சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
நோயுற்ற இயல்பால் கர்ப்பப் பையில்
வாயுப் புயல்சிக்கி மூர்க்கமாய் வெகுண்டு
அடிக்கடிப் பூதளத்தை ஆட்டிக் கிள்ளி
வெடிக்கும் திடாரெனக் கொப்பளங்கள்!
வில்லியம் ஷேக்ஸ்பியர் [நாடகம்: வேந்தர் ஹென்ரி IV]
முன்னுரை: சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கி.மு.1177 இல் நேர்ந்துள்ள ஓர் பூகம்பம் சைன வரலாறுகளில் பதிவாகி யுள்ளது! ஐரோப்பாவின் வரலாற்றில் பண்டைய நிலநடுக்கம் ஒன்று கி.மு.580 ஆண்டில் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது! 1556 ஆம் ஆண்டில் சைனாவின் ஷான்ஸி மாநிலத்தில் நேர்ந்த மாபெரும் பயங்கரப் பூகம்பத்தில் 830,000 மக்கள் மாண்டதாக அறிய வருகிறது! ஜப்பான் டோக்கியோவில் 1703 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000 மக்கள் மரித்ததாகத் தெரிகிறது! ஐரோப்பாக் கண்டத்தில் போர்ச்சுகல் லிஸ்பனில் 1755 இல் நேர்ந்த பூகம்பத்தில் 70,000 பேர் மாண்டனர்! வட அமெரிக்காவில் 1811-1812 ஆம் ஆண்டுகளில் நியூ மாட்டிரிட், மிஸ்ஸெளரியில் (8.1, 8.0, 7.8) ரிக்டர் அளவில் முறையே மூன்று பெரும் நிலநடுக்கங்கள் நேர்ந்துள்ளன!
அடுத்து சைனாவின் டாங்ஸன் மாநிலத்தில் 1976 இல் ஏற்பட்ட நிலநடுக்கம் 7.6 ரிக்டர் அளவில் அசைந்து 650,000 பேர் மடிந்துள்ளனர்! இந்தியக் குடியரசு தினத்தன்று [2001 ஜனவரி 26] 7.9 ரிக்டர் அளவில் குஜராத்தில் நேர்ந்த பூகம்பத்தில் 20,000 பேர் மாண்டு, 600,000 மேற்பட்ட மக்கள் வீடிழந்து வீதியில் கிடந்தனர்! இப்போது நிலநடுக்கம் ஏற்பட்டது ஈரானில்! ரிக்டர் அளவு: 6.3! இறந்தவர் எண்ணிக்கை (ஜனவரி 2, 2004) 26,500! மாண்டவர் புதைவுப் பதிவுகள் முடிவுற்ற பின் 30,000 வரை ஏறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது!
உலகில் 100,000 நபர்களுக்கு மேல் மரண மடைந்த ஒன்பது பூகம்பங்களில் ஆறு நிலநடுக்கம் சைனாவில், இரண்டு ஜப்பானில், ஒன்று இந்தியாவில் நிகழ்ந்தவை! மக்கள் திணிவு மிக்க, மனித எண்ணிக்கை உச்சமான சைனா தேசத்தில்தான் பேரளவு மாந்தர் பூகம்பத்தால் மாண்டு போயுள்ளார்கள்! நிலநடுக்கச் சக்தி யூனிட் அளவுக்கு மடிந்த மக்களின் எண்ணிக்கையை ஒப்பு நோக்கின், மத்தியதரைப் பிரதேச நிலப்பரப்புக்கு அடுத்தபடி இடம் பெறுபவை: ஈரான், பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், இந்தியா, மத்திய ஆசியா, சைனா, டெய்வான், ஜப்பான், தென்னமெரிக்கா ஆகிய நாடுகள்!
Gujarath, India
ஈரான் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட கோர விளைவுகள்
2003 டிசம்பர் 26 ஆம் தேதி வெள்ளிக் கிழமை அதிகாலையில் பாம் [Bam in Iran] என்னும் நகரில் 6.3 ரிக்டர் அளவில் பூமி ஆட்டம் கொண்டு சுமார் 25000 பேருக்கு மேலாக மாண்டு 50,000 மக்கள் காயம் அடைந்தனர்! நிலநடுக்க சமயத்தில் 5000 பேர் தாமிருந்த இடத்திலே மாண்டதாகவும், 20,000 பேர்
வீட்டுச் சிதைவுகளுக்கு ஊடே புதைபட்டதாகவும் அறியப்படுகிறது! பாம் நகர் ஈரானின் தலைநகர் டெஹ்ரானிலிருந்து 600 மைல் தென்கிழக்குப் பகுதியில் உள்ளது. பாம் நகரின் மக்கள் தொகை 80,000. 2003 ஆண்டு பூகம்பத்துப் பிறகு மொத்த இறுதி மரண எண்ணிக்கை 40,000 ஆகி மக்கள் தொகை பாதியாகக் குறைந்து விடலாம் என்று யூகிக்கப்படுகிறது!
பெரும்பான்மையான மண்செங்கல் மனைகள் விழுந்து தகர்ந்து போயின! உயிர் தப்பிய மாந்தருக்குத் தங்கிடக் கூடாரங்களை ஈரான் அரசாங்கமும், உதவிக்கு வந்த பல அன்னிய நாட்டினரும் அமைத்துக் கொடுத்தனர். கனப் புரட்டு யந்திரங்கள் அநேகம் இழுத்து வரப்பட்டு, இடிந்த கட்டடத் தளவாடங்கள்
நீக்கப்பட்டுக் கீழே சிக்கிக் குற்றுயிராகக் கிடந்த மக்களை அகற்றிக் காப்பாளர் காப்பாற்றினர்.
ஐக்கிய நாடுகளின் உதவியோடு ஈரோப்பியக் கூட்டு நாடுகள், மற்றும் அகில நாடுகள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, போலந்து, துருக்கி, ஜப்பான் ஆகியவை உடனடி மருத்துவ உதவிகள், பண உதவிகள், மற்ற உதவிகளும் [உணவு, உடை, போர்வை, கூடாரம் போன்றவை] அளிக்க முன்வந்தன. பயிற்சியான அறுபது நுகரும் நாய்களைப் [Sniffing Dogs] பிரிட்டன் காப்புக்குழு கொண்டு வந்து புதைபட்ட மாந்தரைத் தேடிக் காப்பாற்ற உதவி செய்தது. பிழைத்தோருக்கு மருத்துவச் சிகிட்சை புரிய அன்னிய நாட்டு மருத்துவர்கள், நர்ஸ்கள் தயாராக இருந்தனர். இறந்தோர்கள் துணியில் சுற்றப்பட்டு, மாபெரும் குழிகள் தோண்டப்பட்டுப் புதைக்கப் பட்டார்கள்.
உடனடியாகச் செய்ய வேண்டிய உதவிகளை உலக நாடுகள் புரிந்தன. முதலில் வீடிழந்த மாந்தருக்கு உண்ணவும், உறங்கவும் மற்ற தேவைக்கும் வேண்டிய உணவுப் பண்டங்கள், அருந்த நீர், குளிருக்குப் போர்த்திக் கொள்ள போர்வைகள், உறங்கப் பாய், படுக்கைகள் போன்றவை கொண்டு வரப்பட்டன. அடுத்து தற்காலிகமாகத் தங்கிக் கொள்ள கூடாரங்கள், கழிப்பறைகள், நீர்வசதி அமைப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டன. பிறகு மனத்தேற்றல், மனஆறுதல், சமூக அருட்சேவை அளிக்க சில குறிப்பிட்ட பணியாளர்கள் முன்வந்தார்கள்.
California Highway
ஓயாமல் நிகழும் உலக நிலநடுக்கங்கள்!
முப்பது வினாடிக்கு ஒருமுறை பூமா தேவி தன் தோளை அசைக்கிறாள்! ஒவ்வோர் ஆண்டிலும் 500,000 நடுக்கங்களைப் பதிவு செய்கின்றன, துல்லிய நிலநடுக்க மானிகள் [Seimometers]. ஆனால் மனித உணர்வு நரம்புகள் உணர முடியாதபடி நுணுக்கமான அதிர்வு அலைகள் இவை! ஆண்டுக்கு ஒருமுறைச் சராசரி 7 ரிக்டர் அளவு அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு பூகம்பம் ஒன்றும், மற்ற அளவில் 18 நில ஆட்டங்கள் நேராலாம் என்றும் புள்ளி விபரம் கணிக்கப் பட்டுள்ளது! உலகத்திலே பதிவான மிகப் பெரிய உச்ச நிலநடுக்கம் 9.5 ரிக்டர் அளவில் 1960 ஆம் ஆண்டு தென்னமெரிக்கா சில்லியில் நிகழ்ந்திருக்கிறது! அப்பெரும் பூகம்பத் தாக்கல் 100 மெகாடன் அணு ஆயுத வெடிப்பு ஆற்றலுக்கு நிகரானச் சேதங்களை ஏற்படுத்தியது!
இத்தாலியின் கால்புறம் உள்ள ஸிசிலியில் மெர்கல்லி 10 எண்ணளவில் [Mercalli Scale] பெரும் பூகம்பம் ஒன்று நேர்ந்துள்ளது! 1906 இல் வரலாற்றில் முக்கியமானதாய்ச் சொல்லப்படும் ஸான் பிரான்ஸிஸ்கோ நிலநடுக்கம் 8.3 ரிக்டர் அளவில் நேர்ந்து 700 மாந்தர் இறந்ததுடன், 400 மில்லியன் டாலர் சேதாரங்களை ஏற்படுத்தியதாக அறியப்படுகிறது! அமெரிக்காவில் நேர்ந்த (7.3-9.2) ரிக்டர் அளவுப் பெரு நிலநடுக்கம் 27 எண்ணிக்கையில் 11 அலாஸ்கா, 9 காலிஃபோர்னியா, 3 மிஸ்ஸெளரி மாநிலங்களில் நேர்ந்தவை!
நிலநடுக்கத் தீவிரத்தை ‘ரிக்டர் அளவில் ‘ [Richter Scale] குறிப்பிடுகிறார்கள். நிலநடுக்கப் பதிவுக் கருவியைக் கண்டு பிடித்த காலிஃபோர்னியா நிலநடுக்கவாதி, சார்லஸ் ரிக்டர் [Seismologist, Charles Richter] பெயரே, அதற்கு வைக்கப் பட்டுள்ளது. உலக வரலாற்றில் இதுவரை நேர்ந்த உச்ச நில அதிர்ச்சிகளின் தீவிர வீச்சு [Magnitude Range] (8.5-9.5) ரிக்டர் அளவில் உள்ளது. பூகம்பத் தீவிரம் [Earthquake Magnitude] 7.5 ரிக்டர் அளவுக்கும் மிகையானவை மாபெரும் [Great] நிலநடுக்கங்களாகக் கருதப்படுகின்றன. தீவிரம் (6.5-7.5) ரிக்டர் அளவுள்ளவை பெரும் [Major] பூகம்பங்களாகவும், (5.5-6.5) ரிக்டர் அளவுகள் உயர்நிலைப் பிரிவிலும் [Large], (4.5-5.5) ரிக்டர் அளவுகள் நடுத்தரப் பிரிவிலும் [Moderate], 4.5 அளவுக்கும் குன்றியவை சிறிய பிரிவிலும் சேர்பவை.
Gujarath
நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது ?
பூமிக்கடியில் அழுத்தம் நிரம்பிப் பொங்கும் போது, தளத்திட்டுகள் [Plates] எம்பி நகர்ந்து பூகம்பம் ஏற்படுகிறது! அத்தள நடுக்கத்தில் பழுதுக் கோடு [Fault Line] என்று சொல்லப்படும் பகுதியில், நிலத்தடி மட்டத் திட்டுகள் நகண்டு சிதையலாம். அல்லது பூமியின் கீழ்த்தளத்தில் பிளவு, விரிவு ஏற்பட்டுப் பாறைகள் புலம்பெயரலாம். எந்த இடத்தில் பாறை நகர்ச்சி அல்லது நிலப்பிளவு முதலில் ஆரம்பிக்கிறதோ, அந்த இடத்தைக் ‘குவிமுனை ‘ அல்லது ‘மூலப் பிளவு முனை ‘ [Focus or Point of Origin] என்று குறிப்பிடுகிறார்கள். பூகம்பம் புலநகர்ச்சி குவிமுனைச் சுற்றியுள்ள பாறைகளின் வழியாக எல்லாத் திசையிலும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பி, பூமியின் மேல்தளத்தையும் உலுக்கி அசைக்கிறது. இந்த உலுக்கலும், குலுக்கலும் உண்டாக்கும் அதிர்ச்சி உக்கிரம் குவிமுனையின் பூமி ஆழத்தைச் சார்ந்தது! மேலும் குவிமுனையை அண்டிய பாறைகளின் உறுதியையும், அவை நகரும் போக்கையும் பொருத்தது!
பூதளத்தின் மீதுள்ள ‘உலுக்குமையம் ‘ [Epicenter] குவிமுனைக்கு நேர்மேலாக இருந்தாலும், பேரளவுச் சிதைவு பல மைல்களுக்கு அப்பால் நேரிடுகிறது! பூகம்பம் ஏற்படும் போது முதலில் பிரதம வீச்சு அலைகள் ஆட்டுகின்றன. இரண்டாவது மூர்க்கமான துவித வீச்சு அதிர்வுகள் உண்டாகி அசைக்கும் போது, பெருஞ் சேதம் விளைவிக்கும் தளப்பரப்பு அலைகள் உண்டாகின்றன. பூகம்பம் ஏற்படுவதற்கு முன்பாக முன்னதிர்ச்சியும் [Foreshocks], பின்பு பின்னதிர்ச்சியும் [Aftershocks] சில காலம் நீடிக்கும்!
பூமிக்குள்ளே உண்டாகும் நிலநடுக்கச் சங்கிலித் தொடர்பு!
உலகப் பூதளப் படத்தில் நிலநடுக்கப் பிரதேசங்களின் சங்லிகித் தொடுப்பைக் காணலாம்! குறிப்பாகத் தென்னமெரிக்க முனையில் மேற்கரையோரம் ஆரம்பித்து, சில்லி, பெரு [Chille, Peru] நாடுகள், அடுத்து மத்திய, வட அமெரிக்காவில் மேற்கில் தொடர்ந்து மெக்ஸிகோ, காலிஃபோர்னியா, வாஷிங்டன் மாநிலங்கள் வழியாக அலாஸ்காவைக் தொட்டு நிலநடுக்கச் சங்கிலி ஜப்பான், சைனா, வட இந்தியா, இந்தோனேசியா, மத்திய ஆசியாவில் ஈரான், அடுத்து ஐரோப்பாவில் மத்திய தரைக்கடல் நாடுகளோடு முடிகிறது!
California Road
1835 ஆம் ஆண்டு தென்னமெரிக்காவில் சில்லியின் நிலநடுக்கத்தைப் பற்றி ஹெச்.எம்.எஸ். பீகிள் கப்பலின் காப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராய் [H.M.S. Beagle Captain, Robert FitzRoy] அறியச் சென்ற போது, உயிரியல் விஞ்ஞான மேதை, சார்லஸ் டார்வின் [Charles Darwin] அதன் ஆண்டிஸ் மலையில் பூதளச் சோதனைகள் செய்ததாக அறியப் படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அயர்லாந்தில் ராபர்ட் மாலெட் [Robert Mallet], பிரான்சில் அலெக்ஸிஸ் பெர்ரி [Alexis Perry], இத்தாலியில் லூயி பல்மெய்ரி [Luigi Palmieri] போன்ற ஐரோப்பிய விஞ்ஞானிகள் நிலநடுக்க மானிகளை உருவாக்குவதில் முற்பட்டவர்கள். லூயி பல்வெய்ரி முதன் முதலில் மின்காந்த நிலநடுக்க வரைமானியைப் [Electromagnetic Seismograph] படைத்து, எரிமலையான வெஸ்ஸூவியஸ் சிகரத்தில் ஒன்றையும், நேபிள்ஸ் பல்கலைக் கழகத்தில் மற்றொன்றையும் நிறுவனம் செய்தார். ஜப்பானில் ஜான் மில்னி, ஜேம்ஸ் ஈவிங், தாமஸ் கிரே [John Milne, James Ewing, Thomas Gray] ஆகிய மூன்று ஆங்கிலப் பேராசிரியர்கள் நில்லநடுக்க மானிகளை ஆக்கி அமைத்தனர்.
பூமிக்குள்ளே தூண்டப்படும் கொதிஉலைக் கவசக் கொந்தளிப்பு
பிரபஞ்சம் தோன்றும் போது, பேரளவுத் திணிவு கொண்ட பூமியின் உட்கரு [Highly Dense Earth ‘s Core], விண்வெளியில் வீசப்பட்ட மற்ற பிண்டங்களைத் தனது பூத ஆற்றலான ஈர்ப்பியல்பால் மையத்தை நோக்கி இழுத்துத் திட்டுத்திட்டாய், அடுக்கடுக்காய் வளைத்து தன் மேனி மீது அப்பிக் கொண்டது! அவ்விதம் திட்டுத் திட்டாய் பூமியின் மீது, ஒட்டிக் கொண்ட அடுக்கப்பட்ட மணற் தட்டுகள் [Plates] பேரழத்தத்தில் முடுக்கிய வில்போல் கட்டப் பட்டிருந்தன! பேரமுக்கத்தில் [Highly Stressed] வளைக்கப்பட்ட அத்தட்டுகள் ஒன்றுக் கொன்று இணைந்து சேராதவை! அப்பேரமுக்கம் பூமிக்குள் கொதித்துக் கொந்தளிக்கும் சக்தி வாயுவால் விடுதலை செய்யப்படும் போது, ஒன்று தட்டுகள் நிமிர்ந்து துண்டிக்கப் படலாம்! அல்லது ‘கவட்டை இரும்புபோல் ‘ [Tuning Fork] பெரும் அதிர்வலைகளை உண்டாக்கலாம்! அப்போது அதன் மேலுள்ள பூதளம் ஆட்டப் படுகிறது! அல்லது பூமியில் துளை உண்டாக்கப் பட்டு ஓர் எரிமலைத் தீப்பிழம்பைக் கக்குகிறது! பூகம்ப ஆட்டம், எரிமலை எழுச்சி ஆகியவை இரண்டும் பூமியின் உட்கருக் கொதி உலையில் நேரும் கொந்தளிப்பு வாயு வீச்சால் ஏற்படுகின்றன!
பூமியின் மையம் 3960 மைல் ஆழத்தில் உள்ளது. அதாவது பூகோளத்தின் ஆரம் 3960 மைல். பூதளத்தில் நிலநடுக்கம் தூண்டப்படும் குவிமுனை [Focus] துவக்க நுனியிலிருந்து, முறுக்கப்பட்ட வில்தட்டு சக்தியை விடுவிக்கிறது! அந்த ஆழம் நிலநடுக்கக் குவிமுனை ஆழம் [Focal Depth] எனப்படுகிறது! பொதுவாகப் பூகம்பங்கள், 42 மைல் குவிமுனை ஆழத்திலிருந்து கிளம்பும்! அவை ஆழமற்ற தரமாக வகுப்படுபவை. குவிமுனை ஆழம் 42 முதல் 186 மைல் வரைக் கீழிருந்து வருபவை ‘இடைத்தரம் ‘ எனப் பிரிவுபடுபவை. நிலநடுக்கம் 435 மைல் ஆழத்திலிருந்து கூட எழலாம்! அவை யாவும் ‘உயர்தரத்தைச் ‘ சார்ந்தவை. பெரும்பான்மையான பூகம்பங்கள் பூமியின் ‘அடித்திட்டு ‘ [Crest] அல்லது ‘மேல்மட்ட கவசம் ‘ [Upper Mantle] ஆகிய ஒன்றிலிருந்துதான் எழுகின்றன.
நிலநடுக்கம் கடலின் ஆழத்தில் நிகழும் போது, அடித்திட்டுகளில் எழுந்த ‘கவட்டை இரும்பு ‘ [Tuning Fork] அதிர்வுகள் 600 மைல் வேகத்தில் பயணம் செய்து, கடலில் 50 அடிக்கும் மேற்பட்ட உயரத்தில் பேரலைகளை உண்டாக்கிக் கரையில் சில சமயம் சூறாவளிக் ‘கடற்புயலை ‘ [Tsunami] வீசிகிறது! 1964 ஆம் ஆண்டில் அலாஸ்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம் கடற்புயலை வீசி கோடியாக், கார்டோவா, ஸீவேர்டு [Kodiak, Cordova, Seward] போன்ற நகர்களின் கடற்கரைகளை உடைத்தது! அம்மாதிரிக் கடற்புயல்கள் காலிஃபோர்னியா கடற்கரையிலும், ஜப்பானிலிலும் பலமுறை நேர்ந்துள்ளன!
காலிஃபோரினியா கடற்கரைப் பழுதுக் கோடு
சில நிலநடுக்கங்கள் ஆழமற்ற இயல்பில் [Shallow Types] எழும்பிக் கண்ணால் காணும்படிப் பூதளத்தில் கீறல் உண்டாக்கிச் சரிவுப் பழுதுகளை [Slipping Faults] ஏற்படுத்தும். அவற்றின் சரிவுத் தடங்கள் பூமியின் அடித்தளத்திலும் தெரியும். அதே சமயம் பூமிக்குப் பல்லாயிரம் அடிகளுக்குக் கீழாக அழுத்தம் பேரளவாகி, உராய்வு விசைகள் [Frictional Forces] மிகுந்துள்ளதால், சரிவுப் பழுதுகள் ஏற்பட வழியில்லாமல் போகிறது. பூமிக்கடியில் அடித்திட்டுகள் ஒன்றோடு ஒன்று உராயும் போதோ, பேரமுக்கத்தால் துண்டுபட்டு இரண்டாய்ப் பிளக்கும் போதோ, எம்பும் அதிர்வுகளால் பூகம்பம் உண்டாகலாம்!
காலிஃபோர்னியாவின் நீண்ட கடற்கரை அருகே, ‘பசிபிக் திட்டு ‘ [Pacific Plate], என்றும் ‘வட அமெரிக்கத் திட்டு ‘ [North American Plate] என்றும் இரண்டு வேறுபட்ட ‘தளத்திட்டுகள் ‘ [Plates] அமைந்துள்ளன! பசிபிக் திட்டில் பசிபிக் கடல் தரையும், வட அமெரிக்கத் திட்டில் வட அமெரிக்கக் காண்டமும், அட்லாண்டிக் கடல் தரையின் ஒரு சிறு பகுதியும் உள்ளன. இரண்டு திட்டுகளுக்கும் இடையே ‘பழுதுக் கோடு ‘ [Fault Line] 650 மைல் நீளமும், 10 மைல் அகண்ட ஸான் ஆன்டிரியா ஃபால்ட் [San Andrea Fault] உள்ளது.
பசிபிக் திட்டு வட மேற்குத் திசை நோக்கி வட அமெரிக்கத் திட்டுடன் ஆண்டுக்கு ஒருமுறை 2 அங்குலம் உராய்கிறது! அப்போது ஸான் ஆன்டிரியா ஃபால்ட் அதற்குகந்து நகர்ந்து [Creeps] ஊர்ந்திடுகிறது! அந்தச் சமயத்தில்தான் சில மெதுவான நில அதிர்ச்சிகளும், மட்டநிலை நிலநடுக்கங்களும் நேர்கின்றன! மற்ற இடங்களில் அவ்வாறு மெது நகர்ச்சி [Creep] எதுவும் இல்லாமல், நூறாண்டுகளாக ‘அமுக்க இழுப்பு ‘ [Strain] சேமிப்பாகி, மாபெரும் பூகம்பங்கள் ஏற்பட்டுப் பேரழிவுகள் விளைவிக்கின்றன!
பூகம்பத் தீவிரம், நிலநடுக்க உக்கிரம்
நிலநடுக்கவாதிகள் [Seismologists] பூகம்பத்தின் தீவிரத்தை [Earthquake Magnitude] ஓரிலக்கமாகக் குறிப்பிடும் போது, ‘உலுக்குமையத்தில் ‘ [Epicenter] நேரிடும் மேல்தளப் பேரழிவு உக்கிரத்தை எடுத்துக் கூறுகிறார்கள். பூமிக்குள் ஏற்படும் ஆட்டசக்தி, மேல்தள அழிவுசக்தியை விட மிகையானதால், உலுக்கு மையத்தின் விளைவுகளை ஒப்பிடுவது மட்டும், பூமிக்குள்ளே உதிக்கும் பூகம்பத்தின் பூரண சிதைவாற்றலை எடுத்துக் காட்டாது! அதனால் நிலநடுக்க உக்கிரத்தைக் [Earthquake Intensity] கணிப்பதை விட, பூகம்பத்தின் ஆற்றல் தீவிரத்தைக் குறிப்பிடுவது சாலச் சிறந்தது. நிலநடுக்க உக்கிர ஆய்வுகளைச் செய்து வருவது, ‘நிலநடுக்க எதிர்பார்ப்பு தளப்படங்களை ‘ [Seismic Risk Maps] வரையப் பயன்படுகிறது.
பூகம்பத் தீவிரக் கணிப்பு, நிலநடுக்க இயல்பின் வடிவுக்கு ஓர் துல்லியமான அளவியலைக் காட்டும். பூகம்பத்தினால் ஏற்படும் சிதைவுகளைப் புறக்கணித்து, வெறும் நிலநடுக்க சக்தியின் ஆற்றலை மட்டும் பூகம்பத் தீவிரம் குவிந்து நோக்குகிறது. நிலநடுக்க மானிகளில் பதிவாகும் அதிர்வு அலைகளின்
‘வீச்சு அகற்சியைப் ‘ [Amplitude of the Waves] பூகம்ப சக்தியைக் குறிப்பிடும் ஓர் அளவெண்ணாக எடுத்துக் கொள்ளலாம். பூஜியத்திலிருந்து மேலே கிளம்பி, தீவிர ஆற்றல் 10 ஏற்றத்தில் உயர்கிறது. அதாவது தீவிர நிகழ்ச்சி 5 என்பது, தீவிர நிகழ்ச்சி 4 ஆற்றலை விட 10 மடங்கும், தீவிர நிகழ்ச்சி 3 விட 100 மடங்கும் மிகையாகக் காட்டும் லாகிருத அடுக்கைப் [Logarithmic Scale] பின்பற்றுவது. இந்த லாகிருத அடுக்கு நிலநடுக்க அளவியலில், ஒவ்வொரு புள்ளியும் 30 மடங்கு ஏற்ற ஆற்றலைக் குறிக்கும்.
பூகம்பத்தினால் ஏற்படும் பாதிப்புகள், அழிவுகள்
பூகம்பம் திடாரென ஏற்பட்டுப் பரந்த தளப்பரப்பை ஆட்டி அசைத்துச் சேதம் விளைவிக்கும் பெரு விபத்து! விஞ்ஞானிகள் நிலநடுக்கத்தை அளக்க, முன்னறிவிக்க சீரிய கருவிகளைப் பயனபடுத்தினாலும், கட்டப் பொறியாளிகள் பாதுகாப்பான கட்டடங்களை அமைத்தாலும், பூகம்பங்கள் நிகழ்ந்து கோரச் சிதைவுகளை விளைவிக்கின்றன. பூமியின் உட்பகுதியில் ஏற்படும் கொந்தளிப்பால், கீழ் மட்டத் திட்டுகள் அங்குமிங்கும் அசைந்து, நிலநடுக்கம் உண்டாகிறது! அப்போது அடிதளப் பாறைத் தொடுப்புகள் ஒரு பழுது வரைக்கோட்டில் [Fault Line] தீவிர ஆட்டத்தைக் கிளரி, நிலநடுக்கம் மேலும், கீழும் அல்லது முன்னும், பின்னும் அல்லது ஈரசைவுகள் கலந்தும் பெருஞ் சேதங்களை உண்டாக்குகின்றன!
இரும்பால் உறுதியான காங்கீரிட் வீதிகள் கூட வெட்டப்பட்டுத் துண்டாகிப் போகின்றன! ஓங்கி எழுந்த காங்கிரீட் கட்டங்கள் குலுக்கப் படும்! உலுக்கப் படும்! ஊஞ்சல்போல் ஆடும்! அல்லது குப்புறக் குடைசாயும்! இல்லங்களின் வலுவிற்கு ஏற்ப அவை ஆட்டத்தைத் தாங்கிக் கொள்ளலாம்! அல்லது உடைபட்டுத் தவிடு பொடியாய்த் தகர்ந்து போகலாம்! எரிவாயுப் பைப்புகள் முறிந்து தீப்பற்றி விழும் பொருட்களை எரித்து அழிக்கலாம்! விழுகின்ற பொருட்கள் பட்டு அல்லது குழிந்து போன குகை இடுக்குகளில் சிக்கி ஆயிரக் கணக்கான மனிதர்களும் விலங்கினமும் செத்து மடியலாம்!
San Francisco Earthquake 1906
பூகம்ப விளைவு மானிடத் தோற்றத்தின் நிலையாமை நிரூபிக்கும் கடவுள் திருவிளையாடல்களில் ஒன்று! விஞ்ஞானக் கருவிகளைப் பயன்படுத்தி நிலநடுக்க வருகையை அறிவிக்க முடியுமே தவிர, மனிதரின் அசுர ஆற்றலில் பூமியின் ஆட்டத்தைத் தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது! கட்டடப் பொறியியற் கலை நுணுக்கத்தால் பூகம்பம் நொருக்காத, முறுக்கப்பட்ட காங்கிரீட் கோட்டைகளைக் கட்டி அங்கே மனிதர் குடியிருக்கலாம்! குடியிருக்கக் குடிசை கூட இல்லாத ஏழைகள் கோடிக் கணக்கில் வீதியில் உள்ள போது, மண்குடிசையில் வசிக்கும் மாந்தர் மில்லியன் எண்ணிக்கையில் இருக்கும் போது, பூகம்பங்கள் நேர்ந்தால் ஒவ்வொரு முறையும் ஆயிரக் கணக்கான மக்களின் உயிர்களை அவை அபகரித்துத்தான் செல்லும்!
தகவல்கள்:
1. Volcanoes & Earthquakes, Time & Life Books [1997]
2. Marvels & Mysteries of the World Around Us, Reader ‘s Digest Book [1977]
3. Hutchinson Encyclopedia of the Earth By: Peter Smith [1986]
4. Iran Earthquake, Reuters AlertNet www.alertnet.org/thenews [Dec 31, 2003]
5. Xinhuanet -English http://news.xinhuanet.com/english/2004-01/02/content_1258625.htm
6. Deadly History of Earthquakes [May 30, 1998]
7. Earthquake History www.readinessinfo.com/eqhistory.shtml
8. Aljazeera.net Iran Earthquake http://english.aljazeera.net/NR/ [Dec 27, 2003]
9. Largest Earthquakes in the USA By: US Geological Survey Earthquake Hazards Program http://neic.usgs.gov/neis/eqlists
10 Earthquakes -General Interest Publications www.pubs.usgs.gov/gip/earthql/how.html
******************
jayabar@bmts.com
- எனக்குப் பிடித்த கதைகள் – 93-திரும்பிச் செல்லமுடியாத இடம்-கேசவதேவின் ‘நான் ? ‘
- கிறிஸ்மஸ் விடுமுறை
- நீ வருவாயா ?
- அன்புடன் இதயம் – 2
- மின்சாரமில்லா இரவு
- நாடகமேடை
- இந்திய பாரம்பரிய கல்வியும் மூடநம்பிக்கையும்
- பின்னல்
- வெற்றியின் எக்களிப்பும் தோல்வியின் அவமானமும்-( பெருமாள் முருகன் சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)
- கவிஞர் வைரமுத்துக்கு அகாதமி பரிசும் கனவில் நடந்த கவியரங்கமும்
- வாசக அனுபவம்: வல்லிக்கண்ணனின் ‘வாழ்க்கைச் சுவடுகள் ‘
- மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]
- கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்-அ.முத்துலிங்கத்தின் கதைகளுக்கு ஒரு முன்னுரை
- நீளப் போகும் பாதைகள்
- அவதூறுகள் தொடாத இடம்
- பாரதி இலக்கியச் சங்கம்-சிவகாசி
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன்- ஒனொரே தெ பல்ஸாக் (Honore de Balzac- 1799-1850)
- ஜனவரி 10,11 ஆம் தேதிகளில் சென்னையில் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘
- சில கட்டுரைகள்,சில கேள்விகள்,சில கருத்துகள்
- எனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன்
- கடிதங்கள் – ஜனவரி 8,2004
- வாரபலன் – டிசம்பர் 8,2004 – ஆலய வாசல் – எழுத்தில் இசைத்த சிவகுமார் – பா ராகவன் மின்நாவல் – ஆண்பாவம் பொல்லாதது
- தமிழ் ஒழிக!
- அன்புள்ள செல்வி.ஜெயலலிதாவிற்கு
- ஒளிரும் காரிருள்
- பொங்கலோ பொங்கல்
- நேற்று, இன்று, நாளை
- உலக நிலநடுக்கங்களில் ஒரு பெரும் பூகம்பம் ஈரானில்! (டிசம்பர் 2003)
- மின் ஆளுகை (E-Governance)
- பெரு வெடிப்புக்குப் பின்னர் பேரண்டம் உயிரற்று வெகுகாலம் இருந்தது.
- மூலிகை மருந்துக்களுக்கான உலகளாவிய தேவை இந்த மூலிகைச் செடிகளை அழிக்கக் காரணமாகிறது.
- சூரியனைப் போன்றே இருக்கும் நட்சத்திரம் விருச்சிகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
- விடியும்! -நாவல்- (30)
- நீலக்கடல் – அத்தியாயம் 1
- முதல் விருந்து, முதல் பூகம்பம், முதல் மனைவி
- மனமென்னும் காடு-அலைந்ததும் அடைந்ததும்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பது
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -6)
- ‘பாருவின் சமையல் ‘ (என் தாயார் அவர்களின் நினைவாக)
- அஞ்சலி: பேராசிரியர் ராமசேஷன் (1923-2003)
- பொங்கலைத் தேடி…
- நீ ஏன்…
- புரியாத புதிது
- கவிதைகள்
- வானவில்
- தி ண் ணை வாசக மகா ஜனங்களுக்குப் புத்தாண்டு – பொங்கல் வாழ்த்துக்களுடன் இரு இசைப்பாடல்கள்…
- பரவச கவிதைகள் சில
- நிழல்கள்
- மூன்று
- இரவின் அழகு
- தேவதேவனின் மூன்று கவிதைகள்
- வாருங்கள்