கடித இலக்கியம் – கடிதம் – 29

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

வே.சபாநாயகம்


கடிதம் – 29
நாகராஜம்பட்டி
10-11-81

அன்புமிக்க சபா அவர்களுக்கு,

வணக்கம்.

இன்று மாலை சைக்கிளில் புல் கட்டுடன் பள்ளியிலிருந்து திரும்பியதும், வைஷ்ணவி தங்களின் ‘ஹெலன் கெல்லர்’ நூலுக்குத் தங்கப் பதக்கம் பரிசு கிடைத்திருக்கும் இனிய செய்தியைச் சொன்னாள்.

தங்களின் கடிதத்தைப் படித்ததும், காலத்தின் மீது நாமும் ஏதோ ஆதிக்கம் கொண்டிருப்பது போன்ற கர்வ உணர்ச்சி உண்டாயிற்று. மிகவும் பெருமிதம் கொண் டேன்.

மஹா உன்னதமான நமது வாழ்க்கைக்குச் சின்னஞ் சிறிய அங்கீகார அடையாளங்கள் இவை என்ற போதிலும், இந்தப் பரிசு தாங்கள் பெற்றதில் நான் மஹா இறும்பூதெய்துகிறேன்.

எங்கும் நமது தோழர்களின் சூரத்தனம் கண்டு பொங்கும் உற்சாகம் இது. களங்களில் நன்கு போராடும் சகபாடிகளைக் காணும் சந்தோஷம் இது.

குடும்ப, சமூக, இலக்கியக் கடமைகளைத் தாங்கள் சரியாகவே ஆற்றியிருக்கிறீர்கள் என்பதற்குச் சாட்சியமும் இது.

தங்கப் பதக்கம் பெறத் தாங்கள் காரைக்குடி புறப்படுங்கால் நான் உங்களுக்குப் பூச்செண்டு கொடுத்து வழியனுப்புவது போலவும், சன்மானம் அளிக்கும் அந்தச் சபையில் தங்களுக்குச் சூட்டப்படுகிற மலர்மாலைகள் என் கரங்களாலேயே
சூட்டப்படுகின்றன என்றும் நிணையுங்கள்.

கம்பனை நினைத்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றையும் பாரதியைப் போல பாருங்கள்.

கடிதத்தைக் கண்ட அடுத்த க்ஷணமே நானும் காரைக்குடி வந்து அந்தக் காட்சியைக்காண அவாவினேன். அப்படியொரு பயணம் மேற்கொள்ள இப்போது அவகாசமில்லை. ஆயினும் காற்றைக் குதிரைகொண்டேறித் திரியுமோர் உள்ளம் பெற்றவர் நாம். ஆதலால், வருக வருகவென்று அந்தச் சபையின் வாயிலில் தங்களை வரவேற்பவனும் நானே.

நண்பர்கள் அனைவருக்கும் இந்த மகிழ்ச்சிகரமான சேதியை அறிவிப்பேன்.பேச்சுக்கு இது ஒரு பாயாசம் அல்லவா?

தங்களை வேலாயுதம் பிள்ளை போல் வாழ்த்துகிறேன். வயதுபற்றியல்ல, ஆசைபற்றி, என் ஆசீர்வாதங்களையும் சொரிகிறேன்.

தங்கள் – பி.ச.குப்புசாமி.

(கடந்த வாரம் கடித இலக்கியம் – கடிதம் – 29 விடுபட்டுவிட்டது. தவறுக்கு வருந்துகிறோம்)

Series Navigation

author

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

Similar Posts