உரையாடல் குறித்த உராய்தல்கள் – தாஜுக்கு மறுமொழி

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

அருணகிரி



இரண்டு இதழ்களுக்கு முன் தாஜ் அவர்கள் எனது பதிலை விமர்சித்து எழுதியதைக் கண்டேன். தாமதமானாலும் பதில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இக்கடிதத்தை எழுதுகிறேன்.

தாஜ் மிகவும் குழம்பிப்போயிருக்கிறாற்போல் தெரிகிறது . ஈவேரா- காந்தி உரையாடல் நடக்கவே இல்லையென்றோ அந்த நிகழ்வு பொய் என்றோ நான் எழுதவில்லை. ஆனால் 21 வருடங்கள் உடைப்பில் போட்டு விட்டு காந்தி இறந்த பின் நேரிற்பதிவு செய்தது போல எழுதப்பட்ட உரையாடல் என்பதால் இதன் பழைய ட்ரான்ஸ்கிரிப்ட் எங்கேனும் இருக்கிறதா எனக்கேட்டேன். 21- ஆண்டுகள் கழித்து இந்த உரையாடலை கோர்வையுடன் (வெறும் செய்தியாக அல்ல) ஈவேரா தனது நினைவில் இருந்து எடுத்துப் பதிந்தார் என்றால் அந்த உண்மையையாவது வெளியிட வேண்டும் . இவற்றையெல்லாம் விட முக்கியமாக 1927-இல் நடந்த உரையாடலை 21 ஆண்டுகள் கழித்து காந்தி இறந்தவுடன் வசதியாக வெளியிட்டதன் நோக்கம் என்ன என்று கேட்டிருந்தேன் . அதாவது காந்தியடிகளின் இறப்பைக்கூட, தனது பார்ப்பனக் காழ்ப்பை உமிழ மற்றொரு சந்தர்ப்பமாக ஈவேரா உபயோகப்படுத்திக்கொண்ட கேவலமான சந்தர்ப்பவாதத்தை வெளிச்சம் போடவே அவ்வாறு கேட்டேன். இந்த விஷயத்தில் தாஜ் பொய் சொல்கிறார் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை , ஆனால் அவரைக்குறித்து அப்படி ஒரு சந்தேகம் பிறருக்கு எழக்கூடும் என அவர் எண்ணியிருந்தால் அதில் நியாயம் இருக்கிறதுதான். அதுவும் இதே திண்ணையில் ஜே ஜே சில குறிப்புகள் குறித்த விமர்சனம் பற்றியும் , மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் அருகேயுள்ள மசூதி குறித்தும் வெ. சா அவர்கள் சொல்லாத விஷயங்களை அவர் கூறியதாக வெகுவாகத் திரித்து தாஜ் எழுதியிருந்தது அப்பட்டமாக உண்மைக்கு மாறாக இருந்ததை வெசா அவர்களே வெளிச்சம் போட்டு விளக்கி விட்ட காரணத்தால்*, தாஜ் அவர்களது அரண்ட கண்ணுக்கு எல்லாக் கேள்விகளும் அவரைப் பொய்யன் என்று இடிக்க வரும் இருண்ட கேள்விகளாகத் தெரிகின்றன போலும் . எனது நோக்கம் அதுவல்ல; மட்டுமன்றி , தாஜ் அளித்த அவ்வுரையாடலை உண்மையென்றே நான் எடுத்துக் கொண்டதால்தான் என் எதிர்வினையே உருவானது. அவ்வாறே நான் அளித்திருந்த சுட்டியில் உள்ள ஈவேரா பேட்டியில் காணும் செய்திகளையும் உண்மையென்று கொண்டு தாஜ் தனது கருத்துகளை வைக்கலாம். அதில் உள்ள கருத்துகளும் கூட ஈவேரா பல இடங்களில் சொன்னதுதான். நிற்க.

எனக்கு வகுப்புக்கும் சாதிக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்று அலுத்துக்கொண்டுள்ளார் தாஜ். அதுவும் அந்தக்கால சூழல்கள் எனக்குத் தெரியவில்லையாம். செய்தியை நான் உள்வாங்கவில்லையாம். வகுப்பு என்று எந்த அர்த்தத்தில் பேசுகிறார் என்று ஈவேராவையே கேட்டு விடலாமா? 1926 என்ற “அந்தக்கால” சூழலில் குடியரசு பத்திரிக்கையில் ஈவேரா இவ்வாறு தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறார் . ‘நான் கர்நாடக பலிஜவார் வகுப்பைச் சேர்ந்தவன்’ (குடியரசு 22/8/1926). இப்போது புரிகிறதா, ஈவேரா எந்த அர்த்தத்தில் வகுப்பு என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார் என்று? இப்போது தெரிகிறதா, செய்தியைச் சரியாக உள்வாங்காதது யார் என்று? தனது ஆதிக்க சாதி வெறிக்கு பகுத்தறிவென்ற சாயம் பூசி பார்ப்பன வெறுப்பியல் அரசியல் நடத்திய ஈவேராவின் கயமை இப்போதாவது தாஜ் அவர்களின் கண்களுக்குத் தெரிந்தால் சரி.

ஈவேரா கலகக்காரராம், ஆம், இவர் செய்த கலகங்கள் ஒன்றா இரண்டா?

ஆலய நுழைவு, தீண்டாமை ஒழிப்பு என்ற பெயரில் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஹரிஜனங்கள் நிலைக்கோ பறையர்கள் நிலைக்கோ தள்ளப்படுவதை அரசு அனுமதிக்கக்கூடாது என்ற நிலையை எடுத்து, அதன் விளைவாக “தீண்டாமை விலக்கு என்பதும் கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பது தானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா ? இந்த அனுமதியால் இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப் பட்டு விட்டார்கள். அதனால் இதை நாம் அனுமதிக்கக் கூடாது” என்று முத்துதிர்த்த கலகச் செம்மல் அல்லவா ஈவேரா!

‘துணிவிலை ஏறிவிட்டதற்குக் காரணம் இப்போது பறைச்சிகளெல்லாம் ரவிக்கை போடுவது தான்’ என்று முழங்கியது கலகமோ கலகமல்லவா!

‘வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பதற்கு காரணம் பறையன்களெல்லாம் படித்துவிட்டது தான் காரணம்’ என்று ஆய்ந்தறிந்து சொன்ன கலகச் சக்கரவர்த்தி ஆயிற்றே ஈ .வே. ராமசாமி.

ஆங்கிலேயருக்கு எதிராகக் காந்தியடிகள் நடத்திய சத்தியாக்கிரகப் போர்கள்தான் மக்கள் “அயோக்கியர்களாகவும் காலிகளாகவும்” ஆனதற்குக் காரணம் என்று கண்டறிந்து சொன்ன கலகத் திலகம் அல்லவா ஈவேரா!

ஆனால் ஆங்கிலேயர்களை எதிர்ப்பதில் மட்டும் எங்கே இந்த கலக புத்தி வந்து களி தின்ன வைத்து விடுமோ என்று வெள்ளைச்சேவகம் புரிவதிலேயே வெகு கவனமாக இருந்திருக்கிறார் நம் கலக வீரர், அம்மட்டோ? “பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி(த்தான்) ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படி (அயோக்கியர்களாகும்படி) தூண்டி விட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது !” என்று சொல்லி உடமையும் உயிரையும் இழந்து நாட்டுக்காகப் போரிட்ட அத்தனை விடுதலை வீரர்களுக்கும் அயோக்கியப்பட்டம் கட்டினாரே, அந்தக் கலகத்தை என்னவென்பது!

பார்ப்பனரல்லாத காந்தியின் இறப்பில் கூட பார்ப்பனீயத்தையே பார்த்து திட்டத் தெரிந்த ஈ.வே .ராவிற்கு வெண்மணியில் நாற்பதுக்கும் மேற்பட்ட உயிர்களை எரித்துக்கொன்ற ஆதிக்க சாதிகளைக் கண்டித்துப்பேச அன்று நா எழவில்லை. மாறாக அன்று களமிறங்கிப் போராடிக்கொண்டிருந்த அரசியல் இயக்கங்களைச் சாடி அறிக்கை விடத் தெரிகிறது, கடைந்தெடுத்த அயோக்கியக் கலகமல்லவா இது!

இதே பாதகத்தை அன்று ஒரு பார்ப்பன நிலச்சுவான்தார் செய்திருந்தால் ஈவேரா இப்படியா அறிக்கை விட்டிருப்பார் என்று எண்ணிப்பார்த்தால் போதும், ஈவேராவின் இரட்டை நிலையும் அப்பட்டமான ஆதிக்கசாதி அபிமானமும், சீர்திருத்தம் என்ற முகமூடியில் பார்ப்பனக்காழ்ப்பை மட்டுமே வைத்து பாசிச அரசியல் புரிந்த கயமையும் தெள்ளத் தெளிவாக விளங்கி விடும்.
“பெரியார் ஏன் மற்ற தலைவர்கள் போல் இயங்க வேண்டும்?” என்று சாமர்த்தியமாகக் கேட்பதாக எண்ணிக்கொண்டு கேட்டிருக்கிறார் தாஜ் . இதற்கு வெளிப்படையான பதில், ” ஈவேராவிற்கு வேறு ஒரு மாதிரியும் இயங்கத்தெரியாது ; ஆதலால் அவருக்குத் தெரிந்த ஒரே வகையான வெறுப்பியல் என்ற வகையில் அவர் இயங்கினார்” என்பதுதான். மற்ற தலைவர்கள் போல் இயங்க விஷய ஞானம் வேண்டும், கடுமையான உழைப்பு வேண்டும், ஆழ்ந்த படிப்பு வேண்டும், அல்லது வறுமையும் உழைப்பும் இணைகையில் விளையும் தியாகமும், பட்டறிவும் வேண்டும்- ஈவேராவிற்கு இவை எதுவுமே கிடையாது. பட்டறிவிலும், தன்னலமற்ற தியாகத்திலும், விஷய ஞானத்திலும், தமிழக முதல்வர்களிலேயே முதன்மையானவர் காமராஜ். அம்பேத்காருக்கு மொழியறிவும், கடுமையான உழைப்பும், முயற்சியும், பரந்த படிப்பறிவும் இருந்தது. நாராயணகுருவுக்கு ஆன்மீகத்தேடலும், மலையாளம் , தமிழ், சமஸ்கிருதம் என்று பலமொழிகளில் புலமையும், ஆன்மீகத்தில் சிறந்த ஞானமும் இருந்தது. ஈவேராவிற்கோ, பிற சீர்திருத்தவாதிகள் போல பரந்த மொழியறிவோ, ஆழ்ந்த சிந்தனையோ , விஷய ஞானமோ, தேடல் நிறைந்த படிப்பறிவோ, அதற்கான உழைப்போ ஆர்வமோ பொறுமையோ எதுவும் கிடையாது. மற்றவர்களிடம் இல்லாத ஆனால் ஈவேராவிடம் இருந்த இரண்டு விஷயங்களும் உண்டு : முன்னோர் வழி பெரும் சொத்து , சாதிக்காழ்ப்பு என்பவைதான் அவை. இதனால்தான் கிளிப்பிள்ளை போல எல்லா விஷயங்களுக்கும் பார்ப்பான், பார்ப்பனீயம் என்ற ஒரே மந்திரத்தையே ஓதிக் கொண்டிருந்தார். மற்ற தலைவர்கள் போல் இயங்க ஈவேராவிற்கு இதனால்தான் சாத்தியப்படவில்லை.

வெண்மணி பாதகம் பற்றி எழுதுகையில “அன்றைக்கு ஆட்சியில் இருந்த கருணாநிதி அரசே கூட அந்த பிரச்சனைக்குள் ஓர் அளவுக்குமேல் போக முடியவில்லை”. என்று தாஜ் எழுதியுள்ளார். வெண்மணி எரிப்பு நடந்தபோது ஆட்சியில் இருந்தது அண்ணாவின் அரசு. ( ஆனால் இதன்மீதான வழக்கு விசாரணைகள் நடந்ததும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலையானதும் நடந்தது கருணாநிதி அரசின் காலத்தில். தாஜ் அவர்கள் குறித்தது இதனை என்றால் சரியே). அது ஓரளவிற்கு மேல் போக முடியாததற்குக் காரணம் அந்தப்பாதகத்தை நிகழ்த்தியவர்கள் அன்றைய திராவிட அரசியலில் செல்வாக்காய் இருந்த நிலச்சுவான்தார்கள் என்பதுதான். அவர்களை எதிர்த்து அணிதிரண்ட இடதுசாரிகளில் பார்ப்பனர்களும் உண்டு, பார்ப்பனர் அல்லாதவரும் உண்டு. (திராவிட இயக்கம் சார்ந்த ஆதிக்க சாதிகளின் நிலப்பிரபுத்துவ மேலாண்மையையும் சாதிக்காழ்ப்பையும் இ.பா. வின் குருதிப்புனல் நன்றாகவே பதிந்திருக்கிறது ). ஆனால் ஈவேரா மிகத்தெளிவாக கம்யூனிச எதிர்ப்பு மற்றும் – பிரபுத்துவ ஆதிக்க சாதிகளை எதிர்த்து அறிக்கை கூட விடாமல் இருப்பது என்கிற நிலையை எடுத்தார். அவரது அறிக்கையில் ஆதிக்க சாதிகளைக் கண்டித்து ஒரு வாக்கியம் கூட இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இது என்ன எரியூட்டப்பட்ட அரிசனங்களின்மேல் உள்ள பரிவைக் காட்டுகிறதா அல்லது ஆதிக்க சாதிகளின் மீதுள்ள பிடிப்பைக் காட்டுகிறதா?

விவசாயிகள் விஷயத்தில் மட்டும்தான் அவர் இப்படிச் செய்தார் என்று எண்ணி விட வேண்டாம் . 1970-இன் தொடக்கத்தில் சென்னையிலும் சுற்றுப்புறங்களிலும் பல தொழிற்சாலைகளில் தொழிற்சங்க இயக்கங்கள் முனைப்பாய் இருந்த காலம். சிம்சன் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது அதனைக்கூட திராவிட ஆட்சிக்கு எதிராக பார்ப்பனர்கள் நடத்தும் போராட்டம் என்று தனக்குத் தெரிந்த ஒரே கிளிப்பிள்ளை மந்திரத்தைச் சொல்லி தொழிலாளர் இயக்கத்தை மலினப்படுத்தி அறிக்கை விட்டவர்தான் இந்த ஈவேரா.

மணியம்மையோடு நடந்த “கோலாகல”த் திருமணம் பற்றி தாஜ் எழுதுகையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சரியென்றால் பிறர் கண்டு கொள்ளக்கூடாது என்று தடாலடியாக ஒரு கருத்தை மொழிகிறார்- இதைச்செய்தவர் தாஜையோ என்னையோ போல சாதாரணர் அல்லர். மற்றவர் எப்படி வாழ வேண்டும் என்று தொடர்ந்து அதிரடி அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்த ஒரு சமூக இயக்கத் தலைவர் இவ்வாறு செய்யலாமா என்பதுதான் ஈவேரா மேலுள்ள விமர்சனம். ஊருக்கெல்லாம் சுயமரியாதைத் திருமணத்தை உபதேசித்து நடத்திக் கொடுத்தவர், தனது இரண்டாம் திருமணத்தை பதிவுத்திருமணமாகவே செய்தார். சொல்வதொன்றும் செய்வதொன்றுமாய் இருந்த இச்செயல்களால்தானே அண்ணா அவர்களும் ” தலைவர் தன் பீடமே பெரிது என்று கருதுகிறாரே ஒழிய சுயமரியாதையைப் பற்றி நினைத்தவராகத் தென்படவில்லை” என்று எழுத நேர்ந்தது!

வெள்ளையர்கள் இட்டுக்கட்டிய இன வெறிப் பொய்யை பிரச்சாரமாக மீண்டும் மீண்டும் பரப்பி, இனவெறியை ஆயுதமாக்கி, எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒரு சாதியைக் காரணம் காட்டி, ஆதிக்க சக்திகளுக்கும் ஆண்டை சாதிகளுக்கும் நேரத்திற்கேற்றாற்போல கொடி பிடித்து, எதிர்ப்பாளர்கள் இல்லாத நிலை உண்டாக்க வேண்டும் என்று “பத்திரிகைகளைப் பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும்” என்று சொல்லி வந்த ஒருவரை ‘தமிழக பாசிஸ்டு’ என்ற பதத்தின் மூலம் விமர்சிக்கையில் அவ்வார்த்தையின் முழு அர்த்தத்தோடும் வீச்சோடுமே அதனைப் பிரயோகித்து இருக்கிறேன்.

ஈவேராவைச் சுற்றி வந்து அவரது ஆகிருதியின் மூலை முடுக்கெல்லாம் கண்டறிந்தவராக தாஜ் இருக்கலாம், ஆனால் ஈவேராவின் அத்தனை இண்டு இடுக்களிலும் செலக்டிவான ஒரு சாதிக்காழ்ப்பும் ஒரு மதக்காழ்ப்பும் மட்டுமே வியாபித்து இருப்பது என்ன மாயத்தாலோ தாஜின் புலன்களில் பிடிபடவில்லை.

தமிழ்மண்ணில் இப்படி ஒரு தலைவரென வியப்படைந்தது தாஜ் மட்டுமல்ல , நானும்தான். வள்ளலாரும் வ.உ.சி.யும் காமராஜரும் ஜீவாவும் வாழ்ந்து ஆன்மீகத்திலும் அரசியலிலும் வளம் சேர்த்த தமிழ் மண்ணில், போயும் போயும் இப்படியும் ஒரு தலைவரா என என்னையும் வியக்க வைத்தவர்தான் ஈவேரா .


* http://www.thinnai.com/?module=displaystory&story_id=806101910&format=html

arunagiri_123@yahoo.com

Series Navigation