இரவில் கனவில் வானவில் – 11,12 (மு டி வு ப் ப கு தி)

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


11
டாக்டர்கள் எதிர்பார்த்தபடி மதியத்துக்கு மேல் சரவணப் பெருமாள் மெல்ல வலியை உணர ஆரம்பித்தார்.
வலி மெல்ல உயிர்க்குலையை அசைத்து அவரை உசுப்பியது. சிறு முனகல்கள், முகச் சுளிப்புகள் என்று உணர்வு துவங்கியது. நெற்றியெங்கும சுருக்கங்கள். கண்ணுக்குள் துடிப்பு அதிகரித்தது. உடம்பில் சிறு சலனங்கள். படுக்கையைத் திருக ஆரம்பித்தார்.
கைகள் கட்டியிருந்தன. இருந்த இம்சைக்கு கை விடுபட்டு உடல் கட்டுகளை உருவியெறிய அலைகிறது.
நர்ஸ் வேதவல்லி “இனி பயமில்லை” என்று புன்னகைத்தாள்.
இதுவரை பயமில்லாதிருந்தது ஜானகிக்கு. இப்போதுதான் பயமாய் இருந்தது. நோயாளியின் அருகேயிருந்து எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் அவளுக்குத் தெரியாது.
மனம் தன்னைப்போல சுலோச்சனாவைத் தேடியது. நானே இங்கே அதிகம். இதில் இன்னொருத்தி வேறா?
உண்மையில் ஒரு ஆளுக்கு மேல் நோயாளிக்கு அருகே அனுமதி கிடையாது. நான் வரவில்லை என்றால் அந்த அத்தை வந்து உட்கார்ந்திருக்கக் கூடும்.
ஆனால் அப்படியும் சொல்ல முடியாது. வயதான அத்தை. அவளால் என்ன உதவி செய்ய முடியும்? அவளுக்கே உதவிக்கு ஆடகள் தேவை. பெரிய தலை என்று நடமாடிக் கொண்டிருந்தாள் அவள்….
ஆ, இதுதான் வலி… என்றிருந்தது ஜானகிக்கு.
இதுவரை அவர் அடங்கிக் கிடந்த அளவில் பொழுது ஓடியது தெரியவில்லை. சுகமாய்க் கூட இருந்தது தனியறை வாசம். குங்குமச் சிமிழுக்குள் போல இருந்தாள் அவள்.
அவள் துக்கங்களுக்கு ஆஸ்பத்திரி ஒரு கவசம் போலிருந்தது.
உண்மையில் இது வேறுலகம். ஆஸ்பத்திரி. வலிகள், உபாதைகள், துயரங்களின் உலகம்…. உயிர் உள்ளே எலிப்பொறியில் எலிபோலப் போராடும் உலகம்.
திடீர் திடீரென்று போர்க்காலத்தில் குண்டுச் சத்தம் கேட்டாற்போல வலியின் முனகல். அழுகை….
ஆ, சில சமயம் மரணமும் வந்து கவியும். வலி… நாசூக்காய் கதவைத் தட்டி உள்நுழையும் மரணம்…
எல்லாமும் பார்க்கிறார்கள் இந்த மருத்துவர்கள். இந்த நர்ஸ்கள்….
உயிர் அடங்க, நோயாளி இறந்து போகப் போவதை அறிந்து வைத்திருக்கிற இவர்கள் அதை எவ்விதச் சலனமும் பதட்டமும் இன்றி ஏற்றுக் கொள்கிறார்கள்.
வலியின் உச்சத்தில் ஆக்சிஜன் என்றும், ஆதரவு என்றும் தவித்துக் கொண்டிருக்கிறார் நோயாளி.
இவர்கள் அப்போது காட்டுகிற நிதானம் ஆச்சரியமானது. ஒருவர் மணியைக் கூடப் பார்க்கிறார்.
ரயிலில் முதல் விசில், ரெண்டாம் விசில் போல… அவர்கள் உடலின் துடிப்புகளைக் கண்காணிக்கிறார்களா?
அவளுக்கு திடீரென்று பயமாய் இருந்தது. இப்படி நோயாளியுடன் கூட இருப்பதற்கே நிறையப் பொறுமை வேண்டியிருக்கிறது…..
ஆனால் கூடைருப்பவரை அல்ல – நோயாளியை ஆங்கிலத்தில் “பொறுமைசாலி” என்று அழைக்கிறோம்….
மெல்ல அவர் முனக ஆரம்பித்தது கேட்டது.
பரபரப்பானாள் ஜானகி. கைகள் சரியாகக் கட்டப் பட்டிருக்கிறதா என்று சரிபார்த்தபின் அவள் நர்ஸ் வேதவல்லியைப் பார்க்க ஓடினாள்.
பக்கத்தில் யாருமே இல்லாதது என்னமோ போலிருந்தது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும் தெரியவில்லை.
பாஸ்கரைக் கூப்பிடுவோமா, என்று நினைத்து உடனே உதட்டைக் கடித்துக் கொண்டாள்….
பத்மநாபன் என்று நினைக்காமல் சட்டென்று பாஸ்கர் என ஊடாடும் மனசு.
“நர்ஸ்?” என்கிறாள் பரபரப்புடன். “அவர் வலியில் தவிக்கிறார்….”
“வெரி குட்” என்கிறாள் வேதவல்லி!
“கட்டை அவிழ்த்துறாமப் பாத்துக்கோங்க…. டாக்டருக்குத் தகவல் சொல்றேன்,” என்று எண்களைச் சுழற்றுகிறாள்.
பத்மநாபனின் செல் எண் அவளிடம் இருந்தது.
அவசரம் என்று வெளியே போயிருந்தான். வரும் நேரம்தான்…. வரும்போது வரட்டும். நான் இப்படி தனியே சமாளிப்பதுதான் விவேகம் என்றிருந்தது. இதையும் கற்றுக் கொண்டால் போகிறது….
பரபரப்புடன் சரவணப் பெருமாளிடம் திரும்பினாள் அவள். நாகப்பாம்பு உயிர் பெற்றாற்போல அவரிடம் சலனங்கள் மெல்ல மெல்ல அதிகரிக்க ஆரம்பித்தன.
முத்துக்குளிக்கிறவன் கயிறைப் பிடித்துக் கொண்டு மேலேறி வரும் வேகம் இருந்தாற் போலிருந்தது அந்த வலி.
அருகேபோய் தைரியமாய் அவள் அவர் கைகளைப் பற்றிக் கொண்டாள் ஆறுதலாய். “அசையாதீங்க. உங்களுக்கு ஒண்ணில்ல…” என்று அந்தக் கைகளை ஆறுதலாய்த் தடவிக் கொடுக்கிறாள்
அவரது நிலையைப் பார்த்து அவளுக்குத் தன்னைப் போல அழுகை வந்தது.
பாவம்…. ஒவ்வொருவர் என்னென்ன கஷ்டங்களை யெல்லாம் சுமந்து திரிகிறார்கள்.
இவர்கள்முன்னே நமது சொந்தக் கஷ்டங்கள், வெறும் உணர்ச்சியலைகள்….
அவை அற்பமானவைதான் உண்மையாகவே.
அவர்மேல் அவளுக்குப் பரிவு சுரந்தது.
தாய்மையின் ஈரம் சுரந்த நிமிடங்கள் அவை. எந்த உயிருக்குமானவை அவை.
பெண்மையின் முன் துயரம் சுமந்த அனைத்து உயிர்களுமே குழந்தைகள்தாம்.
அவள் குழந்தையாக சுலோச்சனா மடியில் விழவில்லையா? அம்மா அம்மா…. என்று கதறவில்லையா?
இதில் உயர்வில்லை தாழ்வில்லை.
உயிர் பேதமில்லை. வயது வித்தியாசமும் இல்லை.
அவளுக்கு அப்போது தன்னைப் பற்றிய ஓர் அற்புதமான விஷயம் புரிந்தது.
பிரச்னை என்று நேர்கிறவரை நான் பயசாலி. ஆனால் நேருக்கு நேர் அதனை சந்திக்கிற முகூர்த்தத்தில் நான் எத்தனை சுருக்க என்னைச் சரி செய்துகொள்கிறேன்….
அது என் அடையாளம். பெண்ணின் அடையாளம். ஒருவேளை பெண்ணுக்குள் உறங்கும் தாய்மையின் அடையாளம்.
பெண்மைதான் – அவளில் உறங்கும் தாய்மைதான் எத்தனை பவித்ரமானது. மகத்தானது….
பெண்ணின் பெருந்தக்க யாவுள என்கிறான் வள்ளுவன். மங்கையராகப் பிறக்க மாதவம் செய்க… என்கிறான் பாரதி.
அவளுக்கு அவர் படும் துயரத்தில் கண்கள் பனித்தன.
ஆறுதலாய் அவர் கைகளை வருடிக் கொடுக்கிறாள்…. “கொஞ்சம் பொறுத்துக்கங்க மாமா” என்கிறாள்.
அவர் கையின் நரம்புகள் துடிப்பதை உணர முடிகிறது. உயிரின் வெப்ப சலனத்தை உணர முடிகிறது.
இதோ என் உயிரின் இதமான சூடு நண்பனே…. இதோ என் ரத்த ஓட்டத்தின் அரவணைப்பு.
உன் நலனுக்காக நான் வாழ்த்துச் சொல்லி அருகில் இருக்கிறேன்.
தாய்மையின் கதகதப்புதான், தியாக உணர்ச்சிதான் சக உயிரில் எத்தனை மலர்ச்சியைக் கொணர்ந்து விடுகிறது….
வாடிய பயிருககு வாய்த்ததோர் மாமழை!
தாய் பட்டினி கிடப்பதில்லை. அது விரதம். விட்டுக் கொடுத்தலே அவளது உயிரின் சூட்சும வேட்கை.
அவள் உணவை உண்டு வாழ்கிறவள் அல்ல. பசியை உண்டு வாழ்கிறவள்!
தண்ணீரைப் பிரித்துத் தான் உண்டு, பாலை எனக்குத் தரும் அன்னப் பறவை! அ ன் னை ப் ப ற வை!
ஒரு நோயாளியை முக்கியமாக ஒரு பெண்தான் கவனித்துக் கொள்ள முடியும். பெண் நர்ஸ்தான் நோயாளிக்குத் தேவை…. ஆண் அல்ல!
உள்ளே வந்த வேதவல்லி அவளைப் பார்க்கிறாள்.
சற்றுமுன் பரபரப்பாய் பயமாய் வலிகாணப் பொறுக்காமல் ஓடிவந்த சிறு பெண்ணா இவள்…. என அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
பரவாயில்லையே, என ஆச்சரியமாய்ப் புன்னகை செய்கிறாள்….
“இன்னிக்கு ராத்திரி அல்லது நாளை காலைல சாப்பாடு…. நீராகாரம்…. வாய் வழியாவே குடுக்க ஆரம்பிச்சிறலாம். நீயே குடுப்பியா?”
“நிச்சயமா…” என்று புன்னகை செய்தாள் ஜானகி.
வல்லமை தாராயோ இந்த மானுடம் பயனுற வாழ்வதற்கே…. என்றானே பாரதி.
கலையின் பிறப்பின் அடிப்படையில் ஒரு தாய்மைமட்டம், தாய்மைவட்டம் இருக்கத்தான் செய்கிறது.
வள்ளலார் சொன்னாரே – வாடிய பயிரைக் கண்டபோதே வாடினேன்…. எப்பெரும் நிலை அது.
பெரும் பெரும் மூச்சுகளுடன் அவர் தவிக்க ஆரம்பித்தார்.
கைக்கட்டுகளை அவர் உணர்ந்தாரா தெரியவில்லை. அரைமயக்க அரையுறக்க நிலை. உண்மையில் அவருக்கு தான் எங்கேயிருக்கிறோம் என்றே தெரியாது …. என்று புரிந்தது அவளுக்கு.
வலியின் முனகல்கள். திடீர் திடீரென உடம்பைத் திருகுதல். கட்டுக்களை உருவியெறிந்து விட ஆவேசப் படுதல்.
கைநரம்புகள் வழியே குளூக்கோஸ் ஏறும் குழாயைப் பிய்த்தெறிய ஆவேசம்.
இருக்கிற வலிக்கு எதிர்வன்முறை செய்யத் தூண்டும் மூளைக் கொந்தளிப்பு நிலை அது.
“ஒண்ணில்ல ஒண்ணில்ல” என்கிறாள். ஆதுரத்துடன் அவர் நெஞ்சை வருடித் தருகிறாள். வற்றி உலர்ந்த நெஞ்சு. அவளது அப்பா மாதிரி.
வயதின் உடலோய்ந்த நிலை.
நிழல் தேடும் மரங்கள்….
பாரடாக்ஸ் – என்று பத்மநாபன் சொன்னது அவள் நினைவுக்கு வந்தது.
எங்கே போயிருக்கிறான் தெரியவில்லை. மதியவாக்கில் வலி வரும் என்பது அவனுக்கு முன்பே தெரியும்…
பரவாயில்லை. நானே பார்த்துக் கொள்வேன்…. சில விஷயங்களை நிகழ்த்த ஒரு பெண்தான் வேண்டியிருக்கிறது.
பெண்மையின் முன்னே உயிர்கள் மண்டியிட்டு வணங்குகின்றன.
கலவியில் கூட!
அவள் கர்வமாய் மீண்டும் தனக்குள் உரத்துச் சொல்லிக் கொண்டாள் –
ஆமாம். உடலுறவில் கூட…. ஆண் பெண்ணின் முன்னே மண்டியிடுகிறான். வணங்குகிறான். பெண்மை அவனைத் தன்னோடு அணைத்துப் போர்த்துக் கொள்கிறது!
விளக்கேற்றிக் கொள்வது போல.
பெண் விளக்கு. ஆண் குனிந்து அந்த விளக்கை ஏற்றி வைக்கிறான். உயிரின் ஜோதி.
அவர் கண்ணுக்குள் சலனங்கள் அதிகரித்தன.
உயிர் மேலும் மேலும் ஆவேசப் படுகிறது.
கடல் திரண்டு கரைநோக்கி வர, கரை காத்திருக்கிறது அரவணைக்க. அழுதபடி கரைநோக்கி ஓடி வருகிற அலைக் குழந்தை. கரைகள் தாய் போன்றவை.
சற்று விழித்துக் கொள்வார். அலையாய்ப் புரள்வார். படுக்கையைக் குடைவார். மீண்டும் உறக்கம் தள்ளி ஆளை உள்ளிழுக்க அப்படியே அடங்கிப் போவார் சரவணப் பெருமாள்.
மனம் தன்னைப் போல அவரது நல்வாழ்வுக்காகப் பிரார்த்திக்க ஆரம்பித்திருந்தது.
சட்டையைத் திறந்து காற்றுப்பட விட்டாள். டெட்டாலும் சோப்பு ஈரமுமாய் முகத்தைத் துடைத்தாள்.
அப்படியே பின்னால் சரிந்த அளவில் பின் மண்டையில் காயம் பட்டிருந்தது. முதுகுத் தண்டில் சிராய்ப்புகள். வண்டி சரிந்ததில் முட்டிகளில் எலும்புகள் பாதிக்கப் பட்டிருந்தன.
நல்லவேளை, மூட்டுகள் இடம் பெயரவில்லை. வயதான ஆத்மா. எலும்பு உடைந்திருந்தால் சேர்வது சிரமப் பட்டிருக்கும்….
இன்றைக்கு ராத்திரி சிவராத்திரிதான் என்று தெரிந்தது அவளுக்கு.
நம்மை விடு. எத்தனை வலியுடன் அவர் மீண்டு வர வேண்டியிருக்கிறது.
வலி அல்லது துன்பம்…. அது தரும் இறுதிவெற்றி ரேகைகள்…. அதுதான் வாழ்க்கை போலும்!
பத்மநாபன் உள்ளே வந்தவன் அவள் தன் தந்தையின் அருகில் அவர் கையருகில் நெருங்கி யமர்ந்திருப்பதையும், வாயார ஏதோ ஒரு சுலோகத்தை முணுமுணுப்பதையும் கவனித்தான்.
“எப்படி இருக்காரு?” என்று மிகச் சன்னமாய்க் கேட்டான்.
“ஷ்….” என எச்சரிக்கிறாள்.
“அடிக்கடி முழிச்சிக்கறாரு. நல்ல இம்ப்ரூவ்மென்ட் இருக்கு…” என்று ரகசியம் போல் பேசுகிறாள்.
“ஐய தனியா சிரமப் படறீங்களா?” என்கிறான் தாளொணாத குற்ற உணர்வின் நெகிழ்ச்சியுடன்.
“அப்டில்லாம் இல்லை….” என்றவள் நெஞ்சு நிறையச் சொன்னாள் ଭ வெளிப்படையாய்ச் சொன்னாள். “பாஸ்கருக்காக நான் எதுவேணாலும் செய்வேன்”.
அவன் எதிர்பாராதது அது. அயர்ந்து விட்டான் அவன்.

12
அடுத்த சில நாட்களில் சரவணப் பெருமாள் நல்ல அளவில் வேகமான முன்னேற்றத்துடன் உடல் தேறி வந்தார்.
இரவுகளில் சில சமயங்களில் அவளால் சிறிது கூடத் தூங்க முடியவில்லை. அதைப் பற்றி என்ன?
கண்ணைத் திறந்து பார்த்து, மனிதர்களை அடையாளம் புரிந்துகொள்ள முடிந்தது அவரால்.
வாய்வழியே உணவு செல்லச் செல்ல உடல் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்த நிலையில் உயிர்க்குலை சிலிர்த்துத் துளிர்க்க ஆரம்பித்தது.
அவர் கண்திறந்த விநாடி புன்னகைத்தபடி அவள் முகம்.
அவருக்குப் புரியவில்லை. புரிந்து கொள்ள முயன்றார். இது யார்? நான் எங்கேயிருக்கிறேன்? இதென்ன வலி? இதென்ன கட்டுக்கள்?….
கேள்விகள்.
“நீங்க ரெஸ்ட் எடுங்க. உடம்பை அலட்டிக்க வேணாம்….” என்றாள் அவள் புன்னகையுடன்.
சிறு குழந்தைபோல அவர் கேட்டுக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டார்.
மெல்ல அவருக்கு எல்லாம் நினைவுக்கு வந்தன.
கடைசியாக நினைவுக்கு வந்தது அந்த…. ஆமாம்…. பாஸ்கருடன் அவன்வண்டியில் போனது. பாஸ்கர் எங்கே?….
கண்ணைத் திறந்து தேடினார். பத்மநாபன் நின்றிருந்தான்.
“அப்பா?” என்று கிட்டே வந்தான் பதமநாபன். “என்னைத் தெரியுதா?”
அவர் தலையாட்டினார். “ப….” என்று சத்தமாய்ச் சொன்னது மட்டும் கேட்டது. மீதிக்குரல் உள்ளமுங்கிக் கொள்கிறது. “பா…. ?” என்றது கேட்டது.
“பாஸ்கர் வந்திருவான்ப்பா….” என்கிறான் பத்மநாபன்.
அவருக்கு விளங்கவில்லை. ஜானகியைப் பார்த்தார்.
அவளும் சொன்னாள். “பாஸ்கர் வருவார். நீங்க தூங்குங்க….” என்று அவரைத் தட்டிக் கொடுத்தாள். “உங்களுக்குக் குடிக்க எதாவது தரட்டுமா?”
“வேண்டாம்” என்று மறுத்தார் அவர்.
…. ஆ, அவருக்கு மெல்ல எல்லாம் நினைவுக்கு வந்தது.
பாஸ்கர் எப்படி இருக்கிறான், பக்கத்துப் படுக்கையில் இருக்கலாம் ஒருவேளை.
விபத்து ஞாபகம் வந்து விட்டது. அதை எப்படி மறக்க முடியும்….
பாஸ்கர் வண்டியோட்டி வந்தான்….
கண்ணைத் திறந்து பார்த்தபோதெல்லாம் ஜானகியின் புன்னகைதான் அவருக்குத் தெரிந்தது.
“என்னைத் தெரியுதா?” என்று கேட்டாள் அவள்.
அவர் தெரிந்த பாவனையில் தலையாட்டுகிறார். “ஜா….” என்ற குரல் உள்ளமுங்கிக் கொள்கிறது.
தன்னை அவர் புரிந்து கொண்டது அவளுக்கு சந்தோஷமாய் இருந்தது.
மறுநாள் முதல் அத்தனை வலியையும் அவர் பொறுத்துக் கொள்ளப் பழகிக் கொண்டார்.
அவ்வளவுக்குத் தெம்பு வந்திருந்தது. சிறிது பேசவும் முடிந்தது அவரால்….
நினைவுகள் மீண்டிருந்தன.
ஆ, இந்த விபத்தில் எனக்கே இத்தனை அடி…. பாஸ்கர்…. அவன் பிழைத்திருக்க முடியாது.
கண்ணை மூடிக் கொண்டபோது அவனுக்காக அவர் மனம் அழுதது.
அவர் மனசின் சலனங்கள் ஜானகிக்குப் புரிந்தன.
அடடா, கவனமும் பரிவும் அக்கறையும் கொண்டு விட்டால், ஒரு மனிதன் நினைப்பதே கூட அடுத்தவருக்கு எத்தனை புரிகிறது….
கண் திறந்து பார்த்தார். பத்மநாபனை அழைத்தார் அவர்.
மெல்லப் பேசினார். “பாஸ்கர் காரியம் முடிஞ்சிட்டதா?” என்னுமுன் அவர் கண்ணின் கடைக்கோடி வழியே வெப்பநீர் உருண்டு திரள்கிறது.
“நீங்க ஓய்வெடுத்துக்கோங்க….” என்று அவரை அமர்த்தப் பார்த்தாள் ஜானகி. அவர் அதைப் பொருட்படுத்தவில்லை.
“ஜானகி அருமையான பொண்ணு…. நம்ம பாஸ்கருக்குக் கொடுத்து வைக்கல….” என்றார் சரவணப் பெருமாள்.
“அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்” என்கிறாள் ஜானகி.
ஆச்சரியகரமாக அவள் மனம் நிறைந்திருந்தது. அழுகை வரவேயில்லை. “நீங்க இப்படி மனசை அலட்டிக்கக் கூடாது….” என்கிறாள் மனப்பூர்வமாய்.
“முகூர்த்தம் வெச்சி, கல்யாண மண்டபம் பார்த்து….” என்கிறார் சரவணப் பெருமாள்.
“நாம அவங்களை அப்படியே விட்றப்டாதுடா, புரிஞ்சதா?” என்கிறார் சரவணப் பெருமாள்.
“நான் விட்ற மாட்டேன்ப்பா. நான் உங்க பிள்ளை…. எனக்குத் தெரியாதா?” என்கிறான் பத்மநாபன்.
“ஐயோ உங்க உடம்புக்கு…. இத்தனை சிரமப்படாதீங்க” என்கிறாள் அவள்….
“இல்லம்மா. நான் பேசறேன்….” என்கிறார் அவர்.
“நான் பேசறேன் மாமா….” என்றாள் ஜானகி.
“உங்க பிள்ளை பாஸ்கர் அருமையானவர். அவரை என் வாழ்க்கைல சந்திச்சது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவர் என்னை விரும்பினது அதைவிட சந்தோஷம். உங்களையெல்லாம் பழகிக் கிட்டது அதைவிட சந்தோஷம்….” என நிறுத்தினாள்.
சரவணப் பெருமாள் எதையோ பேச வந்தார்.
“நான் பேசறேம் மாமா….” என்கிறாள் ஜானகி.
“நான் நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பேன். இப்படியே இருந்திற மாட்டேன்…” என்கிறாள் ஜானகி.
அவள் பத்மநாபனைப் பார்க்கத் திரும்பினாள்.
”நான் கேக்கறேனேன்னு தப்பா நெனைச்சுக்கக் கூடாது. இது சுயநலம்தான்… கண்டிப்பா சுயநலம்தான்…”
”சொல்லுங்க…” என்றான் பத்மநாபன்.
“அதே முகூர்த்தத்தில், அதே கல்யாண மண்டபத்தில்…. என் தங்கை கீதாவைக் கல்யாணம் பண்ணிப்பீங்களா பத்மநாபன்?” என்று கேட்டாள் அவள்.
***
பாக்யா டாப் 1 நாவலாக வெளியானது
மு டி வு ப் ப கு தி


storysankar@gmail.com

Series Navigation