உருளைக்கிழங்கு உரிப்பவர்கள்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

அருண் கொலட்கர் (மொழியாக்கம் இரா.முருகன்)


—-

அவர்களுடைய கனவுகள்
பின்னாலிருந்து வெளிச்சம் போடும்.

உணவுவிடுதிச் சமையலறையாக
உருமாறிய வண்டி நிறுத்துமிட வாசல்.

இடுப்பில் அரைக்கால் சட்டையும்
வெற்று மார்புமாக
முழங்கைகள் முழங்காலில்பட,
உருளைக் கிழங்குகளை
கையில் மெல்ல உருட்டி உரித்தபடி
கவிழ்த்துப் போட்ட மூன்று
மரப்பெட்டிகளின் மேல்
கூனல் முதுகோடு அமர்ந்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவர் மனதின் இருண்ட பகுதியும்
வாய்விட்டுச் சொல்லப்படாத
மற்றவர் எண்ணங்களின் ஒளியில்
மங்கலாகப் பிரகாசிக்கின்றன.

உருளைக்கிழங்கு உரிக்கும்
மூன்று பேரின் அமைதியும்
மூன்று பக்கங்களாகப்
படிகம் ஒன்று எழுகிறது.

சைக்கிள் கைப்பிடிக்கு இருபுறமும்,
பின்னால் சுமைதாங்கியிலும்
தொங்க விட்ட பெரிய கித்தான் பைகளில்
நிரம்பி அழுத்தும் ரொட்டித் துண்டுகளோடு
வண்டியை நிறுத்தும் ரொட்டிக்கடைப் பையனின்
மனதில் ஒரு வினாடி
எழுந்து கடந்த எண்ணத்தைப்
பற்றிப் பிடிக்கிறது படிகம்.

வரம்பு மீறிய வானவில்
சிதறிய துண்டு ஒன்றைத்
தெறித்துப் பாயவைக்கிறது.

ரெட்டை மடிப்பு அட்டைப் பெட்டியைத்
தட்டையாக்கி விரித்து,
பழைய திரைப்படச் சுவரொட்டி
பாதி மூடிய மொட்டைத் தலைக்குத்
தலையணையாகத் தெருநாய் இருக்க,
சிரிக்கும் புத்தன் சாயலோடு
விழுதுகள் தாடியாக நீளும்
ஆலமர நிழலில்
இன்னும் உறங்கிக் கிடக்கிற
சித்தம் கலங்கிய பெண்பிள்ளையின்
நினைவை அது தொடுகிறது.

தூக்கத்திலும் சிரிக்கிறாள் அவள்.

அருண் கொலட்கர் – காலா கோடா பொயம்ஸ் – ‘The potato peelers ‘
மொழியாக்கம் இரா.முருகன் = நவம்பர் 04

Series Navigation