இருளர் வாழ்வில் இசையும் கூத்தும்

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

மலர் மன்னன்


(2006 ஜூன் 17 அன்று சென்னை மீனாட்சி கல்லூரியில் அகில பாரத பாரதிய வரலாற்றுத் தொகுப்புப் பேரவையின் தமிழ் நாடு கிளை ஏற்பாடு செய்த தமிழக வனவாசிகள் பற்றிய கருத்தரங்கில் உரையாக வாசிக்கப்பட்ட கட்டுரை.)

யோசிக்கும் வேளையில் நாமனைவருமே வனவாசிகள்தாம். ஒட்டு மொத்த மனிதக் கூட்டமும் தொடக்கத்தில் தன் வாழ்வாதாரங்களுக்காக வனங்களையே முற்றிலும் நம்பியிருந்துவிட்டு, அதன் பிறகுதான் ஒரு பிரிவு தன் உயிர் தரித்திருத்தலுக்கு வனங்கள் மட்டும் போதாது என்று வேலியிட்ட முறையான வேளாண்மை, வீடு, வாசல் என்று தன்னை வனவாசிகளிடமிருந்து அந்நியப்படுத்திக் கொண்டது. பூமியின் வளங்களை நாசம் செய்யாமல், இயற்கையோடு இயைந்து, பெரும் சிக்கல்கள் ஏதுமில்லாது, வாழ்க்கையைத் தொடர முடிவு செய்தவர்கள் வனவாசிகளாகவே நீடித்தார்கள், இன்றும் நீடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறாக வனங்களிலிருந்து வெளியேறி, நாட்டுப்புற வாசிகளாக மாறியவர்களுக்கும் வனவாசிகளாக நீடிப்பவர்களுக்குமிடையேயான முக்கிய வேறுபாடு அடிப்படையிலேயே உருக்கொள்கிறது. வனவாசிகளின் வாழ்க்கை, தேவைகளின் அடிப்படையில் அமைகிறது ((need based). நாட்டுப்புறவாசிகளின் வாழ்க்கையோ, ஆசைகளின் அடிப்படையில் தொடர்வது (greed based).வனவாசிகளின் வாழ்க்கை கூட்டு வாழ்க்கையாக, சமூகத்தின் ஒட்டுமொத்த நலனையும் கருத்தில் கொண்டு அமைந்தது ((community based). நாட்டுப்புறவாசிகளின் வாழ்க்கையோ, தனிநபர் நலனை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது (individual based).

நாட்டுப்புறவாசிகளாக விலகிவந்த நாம், ஆசைகளின் அடிப்படையில் அமைந்த நமது வாழ்க்கையைத் தொடர்வதற்காகப் படிப்படியாக வனங்களை அபகரித்து, இயற்கையோடு இயைந்து தேவைகளின் அடிப்படையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டு அமைதியாகவும், அகமகிழ்வோடும் வாழ்ந்து வந்த நம் சகோதரர்களான வனவாசிகளின் வாழ்வாதாரங்களையெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டோம். நம்முடைய ஆக்கிரமிப்பு முற்றுப்பெறவில்லை. தினம் தினம் தொடர்கிறது. இதன் விளைவாக உலகம் முழுவதுமே வனங்கள் குறுகிக்கொண்டே வருகின்றன. வானுயர்ந்த பசிய மரங்களுக்குப் பதிலாக வானளாவிய காங்கிரீட் காடுகள் எங்கும் வளர்கின்றன. இதனால் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த வனவாசிகளும் வலுக்கட்டாயமாக நாட்டுப்புற வாழ்க்கை முறைக்கு இழுத்து வரப்பட்டு அவதிக்குள்ளாக்கப் படுகிறார்கள். கூட்டு வாழ்க்கைக்கும் சமூக நலனைக் கருத்தில் கொண்டு இயங்குவதற்கும் பழக்கப்பட்ட அவர்கள், தனிநபர் நலனையே குறியாகக் கொண்டு தொடரும் வாழ்க்கை முறையோடு ஒத்துப் போக முடியாமல் திகைத்து நிற்கிறார்கள்.

தென் பாரதத்தைப் பொருத்தவரை, பல்வேறு பிரிவினரான வனவாசிகள் உள்ளனர். இவர்கள் அனைவருமே இன்று வனத்தைச் சார்ந்தும் வாழ முடியாமல், நகர்ப்புற வாழ்க்கையோடும்

முழுமையாக ஒத்துப்போக முடியாமல் இரண்டுங் கெட்டானான வாழ்க்கை முறைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு இன்று இரண்டுங் கெட்டானான வாழ்க்கையை நடத்தியாக வேண்டிய கட்டாயத்திற்கு இலக்காகியிருக்கும் வனவாசிகளுள் இருளர்கள் முக்கியமானவர்கள். இருளர்கள் என்பது அவர்களாகத் தமக்கு வைத்துக் கொண்ட பெயராக இருக்க வாய்ப்பில்லை. நாம்தான் அவர்களுக்கு அப்படியொரு பெயரைச் சூட்டி
யிருக்கிறோம். இருள் என்றால் இருட்டு, இருட்டின் நிறம் கறுப்பு, இந்த வனவாசிகளின் சரும நிறமும் அவ்வாறாகவே இருப்பதால் அவர்களுக்கு இப்படியொரு பெயரைக் கொடுத்
திருக்கிறோம். எப்படியும் அடையாளப் படுத்துவதற்கு ஒரு பெயர் இருந்தாக வேண்டும் அல்லவா, ஆகையால் நானும் அவசியத்தைக் கருதி இந்தக் குறிப்பிட்ட வனவாசி சகோதரர்களை இருளர்கள் என்றே பதிவு செய்து என் கருத்துகளை முன் வைக்கிறேன்.

தென் பாரதத்தில் தமிழகம், கர்னாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய நான்கு மாநிலங்களிலுமே இருளர்கள் பரவலாக வசித்து வருகிறார்கள். தமிழ் நாட்டில் வாழும் இருளர்கள் பேசும் மொழி தமிழ்க் கலப்புடனும், கேரளத்தில் வாழும் இருளர்கள் பேசும் மொழி மலையாளக் கலப்
புடனும், கர்நாடகத்தில் வாழும் இருளர்கள் பேசும் மொழி கன்னடக் கலப்புடனும், ஆந்திரத்தில் வாழும் இருளர்கள் பேசும் மொழி தெலுங்குக் கலப்புடனும் வழங்கி வருகிறது.
தமிழ் நாட்டின் வடக்கெல்லையோரமாக வாழும் இருளர்கள் தெலுங்கையே தமது மொழியாக வரித்துக்கொண்டுவிட்டனர். இந்நிலைக்கேற்ப இருளர்கள் அந்தந்த வட்டாரங்களுக்கேற்ப இருளவர், இல்லிகா என்றெல்லாம் அழைக்கப் படுகிறார்கள். கசோவா, வெள்ளிகா எனவுங்கூட. இருளர்கள் வனங்களில் வாழ்ந்த போதிலும் மரங்களுக்கிடையேயும் புதர்களுக்கிடையேயும் நிலத்தைத் திருத்திச் சிறு குடிசைகள் அமைத்துக் கொண்டு ஒரு சமூகமாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். சமுதாய நிர்வாகத்திற்கான ஏற்பாடு ஒன்றையும் அவர்கள் முறைப்படி அமைத்துக்கொள்ளத் தவறவில்லை.

ஊர்த் தலைவன் ஊரு மூப்பன் என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு உதவியாக வண்டாரி, குறுந்தலை என்று இருவர் உள்ளனர். ஊர் கூடி எடுத்த முடிவைச் செயல் படுத்தும் பொறுப்பு வண்டாரிக்குரியது. தகவல் தெரிவிக்கும் பணி குறுந்தலைக்கு. மண்ணுக்காரன் என்று ஒரு பதவி. இதை வகிப்பவர்கள் வேளாண்மையை எப்போது தொடங்க வேண்டும், எப்போது நிறைவு செய்ய வேண்டும், இந்த முறை சாகுபடியை எங்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற முடிவுகளை எடுப்பதோடு, வேளாண்மை தொடர்பான ஒவ்வொரு பணிக்கும் உரிய சடங்குகளையும் செய்துவைப்பார். சமயச் சடங்குகளை குருவன் என்கிற ஆணும், குருவதி என்கிற பெண்மணியும் நிறைவேற்றி வைக்கிறார்கள். இருளர் சமூகத்தில் இளம் ஆண்கள், இளம் பெண்கள் ஆகியோரின் நலன்களை கவனிப்பதற்காகவே தலை வேணாண், தலை வேணி என்று இரு ஆண்பெண் பொறுப்பாளர்களும் உண்டு.

இருளர் சமுதாயத்தில் இத்தகைய சிறந்த நிர்வாக அமைப்பு இன்றும் உள்ளதா என்று கேட்டால் பெரும்பாலும் அது தகர்ந்து போய்விட்டது என்றுதான் வருத்தத்துடன் கூற வேண்டியதாகிறது. இன்று இருளர்கள் நகர்ப்புறங்களில் மூட்டை சுமப்பவர்களாகவும் கை வண்டி இழுப்பவர்களாகவும், கட்டிட வேலை சித்தாள்களாகவும் சிதறிப் போய்விட்ட நிலையில், கடந்த கால அமைப்பு முறைகளைக் கட்டிக் காத்து வர முடியாதுதான்.

வனவாசிகளான இருளர்கள் வனவாசிகளுக்கே உரித்தான புலனுணர்வு மிக்கவர்களாவார்கள். பாம்புகளையும் எலிகளையும் காட்டுக் கோழிகளைப் போன்ற பறவைகளையும் பிடிப்பதில்
அவர்கள் வல்லவர்கள். அதேபோல் மூலிகைகளை இனங்கண்டறிவதிலும் அவற்றின் மருத்துவப் பயனைப் புரிந்து வைப்பதிலும் தனித் திறமை மிக்கவர்கள். மோப்ப சக்தியில் அவர்களுக்கு உள்ள ஆற்றல் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தத் தனிச் சிறப்பியல்புகளை இருளர்கள் சிறிது சிறிதாக இழந்து வருகிறார்கள்.

இருளர்களிடம் இயல்பாகவே அமைந்துள்ள ஆற்றல்கள் வெளிப்படுமாறும், மேலும் அபிவிருத்தியடையுமாறும் தக்க பணிகளில் ஈடுபடுத்தி, சமுதாயத்தில் அவர்களை கவுரவமாகவும் வளமாகவும் வாழச் செய்ய வேண்டும் என்கிற பிரக்ஞையே நமக்கு இல்லை. எனவேதான் அதற்கு ஏற்ற திட்டங்களும் இல்லை. நச்சுப் பாம்புகளைப் பிடித்து, அவற்றின் நச்சுப்பையிலிருந்து நஞ்சை வடியச் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்படுகிறர்கள் என்றாலும் அவர்களின் இந்த ஆற்றலை அவர்களுக்கு இருக்கும் இருக்கும் அறியாமையைப் பயன் படுத்தி நாம் அவர்களைச் சுரண்டிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. ஏனெனில், விஷக்கடி மருந்துகளுக்குப் பயன்படும் மிக விலை உயர்ந்த, கிடைப்பதற்கு அரிதான பாம்பு நஞ்சைச் சேகரித்துக் கொடுக்கும் இருளர்களுக்கு அதற்கு ஏற்ற ஊதியத்தை நாம் வழங்குவதில்லை. இதற்கான கூட்டுறவுச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ள போதிலும் பெரும்பாலான இருளர்கள் அதனால் பலன் பெற முடியவில்லை.

இருளர்கள் எப்படித் தங்களுக்கு இயல்பாக அமைந்த குண நலன்களை இழந்து வருகிறார்களோ அதேபோல, வனவாசிகளுக்கே உரித்தான சமூகப் பண்பையும் இழந்து வருகிறார்கள். அது நினைத்த மாத்திரத்தில் அவர்கள் ஈடுபட்டுவிடும் பாட்டும் கூத்துமேயாகும்.

இன்று நாம் நமது அண்டை அயலார்களுடன் பாட்டிலும் கூத்திலும் ஈடுபடுவதில்லை. ஏன், நம் சொந்தக் குடும்பத்தாருடன் கூட அவ்வாறு இயங்குவதில்லை. இதற்குக் காரணம் நாம் அனைவரும் தனித்தனி நபர்களாகவே உணர்ந்தும், இருந்தும் பழகிவிட்டோம். கானகத்தின் குழந்தைகளான வனவாசிகளோ ஒரே சமூகமாகக் கூட்டு வாழ்க்கை வாழ்பவர்கள். ஆகையால் சுகமோ, துக்கமோ, பிரச்சினையோ, நிம்மதியோ, நிலைமை எவ்வாறாக இருந்தாலும் பாட்டிலும் கூத்திலும் அவர்களால் ஈடுபட முடிகிறது.

பிறப்பு, இறப்பு, பூப்படைதல், வேளாண்மைப் பணிகள், பூசைகள் என எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும் ஏற்பப் பாடல்கள் பாடுவதும், கூத்தாடுவதும் இருளர்கள் சமூகத்தில் உண்டு. இவ்வாறின்றித் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள், கவலைகள் பற்றியும் பாடித் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் பாடல்களையும் அந்தந்தச் சமயங்களுக்கு ஏற்ப உருவாக்கிக் கொள்ள அவர்களால் முடிகிறது.

எப்போது பார்த்தாலும் சண்டை போடுகிற கணவன். அவன் சோம்பேறியாகவும் இருக்கிறான். சோம்பிப் படுத்துக் கிடக்கும் அவனிடம் சுறுசுறுப்பும் இணக்கமுமான மனைவி கூறுகிறாள்:

‘நாம் சண்டை சச்சரவில்லாமல் இருப்போம். ஒன்றாகப் பாடுபட்டுப் பயிர் செய்து பயன் பெறுவோம். விளைந்த ராகியைப் புடைத்துக் கொடுத்துத் திரித்து மாவாக்கிக் களி செய்து உண்டு களிப்போம்’. இப்படியொரு பாடல் இருளர்களிடையே உள்ளது. வன இலாகாவின் கடைநிலை ஊழியரிலிருந்து பெரிய அதிகாரி வரை தங்களைச் சீண்டித் தொல்லை கொடுப்பது பற்றியும், தாங்கள் அரும்பாடு பட்டுத் திரட்டி வரும் கானகத்துப் பண்டங்களை அவர்கள் பறித்துக் கொள்வது பற்றியும் இருளர் பெண்கள் பாடுவது போன்ற பாடல்களும் உண்டு.

இருளர் சமுதாயத்தில் நிகழ்த்தப்படும் நாட்டிய நாடகம் ராம கூத்து. ராமாயணத்தை ஏழு ராத்திரிகள் நடத்தி நிறைவு செய்கிறார்கள். வனவாசிகள் ஏதோ ஹிந்து கலாசாரத்திற்கு வெளியே உள்ளவர்கள் போலவும், அவர்களை வலிந்து ஹிந்து சமய வட்டத்திற்கு இழுத்துவிட்டது போலவுமான ஒரு தவறான கருத்தைச் சிலர் பரப்பி வருகிறார்கள். ஆனால் பாரத பாரம்பரியத்தின் உட்கூறான வன வாசிகள் ஹிந்து சமயத்திற்கு அப்பாற் பட்டவர்கள் அல்ல என்பதற்கு அடையாளமாக ராம கூத்து இவர்களிடையே நிகழ்த்தப் படுகிறது. ராமாயணத்தை இவர்களிடம் எடுத்துச் சென்றது யார்? வெளியிலிருந்து யாரும் ராம பிரானையும் சீதாப் பிராட்டியாரையும் இலக்குவனையும் அனுமனையும் இருளர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கவில்லை. அவர்களிடமிருந்தே அவர்களுடைய மொழியிலும் தொனியிலும் கற்பனையிலும் ராம கூத்து தோன்றி வழி வழியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இருளர்களின் ராம கூத்துக்கு உள்ள ஒரு தனித் தன்மை ராமாயணத்தில் இல்லாத விதூஷகன் பாத்திரம். விதூஷகன் கூத்தின் கட்டியக்காரனாகவும் இருந்து கதையை நகர்த்திச் செல்லப் பேருதவியாக இருக்கிறான். மேலும், இந்த விதூஷகன் பார்வையாளர்களிடையே அவ்வப்போது ஊடாடி, கூத்தின் கதாபாத்திரங்களோடும் தானும் ஒரு கதா பாத்திரமாக இயங்கி, நடிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான ஒத்திசைவை இடைவிடாது நிலவச் செய்கிறான்.

விதூஷகன் இருளர்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்தும் அவ்வப்போது சிரிக்கச் சிரிக்க எடுத்துக் கூறுகிறான். பார்வையாளர்கள் சிரிப்பின் மூலமாக அந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் சங்கடங்களை மறக்க முற்படுகின்றனர்.

இருளர்கள் தங்கள் பாரம்பரிய நடனத்தை ஆடுவது சிறிது வித்தியசமாக உள்ளது. கொம்பு, தாரை, தப்பட்டை, இலைதாளம், தவிலைப் போன்ற தோற்கருவி ஆகியவற்றை வாசிக்கும் குழுவினரை நடுவில் இருக்கச் செய்து, அவர்களைச் சுற்றி வந்து ஆடுகிறார்கள்.

இன்று இருளர்கள் தங்கள் பாரம்பரியக் கலாசாரத்தை விரைவாக இழந்துவரும் சோகம் நம் கண் முன்னால் நிகழ்ந்து வருகிறது. நவீன யுகத்தின் வசதிகளையும் முன்னேற்றங்
களையும் இருளர்களும் அவர்களைப் போன்ற பிற வனவாசிகளும் அனுபவிக்கும் வாய்ப்பினைப் பெறுவது அவசியந்தான். ஆனால் இதற்காக அவர்கள் தமது கலாசாரப் பண்புக் கூறுகளை இழக்க வேண்டுவதில்லை. தற்காலத்திற்கேற்ற நடைமுறைகளுடன் தங்கள் பாரம்பரியச் சிறப்பியல்புகளையும் தொடர்ந்து கடைப் பிடிக்க அவர்களுக்கு வாய்ப்பளிப்பது சாத்தியம்தான்.

இருளர்கள் போன்ற வனவாசிகளிடையேயும் பிற தலித்துகள் மத்தியிலும் இன்று கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் மதப் பிரசாரகர்கள் மூலம் மத மாற்ற நடவடிக்கை மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த மத மாற்ற நடவடிக்கையால் இருளர்களும் பிற வனவாசிகளும் முதலில் இழப்பது அவர்களின் பாரம்பரியமான இசையையும் கூத்தையும்தான். மத மாற்றத்தின் விளைவாக இருளர்களின் பாரம்பரிய இசைக் கருவிகளான கொம்பு, தவில், இலைதாளம் முதலானவை மறைந்து வருகின்றன. அவற்றுக்குப் பதிலாக அகார்டியன்,
கீ போர்டு போன்றவை நுழைகின்றன. இருளர்களின் பாரம்பரியமான இசைப் பாடல்களின் ராகங்களுக்குப் பதிலாகக் கிறிஸ்தவ மத ஸ்தோத்திரப் பாடல்கள் மேற்கத்திய இசையின் பாணியில் இசைக்கப் படுகின்றன.

சமீபத்தில் இருளர் மொழியில் மார்க்கின் சுவிசேஷத்தை ஒலிவடிவில் பதிவு செய்திருப்பதோடு, சில விவிலியக் கதைகளையும் தோத்திரப் பாடல்களையும் இருளர் மொழியில் ஒலிப்பதிவு செய்து வினியோகித்து வருகிறோம் என்று காஸ்பல் கம்யூனி
கேஷன்ஸ் நெட்வொர்க் என்ற அமைப்பின் உறுப்பினர் ஒருவர் தமது தலைமையகத்திற்கும் பிற உறுப்பினர்களுக்கும் தகவல் அனுப்பியுள்ளார். மிஷன் நெட்வொர்க் நியூஸ் என்ற கிறிஸ்தவ சமயப் பிரசார அமைப்புகளின் கூட்டு ஸ்தாபன செய்தி நிறுவனம் இச் செய்தியை உற்சாகத்துடன் வெளியிட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆந் தேதி வெளியிடப்பட்ட இச் செய்தியில், ஒலிப்பதிவு செய்யப்பட்ட பேழைகள் மூலமான கிறிஸ்தவ மதப் பிரசாரப் பணி மிகவும் உற்சாக மூட்டுவதாக உள்ளது என்று பாரதத்தில் பணியாற்றி வரும் கிறிஸ்தவ மத ஊழியக் குழு தெரிவித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரதத்தின் பல பகுதிகளில் ஒலிவடிவில் தேவனின் செய்தியைப் பரப்புவதில் வழக்கத்திற்கும் மாறான சுதந்திரம் கிடைதிருப்பதாகவும் இந்நிலை தொடர்ந்து நிலவப் பிரார்த்தனை செய்வதாகவும் அச் செய்தி தெரிவிக்கிறது (சோனியா காந்தியின் கரங்களுக்கு பாரதத்தின் அதிகாரம் கை மாறிப் போன தருணம் அது என்பது நினைவிருக்கும்).

2004 ஏப்ரல் 18 அன்று இருளர் குடியிருப்புப் பகுதியொன்றில் இருபது ஒலிப் பேழைகளும் ஒலிநாடாவைச் சுழலச் செய்யும் கருவிகளும் வினியோகம் செய்யப்பட்டதாக அந்தச் செய்தி மேலும் அறிவிக்கிறது. பாரதத்திலேயே மித்ர என்கிற பெயரில் ஒலி நாடா பதிவு மற்றும் ஒலி பரப்புக் கருவியைத் தயாரித்து விரிவான முறையில் வினியோகம் செய்யப் பதிமூன்றாயிரம் டாலர் தேவைப் படுவதாக அந்தச் செய்தியில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. டேப் டாக் டூ (tச்ணீஞு tச்டூடு 2) பிளேயர்களை பாரதத்தில் இறக்குமதி செய்வது சாத்தியமில்லை; ஏனெனில் சுங்க வரி மிகவும் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய பிளேயர்களை பாரதத்திலேயே உற்பத்தி செய்வதுதான் சிறந்த ஏற்பாடு என்றெல்லாம் மேலும் விவரங்களை அச்செய்தி தெரிவிக்கிறது.

இருளர் போன்ற வனவாசிகளின் மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. வேறு எழுத்துருவில் அவற்றை எழுதிப் படிக்க வைக்கலாம். எனினும் வனவாசிகளிடையே கல்வியறிவு மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே கிறிஸ்தவ மிஷனரிகளும் பிரசார அமைப்புகளும் ஒலி வடிவில் தமது மதப் பிரசாரத்தைப் பதிவு செய்து பரப்பி வருவதில் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலும் தோத்திரப் பாடல்கள் இவ்வாறு இருளர் முதலான வனவாசிகளிடையே வினியோகிக்கப் படுகின்றன. இப் பாடல்களுக்கு ஏற்பச் சிறுவர் சிறுமியர் நடன மாட ஊக்குவிக்கப்படுகின்றனர். இதன் விளைவாகக் காலப் போக்கில் இருளர்களின் பாரம்பரியமான பாடல்கள் யாவும் மறைந்து போகும். அவர்களது நடனமாடும் பாணியும் இதேபோல் மறைய நேரிடும். முக்கியமாக, இருளர்கள் தாமாகவே தம் படைப்பாற்றலைப் பயன் படுத்தி உருவாக்கி நடித்துக் காட்டும் ராம கூத்து காணாமலேயே போய்விடும்.


மலர் மன்னன்

தலைவர், வனவாசி சேவா கேந்திரம், சென்னை மாநகர், காஞ்சிதிருவள்ளூர் கோட்டம்

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்