கடவுளைப் பற்றிய கருத்தாடல்களும் கதைசொல்லல்களும்

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

தேவமைந்தன்
தொன்றுதொட்டே மனிதனுக்கு கடவுளைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனை இருந்து வந்திருக்கிறது. மனம் போன போக்கெல்லாம் அவரைத் தம் கதைசொல்லல்களாலும் கருத்தாடல்களாலும் கொச்சைப் படுத்தியவர்களும் இருந்து வந்திருக்கின்றனர். அதற்குச் சாதகமாக அவர்கள் ஆத்திகப் போர்வையை நன்றாகத் தம் மேல் இழுத்துப் போர்த்துக் கொண்டனர். தங்களின் உத்திகள் நிறைந்த கதைசொல்லல்களால் மக்களைக் கடவுளிடமிருந்து பிரித்து, தங்கள் சுயநலங்களுக்கு இரையாக்கிக் கொண்டனர்.

அப்படிப்பட்ட கதையாடல்களுக்கு மாற்று வடிவமான கதையொன்றை முன்வைத்தார் சுவாமி சின்மயானந்தா. அந்தக் கதை இது:

ஆண்டவர் ஓர் ஊருக்கு வரவுள்ளதாக அசரீரி ஒன்று ஒலித்தது. தாங்கள் செய்துகொண்டிருந்த பணிகளையெல்லாம் அப்படி அப்படியே விட்டு விட்டு ஊர் எல்லைக்கு ஓடிப் போனார்கள் ஊரார் எல்லோரும். தம் ஊர் தேடி ஆண்டவர் சாலை வழியே வருவார் என்று தீர்மானித்து, ஊருக்கு வரும் முதன்மைச் சாலை வளைவில் போய் நின்று கொண்டார்கள்.

ஒரே ஒரு சிறுமி மட்டும் எதைப்பற்றியும் கவலைப் படாமல் தனக்கு இடப்பட்டிருந்த வீட்டு வேலைகளைச் செய்து முடிப்பதிலேயே மும்முரமாக இருந்தாள். அவள் வீட்டுவேலை செய்து தன் ஏழ்மையான குடும்பத்துக்கு உதவுபவள்.

சற்று நேரத்தில் ‘மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்’றாக, ‘ஊடுருவும் செங்கதிரோன் ஒளிச்சுட’ராக, முதியவர் ஒருவர் அவ்வூருக்குள் தோன்றினார். ஆளரவமற்று வெறிச்சோடிக் கிடக்கின்ற வீதிகளையும் வீடுகளையும் நோக்கி மெல்லப் புன்னகை செய்தார்.

ஆனால், ஒரு வீட்டுக்குள் இருந்து மட்டும் பாத்திரம் உருட்டப் படும் ஒலி வரவே, அவ்வீட்டுக்குள் மெல்ல நுழைந்தார்.

தானுண்டு தன் வேலையுண்டு என்ற சித்தத்துடன் பாத்திரம் துலக்கிக் கொண்டிருந்த வேலைக்காரச் சிறுமியைக் கண்டார். தன் அருகே வருமாறு அன்புடன் அழைத்தார். அவளுக்கு இரு வரங்களாக, அளவான ஆசையையும் அளவற்ற ஆசிகளையும் நல்கினார். அப்புறம் அவளுக்குச் சொன்னார்:

“ஊரார் திரும்பியதும், ‘நான் என் கடமையை விடாது தொடர்ந்து செய்து கொண்டிருந்ததால் கடவுளைக் கண்டேன்’ என்று தவறாமல் சொல்லிவிடு!”

அவளுக்கு அவ்வாறு சொன்னதும் மறைந்து போனார் ஆண்டவர்.

சுவாமி சின்மயானந்தா கதைக்கு மேலும் வித்தியாசமாகச் சிந்தித்து வைக்கப்பட்டிருந்த கருத்தாடல் ஒன்றால், ‘ஓ கடவுளே!’ [Oh! God] என்ற ஆங்கிலப் படம் ஒன்று சென்ற நூற்றாண்டின் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உருவாக்கப்பட்டது. திரைக்கு வந்து வெற்றியும் பெற்றது. அதன் கதையமைப்பின் சாரம் இது:

கடவுள், தான் படைத்த உலகுக்குள் வந்து தற்போதைய நிலவரங்களை நன்கறிந்து கொள்ள விரும்புகிறார். அதற்குத் துணையாக உலகில் ஒருவர் வேண்டுமே. நன்றாக யோசித்து, காரண காரியங்கள் பலவற்றையும் சிறப்பாக ஆராய்ந்து பார்த்து, முடிவாக, சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணி புரியும் நாத்திகனான ஓர் இளைஞனைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார். சந்திக்கிறார். தன் விருப்பத்தை எடுத்துரைக்கிறார். முதலில் அவரிடம் கேள்விகள் பல தொடுக்கும் அந்த இளைஞன் கடைசியில் அவருடன் ஒத்துழைக்கச் சம்மதிக்கிறான். விளைவாக அவன் தன் வேலை தொடர்பாகவும் கூட சோதனைகளைத் தாங்க வேண்டி வருகிறது. இருந்தாலும் சொன்ன சொல் தவறாமல் கடவுளை இந்த நிகழ் உலகை நன்கு அறியச் செய்கிறான். தான் படைத்த உலகில் கடவுளும் பல சோதனைகளுக்கு ஆளாகிறார். அவற்றுள் கடுமையானது கடவுள் பிரச்சாரகர் ஒருவரால் கடவுளுக்கு ஏற்படும் சோதனைதான். அதன் விளைவாக நீதி மன்றம் ஏறவும் வேண்டி வருகிறது. தன்னை நிரூபித்துக் கொண்டபின், அந்த இளைஞனுக்கு மிகவும் நன்றி தெரிவித்து விட்டு மறைகிறார்.

இவ்வாறு, கடவுளைப் பற்றிய கருத்தாடல்களே கடவுளைக் குறித்த தெளிவான கதைசொல்லல்களுக்கு வழிவகுத்தன.

கடவுளைக் குறித்த வள்ளலாரின் கருத்தாடல்கள் குறிப்பிடத் தக்கவை. சுற்றி வளைக்காமல், நேரடியாகவே தன் கருத்தாடல்களை முன்வைத்தவர் வள்ளலார். சான்றுக்கு ஒன்று:

“சாருலக வாதனையைத் தவிர்த்தவர்; உள்ளகத்தே சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தம சற்குருவை
நேருறவே எவராலும் கண்டுகொளற்கு அரிதாம்”

சார்ந்து நாம் வாழ வேண்டியுள்ள உலகம் நமக்கு நாள்தோறும் தர முன்வரும் வாதனைகளைத் தவிர்த்தவரும் அதன் பொருட்டே நம் உள்ளத்திலே அமர்ந்தருள்பவருமான உத்தம சற்குருவை நேருக்கு நேராக நம் கண் ஆகிய பொறியின் புலனால் கண்டு அறிதல் என்பது எவராலும் முடியாததே என்பது வள்ளலாரின் தெளிவான கருத்தாடல். திருமூலர், ‘தெளிவு குருவின் திருமேனி காண்டல்’ என்றதற்கு மனித குரு தொடர்பான பொருள் சொல்லப் படுவதை விடுத்து, ‘குருவின் மெய்த்திருமேனியாகிய, எங்கும் எதிலும் எல்லாவிடத்தும் நீக்கமற நிறைந்திருக்கும் வெளியாகிய ஆண்டவரின் மெய்ம்மையை உணர்தல்” என்ற வள்ளலாரின் கருத்தாடல்வழி அமையும் பொருளை ஏற்பதே தெளிவு.

” நீ இறைவனைத் தேடுகிறாயா? அப்படியானால் அவனை மனிதனிடம் தேடு!” என்ற இராமகிருஷ்ணரின் கருத்தாடலும் கவனத்தில் கொள்ளத் தக்கது.

****
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்