எக்கியின் குடும்பம்

This entry is part [part not set] of 24 in the series 20100108_Issue

க.ராஜம்ரஞ்சனி


1
‘என்னி.. என்னி..’ எக்கி அழைத்துக் கொண்டே வீட்டினுள் நுழைந்தது. எக்கியின் முகம் என்னியை எல்லா பக்கமும் திரும்பி திரும்பி தேடியது. எக்கியின் குரலில் இருந்த பதற்றமும் அச்சமும் என்னியை மேலும் வேகமாய் அழைத்ததைப் போல் இருந்தது.
‘ஏன்? என்னாச்சு? ஏன் இப்படி ஓடி வர்றீங்க?’ உள்ளிருந்து ஓடி வந்த என்னிக்கு மூச்சிறைத்தது.
‘நம்ம வீட்டு முன்னுக்கு பெரிய பெரிய லோரிங்க வந்து நிக்குது. மனுசாளுங்க கொஞ்ச பேரு சுத்தி சுத்தி நடந்துகிட்டு இருக்காங்க..’ எக்கியின் குரல் சிக்கியது. பேச்சைத் தொடர இயலவில்லை.
மூச்சை இழுத்து விட்டு கொண்டது. ‘நாம உடனே இங்கிருந்து கெளம்பியாகனும். இந்த எடத்த அழிக்க போறாங்கனு நினைக்கறேன்.. சிக்கீரமா கெளம்புங்க…’ கூச்சலிட்டது எக்கி.
அப்பாவின் குரல் கண்டு பிள்ளைகள் எம்மியும் எல்லியும் விரைந்து ஓடி வந்தன. தங்களின் வசிப்பிடம் நிரந்தரமில்லை என்பதை தந்தை எக்கியும் தாய் என்னியும் சொல்லி வளர்த்திருந்தன. ஒருவர் பின் ஒருவராய் சங்கிலித் தொடராய் கல்பாறை இடுக்கின் வழியே வெளியேறின. எக்கி முதலில் வழிதொடங்க அதனைத் தொடர்ந்து எல்லி, எம்மி மற்றும் என்னி பின்தொடர்ந்தன. மனிதர்களின் பார்வை படாவண்ணம் எக்கி உறுதி செய்து கொண்டது. ஒருவாறாக தொலைவில் தென்பட்ட மரநிழலில் சிறிது நேரம் ஒதுங்கின. கனரக வண்டிகள் அவர்களின் குடியிருப்பை அழித்துத் தரைமட்டமாக்குவது கண்ணில் பட்டது. அதற்கு மேலும் அங்கே நிற்பது ஆபத்து என்றுணர மீண்டும் நகர்ந்தன. பகல் வேளையில் வெளியேறுவது சிரமாயிருந்தது. மனிதர்களின் கண்ணில் படாமல் இருக்க கவனமாய் செயல்பட வேண்டியிருந்தது. கவனமாய் இருந்த போதிலும் எதிர்பாராவண்ணம் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியின் கண்ணில் விழ, ‘இந்த பட்ட பகல்ல அதுவும் நாலு எலி வெளியில போவுது…’ என ஆச்சரியத்துடன் பார்த்தாள். தங்களின் நடையைத் துரிதப்படுத்தின எக்கியின் குடும்பம். அருகிலிருந்த குடியிருப்பை அடைந்து அங்கிருந்த வீடோன்றில் சன்னல் வழியே உள்ளே நுழைந்தன. பெரிய பங்களா வீடு. சுற்றிலும் கல்லால் எழுப்பப்பட்ட சுவர்கள். அக்குடியிருப்பில் இருந்த எல்லா வீடுகளும் இதுபோலவே ஒத்திருந்தன. வீட்டினுள் ஜன்னல் வழியே ஏறி வந்த அழையா விருந்தினரை வீட்டில் யாரும் கவனிக்கவில்லை. இப்போது இருட்டிவிட்டிருந்தது. அவற்றின் தொலைதூர பயணம் முற்றுப் பெற்றிருந்தது. களைத்துப் போயிருந்தன.
வீட்டில் கீழ்த்தளத்தில் இருந்த ஒரு இருட்டறைக்குள் தஞ்சம் புகுந்தன எக்கியின் குடும்பம்.
‘இந்த ரூம்ல யாரும் தங்கற மாதிரி தெரில. நாம பயமில்லாம இருக்கலாம்..’ சோர்வுடன் ஒரு மூலையில் சாய்ந்தபடி அமர்ந்தது எக்கி. அறை முழுவதும் பழைய துணிகள் மற்றும் பழைய புத்தகங்கள் அடங்கிய காகிதப் பெட்டிகள். அறை முழுவதும் நிசப்தம் பரவியிருந்தது. அந்த அமைதியான சூழல் எக்கியின் குடும்பத்திற்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது. எம்மியும் எல்லியும் பெட்டிகளுக்கிடையே ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. எதிர்பாராவண்ணம் கதவொலி காதில் விழ திசைக்கொன்றாய் பெட்டிகளின் இடுக்குகளில் ஒளிந்து கொண்டன. கதவு திறந்த பாதை வழி அறையின் வெளியிருந்த ஒளி மெல்ல அறையின் உள்ளே தலைக்காட்டியது. ஓர் உருவம் உள்ளே நுழைந்ததும் கதவு மீண்டும் சாத்திக் கொண்டது. தாழிடப்பட்ட கதவு ஒளிச்சுருளை மீண்டும் வெளியே விரட்டியிருந்தது.
இப்பொழுது அந்தப் பெண்ணின் உருவத்தை மேலும் உற்று நோக்கியபோதுதான் அவள் இவ்வீட்டுப் பணிப்பெண் என அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. உயரமான மெலிந்த உருவம். அவை வீட்டினுள் நுழைந்தபோது அந்தப் பெண்தான் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். மற்றொருத்தி உட்கார்ந்தவாறே பணிகளைக் கத்திச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
‘ஒரு வேலையும் உருப்படியா செய்றதில்ல..’ ஏசிக்கொண்டே நின்று வேலை செய்து கொண்டிருந்தவள் கால்களின் மீது நீரை ஊற்றினாள் அவள். சுடுநீர் என நீரின் இருந்து வெளிப்பட்ட நீராவி எக்கியின் குடும்பத்துக்குக் காட்டிக் கொடுத்தது. நீர் காலில் பட்ட கணமே துடிதுடித்துப் போனாள் வேலைக்காரப் பெண். கால்களைப் பிடித்துக் கொண்டு கதறித் துடித்தாள். வலி தாங்க மாட்டாது உட்கார்ந்தாள்.
‘உனக்கு உட்காரவா சம்பளம் குடுக்கறோம்?’ என்றவாறே ஆண் ஒருவர் வேலைக்கார பெண்ணின் முடியைக் கற்றையாக பிடித்து நிறுத்தினார். அப்பெண்ணின் அழுகை, மரணத்தைத் தழுவியதைப் போன்று உயர்ந்தது. கண்ட காட்சிகள் யாவும் எக்கியின் குடும்பம் பணிப்பெண், எஜமானர் மற்றும் எஜமானரின் மனைவியையும் வேறுபடுத்த ஏதுவாக அமைந்திருந்தன.
இருளை உள்வாங்கியிருந்த அறையினுள் அவளின் உருவம் மட்டுமே தெரிந்தது. ஓர் ஓரமாய் சுருண்டு படுத்துக் கொண்டாள். எக்கியும் என்னியும் மெல்ல அவள் அருகே சென்று உற்றுக் கவனித்தன. அவளின் இமைகள் மூடியிருந்தன. அவளது வாயில் துணி கட்டப்பட்டிருந்தது. கைகள் இரண்டும் முதுகில் பின்னால் துணியினால் இறுகக் கட்டப்பட்டிருந்தது. அப்பெண்ணின் கால்களிலும் கைகளிலும் காயங்களாலும் வடுக்களாலும் நிரம்பியிருந்தன. ஒரு சில காயங்களில் இன்னும் செந்நிற கசிவும் பிசுபிசுப்பும் இருந்தன. புரண்டு படுக்கையில் காயம் ஏற்பட்டிருக்கும் உடல் பாகங்கள் தரையை உரசும்போது அவளின் உடல் சிலிர்த்தது. ஆனால் அவள் எழவில்லை. அயர்ந்து தூங்கினாள்.
‘பாவங்க இந்த மனுஷ பொண்ணு… பாருங்க உடம்பு முழுக்க காயம்… கையில கட்டியிருக்கற துணிய கடிச்சிடலமா? இந்தப் பொண்ணு தப்பிச்சி ஓடிடுவா… உதவி செய்லாமா?’ என்னியின் கண்கள் கலங்கியிருந்தன.
‘வேணாம் என்னி… இந்த பொண்ணு தப்பிக்கறது கஷ்டம்… அதுக்குள்ள வீட்டுல உள்ளவங்க பாத்துட்டா இன்னும் இந்த பொண்ணோட நெலம ரொம்ப கஷ்டமா போயிடும்..
‘ரொம்ப பாவமா இருக்குங்க…’
‘யோசிக்கறேன் என்னி.. எப்படியாவது நாம இந்த பொண்ணுக்கு உதவி செய்யனும்..’

2
வீட்டில் எஜமானரும் அவரின் மனைவியும் இருக்கும் சமயத்தில் வேலைக்காரப் பெண் எல்லா வேலைகளையும் செய்து முடிக்க வேண்டிய நிலை. அவர்கள் வேலைக்குச் சென்ற வேளையிலும் இரவிலும் இவளைத் துணி கட்டிய வாயுடனும் இறுக்க கட்டிய கரங்களுடனும் இருளடைந்த அறைக்குள் தள்ளிவிட்டு செல்வதை எக்கியின் குடும்பம் குடிபுகுந்த ஒரு வாரத்தில் புரிந்து கொண்டது. தாங்கள் உண்ணும் காய்ந்த ரொட்டி துண்டைப் போலவே அவளும் உண்டதைக் கண்டு வியப்படைந்தன. அவள் பேசுவது குறைவாயிருந்தது. எஜமானரின் கேள்விக்கு மட்டும் ஓரிரு வார்த்தையைப் பதிலாய் உதிர்த்தாள். அவளின் அழுகுரலும் கதறலும் தினமும் கேட்கும்.
‘அப்பா, நம்ம தெரியாம ஜெயிலுக்கு வந்துட்டமா?’ மிரண்டிருந்தது எம்மி.
‘இங்கேருந்து போயிடுவோம்ப்பா… பயமாயிருக்கு…’ தாயை அணைத்துக் கொண்டது எல்லி.
‘பயப்படாதீங்க.. நமக்கு ஒண்ணும் ஆவாது… நம்ம குலதெய்வத்த வேண்டிக்கங்க..’ என அறையின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த விநாயகர் படத்தைக் காட்டியது. அதில் மூஷிகன் இவர்களைப் பார்த்து ஆசிர்வதிப்பதுபோல் இருந்தது.
வீட்டில் யாருமில்லாத வேளை. எக்கி வீட்டின் முன்புறம் வந்தது. அவ்வீட்டின் நாய் ஜிம்மியின் கால்கள் தரையில் படர்ந்திருக்க இளைப்பாறிக் கொண்டிருந்தது. எக்கியைப் பார்த்த ஜிம்மி எழுந்து குரைக்க ஆரம்பித்தது. ஒருவாறாக குரைத்தலுக்கிடையில் எக்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டது. எக்கியின் மீது நம்பிக்கை ஏற்பட ஜிம்மி குரைப்பதை நிறுத்தியது. நீண்ட பற்களைக் கொண்டிருந்த ஜிம்மி அவ்வப்போது வாலை ஆட்டிக் கொண்டது. சாதாரண நாய்களை விட ஜிம்மியின் உடல் பெருத்திருப்பதாய் எக்கிக்குப் பட்டது. ஆனாலும் தன்னுடன் நட்பு பாராட்டிய ஜிம்மியை எக்கிக்குப் பிடித்துப்போனது.
‘நல்ல வேள இந்த வீட்ல பூனை இல்ல…’ வாய்விட்டு சிரித்தது ஜிம்மி. எழுந்து நின்று வாலை ஆட்டிக் கொண்டது. எக்கி தன் வாலை ஒரு முறை திரும்பி பார்த்தது. நீண்ட நேர உரையாடல் கலகலப்பாயிருந்தது.
‘எக்கி நானும் பாத்திருக்கேன்.. அந்த பொண்ணு பாவம்.. நாம ஏதாவது செய்ய முடியுமா?’ குரைத்து தன் ஆதங்கத்தை வெளிப்படுத்திக் கொண்டது. மீண்டும் தரையில் சாய்ந்தவாறு எக்கியின் அருகே அமர்ந்தது. எக்கி ஜிம்மியின் காதில் ஏதோ இரகசியத்தைக் கூற தலையைச் சம்மதிப்பதுபோல் ஆட்டி கொண்டது ஜிம்மி..
மாலையில் வீடு திரும்பிய எஜமானர் தம்பதி வீட்டின் இரும்பு முன் கதவைத் திறக்க முற்பட்டபோது பாய்ந்து வெளியில் ஓடியது ஜிம்மி. எஜமானரின் குரலுக்குச் செவி சாய்க்காது வேகமாய் ஓடியது. அவ்வீட்டு குடியிருப்பில் உள்ள திடலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்துக் குரைத்தது. பயந்த சிறுவர்கள் ஓட முயற்சித்தபோது துரத்தியது. சிறுவர்களைப் பயமுறுத்துவதில் வெற்றி கண்ட களிப்பில் தலைமறைவானது.

3
ஒரு மணி நேரத்திற்குள் வீட்டின் முன் போலீஸ் வாகனம் வந்து நிற்க குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் சிலர் வீட்டின் வெளியே வந்து எட்டிப் பார்த்தனர். அவர்களுக்குள்ளாகவே கிசுகிசுத்தனர். ‘உங்க நாய் இங்குள்ளவங்கள ரொம்ப டிஸ்டர்ப் பண்ணதாக காம்ப்ளெண்ட் வந்துருக்கு. நாய்க்கு லைசென்ஸ் இருக்கா?’ என்ற போலீஸ் அதிகாரியின் கேள்விக்கு பதில் சொல்ல இயலாமல் நின்றிருந்தார் எஜமானர். அவரின் நெருப்புப்பார்வை குடியிருப்பு மக்களிடையே திரும்பியது.
‘லைசென்ஸ் இல்லையா? அது தவறுனு தெரியாதா?’ போலீஸ் அதிகாரியின் குரல் கடுமையாக வெளிப்பட்டது.
‘சோர்ரி சார்..’ என்ற எஜமானரின் மனைவி சொன்னதைக் காதில் போட்டு கொள்ளாதவராய் ‘நீங்க என்கூட பாலாய் (ஸ்டேஷன்) வரணும். அந்த நாய் எங்க?’ உடன் வந்திருந்த அதிகாரிகள் தேட ஆரம்பித்தனர். அவர்களுடன் நாயைப் பிடித்துச் செல்ல சிறப்பு அதிகாரிகளும் வந்திருந்தனர்.
‘அந்த நாய் எங்கயோ ஒடிப்போச்சு.’ மெதுவான தொனியில் கூறினார் எஜமானர்.
‘பொய்யா? வீட்டு உள்ளுக்கு நாயை ஒளிச்சு வச்சுட்டு நாடகமா ஆடுறீங்க?’ மற்றொரு அதிகாரி வேகமாக கத்தினார்.
‘இல்ல வீட்டு உள்ளுக்கு இல்ல..’ வீட்டினுள் நுழைய வந்த அதிகாரிகளைக் கதவருகே நின்று எஜமானரின் மனைவி பதற்றத்துடன் தடுத்தார். அவரை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்தார்கள். எல்லா இடமும் தேடிய பின்னர் எக்கியின் அறையின் முன் நின்றனர்.
‘இந்த ரூம் சாவி எங்க?’
‘அது தொலைஞ்சி போச்சி..’ பதில் தந்த எஜமானரிடம் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். எக்கி தன் குடும்பத்தோடு சந்தோஷமாய் மற்றொரு வீட்டைத் தேடி நகர்ந்து கொண்டிருந்தது.

ktrajamranjini@yahoo.co.in

Series Navigation