உள்ளுணர்வில் பலரும் ஹிந்துக்களே

This entry is part [part not set] of 32 in the series 20060407_Issue

மலர் மன்னன்


1940-ல் நாங்கள் ஹிந்துக்கள் அல்ல என்று ஏட்டளவில் தீர்மானம் நிறைவேற்றினாலும் 1948-ல் காந்திஜி இறந்தவுடன் வெறும் இரங்கலுடன் வழக்கம்போல் பார்ப்பனரை ஒரு பாட்டம் திட்டித் தீர்ப்பதோடு நிற்காமல் ஹிந்துஸ்தானத்திற்கு காந்திஸ்தான் எனப் பெயரிடுமாறு யோசனை சொல்வதோடும் நின்றுவிடாமல் ஹிந்து மதத்திற்கே காந்தி மதம், காந்தியிசம் என்றெல்லாமும் ஹிந்துக்களுக்கு சத்திய ஞானமுள்ள மக்கள் எனப் பொருள் தரும் ‘சத்ஞானஜன் ‘ என்றும் பெயர் மாற்றம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார் அல்லவா ஈ.வே.ரா., அதுதான் தாம் ஒரு ஹிந்து என்ற உள்ளுணர்வு நீறு பூத்த நெருப்பாய் அவருள் கனன்று கொண்டிருந்தமைக்கு அடையாளம். காந்திஜியாவது தாழ்த்தப்பட்டோருக்கு மட்டும் இறைவனின் குழந்தைகள் எனப் பொருள்படும் ஹரிஜன் எனப் பெயரிட்டார். ஈ.வே.ரா.வோ ஆன்மிகத்தில் ஒருபடி மேலேபோய் ஹிந்துக்கள் அனைவருக்குமே சத்திய ஞானமுள்ளவர்கள் என்பதான உன்னதப் பெயரினைச் சூட்டுமாறு தாழ்மையுடன் வேண்டிக்

கொண்டார்!

ஈ.வே.ரா. மட்டுமல்ல, அளவு கடந்த சினம் காரணமாகப் பிள்ளைகள் மீதுள்ள கோபத்தில் நான் உங்களுக்கு அப்பனல்ல, நீங்களூம் எனக்குப் பிள்ளைகள் அல்ல என்று சொல்லும் தகப்பன் இக்கட்டான சந்தர்ப்பம் வருகையில் தான் ஆடாவிடினும் தன் சதை ஆடும் என்பதுபோல் என் மக்களே என ஓடி வருகிற மாதிரி, ஹிந்து சமயத்தைப் பலவாறு கண்டித்து, விலகி நின்ற பெரியவர்கள் பலரும் சோதனையான தருணங்களில் தாம் ஒரு ஹிந்து என்ற சொரணை பீறிட்டெழத் துடிதுடித்து வந்ததுண்டு. அது ஒன்றும் லஜ்ஜை கொள்ள வேண்டிய விஷயமல்ல! மூடி மறைத்துக் கொள்ளவேண்டிய தப்பிதமும் அல்ல. ஆகையால் ஈ.வே.ரா. வின் அபிமானிகள் நான் அவரது கறுப்பு ஆடையை நீக்கிவிட்டுக் காவி ஆடையை அவருக்கு அணிவித்து விட்டதாகக் கலங்கத் தேவையில்லை! செக்கச் சிவந்த மேனியரான அவருக்கு எந்த நிறமும் பொருந்தும் எனினும் கறுப்புச் சட்டையில் தான் அவர் மிகவும் எடுப்பாகத் தோற்றமளித்தார். பொதுவாக நம் மக்களுக்குச் சிவப்பு நிற மேனி யென்றாலே கொஞ்சம் பலவீனம் உண்டுதான். ஈ.வே.ரா. மீதான கவர்ச்சிக்கும் அவரது மேனி நிறமும் ஒரு காரணாமயிருக்கக் கூடுமோ என்பது யோசிக்க வேண்டிய விஷயம். வட பாரதத்தில் சுற்றுப் பயணம் செய்த ஈ.வே.ரா. அவர்கள் முன்செல்ல, அண்ணா அவர் பின்னால் பவ்வியமான சிஷ்யப்பிள்ளை மாதிரி பணிந்து நடக்கக் காணும் மக்கள், யாரோ ஆரிய ரிஷி சிரேஷ்டர்தாம் க்ஷேத்திராடனம் செய்ய வந்துள்ளார் என வழிநெடுகிலும் தரையில் விழுந்து வணங்குவார்களாம்.

காலத்திற்கு ஒவ்வாத சடங்காச்சாரங்கள் காரணமாக ஹிந்து சமயத்தின் மீது உரிமையுடன் கோபங்கொண்ட ராஜா ராம்மோஹன் ராய் எடுத்த முயற்சிதான் கணவனை இழந்த மனைவியர் உடன் கட்டை ஏற்றப்படும் கொடுமை சட்டப் பூர்வமாக ஒழிக்கப்படக் காரணமாக இருந்தது. அவருக்கு ஹிந்து சமயத்தின் மீது ஏற்பட்டிருந்த அதிருப்தியைக் கண்டு மனம் மகிழ்ந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் அவருக்குக் கிறிஸ்தவராக ஞானஸ்னானம் செய்துவைக்க முற்பட்டனர். ராம்மோஹன் ராயின் உள்ளுணர்வில் தாம் ஒரு ஹிந்து என்கிற பிரக்ஞை நீறு பூத்த நெருப்பாய்க் கனன்றுகொண்டிருந்தமையால் மதம் மாறுவது மாற்று அல்ல என உணர்ந்தார். பிரம்ம சமாஜம் என்கிற சீர்திருத்த அமைப்பை நிறுவினார். ரவீந்திரநாத் தாகூரின் தந்தையும் அதனை முன்னெடுத்துச் சென்றார்.

குடும்பச் சொத்தில் விதவையான மருமகளுக்குப் பங்கு போய்விடக் கூடாது என்பதற்காகவும், சதி மாதா என்று கோவில் கட்டி வருமானம் தேடவும் சுயநலமிகள் விதவையான வீட்டுப் பெண்ணை வலிந்து உடன்கட்டை ஏற்றுவது வழக்கமாயிருந்தது. அந்தப் பழியை ஹிந்து சமயச் சடங்கின் மீது அவர்களால் எளிதாகப் போடவும் முடிந்தது. மக்களின் சமய நம்பிக்கையில் தலையிட இயலாது என அன்றைக்கு இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர் கூறியபோதிலும், அன்றைய தலைமை நீதிமன்றமே உடன்கட்டை ஏறுதலைத் தடுக்கும் சட்டம் இயற்ற அரசுக்கு அதிகாரம் இல்லை எனத் தீர்ப்பளித்த பின்னரும் ராம்மோஹன் ராய் விடாது போராடி சதி என்னும் சதிச் செயலுக்குத் தடை பிறக்க வழிசெய்தார்.

தமது சமயத்தைப் புறக்கணித்தவராக அறியப்பட்ட அஜய் கோஷ் என்கிற மார்க்சிஸ்ட் தலைவர் படுக்கப் போகுமுன் ஹரியைத் துதிக்கும் ஸ்லோகம் ஒன்றைச் சொல்லிவிட்டுத்தான் உறங்க முற்படுவது வழக்கமாம். ஒருமுறை அவர் ரயில் பயணத்தின் போது பிறர் முன்னிலையில் அவ்வாறு ஸ்லோகம் சொன்னதும் உடன் இருந்தவர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். இளமையிலிருந்தே தொடர்ந்துவரும் பழக்கத்தை மாற்றிக்கொள்ள இயலாது என்று அதற்குச் சமாதானம் சொன்னார், அவர்.

இதேபோல் பிரபல மார்க்சிஸ்ட் தொழிற்சங்கத் தலைவர் ஒருவரைப் பற்றிய செய்தியைப் பதிவு செய்துள்ளார், காலஞ்சென்ற தொழிற்சங்கத் தலைவர் தத்தோபந்த் தெங்கடி அவர்கள். ஒரு பொது மாநாட்டில் பங்கேற்கச் சென்ற இடத்தில் இருவரும் ஒரே ஹோட்டலில் தங்க நேரிட்டது. அதிகாலையில் தெங்கடி அந்த மார்க்சிஸ்ட் தலைவரின் அறைக்குச் சென்றபோது, அவர் கண் மூடி தியானத்தில் அமர்ந்திருக்கக் கண்டார். கண் விழித்த மார்க்சிஸ்ட் தொழிற்சங்கத் தலைவர், தெங்கடியைப் பார்த்ததும் திடுக்கிட்டார். ஒருவாறு தம்மைச் சாமாளித்துக் கொண்டு எப்போது வந்தீர்கள் என்று விசாரித்தாராம். நீங்கள் தியானத்தில் அமர்ந்தபோதிலிருந்தே இங்குதான் இருக்கிறேன் என்றாராம், தெங்கடி!

இங்கே தோழர் ஜீவானந்தம் கம்ப ராமாயணத்தில் திளைத்துத் திளைத்துக் காவியச் சுவையில் தம்மை மறந்து ராமபிரானின் திருக்கலியாண குணங்களைக் கம்பன் வர்ணித்த பிரகாரம் விவரிப்பதில் இன்பம் கண்டவர்தான். மேற்கு வங்கத்து மார்க்சிஸ்டுகள் துர்கா பூஜையில் உற்சாகத்துடன் பங்கேற்கத் தவறுவதில்லை.

அம்பேத்கர் முப்பதுகளிலேயே தாம் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறப் போவதாகச் சொல்லத் தொடங்கியவர். உடனே படு கஞ்சனான ஹைதராபாத் நிஜாமே மனம் மகிழ்ந்து ஒரு கோடி ரூபாய் அச்சாரம் தருவதாகக் கூறி முகமதியராக மாற அவருக்கு அழைப்பு விடுத்தார். கிறிஸ்தவப் பாதிரிமார்களும் தூண்டில் வீசிப் பார்த்தார்கள். ஆனால் அம்பேத்கர் தாம் மரணமடைவதற்குச் சில மாதங்கள் முன் வரை ஹிந்துவாகவே நீடித்திருந்துவிட்டு, 1956-ல் தான் பவுத்தரானார். சமணம்தான் சனாதனத்திற்கு இணையாகத் தொன்மை வாய்ந்த சமயம் என அறிந்திருந்தும் ஹிந்துப் பெற்றோருக்குப் பிறந்து ஹிந்துவாகவே வாழ்ந்து தியானம் செய்து ஞானம் வரப் பெற்ற சித்தார்த்தன் பெயரால் பிற்காலத்தில் உருவான பவுத்த சமயத்திற்குத்தான் அவரால் மாறவும் முடிந்தது.

மஹாயானம், ஹீனயானம் என்றெல்லாம் பவுத்தம் கிளை பிரியக் காரணமே ஹிந்து சமயத்திலிருந்து அது தன்னை முற்றிலுமாகப் பிரித்துக்கொண்டு போகவியலாததால்தான். சனாதனத்திற்குத் தொடக்கத்திலேயே எதிர் மேடை போட்ட சமணம் கூடக் காலப் போக்கில் ஹிந்து சமயத்துடன் பலவகைகளிலும் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டுவிட்டது.

ஹிந்து கலாசாரத்தலிருந்து அதனால் தன்னை விலக்கிக்கொள்ள இயலவில்லை. ஏன், முகமதியம் கூட தர்கா வழிபாடு, சந்தனக் கூடு என்றெல்லாம் தன்னை ஹிந்து கலாசாரத்துடன் அடையாளப் படுத்திக் கொள்வதற்குக் காரணம் இங்குள்ள முகமதிய சகோதரர்களின் பூர்வீகம் ஹிந்துவாக இருப்பதுதான். உள்ளுணர்வில் அது கனன்று கொண்டிருப்பதால்தான் தர்கா வழிபாடு, சந்தனக் கூடு ஊர்வலம் எல்லாம் தேவைப் படுகின்றன.

ஹிந்துஸ்தானத்தைச் சேர்ந்த முகமதியரில் நுண்கலை ஈடுபாடு உள்ளவர் அனைவருக்குமே உள்ளுணர்வில் தாம் ஒரு ஹிந்து என்கிற பிரக்ஞை கனன்றுகொண்டுதானிருக்கிறது எனலாம். நவ்ஷத், தலத், பிஸ்மில்லாகான், கல்கத்தா வந்த அலி சகோதரர்கள் ஆகியோர் ஹிந்துஸ்தானத்தில் கால் பதித்துள்ளோம் என்கிற துணிவில்தான் தம்முள் கனன்ற ஹிந்து என்கிற பிரக்ஞையை பகிரங்கப் படுத்தினார்கள்.

திறமை மிக்க ஓவியர் ஹுசைன் இந்திராவைச் சிங்கம் மீதமர்ந்து வரும் துர்கையாகச் சித்திரம் வரைந்தவர். அவரது உள்ளுணர்வு அவரை அம்மாதிரி உருவகப் படுத்தத் தூண்டியது. நிர்வாணம் அழகானதும் இயல்பானதுமேயாகும். பக்குவம் உள்ள கண்களுக்கு அது ஆபாசமாகத் தெரிவதில்லை. சரவண பெலஹுளவில் முழு நிர்வாணமாய் நிற்கும் பஹுபாலியை ஆண், பெண், முதியோர், குழந்தைகள் சகலரும் ஒன்றாய்க் கூடி நின்று காண்கையில் மனதில் கள்ளம் புகுவதில்லை. என்தேவியை பாலிகையாக உபாசிக்கையில் ஒன்பது வயதுக் கன்னிகையென அவளை நான் முழு நிர்வாணமாகவே வரித்தேன். ஒரே சமயத்தில் எனது பிள்ளைக் கனியமுதாகவும் என் அன்னையாகவும் அவளைக் கண்டு பரவசமடைவேனேயன்றி அவளது நிர்வாணம் மனதை உறுத்தியதில்லை. உண்மையில் என் மனவெளியில் புலப்படும் தேவ தேவியர் நிர்வாணமாகவே தோற்றம் தருகின்றனர். ஏனெனில் அதுவே இயல்பானது: அதில் ஆபாசமில்லை. மேலும், தேவருலகில் தையற்காரர் இல்லை. தையல் இயந்திரமும் அளவெடுக்கும் நாடாவும் இல்லை. ஆகையால் ஹுசைன் சரஸ்வதியையும் பாரத அன்னையையும் நிர்வாணமாக வரைந்ததில் ஒரு தவறும் நான் காணவில்லை. ஆனால் பக்குவம் இல்லாத பெரும்பான்மையினருக்கு அது கண்களைக் கூசச் செய்யுமானால் அவர்களின் அபிப்பிராயத்திற்கு ஒரு கலைஞன் மதிப்புக் கொடுக்க வேண்டியதாகிறது. முன்பெல்லாம் நிர்வாணம் ஹிந்துக்களிடையே ஒரு பிரச்சினயாக இருந்ததில்லை. உள்ளூர நாட்டம் இருப்பினும் வெளிப் பார்வைக்கு நிர்வாணம் கண்டு ஆட்சேபித்தல் பிற சமயத்தாரின் பிடிவாதப் போக்கு கண்டதால் வந்த வினையே எனலாம்.

ஹிந்துஸ்தானத்தில் உள்ள பாதுகாப்பு இன்றி, பாகிஸ்தானில் இருந்து கொண்டு ஹிந்து உணர்வுக்கு இயல்பான கருத்தை வெளிப்படுத்தியமையால்தான் நூர்ஜஹான் மண்டியிட்டு மன்னிப்புக் கோரவேண்டியதாயிற்று. உள்ளுக்குள் கனன்று

கொண்டிருக்கும் ஹிந்து என்கிற பிரக்ஞையை வெளியிடும் துணிவை பாரதம் முன்னவர்களுக்குத் தந்திருப்பதால் அவ்வாறு வெளியிட்ட பின்னரும் அவர்களால் வெளியே நடமாடிக் கொண்டிருக்க முடிகிறது. இம்மாதிரியான சுதந்திரத்தை இத்தகையோர் விரைவில் இழக்க நேரும் விதமாக வஹாபிசம் இங்கே வேர்பிடித்து வருகிறது. சிந்திக்கும் வல்லமை மிக்க முகமதிய அறிவாளிகள் இதுபற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிறிது இடங்கொடுத்தாலும் ஹிந்து தேசத்துச் சுதந்திர முகமதியத்தை சவூதி அரேபிய வஹாபிசம் முழுவதாக விழுங்கிவிடும். அதன்பின் வருந்திப் பயனில்லை. குறிப்பாக நம் முகமதிய சகோதரிகள் இந்த விஷயத்தில் மிக மிகக் விழிப்புடன் இருக்க வேண்டும். சாசனப் பூர்வமாக நடைமுறையில் உள்ள நீதி பரிபாலனத்திற்குப் போட்டியாக இயங்கிவரும் ஜமாத் என்கிற அமைப்பின் தீர்ப்புச் சொல்லும் அதிகாரம் பெண்களைத்தான் அதிகம் பாதிக்கிறது. நமது உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு இப்போதுதான் இது வந்துள்ளது. வாக்கு வங்கி அரசியலில் மூழ்கியுள்ள மத்திய ஆட்சியாளர், இதுபற்றி ஆராய்வதாக உச்ச நீதி மன்றத்திற்கு உத்தரவாதம் அளித்துவிட்டு சிவப்பு நாடாவால் தம்மை இறுகப் பிணைத்துக் கொள்ள முற்படுவர் என எதிர்பார்க்கலாம்.

நம் நாட்டுக் கிறிஸ்தவ சமூகத்தாரிடையே இந்த அளவுக்குக் கட்டுப்பாடுகள் இல்லையென்றாலும், அங்கும் ஹிந்து என்கிற உள்ளுணர்வைக் களைந்தெறிய வேண்டும் என்கிற தீவிர மதச் சார்பு ஒரு சாராரிடையே வலுத்துவருகிறது. எனினும் குறிப்பாகக் கத்தோலிக்கக் கிறிஸ்தவரிடையே ஹிந்து கலாசார உணர்வு வெளிப்படையாகவே புலப்படுவதைக் காணலாம். அவர்களுடைய ஆலயத் திருவிழாக்களில் கூட அதனைக் கண்டுகொள்ள முடியும். இந்த உணர்வு மேலும் வலுப்பட வேண்டும் என எண்ணுவோரின் எண்ணிக்கையும் ஒருபுறம் அதிகரித்து வருகிறது. பல கிறிஸ்துவ சகோதரிகள் பெண்ணியப் பார்வையுடன் விவிலியத்தைப் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இறையைத் தாயின் வடிவில் காண விரும்பும் இவர்களின் வேட்கை, உள்ளுணர்வில் கனன்று கொண்டிருக்கும் ஹிந்து என்கிற பிரக்ஞையினால் கிளர்ந்தெழுவதே என்பதைப் புரிந்து

கொள்ளவேண்டும்.

சென்னையில் கத்தோலிக்க குருவாக இருந்த ஒருவர் (பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை) முந்தைய போப் ஆண்டவரைத் தரிசித்தபோது அவர் ஹிந்து சமயக் கோட்பாடுகள் குறித்துக் கேட்கவும், இவர் அதுபற்றிய தமது அறியாமையை வெளிப்படுத்த வேண்டியதாயிற்று. உமது தாயகத்தின் அடிப்படையான சமயம் பற்றி உமக்கு ஒன்றூம் தெரியாமற் போனதென்ன என்று அவர் இவரை கடிந்துகொண்டாராம். ஐரோப்பிய நாடுகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் இன்றும் முன்னோர் நம்பி வழிபட்ட தொன்மையான தெய்வங்களின் சொரூபங்கள் மேன்மாடங்களில் மறைவாக வைக்கப் பட்டிருக்கின்றன. மக்களின் உள்ளுணர்வில் உறைவது என்ன என்பதற்கு அது ஓர் அடையாளம். எனவேதான் போப் ஆண்டவரும் அப்படியொரு கேள்வியை இங்கிருந்து போனவரிடம் கேட்டிருக்கிறார்.

பலருக்கும் உள்ளுணர்வில் ஹிந்து என்கிற பிரக்ஞை கனன்று கொண்டிருப்பது ஒளிவு மறைவின்றித் தானாகவே வெளிப்படும் விதமான நிர்பந்தம் நிச்சயமாக உருவாகிக் கொண்டுதானிருக்கிறது.

+++

malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்