ஏணிப்படிகளில் ஒரு பயணம் – பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’ -நாவல் அறிமுகம்

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

பாவண்ணன்


வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பைத் தேடி சிற்றூரிலிருந்து பெருநகரைநோக்கி வந்த இரண்டு நண்பர்களைப்பற்றிய கதையாக விரிவடைந்திருக்கிறது பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’. தொட்டதும் அல்லது தட்டியதும் திறந்துவிடும் கதவுகளாக வாய்ப்புகள் யாருக்கும் அமைந்துவிடுவதில்லை. தவமாய்த் தவமிருந்து ஒரு கதவின் திறத்தலுக்காக காலம் முழுக்க அலைய வேண்டியிருக்கிறது. செல்லும் இடங்களிலெல்லாம் மூடிய கதவுகளையே கண்டுகண்டு மனம் சலித்துப் போகிறவர்கள் உண்டு. எப்போதோ ஒருமுறை அபூர்வமாகத் திறக்கும் கதவுகள் வேண்டப்பட்ட ஒரு சிலரைமட்டுமே உள்ளே அனுமதித்துக்கொண்டு மீண்டும் மூடிக்கொள்கின்றன. பேருந்துகளிலும் ரயில்களிலும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவு பயணம் செய்து ஆயிரக்கணக்கான கனவுகளோடு தினந்தினமும் வந்து இறங்கும் ஏராளமான இளைஞர்கள் மூடப்பட்ட கதவுகளின்முன் மாறிமாறி நின்று இளமையையும் வாழ்க்கையையும் ஒருங்கே தொலைத்துக்கொண்டு இருப்பதுதான் இன்றைய எதார்த்தம். திறந்த கதவுக்குள் எப்படியோ உள்ளே போய்விட்டவன் காந்திராஜன். எந்தக் கதவாவது திறக்காதா என பெருநகரின் ஒவ்வொரு கதவின் முன்பும் ஏக்கத்தோடு நின்று நின்று பார்த்துவிட்டுத் திரும்புகிறவன் நரேஷ் முத்தையா. ஒருவன் தொடர்ச்சியாக வெற்றிமீது வெற்றியாக ஈட்டிக்கொண்டே செல்கிறான். இன்னொருவன் தொடர்ச்சியாக தோல்விகளையே சந்தித்து சோர்ந்து விடுகிறான். இரண்டையும் மாற்றிமாற்றி தன் நாவலில் முன்வைக்கிறார் பாரதிபாலன்.
வாழ்க்கை என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாக தாவித்தாவி ஏறி மேல்நோக்கிச் செல்பவன் வாழ்க்கை மதிப்பீடுகளைப்பற்றிய பார்வையில் கீழ்நோக்கிச் சரிகிறவனாக மாறும் விசித்திர முரண் இந்த வாழ்வில் ஏன் நிகழ்கிறது என்னும் கேள்வியை ஒட்டி நம் சிந்தனையைத் து¡ண்டுகிறது பாரதிபாலனுடைய படைப்பு. புறவாழ்வின் குறைகளும் இழப்புகளும் வெளிப்படையாகத் தெரிகிற அளவுக்கு அகவாழ்வின் குறைகளும் இழப்புகளும் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஒருவன் வேலையற்றவன் என்பதும் பணக்காரன் என்பதும் மிகவும் வெளிப்படையாகத் தெரியும் விஷயங்கள். ஒருவன் நம்பிக்கைத் துரோகமிழைப்பவன் என்பதும் ஒருவன் மோசக்காரன் என்பதும் ஒருபோதும் வெளிப்படையாகத் தெரியாத விஷயங்கள். அகவாழ்வின் வெற்றியைவிட புறவாழ்வின் வெற்றி மிகவும் முக்கியம் என்னும் பார்வை நம் மனத்தில் பதிந்திருப்பதால்தான் அறம் சார்ந்த சரிவுகள் நமக்கு உறுத்தலாகத் தோன்றுவதில்லை. அதுதான் வாழ்வின் மிகப்பெரும் சோகம். புற வாழ்வின் வெற்றி எல்லைகளை மேலும்மேலும் விரிவாக்கிக்கொண்டே போவதற்கு நமக்குள் எழும் ஆவலுக்கு நிகராக அகவாழ்வின் தேவைகளையும் விரிவாக்கிக்கொண்டு வாழும் ஆர்வம் எவருக்கும் உருவாவதில்லை. அகவாழ்வின் தேவைகளை நிறைவு செய்து கொள்ளாத புறவாழ்வின் வெற்றி என்பது மனித வாசனையே இல்லாத ஒரு அரண்மனையை அல்லது கோட்டையை கட்டியெழுப்புவதற்குச் சமம். விருந்துக்கான உணவுகள் எதையும் சமைக்காமல் பந்தி இலைகளை மட்டும் நறுக்கி நறுக்கி அடுக்கிக்கொண்டே செல்வதற்குச் சமம். அகவாழ்வாகட்டும், புறவாழ்வாகட்டும் எப்பகுதியும் விடுபட்டுப் போகாமல் இணைத்து வாழ்வதுதான் நல்வாழ்வு.
நாவலில் இடம்பெறும் காந்திராஜன் சந்தர்ப்பவாதி. கூசாமல் பொய் சொல்பவன். யாரையும் ஏமாற்றிவிட்டுச் செல்லத் தயங்காதவன். தான் செய்யும் தவறுகளைப்பற்றி எவ்விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாதவன். இனிக்கஇனிக்கப் பேசி பெண்களை ஆசை வலையில் விழவைப்பவன். பொய்களை அடுக்கி திருமணம் செய்துகொள்பவன். புதிய உறவின் வழியாகக் கிடைக்கிற செல்வாக்கையும் புகழையும் மூலதனமாக வைத்து புதிய தொழிலைத் தொடங்குகிறவன். செல்வத்தைச் சேர்ப்பதிலும் பெண்களைச் சுகிப்பதிலும் அறம்சார்ந்த எவ்விதமான கூச்சமும் தயக்கமும் இல்லாதவன். செல்வம் சேரச் சேர கூச்சத்தின் தடமே அவன் வாழ்வில் அழிந்துபோய்விடுகிறது. இன்னொரு பக்கத்தில் இவனுடைய கூச்சமின்மையைப்பற்றி எல்லாத் தருணங்களிலும் மனம் குமைந்தபடி இருப்பவன் நரேஷ் முத்தையா. மாதக்கணக்கில் அலைந்து திரிந்தாலும் செல்வத்தைத் தேடிப் பெறமுடியாதவன். எந்த வேலையையும் அடையத் தெரியாதவன். ஆசைப்பட்ட பெண்ணை அடையும் வழியையும் அறியாதவன். தோற்றவன் என்னும் பட்டப்பெயரோடு கிராமத்துக்கே திரும்பி வந்துவிட்டவன். தோற்றவன் என்னும் வருத்தம் இருந்தாலும் அறம் பிறழாதவன் என்கிற ஒரு துளி பெருமையில் அவன் நெஞ்சம் நிமிர்ந்து நிற்கிறது. ஆனால், உறவுக்காரர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி பட்டணத்தில் வேலை பார்க்கிறவன் என்று தன்னைப்பற்றிய தவறான ஒரு தகவலை முன்வைத்து பெண்பார்க்கக் கிளம்பும்போது அந்தத் துளிப் பெருமையையும் காற்று கரைத்துவிடுகிறது. ஏணியின் முதல் படியில் அடியெடுத்துவைக்கும்போதே அவன் மனத்துக்குள் அதுவரை கட்டிக் காத்த அறம் சரிந்துவிழுந்துவிடுகிறது.
ஒரு வெற்றிக்காக நாம் கொடுக்கிற விலை என்ன என்னும் கேள்வியை முன்வைத்து தன்னையே சுயமதிப்பீட்டுக்கு உட்படுத்திக் கொள்ளும்போதுதான் அகவாழ்வின் சரிவுகளிலிருந்து நாம் மீண்டெழமுடியும். சுயமதிப்பீட்டுக்கு இடம்தராத வாழ்வில்தான் புறநிலையின் உயர்வும் அகநிலையில் தாழ்வும் ஏற்படும். “ஒரு பைக்கும் கொஞ்சம் பணமும் இருந்தா போதும், எவள வேணா புடிச்சிடலாம்” என்னும் பார்வையும் (பக்கம் 60) “ஒழுங்கா இருந்து என்னத்தக் கண்டோம்” (பக்கம் 204) என்கிற பார்வையையும் உடையவனிடம் சுயமதிப்பீட்டை எப்படி எதிர்பார்க்கமுடியும்? அப்படிப்பட்டவர்கள் வாழ்வில்தான் உலகியல் முன்னேற்றமும் அகஉணர்வுகளின் சரிவும் ஒருங்கே நிகழ்கின்றன.
ஏற்றமும் இறக்கமும் ஒருங்கே இந்த வாழ்வில் ஏன் ஏற்படுகிறது என்னும் கேள்வியைக் கண்டடைந்திருப்பதுதான் இந்தப் படைப்பின் மிகப்பெரிய பலம். ஆனால் காலத்தை முன்வைத்து இதை ஒரு அலசலாக நிகழ்த்தி மூழ்கி முத்தெடுப்பதைப்போல இக்கண்டடைதலை நிகழ்த்தாமல் ஒரு கருத்தாகமட்டுமே முன்வைத்து நகர்ந்துவிடும் தன்மையை பலவீனமென்றே குறிப்பிடவேண்டும். சித்தரிப்பு முறையிலும் உரையாடல்களிலும் காணப்படக்கூடிய ஒற்றைத்தன்மை வாசிப்பின் ஆர்வத்தை மட்டுப்படுத்துகிறது. நாவலின் உச்சத்தை அடைய இது மிகப்பெரிய தடையாக இருக்கிறது.
காந்திராஜனும் நரேஷ் முத்தையாவும் நாவலின் முக்கியப் பாத்திரங்கள். இரண்டு பாத்திரங்களையும் அதனதன் போக்கில் வளர்த்தெடுப்பதற்கு மாறாக, நரேஷ் முத்தையாவின் பார்வையில் விரிகிற காந்திராஜனின் சித்திரங்களையே நாவல் முன்வைக்கிறது. இது காந்திராஜனுடைய ஆர்வம் எத்தகையது என்பதை அறிய நம்மால் முடியவே இல்லை. அதை அறிய நரேஷ் முத்தையாவுடன் அவன் நிகழ்த்தும் உரையாடலில் வந்துவிழும் ஒற்றை வார்த்தைக்காக நாம் காத்திருக்கவேண்டியிருக்கிறது. நமக்குத் தேவை வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் மட்டுமல்ல, வெளிப்படாமல் கோடிகோடியாக அவன் மனத்தில் குவிந்துகிடக்கிற வார்த்தைகளும் கூட தேவையாக இருக்கின்றன. ஆனால் நாவல் எழுதப்பட்டிருக்கும் போக்கு இதற்கு எதிராக இருக்கிறது. எவ்வளவு பெரிய குற்றவாளியின் மனத்திலும் தான் செய்த குற்றத்தை சரியென்று நிறுவிக்காட்ட போதுமான சான்றுகளின் உந்துதல் இருக்கும். காந்திராஜனை உந்தும் அந்தச் சான்றுகள் எத்தகையவை என்பவற்றை அறியவைக்கும் வாய்ப்பையும் நாவல் இழந்துவிடுகிறது. அறியவைக்கிற ஒரேஒரு வாய்ப்பு நாவலில் ஒரு இடத்தில் கூடிவருகிறது. மாமனாருக்குச் சொந்தமான பண்ணைவீட்டில் முத்தையாவையும் அழைத்துச் சென்று காந்திராஜன் மது அருந்தும் காட்சி. ஆனால் அத்தருணத்தில் நம் எதிர்பார்ப்புக்கு நேர்மாறாக, மது அருந்தியவன் அமைதியாக கேட்டுக் கொண்டிருக்க, மது அருந்தாத முத்தையா தன் மனத்தில் இருப்பதையெல்லாம் கொட்டித் தீர்த்துவிடுகிறான். இப்படி, அரிதாக அமைந்த ஒரு வாய்ப்பும் நாவலில் பயன்படுத்தப்படாமல் போய்விடுகிறது.
காந்திராஜனுடைய அகஓட்டங்களை அறியமுடியாமல் போவதைப் போலவே ஜெயந்தி, லதா, காந்திராஜனுடைய மனைவி ஆகிய பெண் பாத்திரங்களின் அக ஓட்டங்களையும் அறியும் வாய்ப்பு நழுவிவிட்டது. இந்த வாழ்வின் உயர்வு தாழ்வு, அகவாழ்வு மற்றும் புற வாழ்வின் வெற்றி தோல்விகள் ஆகியவற்றைப்பற்றிய பெண்களுடைய மனப்பதிவுக்கான சுவடே நாவலில் இல்லை.
பாரதிபாலன் தொட்டுப் பேச விழையும் விஷயத்துக்கு மானுட சரித்திரத்தில் ஒரு தொடர்ச்சி காலம்காலமாக இருந்துவருகிறது. மண்ணுக்காகவும் பொன்னுக்காகவும் பெண்ணுக்காகவுமான வெற்றிகளை ஈட்டுவதற்காக அகத்தின் குரலுக்குச் செவிசாய்க்காத ஆண்களின் கதைகள் வரலாறெங்கும் இறைந்து கிடக்கின்றன. அகவெற்றியே முக்கியம் என்ற எண்ணத்தில் பொய்சொல்ல மறுத்து அரச வாழ்வையே துறந்து வந்து சொல்லொணாத் துயரங்களையெல்லாம் அனுபவித்த அரிச்சந்திரன் கதையும் நம்மிடையே உண்டு. அன்றைய மானுடனுடைய பிரச்சனைகளைவிட இன்றைய நவீன மானுடனுடைய பிரச்சனைகள் கடுமையானவை. சிக்கலானவை. அந்தச் சிக்கலின் மையப் புள்ளியைத் தொடும்போதுமட்டுமே கட்டுரையின் தொடக்கத்தில் முன்வைக்கப்பட்ட விசித்திர முரணையும் தொட்டறிய முடியும். அத்திசையில் தொடங்கிய பயணத்தை பாரதிபாலனால் தொடர்ந்து நடத்த முடியாமல் போனது மிகவும் துரதிருஷ்டவசமானது.

( உடைந்த நிழல். பாரதி பாலன். சந்தியா பதிப்பகம், ·பளாட் ஏ, நியுடெக் வைபவ், 57-53வது தெரு, அசோக் நகர், சென்னை-83. விலை ரூ120)

Series Navigation