இரு வழிகள்

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

கே. ராமப்ரசாத்



நாள்தோறும் மாலையில் ஒவ்வொரு பூவாகப் பறந்து சென்று தேன் எடுப்பது தேனீயின் வழக்கமாக இருந்தது. இன்று அது கூட்டை விட்டுக் கிளம்பும்போதே பெரும்காற்று வீசத் தொடங்கியது. காற்றின் வேகம் தேனீயை வெகுதூரம் அடித்துக் கொண்டு போய்விட்டது. தேனீக்கு திசைகள் மறந்துபோன நிலமை ஏற்பட்டுவிட்டது. அது பறந்தபடியே அப்பகுதியில் இருந்த ஒரு நந்தவனத்திற்குள் நுழைந்தது.

அங்கே ஒரு சிறிய குளம் மற்றும் தோட்டம். தோட்டம் முழுவதும் வண்ண மலர்களால், தேன் மணத்துடன் அமைதியாக இருந்தது. அங்கே அத்தனை அழகான பூக்களையும், தேன் மணத்தையும் தேனீ அதுவரை அதன் வாழ்நாளில் பார்த்து அறிந்ததே இல்லை.

அது நந்தவனம் முழுவதும் சுற்றிச் சுற்றிப் பறந்தது. அப்போது ஒரு பெரிய பூ அதன் கண்ணில் பட்டது. அப்பூ ஆழமாகவும் இருந்தது. தேனீ அப்பூவின் உள்ளே எட்டிப்பார்த்தது. இதனுள் தேன் மிகுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தபடியே பூவின் உள் நுழைந்தது. உள்ளே ஒரே இருட்டு. அந்த இருட்டும், அமைதியும் தேனீக்கு இன்பத்தைத் தந்தது. அது தன்னை மறந்து பாடியபடியே பூவிலிருந்து வெளியே வந்தது.

அப்போது அங்கே இருந்த தவளை, சுவாரசியமாக அத்தேனீயைப் பார்த்தபடி, “நீ யார் ? உன்னை நான் இங்கு பார்த்ததில்லையே ?” என்று வினவியது.

“சிறகுகள் இல்லாத உனக்கு “நான் யார்” என்பது தெரியாது மற்றும் புரியாது” என்றது தேனீ.

“சிறகுகள் இல்லாமல் இருப்பது என் இஷ்டம். கால்களால் தத்தித் தாவி திரிவது என் விருப்பம். இது உனக்குத் தெரியுமா அல்லது புரியுமா ? ” என்று அமைதியாக வினவியது தவளை.

“உன் பேச்சு வெட்டிப் பேச்சு. தரையில் திரிவது மோசம். காற்றில் பறப்பது மேல். மேல் இருந்து பார்த்தால் தான் தெரியும் கீழ்.அறியாமையின் ருசி கண்ட மனம் இரு வழிகள் இல்லாத இடமில்லை என்பதை ஏற்காது.” என்று சொல்லிய தேனீ தவளையைப் பார்த்துப் புன்னகைத்தது.

மேலும் சொன்னது, ” சமூக உணர்வும், தன்னுணர்வும் சதா ஒத்துப்போகாமல் செய்து, பிரித்துப் பார்க்கும் சக்தியை நம்மிடம் இருந்து அகற்றிவிடும் சக்தி அறியாமைக்கு உண்டு.”

தவளைக்குப் புரிந்தது போலவும், புரியாதது போலவும் இருந்தது.

“இரு பாதையில் இறங்கினால் மீண்டும் வெளியே வரமுடியாது என்பது என் முடிவு” என்றது தவளை.

“ஒரே எழுத்துக்களால் ஆன சொற்களைப் போல ( ஆஆ, ஓஓ) ஆச்சரிய ஒலி மட்டுமே உன் முடிவில் ஒலிக்கிறது .நாம் தேடிப்போவதை நம்மை நாடி வரச் செய்யும் சூட்சுமம் எங்கே உள்ளது ? என்பதை அறிய நீ யோசித்துப் பார்த்ததுண்டா ?” என்றபடியே பறந்து சென்றுவிட்டது தேனீ.

இந்த உலகம் என்ற புத்தகத்திற்கு இரண்டு பக்கங்கள் மட்டுமே உண்டு. முதல் பக்கத்தில் ‘அ’ என்ற எழுத்தும், இரண்டாம் பக்கத்தில் ‘ஆ’ என்ற எழுத்தும் மட்டுமே இருக்கிறது என்ற முடிவிற்கு தவளை வந்துவிட்டது.

சொந்தமாக ஏதும் செய்ய திறமையில்லாவிட்டால் சம்பளத்திற்கு வேலை செய்வது போல, திறமை செயல்படாவிட்டால் பேரருள் செயல்படும் என்னும் எண்ணம் போல
இரண்டு வழிகளால் ஆனது இவ்வுலகம் என்றும் அத்தவளை எண்ணியது.

சத்தியம் என்பது கேட்டு, படித்து அறிவதா அல்லது தாமாகவே அனுபவித்து தெரிவதா? என்ற குழப்பமும் அதற்கு வந்தது.

அப்போது அப்பக்கமாகத் தரையில் ஊர்ந்து வந்த பாம்பு சட்டென அத்தவளையை விழுங்கியது. பிறகு சொன்னது, “காலத்துக்கும், இடத்துக்கும் பொருந்தாத அறிவற்ற யோசனை செய்தால் இப்படித்தான் முடிவு”.
————————–
kramaprasad@gmail.com

Series Navigation