எத்தனை காலமாய்…

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

வேதா மஹாலக்ஷ்மி


எத்தனை காலமாய் இந்த பந்தம் ?
உன் உயிருக்கும் என் உயிருக்கும்…..

பார்த்த நொடி முதலா ?
பதித்த தடம் தொடர்ந்தா ?
கேட்ட மொழி கனிந்தா ? – மனதைக்
கெடுத்த கருவிழி துணிந்தா ?

எத்தனை காலமாய் இந்த சொந்தம் ?
உன் உரிமைக்கும் என் உரிமைக்கும்….

காற்று உரசியதா ?
கதைகள் திருடியதா ?
கலைத்து கலைத்து , நம்
மவுனத்தை கடலாய் ஆக்கியதா ?
அலைந்து அலைக்கழிப்பாய்
ஆசையை ஸ்பரிசம் கூட்டியதா ?

எத்தனை காலமாய் இந்த தூரம் ?
உன் தனிமைக்கும் என் தனிமைக்கும்….

நேற்று உருகியதா ?
நின்று பெருகியதா ?
நினைவு எழுதியதா ?
நிஜங்கள் நிலைப்பை உணர்த்தியதா ?
நீங்கவும் நீக்கவும் நம்
தனிமை துணிகிறதா ?
நினைக்கவும் மறக்கவும்
மறக்கவும் மீண்டு நினைக்கவும்
மனசு நிறைகிறதா ?
மறைத்து மறைத்து, இமைவழி
மழைகள் வழிகிறதா ?

இருந்து காத்திருந்து
இனிமையும் , இனி
இல்லை என்று ஆகிறதா ?
இதயமும் கொஞ்சம் வறண்டு போகிறதா ?

எத்தனை காலமாய் இந்த பாரம் ?
உன் உணர்வுக்கும் , என் உணர்வுக்கும்….
உன் பார்வைக்கும் , என் பெண்மைக்கும்…
உன் பாசத்துக்கும், என் மென்மைக்கும்…
உன் அணைப்புக்கும்,
என் அத்தனை சுகத்துக்கும்….

எத்தனை காலமாய்… ?
இன்னும், எத்தனை எத்தனை காலமாய்… ? ?

piraati@hotmail.com

Series Navigation

author

வேதா மஹாலக்ஷ்மி

வேதா மஹாலக்ஷ்மி

Similar Posts