இருத்தல் குறித்து 3 கவிதைகள்

This entry is part [part not set] of 29 in the series 20020728_Issue

சித்தார்த் வெங்கடேசன்


செவி வழி வாய் வழியாய்
நீண்ட பயனம் கண்டு வந்து சேர்ந்தார்கள் எங்களிடம்,
வடை சுட்ட பாட்டியும், தொப்பி திருடிய குரங்கும்.

இங்கிருந்து அவர்களை அனுப்ப எங்களுக்கு
நேரம் இருக்குமா என தெரியவில்லை.

—–

சும்மாயிருத்தல்

எனக்கும் உண்டு ஆயிரம் கனவுகள்.
உங்கள் கனவிற்கும் என் கனவிற்குமான
ஆதார புள்ளி ஒன்றாய்தான் இருக்கவேண்டும்
என்ற எதிர்ப்பார்பின் காரணம் தான் என்ன ?

உங்கள் பண வேட்டை கோஷ்டியில்
நான் இல்லை என்ற ஒரே காரணத்தால்
போகிற போக்கில் கேட்டுவிட்டு போகிறீர்கள்

‘இன்னும் சும்மா தான் இறுக்கியா ? ‘ என்று.

—–

இருத்தல்.

தொலைபேசி இனைப்பு பெட்டியின் மேல்
பாதி கிழிக்கப்பட்ட நிலையில் என் கண்ணில் பட்டது
அந்த ஜேசுதாஸ் கச்சேரிக்கான போஸ்டர்.

தேதி மட்டுமே தெரிய இடம் கிழிக்கப்பட்டிருந்தது.

பக்கத்தில் அமர்ந்து பீடி பிடித்துக்கொண்டிருந்தவரை கேட்டேன்

அவர் அதை பார்த்து விட்டு

‘என்னா இது ? ‘ என்றார்.

பெருமூச்சுடன் நான் விலக முற்பட

‘டாக்கு எதாவது கொடுத்துட்டு போயேன் ‘ என்றார்.

இருத்தலின் நிச்சயத்திற்கு பிறகே தொடங்குகிறது வேறு சில தேடல்கள்.
***
siddhu_venkat@yahoo.com

Series Navigation