பாவண்ணன்
ஓர் ஓய்வுநாளில் தன் வீட்டுத் தோட்டத்தில் வந்து தங்கிப் பேசிக்கொண்டிருக்கவேண்டும் என்று நண்பர் வெகுநாள்களாகச் சொல்லி வந்தார். நானும் பார்க்கலாம் பார்க்கலாம் என்று சொல்லிவந்தேன். சாந்த வேலை, அலுவலகவேலை என்று ஏதாவது வேலைகள் வந்து குவிந்தவண்ணம் இருந்ததில் நண்பரின் ஆசையை நிறைவேற்ற இயலாமல் காலம் கடந்தபடி இருந்தது. திஙரென அப்படி ஒருநாள் ஓய்வு வாய்த்ததும் தொலைபேசியில் மூன்று நாள்கள் வந்து தங்கப்போவதாகச் சொல்லிவிட்டுக் குடும்பத்துடன் சென்றோம். எங்கள் வருகை அவருக்கு மிகுந்த மனநிறைவைத் தந்தது.
பெரிய மாந்தோப்பு. அதற்கு நடுவில் அழகான குடிசையொன்றைக் கட்டியிருந்தார். அதுதான் விருந்தினர் மாளிகை. தோப்புக்கள்ளேயே ஒரு குளம் இருந்தது. ஒரு பம்ப்செட் இருந்தது. உண்மையிலேயே ஏதோ ஓர் உல்லாசத் தீவுக்குப் பயணம் வந்த அனுபவத்தை அடைந்தோம். நிழல்நிறைந்த மரத்தடியில் உட்கார்ந்து நேரம் போவது தெரியாமல் இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம். அலுப்பாக இருக்கும்போது அந்தத் தோப்பைச்சுற்றி ஒரு நடைநடப்போம் . வேறு சில உள்ளூர் நண்பர்களுக்கும் அவர் தகவல் சொல்லியிருந்தார். பேச்சு சுவாரஸ்யத்துக்குக் குறையே இல்லை. ஒருவர் நன்றாகப் பாடக்கூடியவர். ஒருவர் அழகழகான கதைகளை இட்டுக்கட்டக்கூடியவர். ஒருவர் பலகுரல்களில் அழகாகப் பேசிக் காட்டக்கூடியவர். பொழுது ஆனந்தமாகக் கழிந்தது.
மதியநேரம் நெருங்கியபோது எங்களைப் பார்த்து ‘இளநீர் குடிக்கலாமா ? ‘ என்று கேட்டார். எல்லாரும் தலையசைத்தோம். அருகில் சற்றுத் தள்ளியிரந்த தென்னந்தோப்புக்கு எங்களை அழைத்துச்சென்றார். அது அவருடைய உறவுக்காரரின் தோப்பு. வாசலில் காவல்காத்துகல்கொண்டிருந்த பணியாளரிடம் விஷயத்தைச் சொல்ல அவரும் கத்தியுடன் எங்களோடு தோப்புக்குள் வந்தார். எல்லா மரங்களிலும் குலைகுலையாகக் காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. ஆனால் ஏஅந்த மூலைமரத்து எளநி தேன்மாதிரி தித்திக்குங்கஏ என்றபடி அந்த மரத்தருகே அழைத்துச் சென்றார். கூட இருந்தவர்களில் ஒருவர் ‘ஏன், இந்த மரத்துக்காய் தித்திக்காதா ? ‘ என்று கேட்டான். ‘அவ்வளவா தித்திக்காது, துவர்ப்பா இருக்கும் ‘ என்றார் பணியாளர். இப்படியே ஒவ்வொரு மரத்தின் அருகிலும் நின்று ‘இந்த மரத்து எளநி பழைய ரசம் குடிக்கற மாதிரி இருக்கும் ‘, ‘இந்த மரத்து எளநி கள்ளுகுடிக்கிற மாதிரி புளிக்கும் ‘, ‘இந்த மரத்து எளநி நீராகாரம் குடிக்கிறமாதிரி இருக்கும் ‘ என்று அடுக்கிக்கொண்டே போனார். அவர் முதலில் குறிப்பிட்ட மரம் வந்ததும் மரத்திலேறி ஒரு குலையை இறக்கி எங்களுக்குச் சீவித்தந்தார். உண்மையிலேயே அதன் இனிப்பு தேனைப்போலவே இருந்தது. எல்லாருமே அந்த இனிப்பை உணர்ந்தோம். அவர் கணிப்பு எங்களுக்கு வியப்பாக இருந்தது. அவர் அந்த ரகசியத்தை அறிந்தவிதம் எப்படி என்று கேட்டபோது சிரித்தபடி ‘அய்யோ நிங்க நெனைக்கற அளவுக்கு அது ஒன்னும் பெரிய ஞானம் இல்லிங்க அது. ஏதோ பழக்கதோஷத்துல சொல்லறதுதாங்க. ஒரே தோப்புதான் . ஆனா மரத்து ராசி அப்படிங்க ‘ என்று புன்னகைத்தார்.
நாங்கள் ஊருக்குக் கிளம்பும் அன்று அக்குணத்தை என் நண்பரிடமும் கண்டோம். எங்களுக்காக ஒரு பைநிறைய மாம்பழங்களைப் பறித்துத் தந்தார் அவர். அவர் பறிக்கும்போது நாங்களும் கூடவே இருந்தோம். பழுத்துத் தொங்கும் பல மரங்களைத் தாண்டி ஏதோ ஒரு மரத்தின் அருகில் மட்டுமே அவர் நின்று கிளையைத் தாழ்த்திப் பழங்களைப் பறித்தார். இதுதான் இனிக்கும், ‘மத்ததில லேசா புளிப்புவாசன இருக்கும். தின்னா வாய்கூசும் ‘ என்று அவராகவே சொல்லிக்கொண்டார். தனது தேர்வு எதன் அடிப்படையில் என்பதை அவருக்கும் சொல்லத் தெரியவில்லை. ‘எத்தன வருஷமா இந்தத் தோப்புல இருக்கறேன். இதுகூடத் தெரியாம போய்விடுமா ? ‘ என்பதுதான் அவர் பதிலாக இருந்தது.
திரும்பும்போது என் மனம் அதை அசைபோட்டது. அந்த அறிவு ஓர் அனுபவ அறிவு என்பது உண்மைதான். பழகிப்பழகி அந்த நுட்பம் கைவந்துவிட்டது அவர்களுக்கு. சிலருக்கு சிலருடைய முகத்தைப் பார்த்ததும் அவர்கள் மனத்தில் என்ன ஓடுகிறது என்பதைச் சொல்லும் சாமர்த்தியம் இருப்பதைப்போல இந்த நுட்பம் கூடிவந்திருக்கிறது. மண்சார்ந்து உருவாகும் சுவையை அறிவது சாதாரண விஷயமல்ல. கம்பன்வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்ற வாசகமும் இப்படித்தான் உருவாகியிருக்க முடியும். சார்ந்து இருக்கும்போது நாம் எதைச் சார்ந்திருக்கிறோமோ அதன் சாரம் நம்மையறியாமல் படிந்துவிடுகிறது போலும். ஊர்சார்ந்தும் சில குணங்கள் இப்படித்தான் உருவாகின்றன. சிலருடைய நையாண்டிப் பேச்சைக் கேட்டதுமே பலரால் அவர்களுடைய ஊரின் பெயரைக் கேட்காமலேயே சொல்லவிட முடியும். கர்ணன் என்கிற பெயரை உச்சரித்ததுமே அவனுடைய வள்ளல் குணம் நினைவுக்கு வருவதைப்போல சில ஊர்களின் பெயரை உச்சரித்ததுமே அந்தந்த ஊர்களின் குணங்களும் நினைவுக்கு வருகிறது.
அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஊரின் பெயரையும் அந்தப் பெயர் எனக்கு நினைவூட்டக்கூடிய குணத்தின் அம்சத்தையும் ஒரு தாளில் எழுதிப் பட்டியலிடத் தொடங்கினேன். என் தயக்கங்களையும் மீறிப் பத்துப் பதினைந்து ஊர்களின் பெயர்களையும் குணங்களையும் என்னால் எழுத முடிந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போது தில்லி என்கிற பெயரை எழுதியதும் என்னையறியாமல் என் விரல்கள் அதிகாரமும் பழிவாங்கலும் என்று எழுதின. என் முடிவைத் துளியும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சட்டென எழுதிதற்கு ஒரு மலையாளக் கதையின் வாசிப்பும் காரணம்.
டில்லிக்கு வேலை கிடைத்து வந்திருக்கும் இளைஞன் ஒருவனுடைய பார்வையிலிருந்து விரிகிறது அக்கதை. கனோட்பிளேஸின் நடுவிலுள்ள பூங்காவிலிருந்து சுற்றிலும் நோக்கும்போது தான் ஒரு கூட்டுக்குள் அகப்பட்டிருப்பதைப்போன்ற உணர்வே ஏற்படுகிறது அவனுக்கு. அவனுடைய மனத்தில் சதாகாலமும் இருப்புக் கொள்ளமுடியாத, இனமறியாத வேதனை படர்ந்திருக்கிறது. அந்த நகருக்கு வந்ததுமே அத்தகு உணர்வும் உருவாகிவிட்டது. நாட்கள் கழியக்கழிய அவ்வுணர்வின் ஆழம் அதிகரித்தபடியே இருக்கிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் ஊரில் தொடங்கப்போகும் மத்திய அரசின் அலவலகம் ஒன்றில் அவனை நியமிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டிருப்பதில் அவன் ஓரளவு ஆறுதல் அடைகிறான். அக்கூண்டிலிருந்து விடுதலை கிடைத்தால் போதுமென்ற எண்ணமே அவனிடம் மேலோங்கியிருக்கிறது.
பூங்காவுக்குள் குளிர்க்காற்று வீசுகிறது. வானத்தில் முழுநிலவு ஒளிவீசியபடி இருக்கிறது. நிலவொளியில் ஜூம்மா மசூதியின் வெண்மார்பிள்கள் பளிச்சிடுகின்றன. அப்போது அந்த நகரையொட்டிய சிந்தனைகள் அவன் மனத்தில் அரும்புகின்றன. முகலாயர் சரித்திரத்துக்கு ஆதாரமாக இருந்த இடம் அந்த நகரம். அதற்கும் முன்னர் இந்திரப்பிரஸ்தமாக இருந்து ரத்தம் சிந்த வைத்த நகரம். சுயநலத்தின் களனாகவும் துரோகத்தின் உறைவிடமாகவும் இருந்த இடம். ஆதிகாலத்திலிருந்து அந்த நகரில் சொந்த சகோதரர்களின் ரத்தம் சிந்தவைக்கப்பட் ருக்கிறது. தந்தையர்கள் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டிருக்கிிறார்கள். தயவற்றுத் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. ஒருவரையொருவர் இரக்கமேயில்லாமல் ஏமாற்றியிருக்கிறார்கள். வஞ்சித்திருக்கிறார்கள். அடுத்தவர்கள் மனைவிமார்கள் மீது உரிமை பாராட்டியிருக்கிறார்கள். பலவந்தமாக உடைமையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எல்லாமே அரசுரிமைக்காக, பொருளுக்காக, போக வாழ்க்கை¢காக. பல நேரங்களிலும் தோன்றுவதைப்போல அந்த நகரின் ஆத்மா எது என்கிற கேள்வி அப்போதும் அவனை அரித்தெடுக்கிறது.
அவன் பார்வை அந்தப் பூங்காவில் குளிரில் கம்பளிக்குள் இருமியபடி சுருண்டு உறங்கும் ரங்கசாமி ஐயரின்மீது திரும்புகிறது. அரசு அலுவலகத்தில் வேலை செய்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர் அவர். இருக்கும் ஒரு மகளுக்குத் திருமணம் செய்து கொடுத்தாயிற்று. மனைவி எப்போதோ இறந்துவிட்டாள். இரண்டுவேளைச் சாப்பாட்டுக்குக்கூடக் காணாத கேவலமான ஓய்வூதியமே அவருக்குக் கிடைக்கிற வருமானம். வாடகை கொடுத்து வாழ்வது கட்டுப்படியாகாது என்கிற நிலையில் பூங்காவில் நிரந்தரமாகத் தங்கிவிட்டவர். இத்தனை இன்னல்களுக்கிடையே வாழ நேர்ந்தும் இந்த நகரைவிட்டுச் செல்ல அவர் ஏன் முயலவில்லை என்ற கேள்வி அவனைத் தொடக்கத்தில் குடைந்ததுண்டு. ஒருமுறை கோவையிலிருந்து வந்த நண்பரிடம் அவரை அறிமுகப்படுத்தி ஊருக்குள் அவருக்கு ஏதேனும் வேலைக்கு ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறான். நண்பருக்கும் அவருக்கு உதவுவதில் விருப்பமே. ஆனால் ரங்கசாமி ஐயர் அந்த நகரத்தைவிட்டுச் செல்வதை விரும்பவில்லை. குறைந்தபட்ச வசதிகளுடன் வாழும் வகையிருந்தும் எப்படியாவது அந்த நகரைவிட்டு வெளியேறும் ஆசை தன்னைத் துரத்திக்கொண்டே இருக்க, பல சிரமங்களுக்கிடையே வாழ்கிற கிழவர் ஊரைவிட்டுச் செல்ல விரும்பவில்லை என்பது புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது.
நகரில் மேலும் பல அதிர்ச்சிகளை அவன் எதிர்கொள்கிறான். வாராந்திர விடுப்புகளில் வழக்கமாகத் தான் சந்திக்கும் வேசியிடம் அவள் மகளை அனுப்புமாறு கேட்கப்போவதாகச் சொல்லும் நண்பனையும் கட்டாயப்படுத்தப்பட்டதால் அந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதையும் பார்த்து அவனுடைய வெறுப்பு வளர்ந்தபடியே போகிறது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த நகரைவிட்டு வெளியேறவிடவேண்டும் என்று துடிக்கிறது அவன் மனம்.
வழக்கம்பொல ஒருநாள் பூங்காவுக்குள் நுழைந்ததும் ரங்கசாமி அமர்ந்திருக்கும் பெஞ்சைப் பார்க்கிறான். அங்கே அவருடைய கம்பளி சுருண்டு கிடக்கிறது. அதனுள்ளிருந்து வழக்கமான இருமல் இல்லை. நெருங்கிப் பார்த்தபோது ஒரு எறும்புச்சாரி உள்ளே ஊர்ந்துசெல்வதையும் அசைவற்ற உடல் உள்ளே கிடப்பதையும் அவன் கண்கள் பார்க்கின்றன. மிகவும் துக்கத்துடன் அவன் அங்கே கண்ட காட்சியைத் தனது நணன்பன் ஆபிரகாமிடம் பகிர்ந்துகொள்கிறான். இந்த நகரைநோக்கி வந்தவர்கள் திரும்பிப்போனதாகச் சரித்திரமே இல்லை. இந்த நகரம் ஒரு சாமர்த்தியமான வேசியைப்போல வந்தவர்களையெல்லாம் வளைத்துப்போட்டுவிடுகிறது என்று நண்பனை அமைதிப்படுத்துகிறான் அவன். தில்லி என்கிற பெருக்கு கோபுரத்துவாரம் என்று பெயர். கதவு என்று சொல்லலாம். அழைப்புக்கான கதவு என்றும் விரிவுபடுத்தலாம். இந்த நகருக்குள் நுழைந்து வந்தவர்கள் இந்த நகரின் அடிமைகளாகிவிடுவார்கள்.
இப்படியெல்லாம் சொல்லிச்சொல்லி நண்பனைத் தேற்றப் பார்க்கிறான் ஆபிரகாம். யார் வேண்டுமானாலும் அடிமையாகட்டும், தான் மட்டும் இந்த நகரின் அடிமையாகப்போவதில்லை என்றும் வெகுவிரைவில் விடுதலை அடையப்போவதாகவும் சொல்லிக்கொள்கிறான் அவன்.
அடுத்தநாள் காலை அலுவலகத்துக்குச் சென்றபோது செக்ஷன் ஆபிசராக நியமிக்கப்படுபவரின் பெயர் வெளியிடப்பட்டிருக்கிறது. தன் பெயருக்குப் பதிலாக தன்னைவிட ஜூனியரான சிவசரண் அகர்வால் என்பவரின் பெயர் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைக்கண்டு அதிர்ச்சியில் உறைகிறான் அவன். நண்பனிடம் தன் மனக்குறையைச் சொல்கிறான். பெண், கள், பிண்டத் தைலக்குழம்பு என்று தலைமைக்கு வேண்டியதையெல்லாம் பரிமாறி அதைச் சாதித்துக்கொண்டான் என்று சொல்கிறான் நண்பன். நேரான வழியில் சென்று எதையும் அடைய முடியாமல்போய்விட்டது என்கிற நிராசையும் வேதனையும் அவனை அதிகமாக உறுத்துகின்றன.
உணவு இடைவேளை முடிந்ததும் மேலதிகாரியால் அவன் அழைக்கப்படுகிறான். மனக்கிளர்ச்சியுடன் அவன் அதிகாரியின் அறைக்குள் நுழைகிறான். ஊரப்பக்கம் தொடங்கவிருக்கும் அலவலகத்தில் அவன் நியமிக்கப்பட இருப்பதாகவும் நிர்வாகம் தீர்மானித்திருப்பதைச் சொல்கிறார் அதிகாரி. வெகுகாலம் காத்திருந்த விடுதலை கிடைத்ததில் அவன் சந்தோஷமடையக்கூடும் என்று அவன் முகத்தைக் கவனிக்கிறார் அதிகாரி. அவன் எந்தவிதமான உவகையையும் காட்டாமல் இருக்கிறான். ‘என்ன இது ? உங்களுக்கு இது பிடிக்கவில்லையா ? ‘ என்று கேட்கிறார் அதிகாரி. கொஞ்சமும் தயங்காமல் அவன் சட்டென அந்த மாற்றல் விஷயம் தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டுத் திரும்பிவிடுகிறான். வந்து இருக்கையில் அமரும்போது அங்கேயே தங்கி தனக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை எதிர்த்துச் சூழ்ச்சி செய்ய அவன் மனம் தீர்மானிக்கிறது.
ஒரு நகரம் என்பது வெறுமனே மக்கள் வசிக்கும் இடமாக மட்டுமல்ல. சில குணங்களின் படிமமாக இருக்கிறது. எல்லா நகரங்களும் அப்படி படிமப்பொருளாக மாறுவதில்லை. ஒருசில நகரங்கள் மட்டுமே அப்படி மக்களால் பார்க்கப்படுகின்றன. தில்லி அவற்றில் முதன்மையான நகரம். பழிவாங்கும் உணர்ச்சி என்பது அந்த நகரின் இதயத்தில் ஒவ்வொரு தமனியிலும் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஆதிகாலத்திலிருந்து தொடரும் காலமெல்லாம் அந்த நகரிலிருந்து விடுபட்டுச் சென்றுவிட வேண்டும் என்று கனவு கண்டுகொண்டிருந்தவனே இந்த உணர்ச்சிக்குப் பலியாவதுதான் சோகம். நகரின் நஞ்சு நம்மையறியாமலேயே நம் இதயத்தில் நிரம்பிவிடுகிறது. நம்மையறியாமலேயே நாம் ஒரு மாறுதலுக்கு ஆளாகிறோம்.
அறியாமல் நிகழும் அகமாற்றத்தின் நிறம் கச்சிதமாகப் படம்பிடிக்கப்பட்டிருப்பதே இக்கதையின் மிகப்பெரிய பலம்.
*
மலையாளத்தில் நான்காவது தலைமுறை எழுத்தாளர்களுள் முக்கியமானவர் ஜயதேவன். மலையாளக் கதையிலக்கிய உலகில் எம்.டி.வாசுதேவன் நாயர் வகுத்த சிறுகதைப்பாதை ஒரு முக்கியமான திருப்புனை என்றே சொல்லவேண்டும். கொந்தளிக்கும் வாழ்க்கையையே கதைகளின் களமாகக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு காவியச்சாயலை படைப்புகளின்மீது படியவைக்கும் அவரது பாணியைப் பலரும் பின்பற்றினர் . அவருடைய வழித்தோன்றலான ஜயதேவனுக்கும் அக்குணம் உண்டு. விருச்சிகக்காற்றில் என்னும் நாவலும் கோபுர துவாரத்தில், அகம்பாவங்கள் என்னும் கதைத்தொகுப்புகளும் இவரது முக்கியப் படைப்புகள். எம்.முகுந்தன் தொகுத்து நேஷனல் புக் டிரஸ்டு வெளியீடாக 1980 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘சமீபத்திய மலையாளச் சிறுகதைகள் ‘ என்னும் நுாலில் இக்கதை இடம்பெற்றுள்ளது. தமிழில் மொழிபெயர்த்தவர் ம.இராஜாராம்.
- வாசகர்கள் ,படைப்பாளிகள் கவனத்துக்கு
- எரி செல் (fuel cell) உபயோகப்படுத்தலில் ஜப்பான் முன்னணியில் இருக்கிறது.
- அடிப்படைகள் தகர்ந்த போது கிழக்கில் தெரிந்த ஒளிக்கீற்றுகள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 90-அகமாற்றத்தின் நிறம்-ஜயதேவனின் ‘தில்லி ‘
- சி மணிக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது வழங்கப் படுகிறது.
- சி மணிக்கு ‘விளக்கு ‘ அமைப்பின் விருது வழங்கும் விழா
- கனடாவில் கவிஞர் புகாரியின் ‘அன்புடன் இதயம் ‘ கவிதை நூல் வெளியீடு – டிசம்பர் 13, 2003- வாழ்த்துரை
- அலன் ஸாக்கலுடன் -ஜ_லியன் பாக்கினி உரையாடல் :வரலாறும் கலாச்சாரச் சார்புவாதமும் :தமிழ் பின்நவீனத்துவம் குறித்த சில குறிப்புகளுடன்
- வரலாறும் கலாச்சாரச் சார்புவாதமும்: அலன் ஸாக்கலுடன் ஷூலியன் பாக்கினி : உரையாடல் மொழியாக்கம்
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – மொரிஸ் ப்லான்ஷொ (Maurice Blanchot – 1907 -2003)
- நகைச்சுவைத் துணுக்குகள்
- ஒரே வரி
- ஐரோப்பிய GPS உலக துல்லிய இடம் காட்டும் அமைப்பு துவக்க ஐரோப்பிய தலைவர்கள் பச்சைக்கொடி:
- சங்கம் சரணம் கச்சாமி
- நீயே உனக்கு சாட்சியாளன்!
- பால்யம்.
- குறும்பாக்கள்
- சூட்சுமம்
- கை நழுவின பகலிரவுகள்
- முன்னோடி
- செம்பருத்தி
- புரியாமல் கொஞ்சம்…
- அழகான மரம் (இந்திய பாரம்பரியக் கல்வி பற்றி)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தேழு
- விடியும்!-நாவல் – (27)
- விடாது கருப்பு
- விமோசனம்
- நான் கணேசனில்லை…
- கடிதங்கள் – டிசம்பர் 18, 2003
- வாரபலன் – குறும்பட யோகம்
- விலங்குப் பலி x ஐீவகாருண்யம்
- ஆரியம் இருக்குமிடம், அக்ரகாரம் மட்டுமல்ல
- வாசகர்கள் கவனத்திற்கு
- தொடரும் ‘ரசவாதம் ‘ -கண்ணனின் எதிர்வினை குறித்து
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -3)
- கவிதைகள்
- நிறக்குருடுகள்
- எளிதாய்
- எத்தனை காலமாய்…
- எனக்கு வேண்டும் வரம்
- நன்றி
- புரிந்ததா
- திரை அரங்கில்
- ரைட் சகோதரர்கள் யந்திர ஊர்தியில் முதலில் பறந்து நூறாண்டுகள் [1903-2003]