ஒரு கடிதம்: தலைக்கேறும் மதப் பித்தால் தடுமாறல் சகஜம்

This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

மலர்மன்னன்



அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

மதப் பித்து தலைக்கு ஏறிவிடுமானால் சிறிது விவரம் அறிந்தவர்கள் கூட எப்படியெல்லாம் தடுமாற நேரிடுகிறது என்பதற்கு நாகூர் ரூமியானவர் வெங்கட் சாமிநாதன் பிறைநதிபுரத்தான் என்பவர் தொடர்பாக எழுதிய கட்டுரைக்குப் பதில் எழுதியமை ஒரு சான்று (பார்க்க: திண்ணை ஜூன் 07, 2007). நாகூர் ரூமி முகமதியம் மீது தனக்குள்ள புனித உணர்வை நிரூபணம் செய்வதற்காக வேண்டி ருஷ்டி விஷயத்தில் பிற்பாடு வரம்பு மீறி எழுத வேண்டியதாயிற்று என்று வெங்கட் சாமிநாதன் சொன்னால் அது ரூமிக்கு முகமதியத்தின் மீது தனக்குள்ள புனிதமாகத் தோன்றாமல் தன் மதத்திற்குரிய புனிதமாகத் தோன்றுவானேன்? முகமதியம் தனது புனிதத்தை நிரூபித்துக் கொண்டாயிற்று எனத் தேவையின்றித் தனது மதத்திற்கு ஒரு நற்சான்றை அவர் அளித்துக் கொள்வானேன்?

காரணம் எதுவாயினும் ருஷ்டியின் நூலுக்குத் தடை விதிப்பது சரியல்ல என்று முதலில் சொன்ன ரூமி பிறகு பிராயச்சித்தம் மாதிரி நூலாசிரியனையே அடித்துக் கொல்ல வேண்டும் என்று சொல்கிற அளவுக்குப் போவானேன்? எங்கே தன் மீதும் ஏதாவது பத்வா வந்துவிடுமோ என்கிற அச்சமா? பொதுவாகக் கண்ணை மூடிக்கொண்டு மரண தண்டனை விதிப்பதுதான் அவ்விடத்து சம்பிரதாயம் ஆதலால் அதற்குப் பொருந்துமாறு ருஷ்டியை அடித்துக் கொல்ல விழைவு தெரிவித்துத் தமது மேலிடத்தைத் திருப்தி செய்யப் பார்த்திருப்பாரோ ஒருவேளை?

நாகூர் ரூமியின் தொடக்க காலத்தில் அவரது எழுத்தில் ஒரு சிறு பொறி இருப்பதைக் கண்டு அதனை ஊதிப் பெருக்க முனைந்தவர்களுள் நானும் ஒருவன். கணையாழியில் அவரது படைப்புகள் இடம்பெறச் செய்வதில் எனக்கும் ஒரு பங்கு உண்டு. மேலும், கால் இதழிலும் அவரது கவிதைகள் சிலவற்றை வெளியிட்ட நினைவு உள்ளது. எதற்காக இதை நினைவு படுத்துகிறேன் என்றால் முகமதியரைப் பொருத்தவரை மதம் எப்படியெல்லாம் தனிமனித சிந்தனைக்கு விலங்கு போட்டுவிடுகிறது என்பதைப் புலப்படுத்துவதற்காகத்தான். ரூமியின் தனி மனித சிந்தனை தானும் ஒரு படைப்பாளி என்கிற பிரக்ஞையால் தொடக்கத்தில் மிகவும் இயல்பாக ஒரு நியாயத்தை எடுத்துச் சொன்னது. உடனே அவர் சார்ந்துள்ள மதம் அவரது தனி நபர் சிந்தனா சுதந்திரத்தில் தலையிட்டு அவரை வழிக்குக் கொண்டுவந்துவிட்டிருக்கிறது! முகமதிய மதத்தில் இருந்துகொண்டு சிந்தனா சுதந்திரத்துடன் தனது கருத்தை வெளியிட ஒருவருக்கு அசாத்தியமான துணிவு தேவைப்படுகிறது. எல்லாரிடமும் அதை எதிர்பார்க்க இயலாதுதான். நாகூர் ரூமி நம் அனுதாபத்திற்குரியவர்.

படைப்பிலக்கியத்தில் சாதனைகள் செய்வதற்கான பல சாத்தியக்கூறுகள் நாகூர் ரூமியிடம் இன்னமும் வற்றிவிடவில்லை. மார்க்க அறிஞர் என்கிற புஜ கீர்த்தி லௌகீக ரீதியாக ஒரு வேளை அவருக்கு நிரம்பப் பயன்களைத் தரக்கூடும். ஆனால் அதில் சபலப்பட்டுவிடாமல் படைப்பாற்றலில் அவர் கவனம் செலுத்துவாரேயானால் அது அவருக்கு லௌகீகப் பயன் தராவிடினும் தற்காலத் தமிழ் இலக்கியத்தில்ஒரு நிரந்தரமான அந்தஸ்தைத் தரக் கூடும். தஞ்சை மாவட்டத் தமிழ் பேசும் முகமதிய சமூகத்தின் பிரத்தியேகச் சாயல்களை மிக விரிவான சீலையில் வரைந்து தரக் கூடிய தூரிகை நாகூர் ரூமியிடம் உள்ளது. அது காய்ந்துபோய் அவர் வீட்டின் எங்கோ ஒரு மூலையில் கிடக்கிறது. அதை வேண்டாத குப்பை என்று வீட்டில் இருக்கிறவர்கள் வீசி எறிந்துவிடுமுன் நாகூர் ரூமி தேடி எடுத்துக் கொள்வது நல்லது. ரூமியின் தொடக்க கால ஊக்குவிப்பாளர்களில் ஒருவன் என்கிற முறையில் இதைச் சொல்ல எனக்கு அனுமதி உண்டு என நம்புகிறேன்.

கொஞ்ச காலத்திற்கு முன்னால் ம.வே. சிவக்குமார் என்கிற எழுத்தாளர் தனக்கு உரிய ஆதரவு கிட்டாத ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள மாட்டாமல் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக அறிவித்தது நினைவிருக்கும். அவரை முதல் முதலாகக் கணையாழியில் பிரசுரித்துப் பலரின் கவனத்திற்குக் கொண்டு வந்தது நான்தான். இதற்காக அவர் என் வீடு தேடி வந்து தன்னை ஒரு சிஷ்யப் பிள்ளை மாதிரியெல்லாம் காட்டிக் கொண்டார். ஆனால் பிறகு தன்னை ஊக்குவித்தவர்கள் என்று அவர் போட்ட பட்டியலில் எனது பெயர் இல்லை. காரணம் நான் பிரபலஸ்தன் இல்லை. இதையும் எதற்காகச் சொல்கிறேன் என்றால் ஒருவேளை நாகூர் ரூமியும் இதனைப் படித்த பிறகு நீயாவது என்னை ஊக்குவித்ததாவது என்று எள்ளி நகையாடக்கூடும்.

வளரும் வேளையில் வலம் வந்து வணங்குவதும் வளர்ந்தபின் வம்பு செய்வதும் சிலருக்குச் சுபாவமாகவே அமைந்துவிட்ட சாமர்த்தியம்.

அன்புடன்,
மலர்மன்ன்ன

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்