உருகிய சாக்லெட்

This entry is part [part not set] of 29 in the series 20070614_Issue

ஹமீது ஜாஃபர்‘என்னைப் பார்க்கும் ஆசையில் சாக்லெட் உருகிவிட்டது’ – இப்படி ஒரு குறுந்தகவலை , கவிஞர் நானா எனது கைப்பேசிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

உருகியது சாக்லெட் மட்டுமல்ல , என் மனமும்தான். அனுப்பிய பொருள் உரிய காலத்தில் கிடைக்காமல் போனால் இப்படித்தான் கதிகெட்டுப் போகும். சே! 130 திர்ஹம் – 1500 ரூபாய் – கொடுத்து வாங்கியது இப்படி ஆகிவிட்டதே என்று நொந்த என் மனது ரிவைண்ட் ஆகியது.

சென்ற ஜனவரி முதல் வாரம் அமீரகத்துக்குப் புறப்பட சென்னையை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தேன். என்னை வழியனுப்ப கவிஞர் அவர்களும் கூட வந்து கொண்டிருந்தார்.

கவிஞர் , தன் சொந்த ஊரில் மட்டுமல்ல தமிழகத்தில் முக்கிய அரசியல் தலைவர்களிலிருந்து இலக்கியவாதிகள் வரை அனைவராலும் மதிக்கப்படுபவர். பள்ளிப் பருவத்தில் ஆன்மீகத்தில் ஈடுபாடு; கல்லூரி காலத்தில் அரசியலில் ஈடுபாடு; கூடவே பொதுத்தொண்டு. பதவியை நோக்கி அலைவதில்ல, ஆனால் பதவிகள் இவரைத் தேடி வந்தபோது வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிக்கொண்டிருப்பவர். உறங்கிக்கொண்டிருந்தவரை எழுப்பி ஒரு நல அமைப்பின் உறுப்பினர் பதவியை தலைவர் அளித்ததால் ஏற்றுக்கொண்டார். அதனால் இப்போது சென்னையில் பெரும்பாலான நாட்கள் ஜாகை. ஏற்கனவே வாரத்துக்கு மூன்று முறை 250 கி.மி தூரத்திலிருக்கும் சென்னைக்கு வந்து போவார். சென்னை இவருக்கு கொல்லைபுறம். பறக்கும் சக்தி இருந்தால் காலையில் பல் துலக்கிவிட்டு டீ குடிக்க சென்னைக்கு வந்துவிடுவார்.

வசிக்கும் வீடு… ஊரில் எத்தனை செ.மீ. மழை பெய்கிறதோ அத்தனை செ.மீ. மழை இவர் வீட்டிலும் பெய்யும். என்ன நானா இப்படி ஒழுகுகிறதே! என்று கேட்டால், தம்பி நான் படுக்கிற இடத்திலெ ஒரு சொட்டுக்கூட ஒழுகவில்லை என்பார். கருணை உள்ளம் கொண்ட யாராவது ஓடு மாற்ற உதவி செய்தால் தலயை சொரிந்துக்கொண்டு நிற்கும் யாருக்காவது அந்த பணத்தைக் கொடுத்துவிட்டு அல்லாஹ் கொடுப்பான் என்று நமக்கு சமாதானம் சொல்வார்.

இலக்கிய கூட்டமாக இருந்தாலும் சரி, அரசியல் கூட்டமாக இருந்தாலும் சரி, மார்க்க கூட்டமாக இருந்தாலும் சரி வயிறு வலிக்க சிரிக்காமல் யாரும் வரமுடியாது. ஆழமான கருத்துக்களை நகைச்சுவையுடன் சொல்வதில் இவருக்கு நிகர் இவரே!

ஒரு இலக்கிய கூட்டம். கொடுக்கப்பட்ட தலைப்போ ‘ராமனின் வனவாசம்’. ஈரேழாண்டு சோதனைக் காலம்; ராமபிரானும் சீதா பிராட்டியாரும் கங்கையைக் கடந்து காட்டினுள் புகுகின்றனர்; வனத்தில் பல்வகை எழில்மிகு காட்சிகளை சீதைக்கு ராமன் காட்டிக்கொண்டு செல்கிறான். சாமுத்ரிகா லட்சணங்கள் ஒருங்கே அமையப்பட்ட காவியத்தலைவியைக் கண்ணுற்ற மான்களுக்கு சீதை ஒரு உண்மை மானாகப் படுகின்றாள்; வனாந்திர மயில்களுக்கு சீதை ஓர் உண்மை மயிலாகப் புலப்படுகிறாள்.

மானென்று நினைத்துக்கொண்டு மான்களெல்லாம் அவளை அண்டி வருகின்றன, அதுபோலவே மயில்களெல்லாம் மயிலென நினைத்தபடி அவளைப் பின் தொடர்கின்றன. இப்படி மான்களும் மயில்களும் ஒரு மயக்க நிலை அடைந்துவிடுகின்றன. மயிலோடு மயிலாகவும் மானோடு மானாகவும் சீதை ஆகிவிட்ட அந்த அழகை ராமன் உணர்ந்தோடல்லாமல் சீதைக்கு எடுத்து இயம்புகிறான், “சாயல் கண்டு நின் விழிகண்டு மஞ்ஞையும் மடமானும் பல வருவன் காணாய்” என்று கம்பன் தீட்டியதை இப்படி அழகுபட வருணித்ததைக் கேட்டுக்கொண்டிருந்த சிறப்பு பேச்சாளர் நீதிபதி, நான் பேசுவதற்கு ஒன்றுமில்லை கவிஞரே எல்லாவற்றையும் சொல்லிவிட்டார் என்று தன் தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொண்டுவிட்டு அடுத்த நாளே கூட்டாளியாகிவிட்டார்.

ஒரு சமயம் இஸ்லாமிய பொது கூட்டத்தில் குர்ஆனின் சிறப்பைப் பற்றி பேசும்போது, ‘அல்லாஹ் குர்ஆனில் எல்லாவற்றையும் தெளிவாக சொல்லிருக்கிறான்’ என்று சொன்னார். சற்று நேரத்தில் ‘பிரியாணிக்கு கறி எவ்வளவு போடவேண்டும் என்று அல்லாஹ் குர்ஆனில் சொல்லிருக்கிறானா?’ என்று ஒருவன் சீட்டு எழுதி மேடைக்கு அனுப்பிவிட்டான். அதை படித்த அவை தலைவர் நெளிய ஆரம்பித்துவிட்டார். சீட்டைப் பார்த்த இவர், ‘ஆம்! சொல்லிருக்கிறான்’ என்று முழங்கிவிட்டார். கூட்டத்திலிருந்தவர்களுக்கெல்லாம் ஒரே குழப்பம். மேடையிலிருந்த மார்க்க அறிஞர்களுக்கு அதைவிட…! இப்படிப்பட்ட குண்டக்க மண்டக்க கேள்விக்கு ஆம் என்று சொல்லிவிட்டாரே என்று தலையை சொரிந்துக்கொண்டிருக்க இவர் விளக்கம் கொடுக்கலானார்:

‘பிரியாணிக்கு கறி எவ்வளவு போடவேண்டும் என்பதைப் பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான் என்று தம்பி கேட்கிறார். ஆனால் வீட்டுக்கா? இல்லை வியாபாரத்துக்கா என்று தெளிவாக கேட்கவில்லை. வீட்டுக்கு என்றால் கறி, கிலோவுக்கு பத்து துண்டு போடலாம்; வியாபாரத்துக்கு என்றால் லாபம் வரவேண்டும், கிலோவுக்கு இருபது இருபத்தைந்து துண்டு போடலாம். என் நண்பர் ஹசன் மெய்தீன் ஹோட்டல் வைத்து நடத்துகிறார். அவர் ஒருமு
றை சொன்னார், கவிஞரே எல்லாரும் இருபத்தஞ்சு துண்டு போடுறாங்க, நா இருபது துண்டுதான் போடுறேன்; அதில் வரும் லாபம் போதும், ஹராமான லாபம் வேண்டாம் என்று. அவர் மனிதர், அதனால்தான் அவர் கடையில் எப்போதும் கூட்டமாக இருக்கிறது, பிரியாணி உடனே விற்று தீர்ந்துவிடுகிறது. இந்த கேள்வியை என்னிடம் கேட்டிருக்கக்கூடாது, பிரியாணி போடும் பண்டாரியிடம் கேட்டிருக்கவேண்டும். ஹசன் மெய்தீன் எனக்கு கூட்டாளி, அவர் சொன்னதால் எனக்கு தெரிந்தது. அதனால் சொன்னேன். இல்லாவிட்டால் எனக்கும் தெரியாது. எனவே ‘’எதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதோ அந்த துறையைச் சார்ந்த வல்லுனர்களிடம் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொள்ளுங்கள்” என்று அல்லாஹ் தன் திருமறையில் சொல்கிறான்’ என்று விளக்கம் அளித்து கேட்டவனைத் தலைகுனியச் செய்தார்.

நானும் கவிஞரும் அடுத்தடுத்த சீட். ஏர் குஷனுள்ள A/C பஸ். குளிராவிட்டாலும் வியர்வை வராமல் ஏசி எங்களைக் காப்பாற்றிகொண்டிருந்தது. அவர் கொண்டுவந்த நொறுக்குத்தீணியை கொறித்துக்கொண்டே சற்று நேரம் அமைதியாக இருந்தோம். கொஞ்ச நேரத்தில் தீணி தீர்ந்துவிட்டது. நான் ஆரம்பித்தேன்,

‘நானா! (இப்படித்தான் கவிஞரைக் கூப்பிடுவேன். வயதில் மூத்தவர்களை அழைப்பது. அண்ணன் என்று பொருள்) எப்போது மீண்டும் துபைக்கு வரப்போறீங்க?’

‘கூடிய சீக்கிரம் தம்பி. சிங்கப்பூர் போயிட்டு அப்டியே துபை வந்து ரெண்டுமூனு இலக்கிய கூட்டத்திலெ பேசிப்புட்டு மறுபடியும் சிங்கப்பூர் போய், அங்கேந்து ஊர் திரும்ப புரோகிராம் இருக்கு. துவா செய்ங்க.’

இதற்கிடையில் பஸ் பொறயாரைக் கடந்துக்கொண்டிருந்தபோது, ‘இந்த இடத்தைப் பார்த்துக்கொள்ளுங்க, இது என் நினைவில் நிற்கும் இடம்’ என்று ஓரிடத்தைக் காண்பித்தார். அது அப்படி ஒன்றும் குறிப்பிடும்படியாக இல்லை, குண்டும்குழியுமான பொட்டைத்திடல், நான்கைந்து கருவைச் செடிகள்; இரண்டுமூன்று பனை மரம். ராத்திரி பெய்த மழையில் பள்ளத்தில் கொஞ்சம் தண்ணீர் தேங்கி நின்றிருந்தது.

‘சரி, இங்கு என்ன விஷேசம்?’

‘இதை குத்துபுதீனிடம் கேளுங்க, அவருக்கும் எனக்கும் சம்பந்தமுள்ள விசேஷமான இடம்.’

‘ஏன் நீங்க சொல்லுங்களேன்!’

‘இல்லெல்லே, அவர்ட்டேயே கேளுங்க. அப்புறம் வேறொரு சேதி, எனக்கு ஒரு ஒதவி செய்யனும்.’

‘என்ன சொல்லுங்க..’

‘ஒன்னுமில்லே, நான் போன தடவை துபை வந்தப்பொ ஒரு சாக்லெட் வாங்கிவந்தேன்…’

‘என்ன பிராண்டு?’

‘பிராண்டல்லாம் கிடையாது, கலர் கலரா பேப்பர் சுத்தியிருக்கும் ஸ்வீட் ஷாப்பில் வாங்கிக்கொடுத்தார்கள், ரொம்ப டேஸ்டாக இருந்துச்சு.’

‘என்ன நானா, எத்தனையோ நல்ல பிராண்ட்ஸ் இருக்கு அதைவிடவா?’

‘ஆமா தம்பி! அந்த மாதிரி சிங்கப்பூர்லகூட கிடையாது, அது ஈரானி கடையிலேயோ அல்லது லெபனானி கடையிலேயோ கிடைக்குமாம் கூடையிலெ வச்சிருப்பானாம்.’

‘நீங்க சொல்றது சரிதான், என்னக்கு புரியுது, அந்த சாக்லெட் வேனும் அவ்வளவுதானே!’

‘ஆமா, அது எனக்கல்ல’

‘பின்னெ யாருக்கு?’

‘நம்ம சேத்தாச்சிம்மாவுக்கு.’

‘சேத்தாச்சிமா……….?’

‘நம்ம தலைவரோட பொண்டாட்டி. போனதடவை வந்திருந்தபோது கொண்டுவந்து கொடுத்தேன், அது அவங்களுக்கு புடிச்சுப்போச்சு, இரண்டுதடவை என்னிடம் கேட்டுட்டாங்க, அதனாலெ அந்த சாக்லெட்டோடுதான் பார்க்கனும்னு இருக்கேன்.’

‘சரி, வாங்கி அனுப்புறேன். ஆனா ஒரு கண்டிஷன். நம்பிக்கையான ஆளிடம்தான் அனுப்புவேன், லேட்டானாலும் ஆகும். ஆளைப் பொருத்தது. சரியா?’

‘சரி.’

பஸ் பாண்டிச்சேரியில் நின்றது. கன்னிமேரியை தரிசித்திட்டு வந்த சென்னை பாஸஞ்சர் ஒருவர் பக்தி பரவசம் மேலோங்க ஒயின் ஷாப்பை தரிசிக்கப் போனவர்தான். திரும்பவே இல்லை, அங்கேயே சங்கமித்துவிட்டார் போலும். அதனால் 15-20 நிமிஷம் லேட், டிரைவரை கவிஞர் சாடிய பின்தான் பஸ் புறப்பட்டது.

கோயம்பேடு பஸ் நிலயத்தை அடைந்தபோது இரவு 8.30. அங்கிருந்து ஆட்டோவில் எழும்பூரில் வழக்கமாக அவர் தங்கும் ராயல் லாட்ஜுக்குப் போனபோது VIP வரவேற்பு. ஒருத்தர் பாய் என்கிறார், ஒருத்தர் நானா என்கிறார், அண்ணே என்கிறார் ஒருவர், தலைவரே என்கிறார் வேறொருவர், இப்படி பலபேர் சுற்றிகொண்டார்கள். அத்தனைபேருக்கும் அழகான பதில்; குறைகள் அங்கேயே தீர்க்கப்படுகின்றன; வழிமுறைகள் சொல்லப்படுகின்றன; சிலருக்கு மறு நாள் அப்பாயிண்ட்மெண்ட்.

நான் ஒரு ஓரமாக நின்று வேடிக்கப் பார்த்துக்கொண்டிருந்தேன். எங்கிருந்தோ முளைத்த ரூம் பாய் ஓடிவந்து, ‘அண்ணே ஒங்க ரூம் ரெடி, ஒங்கக்கூட வந்தவர் யார்? பெட்டிப் படுக்கையெல்லாம் எங்கே? எல்லாத்தையும் எடுத்து வச்சுடறேன், நாலு பாட்டில் மினரல் வாட்டர் ரூம்லெ வச்சுட்டேன், சாப்பிட என்ன வாங்கிட்டு வர…?’ மூச்சுவிடாமல் கேட்டான்.

‘ம்….. பாத்தீங்களா! இப்படித்தான் நம்ம வாழ்க்கை’ என்று என்னைப் பார்த்து கவிஞர் சொல்ல, ‘காலையில் ஏர்போர்ட் போக கா….ர்?’ என்று நான் இழுத்தேன்.

‘அதெல்லாம் தானே நடக்கும், வாங்க ரூமுக்கு கைகால் கழுவிட்டு சாப்பிட போலாம், லேட்டா போனா சரவண பவன்லே ஒன்னும் கிடைக்காது.’

சரவணபவன்லே சப்பாத்தி, ரோஸ்ட் வேறு எதுவோ சாப்பிட்டதற்கு 120 ரூபாய் பில், பளிச்சென்று மூன்றாக மடித்திருந்த புதிய நோட்டை நீட்டிவிட்டார்.

‘நானா…! திஸ் ஈஸ் டூ மச், நீங்கத்தான் ஆட்டோவுக்கு கொடுத்தீங்க, இதுக்கு நான் கொடுக்கிறேன்’ என்று பணத்தை எடுத்தபோது பிடுங்கி என் ஜோப்பில் வைத்துவிட்டு ‘எல்லாம் ஒன்னுதான் தம்பி, சும்மா இருங்க’ என்று வார்த்தையை அழுத்தினார்.

அதற்குமேல் பேசமுடியவில்லை, ‘சரி, வாங்க போலாம்.’

‘தம்பி இங்கே வாங்க காருக்கு சொல்லலாம்.’

‘ஏன் நம்ம லாட்ஜிலே இருக்காது?’

‘இருக்கு, இங்கே நம்ம வசதிக்கு வருவான்.’

‘நானா, காசு நான்தான் கொடுப்பேன்.’

‘அவன் வாங்கிட்டா கொடுங்க.’

‘நீங்க வாங்கிக்க சொல்லனும்.’

‘சரி.’

எப்படி மூக்கில் வியர்த்ததோ அந்த டிரைவர் எங்களைத் தேடிக்கொண்டு வந்தார். அவரிடம் காருக்கு சொல்ல வாடகை எவ்வளவு என்று நான் கேட்டபோது 500 ரூபாய். ஆனா அண்ணனுக்கு 300 என்று சொல்ல நான் பணத்தை நீட்டிய போது அண்ணனுக்கு கணக்கு இருக்கு என்று சொன்னபோது கவிஞரின் முகத்தைப் பார்த்தேன்.

‘ம்…. பாத்துக்கிட்டீங்கல்ல, வாங்க பேசாம.’

ஹோட்டலை அடைந்தபோது இரவு 12.30. அப்போதுகூட கவிஞரைப் பார்க்க இரண்டு பேர் காத்திருந்தனர். இவர்கள் எப்படி மோப்பம் பிடிக்கிறார்களோ தெரியவில்லை. காலையில் பார்ப்போம் என்று அவர்களை அனுப்பிவிட்டு அறைக்குச் சென்றோம்.

சிறிது மௌனத்துக்குப் பின் நான் தொடங்கினேன்: ‘நானா, உங்களுக்கென்று நிரந்தர வருமானம் கெடையாது, அப்படியிருக்க எதுக்காக இப்படி செலவு பண்றீங்க?’

‘தம்பி…, கிணறு இருக்கே! அதிலுள்ள தண்ணியை எடுக்காமெ அப்படியே வச்சிருந்தா யாருக்குமே உபயோகப்படாது, தண்ணியும் கெட்டுப் போய்விடும். எடுத்தாத்தான் நல்லா இருக்கும், எடுக்கயெடுக்கத்தான் புது தண்ணி ஊறும். அப்படித்தான் காசும், செலவு பண்ணினாதான் வரும். அப்பத்தான் அல்லா கொடுப்பான், இல்லாவிட்டா கொடுக்கிறதை நிறுத்திடுவான்.’

‘ம்… ஹஜ்ரத் சொன்னது…’

‘ஆமா….!’

‘அதோட இன்னொன்னும் சொல்லிருக்கார்களே! கையெ ஒரேடியா விரிச்சிடக்கூடாதுன்னு..’

‘நான் விரிக்கலையே! நாளைக்குப் பாருங்க எவனாவது வந்து காசு கொடுத்துட்டுப் போவான். ஜோப்பிலே காசிருந்தா ஒரு பய வரமாட்டான்.’

‘நானா, என்னோட தோல்வியெ ஒத்துக்கிறேன், உங்களோட தர்க்கம் பண்ணமுடியாது, சரி தூங்கலாம்.’

சற்றுநேரம் உறங்கிவிட்டு காலை 5.00 மணிக்கு புறப்பட்டு 8.00 மணி ஃப்ளைட்டைப் பிடித்து அமீரகம் வந்து சேர்ந்தேன். மூன்று பத்துவருட இயந்திர வாழ்க்கையில் மீண்டும் ஒரு அத்தியாயம் தொடங்கியது.

Part II

தாயகத்திலிருந்து வந்த பிறகு எனக்கு அது முதல் வெள்ளிக்கிழமை, வார விடுமுறை நண்பர் குத்துபுதீன் என்னைப் பார்க்க வந்தார். பாவம்! லண்டனில்தான் ரூமுக்கும் ஆபீஸுக்கும் இரண்டு பஸ் பிடித்து இரண்டு மணி நேரம் போகவும் இரண்டு மணி நேரம் வரவும் என்றால் இங்கேயும் இப்படியா? எனக்கே ஒரு மாதிரியாக இருக்கும்போது அவருக்கு எப்படி இருக்குமோ?

ஊர் கதை, சொந்தக் கதை, சோகக்கதை எல்லாம் கதைத்து முடிந்த பிறகு கடைசியாக கவிஞர் பேச்சு வந்தது, ‘பொறையாறில் ஒரு இடத்தைக் காண்பித்து உங்களிடம் கேட்க சொன்னாரே, அந்த பொட்டத்திடலில் என்னங்க விசேஷம்..?’ என்றதும்தான் தாமதம். கெக் கெக் கெக் கே…. என்று சிரிக்க ஆரம்பித்துவிட்டார். ஒரு நிமிடம் எனக்கு எதுவுமே புரியவில்லை , ஆனால் எதோ தமாஷ் நடந்துள்ளது என்று மட்டும் ஊகிக்க முடிந்தது.

‘அட! சொல்லிட்டு சிரிங்க, நானும் சேர்ந்து சிரிக்கிறேன்…’

‘அது வேறு ஒன்னுமில்லை நானா (அவருக்கு நான் நானா), நானும் கவிஞரும் சீர்காழிக்கு ஒரு மீட்டிங்கிக்குப் போயிருந்தோம். அதுலே அவரும் பேசுறார், மீட்டிங் ராத்திரிக்குத்தான்.’

‘சரி அதுக்கென்ன?’

‘நாங்க காலையிலேயே புறப்பட்டுப் போய் அங்கே நண்பர் சாஜு வீட்டில் தங்கிட்டோம். மத்தியானம் விருந்து. மீன் ஆக்கி, ரால் பொரிச்சு, நண்டு பெறட்டி ஏக தடபுடலாக வச்சிருந்தார். நாங்களும் செம எடுப்பு எடுத்தோம். சாப்பாடு ஒத்துக்கலையோ என்னவோ அவருக்கு புடிங்கிக்கிச்சு. சாயந்தரம் அஞ்சு மணிக்கு நாலஞ்சுத் தடவை போயிடுச்சு,’

‘மாத்திரை எதாவது வாங்கி போட்டுக்க வேண்டியதானே, அப்படியே இல்லாவிட்டா கொஞ்சம் தேன் குடிச்சா ஒடனே நின்னுடுமே!’

‘அதெல்லாம் ஒன்னும் நடக்கலே; அவராலே தாங்க முடியலே, புறப்படு ஊருக்குன்னுட்டார். நான் சொன்னேன், ‘ நானா மீட்டிங் இருக்கே?’

‘மீட்டிங்காவது ம….ராவது, மேடையிலே எதாவது ஆயிட்டா? வாங்கங்க ஊருக்கு’ என்று அவசரப்படுத்திவிட்டார். நான் சாஜுக்கிட்டே மட்டும் சொல்லிப்புட்டு அடுத்த பஸ்ஸை புடிச்சு புறப்பட்டுட்டோம். பஸ் பொறையாறை நெருங்கியது, ‘ஓய்! பஸ்ஸை நிறுத்த சொல்லுங்கன்னார்.’

‘நானா கொஞ்ச நேரத்துலே வூடு போய் சேர்ந்திடலாம் என்றேன். அதுவரை தாங்காது பஸ் நிக்கலேன்னா இங்கேயே போய்டும்னு சொல்லிட்டார். வேறு வழி இல்லாது பஸ்ஸை நிறுத்தினோம். பஸ் நின்றதும்தான் தாமதம் ஓடி இருட்டுக்குள் மறைஞ்சுட்டார்.’

கொஞ்ச நேராத்துலே ‘குத்துபு…’ன்னு சத்தம் வந்துச்சு, ‘எங்கே இருக்கீங்க…?’ நான் கேட்டேன். இங்கேத்தான் இருக்கேன் பக்கத்திலே தண்ணி இருக்கான்னு பாருங்கன்னு சத்தம் கொடுத்தார்.

எனக்கு எதுவும் தெரியலே, ஒரே இருட்டா இருக்கு, தெரு விளக்குக்கூட எரியலேயே ‘என்ன செய்யனும்…’னு கேட்டேன்.

அப்டீன்னா கொஞ்ச தூரத்துலே பொட்டிக்கடை தெரியுது அங்கே போய் நாலு பாட்டில் தண்ணி வாங்கிக்கிட்டு வாங்க, அப்டீன்னார்.

நானும் விதியேன்னு அந்த இருட்டுலே நாலு ஃபர்லாங் நடந்து போய்… அந்த கடையிலே தண்ணி கேட்டா இல்லேன்னுட்டான். பக்கத்திலெ கொளம் குட்டை இருக்கான்னு கேட்டா, இருக்குசார் ஆனா அதுலே தண்ணி இல்லே அப்டீன்னுட்டான். வேறு வழி இல்லாமெ இரண்டு பாட்டில் ‘சவனப்’ வாங்கிக்கிட்டு வந்தேன். ஆனா அவர் எங்கே இருக்கார்னு தெரியலெ! ஒரு சவுண்டு கொடுத்தேன், ‘நானா…..! எங்கே இருக்கீங்க?’

‘நான் இங்கேத்தான் இருக்கேன்…’ என பதிலுக்கு சவுண்டு கொடுத்தார். ‘அவன் கடையிலெ தண்ணி இல்லே ‘சவனப்’தான் வாங்கிக்கிட்டு வந்திருக்கேன்..’ என்றேன். ‘இங்கே கொண்டுவாங்க…’ என்றார். நான், ‘முடியாது நீங்க இங்கே வந்து எடுத்துக்கிட்டு போங்க..’ என்று ரோட்டு ஓரமா நின்னுக்கிட்டேன்.

எதோ போற வாற வாகன வெளிச்சத்துலே நான் வாங்கிவந்த ‘சவனப்’பை எடுத்துக்கிட்டுப்போய் சுத்தம் செய்துகிட்டு வந்தார். நான் நினைக்கிறேன் உலகத்திலேயே ‘சவனப்’புலெ சுத்தம் செய்த ஒரே ஆள் இவராத்தான் இருக்க முடியும். அதனால்தான் அந்த இடத்தை மறக்கமுடியலெ!

நான்கு மாதங்கள் உருண்டோடின, திடீரென்று கவிஞரிடமிருந்து, ‘சாக்லெட்டை மறந்திருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்’ என்று sms வந்தது. ‘நான் மறக்கவில்லை, கொடுத்தனுப்ப சரியான ஆள் கிடைக்கவில்லை’ என்று பதில் அனுப்பினேன்.

ஒரு மாதம் கழித்து எனதூர் அன்பர் ஒருவர் புறப்பட இருந்தார். அவர் கவிஞருக்கு உறவுகூட, அவரிடம் கேட்டேன், ‘தம்பி, சாக்லெட் கொஞ்சம் வாங்கித்தருகிறேன் அதை கவிஞரிடம் கொடுத்துவிட முடியுமா? நிர்ப்பந்தம் இல்லை முடிந்தால் சொல்லுங்கள் வாங்கித்தருகிறேன்’ என்றேன். புறப்படும் அன்று வாங்கித்தாருங்கள் பத்திரமாக சேர்த்துவிடுகிறேன் என்றார். சாக்லெட்டாச்சே உருகிவிடப்போகிறது என்று புறப்படுவதற்கு சற்று முன்பாக ஒரு கிலோ வாங்கிக் கொடுத்துவிட்டு கவிஞருக்குத் தகவல் தெரிவித்தேன்.

அவர் ஊர் சேர்ந்து ஒருவாரம் ஆகிவிட்டது. ‘இன்னும் சாக்லெட் கிடைக்கவில்லை’ என்று கவிஞர் தகவல் அனுப்பிருந்தார்.

உறவுக்காரர்தானே நீங்கள் போய் பெற்றுக்கொள்ளுங்கள் என்று நான் ஒரு sms அனுப்பியதற்கு, ‘அவர் உறவு, அவர் மனைவி எனக்குப் பகை’ என்று பதில் அனுப்பிவிட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

இரண்டு நாள் கழித்து மீண்டும் ஒரு தகவல்: Beloved Brother, Assalamu Alaikkum. Chocolate oru vaaram avar veetil irunthathaal yennai paarkkum aasaiyil URUKIVITTATHU. Real taste minus. Yendraalum, ungkal anbukku nandri.

ம்… கொடுப்புனை இல்லை, சேத்தாச்சிம்மாவுக்கு. எனக்கு பணம் வேஸ்ட், கவிஞருக்கு எதிர்பார்ப்பு வேஸ்ட். அடுத்த consignment க்கு ஆள் தேடிக்கொண்டிருக்கிறேன்.


Email : maricar@eim.ae

Series Navigation

ஹமீது ஜாஃபர்

ஹமீது ஜாஃபர்