ஏதோ ஒரு பறவை

This entry is part [part not set] of 6 in the series 20001015_Issue

உமாமகேஸ்வரி


வாளிக்குப்பையைக் கொட்ட
வாசல்தாண்டியபோது,
பறத்தலினின்று நழுவி
எருக்கங்செடியில் இருந்தது
பார்த்தேயிராத ஒரு பறவை

விசிறி மடிப்பு பாவாடை நலுங்காது
கொசுவி அமர்ந்த சிறுமியின்
தோற்ற ஒழுங்கிலிருக்கும் சிறகுகள்

அவை-

நீலத்தோடு நிறங்கள் தோய்ந்த
மாலை வானை நறுக்கி வார்த்தவை
உருளாத விழிகளோ
உயிரற்ற பகல் நட்சத்திரங்கள்

ஏராள மரங்கள் தவிர்த்து
எருக்கைத் தேர்ந்தது
ஏனோ தெரியவில்லை
களைப்பின் சாயலில்லா
கம்பீர அலட்சியம்

இறகுகள் கோதி
விரல் வழி பிரியம் செலுத்த
விருப்பூட்டும் என்னுள்
ஆனாலதன் பாராமுகத்தால்
ஆதங்கம் சுடும்

கையிலோ குப்பை கனக்கும்
கதவு திறந்த வீட்டில் காரியங்கள் இருக்கும்

ஓசையற்று குப்பை சிரித்தாலும்
உலுக்கிப் பறக்கும் அது-

ஒரு முறையேனும் குரலைக் காட்டாமல்;
வண்ண அம்புபோல்,
வாய்க்காத கனவைப்போல்,
இன்னும் அனுபவித்திராத
இனிமையின் இறுதி விளிம்பைப்போல்.

**
கணையாழி அக்டோபர் 1992

Series Navigation

உமா மகேஸ்வரி

உமா மகேஸ்வரி