ஏன் தற்கொலை?

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

செழியன்


ரொறன்டோ பாதாள இரயில் நிலையத்தினுள் மிக வேகமாக அந்த ரயில் புகுந்த அந்தக் கணத்தில் யாரும் எதிர்பாராத அந்தச் சம்பவம் நடந்தது. அந்த அழகான இளம் பெண் திடீரென ரயிலின் முன்பாகக் குதித்தாள். என்ன? ஏன்? ஏன்றெல்லாம் நினைப்பதற்கும் முன்பாக எல்லாமே நடந்து முடிந்திருந்தது.

அந்த ரயில் ஏறிவிடவேண்டும் என்று காத்திருந்த பயணிகள் திகிலடைந்தனர். ரயியை செலுத்தி வந்த வண்டி ஓட்டுனர் திக்குப் பிரமைபிடித்துப் போயிருந்தார்.

சாருலதா, வயது 33- தண்டவாளங்களுக்கிடையில் இருந்து பிணமாக மீண்டாள்.

என்ன நடந்தது சாருலதாவுக்கு?

ஏறத்தாழ இரண்டு வருடத்திற்கு முன்பாக இன்னொரு சம்பவம்.

சாருலதா இருபது நித்திரை குளுசைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முன்பு தன் 5 வயது பெண் குழந்தையையும், 3 வயது ஆண் குழந்தையையும் கொன்று தன்னுடைய ர்ழவெய காரின் ட்ரங்குக்குள் வைத்திருந்தாள்.

இறந்து போன தன் கணவனின் படத்திற்கு முன்பாக சாருலதா எழுதி வைத்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

“என்னுடைய குழந்தைகளை காப்பாற்ற யாரும் இல்லை.”

சாருலதா கடிதம் மட்டும் எழுதிவைக்கவில்லை. . Hospital for Sick Children மற்றும் சில சமூக ஸ்தாபனங்களுக்கும் நிதி உதவி வழங்கி காசோலை எழுதி வைத்திருந்தாள். அவளுடையதும், குழந்தைகளினதும் மரணவீட்டுச் செலவுக்கு என்று ஒரு கவரில் பணமும் வைக்கப்பட்டிருந்தது.

தற்கொலைக்கு முன்பு தன் கணவனின் படத்திற்கு முன் சாருலதா இரண்டு துண்டு சீட்டுகள் எழுதிவைத்தாள். “நீ என்னிடம் வந்து விடு”, “நீ என்னிடம் வரவேண்டாம்”. என்று அந்த துண்டுகளில் எழுதப்பட்டிருந்தது. தான் தற்கொலை செய்வதா? விடுவதா? என்று கணவனின் அனுமதியைக் கேட்டே சாருலதா இவ்வாறு செய்தாள்.

பின் கண்களை மூடி அதில் ஒரு சீட்டை எடுத்த போது “ நீ என்னிடம் வந்துவிடு.” என்று இருந்தது. இறந்து போன தன் அன்பான கணவனிடம் இருந்து வந்த செய்தியாக இதை சாருலதா நம்பினாள்.

பல மாதங்களுக்கு முன் இறந்த தன் கணவனின் மரணவீட்டில் அணிந்த அதே உடைகளை அணிந்து கொண்டாள். தன் குழந்தைகளுக்கும் அது போல அதே உடைகளை அணிவித்தாள்.

இயற்கை அவளை கொடூரமாக தவிக்க விட்டு வேடிக்கைப்பார்த்தது. மயங்கிய நிலையில் காருக்குள் இருந்து பொலிசாரால் இழுத்தெடுக்கப்பட்ட சாருலதா காப்பாற்றப்பட்டாள். ஆனால் அவளது சின்னம் சிறு குழந்தைகள் இரண்டும் இறந்து போய்விட்டன.

கொலைக்குற்றம் சாட்டப்பட்டு நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்ட சாருவை நீதி மன்றம் மிக்க கருணையுடன் பார்த்தது.

காதல் கணவனின் திடீர் மரணத்தினால் ஏற்பட்ட பாதிப்பினால் சாருலதா depressed ஆக இருப்பதாகவும், அதனாலேயே குழந்தைகளையும் கொன்று தான் தற்கொலை செய்து கொள்ள முயன்றார் என்று நீதி மன்றத்திற்கு பொலிசார் கூறினார்கள்.

இரண்டு வருட சிறைத் தண்டனை கிடைத்தது. அதன் பிறகு என்ன நடந்தது?

அதன் பிறகு …. அந்த சாருலதா தான் இப்போ இந்த பாதாள ரயிலின் முன்பாகக் குதித்து தற்கொலை செய்து கொண்.டவள்.

கனடாவில் வருடாந்தம் சராசரி 3,863 பேர் தற்கொலை புரிகின்றனர். ஒரு இலட்சம் கனேடியரில் பதின் மூன்று பேர் இவ்வாறு தற்கொலை உணர்வுக்குள் தள்ளப்பட்டு தற்கொலை செய்துகொள்கின்றார்கள்.

அமெரிக்காவில் தற்கொலை செயபவர்களின் எண்ணிக்கை இன்னம் அதிகமாகவே இருக்கின்றது. வருடாந்தம் 30,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். தினமும் 83 தற்கொலைகள் நடைபெறுகின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இங்கு மரணத்தை விளைவிக்கும் காரணங்களில் எட்டாவது இடத்தில் இருப்பது தற்கொலையே.

ஏன் தற்கொலை?

தாம் மிக அதிகமாக நேசித்தவரின் திடீர் மரணம், பொருளாதார கஸ்டங்கள், குற்ற உணர்வு, சமூகத்தில் இருந்து புறக்கணிக்கப்படுதல், தாங்க முடியாத நோய்கள், மன நிலை பாதிக்கப்படுவது, அற்ககோல் மற்றும் போதைப் பொருள்களுக்கு அடிமையாவது என்று பல காரணங்களினாலும் தற்கொலை நடைபெறுகின்ற போதும் தொண்ணூறு வீதமான தற்கொலைக்குக் காரணம் மனநிலையில் ஏற்படுகின்ற பாதிப்புகளே என்று கண்டறியப்பட்டுள்ளது.

depression, schizophrenia, psychotic என்பதான மனநோய்கள் ஏற்படுபவர்களுக்கு தற்கொலை செய்து கொள்கின்ற எண்ணம் ஏற்படுகின்றது.

வாய்ச்சொல்லில் வீரர்

தற்கொலை செய்து கொள்ளப்போகின்றேன் என்று அடிக்கடி மிரட்டிக் கொண்டிருக்கும் மிரட்டலர்கள் நிறையப் பேரும் இருக்கின்றார்கள். இவர்களை நீங்களும் சந்தித்திருப்பீர்கள். எங்கள் ஊரிலும் சின்னவன் என்று ஒருவர் இருந்தார்.

“ என்னை நீ காதலிக்காவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்ளுவேன்” என்று தனது சொந்த மச்சாளை பார்க்கின்ற போதெல்லாம் மிரட்டுவது தான் சின்னவனின் வேலை. கையில் ஒரு மருந்து போத்தலும் வைத்திருப்பார்.

“ சீ போடா” என்ற அலட்சியமான பதில் தான் மச்சாளிடம் இருந்து வரும். “ செத்துக்கித்துப் போகப் போறான்டி” என்று தோழிகள் சொல்ல, “ மருந்துப் போத்தலில் தண்ணீர் விட்டு வைத்திருப்பான்” என்பாள் மச்சாள்.

ஒரு நாள் மச்சாள் திருமணமாகிப் போய்விட்டாள். அதற்குப் பிறகு எதிர் வீட்டுப் பெண்ணிடம் இதே தற்கொலை புராணத்தை சின்னவன் ஒப்புவித்துக் கொண்டிருந்தான். அவளும் திருமணமாகிப் போய்விட்டாள். சின்னவன் எப்போ தற்கொலை செய்து கொள்ளப் போகின்றான் என்று நானும் காத்திருந்தேன். கடைசிவரை சின்னவன் தற்கொலை செய்து கொள்ளவே இல்லை.

இப்படி மிரட்டிக் காரியம் சாதிக்கப் பார்க்கின்றவர்களுக்கும் Historic Personality Disorder என்ற குணாதிசயம் இருக்கும். சில நேரம் இவர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பார்கள். ஆனால் எப்பபொழுதும் தன்னைக் காப்பாற்றிவிடக் கூடிய ஏற்பாடுகளை செய்துவைப்பார்கள். குறைந்த அளவு நித்திரை குளுசை சாப்பிடுவார்கள். சிறிய அளவு மருந்தை குடித்து விட்டு தான் மருந்து குடித்து விட்டேன் என்று உடனேயே கூறுவார்கள். தற்கொலை செய்யப் போகின்றேன் என்று பறைசாற்றி விட்டு அறைக்குள் சென்று கதவை ப+ட்டுவார்கள் (எப்படியும் உடைத்து திறந்து தடுப்பார்கள் என்ற நம்பிக்கை).

ஆனால் உண்மையில் தற்கொலைக்குத் துணிபவர்கள் எவருக்கும் தெரியாமல் திட்டம் தீட்டுவார்கள். தன்னை யாராலும் காப்பாற்ற முடியாத வழிகளையும், நேரத்தையும் இவர்கள் தெரிந்தெடுப்பார்கள்.

மனநோய்

மனநோய் என்பது ஒரு குறிப்பிட்ட நோய் அல்ல. இதற்குள் பல வகையான நோய்கள் உள்ளடங்குகின்றன. இந்த மனநோய்க்கு வயது, பால், பொருளாதாரம், இனம் என்று எந்த வேறுபாடும் கிடையாது. எவரையும் எந்த நேரமும் இது தாக்கக் கூடும். சிந்தனையிலும், நடத்தையிலும் பெரும் குழப்பத்தை இது ஏற்படுத்தும். இதன் காரணமாக சாதாரண வாழ்க்கையில் பெரும் குழப்பங்கள் உருவாகும்.

மனநோய்க்கான காரணங்கள் இதுவரையில் சரியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் மூளையில் ஏற்படும் இரசாயன சமனின்மையே இந்த மனநோய்க்கான காரணமாக இருக்கலாம் என்று பெரும்பாலான ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். வாழ்க்கையில் திடீரென்று ஏற்படுகின்ற அழுத்தங்கள், மரபணுக்கள் என்பன இந்த இரசாயன சமநிலையில் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கலாம்.

மனநோய் அறிகுறிகள்

காரண காரியம் எதுவும் இல்லாமல் அழுவதும், சிரிப்பதும், தனக்குத் தானே பேசிக்கொள்ளுதல், தொடர்ச்சியாகப் பேசிக் கொண்டிருப்பது, தடால் தடால் என்று ஒரு விடயத்தை விட்டு இன்னொரு விடயத்திற்குத் தாவுவது, அதீத பயம், கவலை, என்ன வென்று விபரித்து சொல்ல முடியாத எண்ணங்கள், தற்கொலை செய்வதற்கான எண்ணம் ஏற்படுதல், அன்றாட நடவடிக்கைகளில் செயல்பட முடியாத நிலை, உணவு உண்ணுதலிலும், நித்திரை கொள்வதிலும் சிக்கல் என்பன மனநோய்க்கான சில அறிகுறிகளாகும்.

Depression

மூளையில் நரம்புகளுக்கிடையேயான செய்திகளை பரிமாற்றுவதற்கு காரணமான இரசாயனப் பதார்த்தத்தின் சமநிலை சீர்குலைகின்றது. இரசாயனப் பதார்த்தத்தின் அளவு குறைய செய்திகளின் செறிவு குறைகின்றது. இதனால் நரம்பு மண்டலம் ப+ரணமாக செயல்பட முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றது.

இந்;நிலையில் பாதிக்கப்பட்டவர் சோர்ந்து போய் இருப்பார். பெரும் கவலை இவருக்கு இருக்கும். இது ஒரு நாள் இரண்டு நாளில் மாறக்கூடிய கவலை அல்ல. மருத்துவ உதவி பெற வேண்டிய மனநோய்.

பொழுது போக்கு, பாலியல், வேலை எதிலும் நாட்டம் இருக்காது. எந்த விசயமும் இவர்களுக்கு சந்தோசத்தை தராது. முன்பு மகிழ்ச்சியை தந்த காட்சிகள், பொருட்கள், பாடல்கள் எல்லாம் அதன் ஜீவனை இழந்து விட்டதாகத் தோன்றும். எதற்கும் பிரயோசனம் இல்லாத ஆள் தான் என்ற நினைப்பு அடிக்கடி வரும். தற்கொலை எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கும். பின்னர் எப்படி தான் தற்கொலை செய்து கொள்வது என்று கற்பனை செய்ய தொடங்குவார்கள்.

Schizophrenia

தாழ்வு மனப்பான்மை அளவுக்கும் அதிகமாக இருக்கும். ஒருவரின் சிந்தனை, பேச்சு, உணர்ச்சி, நடத்தை யில் எல்லாம் குழப்பம் இருக்கும். உலகம் இவருக்கு ஒரு பயமுறுத்துகின்ற இடமாகவும், குழப்பமான இடமாகவும் தோன்றும்.

உண்மைக்குப் புறம்பான எண்ணங்கள் இவர்களுக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும்.

‘மேல் வீட்டில் இருக்கின்றவர் தன்னைக் கொல்ல சதி செய்கி;ன்றார்’ என்று திடீரெனக் கூறுவார்கள். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இவர் சொல்வதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டால்? மேல் வீட்டில் இருப்பவர் தன்னைக் கொல்ல ஒரு அணுகுண்டு தயாரித்துக் கொண்டு இருப்பதாக இன்னொரு கதை சொல்வார்கள். இதையும் நீங்கள் நம்பாவிட்டால், ‘அப்துல் கலாம் கூட நேற்று அந்த வீட்டுக்கு வந்து போனார்’ என்று அடித்துக் கூறுவார்கள்.

அல்லது ‘இந்த தபால்காரர் என்னுடைய குழந்தை கடத்துவதற்குத் தான் ஒவ்வொரு நாளும் வந்து நோட்டம் பார்க்கின்றார்” என்று சந்தேகப்படுவார்கள். ஏன் அப்படி சந்தேகிக்கின்றீர்கள்? என்று கேட்டால், ‘அதான் தபால்காரர் தோளில் ஒரு பையோடு திரிகின்றாரே’ என்பார்கள்.

இவர்களுக்கு மட்டும் ஒரு குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும். சில சமயம் இவர்களுக்கு மட்டும் உருவங்கள் தெரியும். இந்த உருவங்கள் இவர்களோடு பேசும் இவ்வாறு உருவங்கள் பேசும் பேசும் போது மற்றவர்களுக்கு கேட்காது. தங்களோடு மட்டுமே உருவங்கள் பேசுகின்றன என்று இவர்கள் கூறுவார்கள்.

சிலர் ஏதோ வாசைன வீசுகின்றது என்று கூறிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு மட்டும் எப்போதும் ஏதோ வாசைன வீசிக்கொண்டிருக்கும். அந்த வாசைன வேறு எவருக்கும் மணக்காது.

தான் உண்மையில் வேறு ஆள் என்று சிலர் நம்பத்தொடங்குவார்கள். நம்புவது மட்டுமல்ல செயல்படவும் தொடங்கி விடுவார்கள். “ நான் தான் ஜன்ஸ்டின்” என்று கோப்பை. கொப்பரைகளுடன் ஒருவர் புறப்பட்டு விடுவார்.

“இதோ நான்தான் கடவுள்” கூறுகின்ற இன்னொருத்தர் கமண்டலம் என்று, ப+வரசம் தடியோடு கிளம்பி விடுவார்.

உங்கள் நண்பர்கள், உறவினர்கள் யாராவது மனநோயாளராக இருந்தால் அவருக்கு உதவ முற்படுங்கள். கண்டிப்பாக அவருக்கு மருத்துவ உதவி தேவை. ஆரம்பத்திலேயே இதை குணப்படுத்துவதற்கு சந்தர்ப்பம் அதிகம். முற்றிலும் குணப்படுத்த முடியாவிட்டாலும் மனநோயின் வேகத்தைக் குறைக்க முடியும்.

மருத்துவ உதவி பெற்றவர்கள் கூட மருந்துகளை ஒழுங்காக சாப்பிட மாட்டார்கள். மருந்துகள் சாப்பிடாவிட்டால் எந்தப் பயனும் கிடையாது. எனவே இவர்கள் ஒழுங்காக மருந்து சாப்பிடுகின்றார்களா என்று கண்காணியுங்கள்.

செழியன்
chelian@rogers.com

Series Navigation