என் – ஆர் – ஐ

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

ஆகேஷ்


காலையிலேயே இன்று லேசாக தலைவலி லேசாக இருந்து கொண்டேயிருந்தது. ஆனால், இன்று சீக்கிறம் எழுந்திருக்க வேண்டியது கட்டாயம். எழுந்து பெரியவனை எழுப்பி தயார் செய்து, அவன் பால் குடிக்கும் போது சிறியவளை எழுப்பி அவளை தயார் செய்ய வேண்டும். இதற்குள் அவர் எழுந்திருந்து அவளுக்கு பால் கொடுத்தால் உதவியாக இருக்கும். ஆனால், இன்று தலைவலி இருப்பதைப் பார்த்தால், அவரால் எந்த உதவியும் எதிர்பார்க்க முடியும் என்று தோன்றவில்லை. போன மாதம் இதே மாதிரி வயிரு வலியாக இருக்கும் போதுதான், தன்னால் வர முடியாது என்றும், என்னை தனியாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு போகச் சொன்னார். சொல்லாமலே எப்படித்தான் இவருக்கு என் தேவைகள் புரிகின்றன என்பது புரியாத புதிர்.

எப்படியும் இன்று சரியான சமயத்திற்கு பஜனையை தொடங்கி விடுவார்கள். அவர்களை குற்றம் சொல்லி பயனில்லை, நான் இவர்களை கிளப்ப வேண்டும் என்று எண்ணிக் கொண்டே எழுந்து பார்த்தால், பெரியவன் தூக்க கலக்கத்தோடு தன் கேம் பாயில் கால்பந்து விளையாடத் தொடங்கியிருந்தான். மற்ற நாளில் கோபம் வரவழைத்திருக்கும் அந்த செயல், இன்று என் முகத்தில் ஒரு புன்னகையை கொடுத்தது. கலைந்த அவன் தலையை மேலும் செல்லத்தோடு கலைத்து விட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தேன்.

இன்று நல்ல நாள்தான் போலும், என்று அவர் அருகில் அமர்ந்து காரில் செல்லும் போது தோன்றியது. இந்தியர்கள் எல்லா இடத்திலும் இந்த சிங்கப்பூரில் தோன்றினாலும் நமது குழந்தைகள் இங்க இருப்பவர்கள் மாதிரி தனது பாய் ப்ரண்டோடும் அல்லது கேர்ள் ப்ரண்டோடும் சிறிய வயதிலேயே நமது முன் நிற்பார்களோ என்ற பயமும், எங்கே நாம் வளர்ந்து வந்த கலாச்சாரம் தொலைந்து விடுமோ என்ற அச்சமும் என்று இருந்து கொண்டேயிருந்தது. குழந்தைகளை விடவும் நாம் எங்கே நமது தனித்துவத்தையும், பழக்கங்களையும் மறந்து விடுவோமோ என்ற பயமாகவும் இருக்கலாம் இந்த மாதிரி இந்திய பஜனை அல்லது ஏதாவது மகானின் அறிவுறையோ நடைபெற்றால், அதை தவறுவதே இல்லை.

ஒரு இந்திய வியாபாரி இங்கே வருவபர்களுக்கு என்றே வைத்திருந்த ஒரு பழக்கடையில் நின்றேன்.
“வாங்கம்மா. இப்பவே வெக்கை பாருங்களேன். போகப் போக இன்னும் அதிகமாகிக் கொண்டேயிருக்கும். எவ்வளவு ஆப்பிள் போடட்டும்மா? பத்து வெள்ளிக்கு மூணு”

பக்காவாக மடித்து வைத்திருந்த பிளாஸ்டிக் கவரிலிருந்து ஒன்றை எடுத்து ஆறு பழங்களை கொடுத்தான். இவர் வரவில்லையென்றால் சிட்டி ஹால் ரயில் நிலையத்திருந்து சிறிது நேரம் நடந்து வந்திருக்க வேண்டும். அதீத தூரமில்லையென்றாலும் குழந்தைகள் களைத்திருப்பார்கள். எப்படியும் வழிபாடு ஆரம்பித்து சிறிது விநாடியிலேயே இவருக்கு பொறுமை தாங்காது.

“இந்த ஒரு கடைதாம்மா இருக்கு இன்னும். மூணு கடை வைத்திருந்தேன். இங்கே வந்து ஏழு வருடம் ஆகிறது. சீக்கிரம் போய் விடத்தாம்மா பார்க்கிறேன். காவேரி மணமும் , நம்ம ஊரு தூசிக்கும் இணையாகுமா சொல்லுங்க?” என்றார் சிரித்துக் கொண்டே சொன்னார் அந்த மயிலாடுதுறைக் காரர்.

வாரா வாரம் கேட்கிற கதையானதால் லேசாக புன்னகைத்துக் கொண்டே இரண்டாவது மாடியில் நுழைந்தேன். நிறைய கடைகள் இருக்கும் பெரிய ஷாப்பிங் மாலில் இருக்கும் ஒரு இந்திய சாப்பாடு விடுதியில் நடக்கும் அந்த வழிபாட்டிற்கு நுழைந்தேன்.

———————————————————————————————————————–

ஆகியாற்று எட்டு வருடங்கள் எனக்கும் சிங்கப்பூரில் புதுப் மணப்பெண்ணாக நுழைந்து. யாரோ ஒரு மிருகத்தை பார்த்து, “சிங்கா (சிங்கம்), சிங்கா” என்று கத்தியதால் இந்த ஊருக்கு சிங்கப்பூர் என்று பெயர் வந்ததாம். நானும் ஒரு மிருகத்தோடு தான் இங்கே வந்திருக்கிறேன் என்பதை சிறிது காலத்திலேயே அறிந்ததும், எனக்கும் கத்தத் தோன்றியது அந்த ஆதி கால மனிதன் மாதிரி.

வருடங்கள் எப்படி உருளுகின்றன என்பதை அறியவே முடியாது. அதுவும் ஒரு புது ஊரில், பல கனவுகளோடு நுழைந்த பின், ஒவ்வொரு கனவும் ஒவ்வொன்றாக தொலைந்து போவதை பார்ப்பதிலேயே வருடங்கள் கழிந்தது. பெற்றோர்களுக்கு என் கனவுகளின் சாவை மறைத்து வைத்துக் கொண்டு, தங்கைகள் தங்கள் கணவர்களோடு அமெரிக்க செல்ல அவர்களுக்காக வேண்டிக் கொண்டு, இரண்டு குழந்த்தைகளோடு நாட்கள் உருண்டோடிக்க் கொண்டிருந்தது.

“கையை கூப்பிக்கோம்மா. ஆர்த்தி எடுக்கிறாங்கம்மா.” சின்னதின் மழலைக் குரல் என் தியானத்தை கலைத்தது.

“என்னங்க. போகும் போது உங்க நண்பர் கடைக்கு போய் காய்கறியும் கொஞ்சம் பழங்களும் வாங்கிக் கொண்டு போகலாங்க” , அந்த பெரிய கடை மாளிகையுல் இருந்து இறங்கி வரும் பொழுது, என் வார்த்தைகள் ஒவ்வொன்றாக வெளியே விழுந்தன.

“சரி” என்றவருடன் லிட்டில் இந்தியாவுற்குள் நுழைந்தோம். ஞாயிற்றுக் கிழமை கூட்டம் மெதுவாக வரத் தொடங்கியிருக்க, பல காய்கறி கடைகள் மெதுவாக திறந்து கொண்டிருக்கும் அந்த வீதிக்குள் நுழைந்தோம்.

“வாங்க சார் வாங்க. வாங்கம்மா. டேய், குட்டிகளுக்கு ஆப்பிள் எடுத்துக் கொடு” என்றபடி வரவேற்றார். அந்த வாரத்திற்கு தேவையான காய்கறிகளை இங்கிருந்தே வாங்கி விட வேண்டும். இல்லையென்றால், வீட்டருகில் இருக்கும் சைனீஸ் கடைகளிலும் மார்க்கெட்டிலும் இந்த மாதிரி காய்கறிகள் கிடைக்காது. குழந்தைகளுக்கும் இங்கே வாங்கும் காய்கறிகளும், தேங்காயும் தான் பிடிக்கின்றன.

எல்லா பைகளையும் நான் வாங்கிக் கொண்டிருக்கும் போது என்னவர், குழந்தைகளோடு ஜில்லென்று இருக்கும் இளநீரை வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தார். அழகாக வெளிப் பாகத்தை சீவி, வெள்ளை வெள்ளேன்று இருக்கும் படி அந்த இளநீரை எப்படித்தான் இங்கே செய்கீரார்களோ , ஐசில் வைத்திருக்கும் அந்த ஒரு வெள்ளி இதமான நீர் இந்த வெயிலுக்கு சுகமானது.

“அப்படியே முஸ்த·ப்பாவுக்கு போய் சில சாமான்கள் வாங்கிட்டு போயிடலாம்ங்க” என்று உத்திரவாதம் வாங்கிக் கொண்டு சிரங்கூன் சாலையில் நடக்கத் தொடங்கினோம். சாலையின் அடுத்த பக்கத்தில் இருந்த அம்மன் கோயிலை வெளியிலிருந்தே கும்பிட்டுக் கொண்டேன். வேண்டுவதற்கு இப்பொழுதெல்லாம் எதுவும் பெரிதாக இருப்பதில்லை. பெரிய வேண்டுதல்கள் நிறைவேறாமல் போகாமல் இருந்ததாலும் இருக்கலாம், இல்லை இப்பொழுதெல்லாம் என் தேவைகள் அன்றாட சில்லறைகளாக ஆகியிருந்ததாலும் இருக்கலாம்.

சிறிய கடையாக ஆரம்பித்து இப்பொழுது சிங்கப்பூரின் அடையாளமாக மாறியிருக்கும் அந்த 24 மணி நேர விற்பனை சாம்ராஜ்யத்தில் நுழைந்தோம். குழந்தைகளுக்கு இங்கே வருவதில் எப்பொழுதும் சந்தோஷமே. நடக்க கூட இடமில்லாத கூட்டத்திலும் அவர்கள் சந்தோஷமாக எல்லா சாமான்களையும் ஆர்வமாக பார்த்துக் கொண்டே வருவார்கள்.

“அம்மா ! இந்த சோப் வாங்கலாம்மா. இந்த புட்பால் ஜெர்சி போன தடவையே வாங்கித் தரேன்ன்னு சொன்னியேம்மா! ” என்று பெரியவனும், “அம்மா ! இந்தா வச்சிக்கோ!” என்று ஏதோ சொந்தக் கடை போல ஏதாவது பொருளை எடுத்துத் தந்து கொண்டு சின்னவளும் தங்கள் நாளை ருசித்துக் கொண்டிருப்பார்கள்.

வீட்டிற்கு வருவதற்கு ஒரு மணியாகியிருந்தது. சிரங்கூன் சாலையில் இருந்த பல இந்தியன் சாப்பாட்டு விடுதியில் மதிய உணவை முடித்திருந்ததால் நிம்மதியாக வாங்கி வந்திருந்த காய்கறிகளையும் மற்ற சாமான்களையும் எடுத்து வைக்கத் தொடங்கினேன்.

வெயிலின் தாக்கம் வருக்கத் தொடங்கியிருந்தது. அதீத உயரமில்லாத இந்த நிலையில் ·பேன் மாட்ட இங்கே அதிகாரிகளிட உத்தரவு வாங்க வேண்டும். வீட்டில் ஏசியில்லாத நிலையில் தரையில் இருந்த அந்த டேபிள் ·பேனின் அருகில் உட்கார்ந்தேன்.

பல அடுக்குமாடி ·ப்ளாட்டுகள் தான் இங்கே வாழ்விடங்கள். அரசாங்கமே பல அடுக்கு மாடிகள் கட்டி விற்கும் வீட்களில் இதுவும் ஒன்று. தொண்ணூற்றி ஒன்பது வருடங்கள் வசிக்கும் உரிமைதான். மண்ணும் சரி, வீடும் சரி யாருக்கும் முழுதாக சொந்தமில்லை.

·ப்ளாட்டில் இருந்த சைனீஸ் பாட்டியிற்கு இந்திய கலாசாரத்தின் மேல் மதிப்பு அதிகம். அவளுக்கு தெரிந்த ஆங்கில வார்த்தைகளில் நாங்கள் பேசிக் கொள்வது ஒரு காமெடிப் படம் போல் இருக்கும். ஆனால் அந்த குடியிருப்பில் சில இந்தியர்களே இருப்பதால், எனக்கு பேச கிடைத்தவர்களில் அவர் ஒருத்தரை இழப்பதற்கு நான் தயாராக இல்லை. எப்பொழுது இந்தியா சென்று திரும்பினாலும் அவருக்கு எதாவது வாங்கிக் கொண்டு வருவதற்கு நான் தவறுவதேயில்லை.

என் யோசனைகளில் மூழ்கியிருந்த நான் சிறியவள் என் மடியில் படுத்து உறங்கியிருந்ததை கவனிக்கவேயில்லை. அப்பொழுதுதான் பெரியவனின் ஞாபகம் வந்தது. எங்கே போனான் இவன்?

“அம்மா. நான் இனிமே விளையாடப் போக மாட்டேன்மா” என்று அழுது கொண்டே உள்ளே வந்தான். அடுக்கு மாடி கட்டிடங்களுக்கு இடையே குழந்தைகள் விளையாட ஒரு சிறிய இடம் ஒதுக்கியிருந்தார்கள். அங்கேதான் பெரியவன் மற்ற சிறுவர்களுடன் கால்பந்து விளையாட செல்வான். சிறியவனாதால் இவனை எப்பொழுதுவாதுதான் சேர்த்துக் கொள்வார்கள்.

“என்னடா செல்லம் ஆச்சு??” என்றவுடன் விசும்பலுடன் ஆரம்பித்தான். “அம்மா, அம்மா, இன்னிக்கு என்னை விளையாட்டுக்கு சேர்த்துட்டாங்களா, அப்ப நான் பந்தை தப்பா அடிச்சிட்டேன்னு அந்த பெரிய பையன் என்னை கெட்ட வார்த்தி சொல்லி திட்டிடான்மா. நான் ஓடி வந்துட்டேன். ”

இங்கே இது சாதாரணமாகி வருகிறது. மலாய் மற்றும் சைனீஸ் சிறுவர்களால் மற்ற இனத்தவர்களின் சிறுவர்கள் ஒடுக்கப்படுவது அதிகமாகி வருகிறது.

“எனக்கு கொஞ்சம் கொஞ்சம் மலாய் புரியுதும்மா. அவன் கண்டிப்பா ஏதோ கெட்ட வார்த்தை தான் சொன்னான்.”

“சரிடா. விட்டுடு. ஏதோ பேசட்டு போறாங்க. அப்படி பேசும் போது நீ ஒண்ணும் திருப்பி திட்டிடாதே. அப்புறம் அடிசசி கிடிச்சி வச்சிட்டப் போறானுங்க.” ஒரு தாயின் பயம் அவன் மனதிலும் பயத்தை விளைவிக்க ஆரம்பித்தது.

*********************************************************************************

“எங்கடி வாங்கின. அழகா இருக்கே. உண்மையான முத்தா?”

“ஆமாம்மா. எல்லாம் இல்ல, அங்க அங்க, கொஞ்சம் மஞ்சளா தெரியறது கடல் முத்து இல்லை. போன லீவில மலேசியா போனப்ப வாங்கினது. சில ஐட்டங்கள் மலேசியாவில வாங்கினாத்தான் விலை குறைவா இருக்கும்”

அம்மாவும், அத்தை மகளும் ஆர்வத்துடன் என் முத்து மாலையை தடவிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

“சிங்கப்பூரில்லேந்து கல்யாணத்திற்காக வாங்கி வந்திருக்கியே, நெக்லஸ். கண்ணைப் பறிக்குதேடி. அடுத்த தடவை நம்ம கிருஷ்ணன் பொண்ட்டாட்டிக்கும் ஒண்ணு வாங்கிட்டு வா. சந்தோஷப்படுவா”

“சரிம்ம. கல்யாணப் பொண்ணுக்கு இருக்கட்டுமேன்னு ரெண்டு வாங்கியிருக்கேன். அதில ஒண்ணை வேணும்னா எடுத்துக்கோ”

என் பொண்ணு எப்படி சந்தோஷத்தில் திளைச்சிக்கிட்டிருக்கா என்று என் அம்மா பெருமை அடித்துக் கொண்டிருக்க, அங்கே சந்தோஷ சிரிப்பிலும், என் மக்களின் ஆடம்பரத்திலும், பலரின் பொறாமை தீயிலும் என் சோகங்கள் சாம்பலாகிக் கொண்டிருந்தன.

“என்னங்க. திரும்பிப் போகும் டிக்கட்டை கன்பெர்·ம் பண்ணீங்களா?”

——————————————-

Series Navigation