுகள்(calculations) எல்லாம் என்னளவில் ஊர்ஜிதமாக உறுதியானவை. விடை தப்பு என்றால் மட்டும் – தப்பான விடை என்று மட்டும் எப்படித் தெரிந்துகொள்வது? – பின்னால் அது ஒப்புக் கொள்ளப்பட்டு உண்மையான வேறு வழிகளில் நீளும். ஆனால் உண்மையும் பல வழிகளில் வந்து சேர்கிற கேந்திரம் தானே? நாம் இதுவரை பெற்ற ஞானத்துடன் இப்போது கொள்கிற உணர்ச்சிகளுடனும் மட்டும் தொடர்ந்து வாழவேண்டி இருக்கிறோம்.

இதெல்லாம் எதைகுறித்துத் தங்களுக்குப் பதில்களாக எழுதப்படுகின்றன என்று உண்மையில் பலவற்றை நான் குறிப்பிட முடியும். இது குடும்பக் கட்டுப்பாடு விஷயம் பற்றியோ, அல்லது அதற்கும் சேர்த்து அமையட்டும் என்றோ எழுதப் பட்டதன்று. நான்கு நாட்கள் கழித்து இன்னொரு மனநிலையில், முற்றிலும் புதியதோர் விஷயத்தை உள்மனம் சதா முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போது எழுதுகிறேன்.

மனநிலைகளும் ஆழங்களும் என்ன மந்திர ஜாலம் பண்ணுகின்றன! ஒரு காலையின் களிப்பு மாலையில் மாறுகிறது. மற்றொரு மாலையின் துயரம் காலையில் அண்ட முடியாமல் தூர ஒதுங்கிக் கொள்கிறது.

நனவினால் நல்காரை நோவர் கனவினால் காணாதவர் என்று, திருக்குறளை எத்தனையோ உடையணிவித்துப் பார்த்து உணரலாம். இடையில் ‘காதலர்க் காணாதவர்’ என்று வரும். காதலர் என்பது ஒரு நோக்கத்தின் உருவகம் என்று நான் இங்கு கொள்கிறேன். அதாவது லக்ஷ்யத்தின் – நீண்ட லக்ஷ்யத்தின் அல்லது அந்த க்ஷணத்தின் லக்ஷ்யத்தின் உருவகம். அதைக் கனவினால் காணாதவர் நவினால் நல்காரை நோவர். நாம் நோவதுண்டோ? என் லக்ஷ்யம் யதார்த்தத்தில் என்னை வாழவைக்கா விட்டாலும் அதை நான் நோவேனோ?

– பி.ச.குப்புசாமி.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்