இரவில் கனவில் வானவில் (5)

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


5

மழைமூட்டம் விலகி புது வெயில் பாய்ந்தாற் போல வீடே மாற்றம் கண்டு விட்டது. மெருகு பெற்று விட்டது.
பெண்கள் சோழிகளைக் குலுக்கி வீசிப் போட்டாற் போலக் கலகலக்கிறார்கள். ஜானகிக்கு இப்போது வாய்விட்டுச் சிரிப்பு வந்தது. ஆசுவாசமாய் இருந்தது. நேரடியாய் பரிட்சை முடித்த கையோடு ரிசல்ட் வந்தாற் போல அங்கேயே அப்போதே பதில் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்பியது அவர்களின் எளிமையை, சம்பிரதாயமற்ற தன்மையை உணர்த்தியது.
எப்பவாவது அவள் மனசில் பாஸ்கர் நினைவுக்கு வருவான், என்றாலும் காலவெள்ளத்தில் அந்த முகம் உள்ளமுங்கி விடும், என்பதைப் போலவே இருந்த முந்தைய நிலை மாறிவிட்டது இப்போது. திரும்பவும் தன் முதலாளியிடம் விவரம் கேட்டுக்கொண்டு தேடி வருவான் என்கிற நப்பாசை கரைய ஆரம்பித்த வேளை.
காற்று போல அவன் வந்து அவளது ஜன்னல்களைத் திறந்து விட்டான்.
“ஏய் உண்மையச் சொல்லு, அந்தப் புதுப் பட்டுப்புடவை…. அது உங்க முதலாளி தந்ததா? இல்லை பாஸ்கர் தந்ததா?” என்று கீதாவின் கிண்டல். அந்தக் கற்பனை கூட நன்றாய்த்தான் இருக்கிறது.
வீட்டின் முதல் கல்யாணம். என்னதான் எளிமையான கல்யாணம், மாப்பிள்ளை வகையில் பிரதான செலவுகள் என்றாலும் தன் பங்குக்குச் சிறு அளவாவது செய்ய வேண்டும்…
அப்பாவுக்குப் பண ஏற்பாடுகள் திகைப்பைத் தருகின்றன, என்றாலும் எதிர்பார்ப்பு என்று இல்லாத சம்பந்தம்…. இதைவிட மாப்பிள்ளை எப்படி அமைய முடியும்? பாவம் குழந்தைகள்… என்று குழந்தைகள் மேல் பரிவும், தன்மீது ஆற்றாமையும் ஏற்பட்டன.
கீதா போய் மூக்கு குத்திக் கொண்டு வந்தாள். சிறு தங்கம் என்றாலும் அது முகத்துக்கு என்ன பொலிவாய் இருந்தது. அக்காவுக்குக் கல்யாணம் குதிர்ந்த நிலையில் அவளது கனவுகள் பாவாடைவிரித்தன இப்போது.
நீர்நிலைப் படித்துறையில் போல ஒரே சிரிப்புக் கும்மாளமாய் ஒருத்தரை ஒருத்தர் கிண்டலை வாரியடிக்கிறார்கள்.
ஜானகிக்கு பாஸ்கரைச் சந்திக்க வேணுமாய் உள்ளூர ஆசை. அலுவலகத்தில் தொலைபேசி ஒலிக்கும் போதெல்லாம் இதோ… என்று எழுந்தோடிப்போய்ப் பேசத் தயாராய்க் காத்திருந்தாள் அவள்.
அடி, நீயேதான் பேசேன், என்று கொஞ்சியது மனசு. அது பெண்மைக்கு அழகல்ல, என்று கட்டுப்படுத்திக் கொண்டாள்.
தவிரவும் பாங்க்கில் மேனேஜர். அலுவலகத்தில் பரபரப்பாய் இருப்பான். அவனைத் தொந்தரவு செய்வது சரியா தெரியவில்லை.
அவளுக்கு இல்லாவிட்டால் யார் ஃபோன் பேசியிருக்கிறார்கள்? அவள்தான் யாரிடம் பேச நேர்ந்திருக்கிறது?…
அந்த வாய்ப்பு தற்செயலாக அமைந்தது!
முதலாளி அலுவலக விஷயமாய் வங்கிக்குப் பேசிக் கொண்டிருந்தார். ஜானகி அவரிடம் ஏதோ கேட்குமுகமாக உள்ளே நுழைய நேர்ந்து விட்டது.
அவளைப் பார்க்க முதலாளிக்குச் சிரிப்பு. காரணம் புரியாமல் தானும் புன்னகைத்தபடியே அவள் உள்ளே போனாள். எதிரே நாற்காலியைக் காட்டி அவளை உட்காரச் சொல்லியபடி, முதலாளி உற்சாகமாய்ப் பேசிக் கொண்டிருந்தார்.
திடுதிப்பென்று “ஒரு நிமிஷம். ஜானகி உள்ள வந்திருக்கா…. பேசறீங்களா?” என்று முதலாளி சிரிப்புடன் கேட்டு, சட்டென்று தொலைபேசியை அவளிடம் நீட்டியதும் அவளுக்குப் புரியவில்லை. எதுவும் பேசாமல் புன்னகைக்கிறார் முதலாளி.
குழப்பமாய்த் தொலைபேசியைக் காதில் வைத்துக்கொண்டபடி “ஹலோ?” என்றாள்.
“ஹல்லோ!”
உற்சாகமாய் மறுமுனையில் பாஸ்கர் குரல். சிலீரென்று மழையின் குளிர்ச்சி.
“எப்படி இருக்கேடா?” என்று தோளில் கைபோட்ட சுவாதீனத்தில் அவன் பேச ஆரம்பித்தான். முதலாளி முன்னால்….
அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. முதலாளி கடகடவென்று கிணற்று உருளையாய்ச் சிரித்தபடி, அவளுக்குத் தனிமையைத் தருமுகமாக வெளியே போனார்.
நல்ல மூடில் இருந்தான் போலும்.
“கல்யாணப் பொண்ணு…. என்ன சத்தத்தையே காணம்? நீ பேசுவே பேசுவேன்னு நானும் காத்திட்டிருக்கேன். ஒரே மௌனம்….”
“ஏன், நீங்கதான் பேசறது. உங்க மேஜைல உங்களுக்குன்னு தனி ஃபோன் உள்ள ஆளுங்க நீங்க. நான் பேசலைன்னு சும்மாவாச்சும் சொன்னா எப்படி?”
“அப்-ப்பா, ஜானகிக்கு இப்பதான் பேச்சே வந்திருக்கு. சரிடா. இன்னிக்கு ஆஃபீஸ் விட்டு அங்கேயே இரு. நான் கிளம்பி வரேன். அப்டியே எங்கயாவது வெளில போலாம்…. என்ன?”
அவனது உரிமையாடல் அவளுக்கு ஆனந்தத் திகைப்பாய்த் திக்குமுக்காட வைத்தது. விட்டால் அப்படியே அவளைத் தலைக்குமேல் தூக்கி தட்டாமாலை சுற்றுவான் போல.
“ஹலோ?” என்கிறான் பொறுமையில்லாமல்.
“சரி” என்றபோது வெட்கம் ஆளைத் தின்றது. என்ன இது, வாழ்க்கை இத்தனை தித்திப்பானதா என்று ஆச்சரியம் அவளில்.
இதற்கெல்லாம் எனக்குத் தகுதி இருக்கிறதா என்கிற ஓர் உணர்வு மயக்கம் அவளைத் தள்ளாட்டியது. ச்சீ, உனக்கென்னடி ராசாத்தி, என்று சாமரம் வீசியது மனசு.
அவன் எத்தனை எளிமையாய்ப் பேசிப் பழகுகிறான். நீயுந்தான் அப்படியே இரேன், ஏன் தேவையற்று உன்னைப் பூட்டிப் பூட்டி சாவியை இடுப்பில் கனமாய்ச் சுமந்து திரிகிறாய்?
வேலையே ஓடவில்லை அப்புறம். எத்தனை மணிக்கு வரீங்க, என்கிற மாதிரியாய் மேலே பேசியிருக்கலாம். அட இது ஒரு விஷயமா, இன்னும் வாழ்க்கை கடல்போல் அலைஅலையாய் விரியக் காத்திருக்கிறது, என தனக்குள்ளாகவே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
சுலோச்சனா உஷார்ப் பார்ட்டி!
“என்னம்மா உள்ளே போகும்போது போன ஆளுக்கும், வெளில வந்த ஆளுக்கும் ஒரு உஜாலா மாற்றம் தெரியுதே?” என்கிறாள்.
எப்படிக் கண்டுபிடித்தாள் இவள்? நாமென்ன அத்தனை மிதக்கிறோமா என்ன என்றிருந்தது.
“அடியே இந்தக் காதல் இருக்கே, காதல்…. அதை காதலிக்கறவங்க ரகசியமா வெச்சிருக்கறதா நினைப்பாங்க. ஆனா பார்த்த முதல் பார்வையிலேயே அந்தாளைக் காட்டிக் குடுக்கறது இந்தக் காதல்தான்…” என்றாள் சுலோச்சனா.
“உங்க மிஸ்டர் ஃபோன் பேசியதாக யூகிக்கிறேன்” என்றாள்.
“யுவார் ஜஸ்ட் ரைட்” என்றாள் ஜானகி சிரிப்புடன். சற்று தளர்த்திக் கொள்ளலாம் மனசை என்று தோன்றியது. சுலோச்சனாவிடம்தானே?…. அவரோடு – ‘அவனோடு’ அல்ல மனசு தன்னைப்போல ‘அவரோடு’ என ஆக்கிக் கொண்டதை கவனித்துச் சிரித்துக் கொண்டாள்.
“வெரிகுட், ஹேவ் ய நைஸ் டைம்” என்று சுலோச்சனா வேலையில் முங்கிக் கொண்டாள்.
மாலையில் என்ன பேச வேண்டும் என்றெல்லாம் மனசு குதிபோட ஆரம்பித்தது. அட மனசில் பட்டதை விருப்பமாய்ப் பேச, அதுவும் அவனுடன் பேச, எதற்கு முன்யோசனை என்று விட்டுவிட்டு, வேலையில் ஈடுபட முனைந்தாள். என்றாலும் தன்னியல்பாய் கண் மணியை மணியைப் பார்த்தது. எப்படா அலுவலகம் முடியும் என்ற உள் அலையடிப்பை நிராகரிக்க முடியவில்லை.
வாசலில் பைக் வந்து நிற்கிறதை கவனித்ததும் அவள் முகம் பூவாய் மலர்கிறதைப் பார்த்து சுலோச்சனாவுக்குச் சிரிப்பு.
இவளுக்கு முன் முதலாளி வாசலுக்கு வருகிறார். “வாங்க வாங்க மிஸ்டர் பாஸ்கர், என்ன இவ்வளவு தூரம்? கூப்பிட்டனுப்பிருந்தா நானே வந்திருப்பேனே?….” என்று கையைப் பிடித்துக் கொண்டார்.
“அட நீங்க வேற, காந்தம் இங்க இருக்கு, நான் வெறும் இரும்புத் துண்டு” என்று சிரிக்கிறான் பாஸ்கர். அந்தக் கண்ணின் கனவு அவளுக்கு ஆனந்தமாய் இருந்தது.
காதல் என்பது எத்தனை மணமாய் வெடித்துச் சிதறுகிறது. ஒளிவட்டம்போல உருவாகி விரிகிறது….
“ஆமாமா, அடேடே. உள்ள வாங்க” என்று அவன் போக வழிவிட்டு ஒதுங்கிக் கொண்டாற்போல அவர் விலகிக் கொண்டார்.
ஹெல்மெட்டைக் கழற்றியபடி, நேரே அவள் எதிரே வந்து உட்கார்ந்த அந்த ஆறடி இளைஞன், அவளை ஆளுமை செலுத்தி, அவளுள்ளே கண்வழியே உள்புகுந்து நிறைந்து ததும்பினான்.
இத்தனை கிட்டத்தில் இத்தனை குறும்பும் வெளிப்படையுமாய் அவனை அவள் பார்த்ததேயில்லை. மனசு இத்தனை லேசாகி இறகு முளைத்ததேயில்லை.
“என்ன சாப்பிடறீங்க மிஸ்டர் பாஸ்கர்?” என்று வருகிறார் முதலாளி.
அவன் அங்கே அலுவலகத்துக்கு வந்ததே அவருக்கு வியப்பாய் இருந்தது. அவனது எளிமையான இன்னொரு முகம் அவருக்கு அறிமுகம் இல்லாதது.
என்னதான் நட்பு பாராட்டினாலும் அவன் தன் அதிகாரித்வனியை தன் அலுவலகத்தில் விட்டுக் கொடுக்க முடியாது. இப்போதோ எத்தனை எளிமையாய் இருக்கிறான் அவன்.
யானைக்கு அங்குசம் போல, இதோ இந்தப் பெண்…. அவனை ஆண்டுகொண்டிருக்கிறாள், என நினைக்க அவருக்கே சிரிப்பு.
“ஒண்ணும் வேணாம். நான் இன்னிக்கு ஜானகியோட விருந்தாளி” என்றான் பாஸ்கர்.
என்ன பேச, என்ன பேச என்கிற மருட்சி ஜானகிக்கு. பேச்சே இல்லாமல் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு, அல்லது மார்பில் சாய்ந்துகொண்டு மௌனத்தின் இதத்தைக் கதகதப்பை அனுபவிப்பதே போதும் என்றிருந்தது.
காதல் என்பது உடலை அல்ல, உயிர்க்குலையையே அல்லவா அசைக்கிறது….
“நாங்க என்ன வேலை செய்யறதா வேணாமா? இப்படி நேர் எதிரா வந்து உக்காந்திருந்தா என்ன அர்த்தம்?” என்று மனம் விரியப் பேசினாள்.
“அந்தக் கதைல்லா வேணாம். நான் பக்கத்துல இருந்தாலும் அடுத்த அறைல இருந்தாலும் உன்னால வேலை செய்ய முடியும்னு நான் நம்பல. பாவனை மட்டும் பண்ணலாம். மணி ஆய்ப் போச்சே, அஞ்சு மணிக்கு மேல் அலுவலகத்தை மறன்னு பழமொழி. நீ அதையே மறந்திட்டியா?” என்றான் அவள் மேஜையில் உள்ள கனமான கண்ணாடிபாரத்தை உருட்டியபடி.
“ஏன் சார் அஞ்சு மணிக்கு மேலே எல்லாரையும் இருக்கச் சொல்றீங்களா என்ன?” என்றான் திரும்பி முதலாளியைப் பார்த்து.
அவர் பயந்தாற்போல “இல்லிங்க. இல்லவே இல்லை” என்ற வேடிக்கையை ரசித்தாள்.
எல்லாம் எப்படி விநோதமாய் நிகழ்கின்றன. இந்த உலகத்துக்குள் அவள் குதிகால் செருப்பு அணிந்தாற்போல நடந்து போனாள். அது ஒரு நிலை – பழகிவிடும் என்றிருந்தது.
இத்தனைநாள் உன் நிலை வேறு. இனி நீயும் ஒரு எஜமானி என்கிற உணர்வை வளர்த்துக் கொள்ளப் பழக வேண்டுமடி பெண்ணே. அதற்குத் தயார் செய்து கொள்ள வேண்டுமடி செல்லம்…. என மனசு கொஞ்சியது.
அப்படியே ஆகட்டும், என அருள் புரிந்தாற் போல, வரம் தந்தாற்போல பதில் கொடுத்துக் கொண்டாள்.
மோட்டார் சைக்கிளில் அவன் பின்னால் அமர்ந்தபோது சுலோச்சனா – வழக்கமாய் அவளுடன் பஸ் ஸ்டாப் வரை வருகிறவள் கையாட்டினாள்.
“இத்தனைநாள் இந்தப் பின்சீட் காலியாக் கெடந்ததாக்கும். எப்ப நான் வண்டில ஏறினாலும் இந்த சீட், பின்னால யாரை உக்காத்திக்கப் போறே, யாரை உக்காத்திக்கப் போறேன்னு கேட்டுட்டே இருந்தது…” என்றான் பாஸ்கர்.
என்ன அபத்தமான உளரல், இதைக்கேட்க எனக்கு எத்தனை ஆனந்தமாய் இருக்கிறது.
சில சந்தோஷங்கள் இப்படித்தான். லா.ச.ரா.கூட ஒரு கதையில் எழுதுவார்- முட்டியுயரப் புல்வெளியில் நடக்கையில் உற்சாகம் தாளாமல் முஷிமுஷி மோஷிமோஷி – என்கிறாற்போல சத்தம்போட்டுக் கத்த ஆசையாய் இருந்தது…. என்று வாசித்த ஞாபகம்.
“மிஸ்டர் பாஸ்கர், ஒரு பேங்க் மேனேஜர் மாதிரிப் பேசுங்க. அவாய்ட் உளரல்….”
“ஐல் ட்ரை” என்றான் பாஸ்கர். “ஆனா இந்த மாதிரில்லாம் கண்டிஷன் போட்டா எனக்குப் பேச்சே வராது…”
“மொத்தத்தில் உங்களுக்கு உளர மட்டுந்தான் தெரியுமா?”
“என்ன இப்பவே என்னை இந்த உருட்டு உருட்டறே நீ? அநாவசியமாப் பேசினே அந்த உதட்டைக் கடிச்சிருவேன்….”
“அப்பன்னா நான் பேசாட்டி….?” என்று அவள் கலகலவென்று சிரித்தாள்.
“சரி சரி. ரோட்டைப் பாத்து ஓட்டவும். வண்டி நின்னப்பறம் இறங்கி ஆற அமர என்னைப் பாத்துக்கலாம்.”
“ஆமாமாம். வண்டி தரைல போறாப்லயே இல்லை” என்று சிரித்தான் பாஸ்கர்.
அவளுக்கு அவனைக் கட்டிக் கொள்ள எவ்வளவு ஆசையாய் இருந்தது. இன்னும் காலமிருக்குடி பெண்ணே, என்று தன்னை அடக்கிக் கொண்டாள்.
காற்றுக்குப் படபடத்து உரசும் அவனது உடைகள். என்னவோ சென்ட்டின் மணம். ஆம்பளை வாசனை. எத்தனை கிறுகிறுப்பாய் இருக்கிறது. மனசில் திரும்பத் திரும்ப வட்டமிடும் வாசனை.
வீட்டில் சொல்லிவிட்டு வரவில்லையே, என்று முதன் முதலில் சிறு கவலை வந்தது. “ஆத்துக்குப் போய்ட்டு ஒரு வார்த்தை சொல்லிட்டு எங்காவது போலாமே?” என்றாள் சிறு தயக்கத்துடன்…
“டோன்ட் ஒரி. நானே உன்னை உன் வீட்டில் கொண்டு விட்டுர்றேன். அத்தனைக்கு லேட்டானா உங்க முதலாளிட்ட ஃபோன் பண்ணி உங்கப்பா தகவல் கேட்டுக்க மாட்டாரா?” என்றான் அவன்.
“தவிர இன்னொரு விஷயம்…. இப்ப நாம உங்க வீட்டுக்குப் போனம்னா உங்கம்மா ஒரு உப்புமா கிப்புமான்னு மாப்ளை உபசாரத்துக்கு ஆரம்பிப்பா. உன் தங்கை ஸ்ரீவித்யா வேற எதாவது பேசி, அல்லது நாம் பாடறேன்னு – நம்ம டைமைச் சாப்பிடும்….” என்று சிரித்தான்.
“அது உண்மைதான்” என்று பின்சீட்டில் வசதியாய் உட்கார்ந்து கொண்டாள்.
சட்டென்று அவன் தெளிவாய்த் தீர்மானமாய் முடிவெடுத்தது அவளுக்குப் பிடித்திருந்தது.
தன்னைப்போலவே இவனும் இப்படியோர் உறவுக்குக் கைநீட்ட மனசுக்குள் காத்திருந்து, மழைதிரண்டாற் போலக் கொட்டித் தீர்க்கிறான், என்று ரொம்பத் தெரிந்தவள் போல நினைத்துக் கொண்டாள்.
டிரைவ்ଭஇன் ஓட்டலுக்குள் வண்டியை நிறுத்திவிட்டு ஹெல்மெட்டுடன் வந்தான்.
தோளோடு உரசினாற் போல அவள் கூட நடந்தாள். கர்வமாய் இருந்தது.
இத்தனை இயல்பான, பாவனையற்ற ஆணை அவள் கண்டதில்லை. இவனுமே என்னிடம் தவிர வேறு யாரிடமும் இத்தனை வெளிப்படையாய் அந்தரங்கத்தைக் காட்டிக் கொள்ள மாட்டான்…. நான் என்ன பாஸ்கரை ரொம்பத் தெரிந்தவன் போல இத்தனை நெருக்கத்துடன் நினைக்கிறேன்….
தனியான இடம் பார்த்து அமர்ந்து கொண்டார்கள்.
“நீ என்னடி என்னையே பாத்திட்டிருக்கே. அப்டில்லாம் பாத்தே நான் மிருகமா மாறி உன்னைக் கடிச்சிருவேன்….” என்கிறான் திரும்பவும்
“உன் உதட்டின் சாயமற்ற ஒரிஜினல் சிவப்பு அத்தனை நன்றாய் இருக்கிறது.” எத்தனை தாபமாய் இருந்தான். கண்ணில் பாவனையற்ற அந்த அலைமோதல். எக்களிப்பு.
அவனை அப்படியே நெஞ்சோடு சார்த்திக் கொண்டு கொண்டாட வேண்டுமாய் அவளுள் ஒரு ஆவேசம்.
இளமைக்குக் கொம்பு முளைத்து, திமில் சிலிர்க்கிறதா?
“காதல் உடம்பு சார்ந்ததுதானா பாஸ்கர்? டோன்ட் திங்க் அதர்வைஸ்…. இட்டிஸ் நாட் தேட் ஐ டோன்ட் லைக் இட்….”
“உடம்பும்…. அதிலென்ன சந்தேகம். என்னதான் நாம பேசினாலும் பழகினாலும் உடம்பு ரீதியாப் பரிமாறிக்கிட்ட உடனே நமக்குள்ள கிடைக்கிற ஒரு பொதுஸ்ருதி…. அது தனி அனுபவம்லியா? ஒரே மாதிரி ரெண்டுபேருமே யோசிக்கறதும், ஒருத்தரையே இனனொருத்தர் யோசிச்சிட்டிருக்கறதும் உடம்பு கலந்துட்ட பிறகு தன்னியல்பாயிடுது….”
“ம்” என்று அவள் தலையாட்டியபடி தன் கையை நீட்ட, அவனுக்கு அது பிடித்திருக்கிறது.
அந்தக் கையை அழுத்தமாய்ப் பற்றிக் கொள்கிறான். “பிரியமான ஒரு தொடுதல் மூலம் எவ்வளவோ சொல்லாத சேதிகளைப் பரிமாறிக் கொள்ள முடியும். இல்லியா?”
“ஐயா நீ தொட நான் காத்திருக்கிறேன். போதுமா?”
“உங்கப்பாவை சீக்கிரம் நல்லநாளாய்ப் பார்க்கச் சொல். என்ன பண்ணிட்டிருக்காரு அவரு?”
“கோலி குண்டு விளையாடிட்டிருக்காரு….” அவள் சிரித்தாள். “அவசரத்தைப் பாரு….”
என்ன சாப்பிட்டார்கள் அவர்களுக்கே தெரியாது. என்ன பேசினார்கள் அதுவும் தெரியாது.
காலம் பொன்னால் வேய்ந்த கூரையை மறைப்பாய் எழுப்பி மாய உலகில் அவர்களை அமர்த்தி யிருந்தது.
“ஒருத்தரை யொருத்தர் இன்னும் நாம நல்லாப் புரிஞ்சுக்கணும்” என்றான் திடீரென்று. “ம்” என்று ஒத்துக் கொண்டாள்.
“என்ன அவசரம். நமக்கு இன்னும் முழு வாழ்க்கை மிச்சம் இருக்கே” என்றாள்.
பாதி கனவும், பாதி அறிவுமான பேச்சு அது. அழகான கனவுகள். நேரம் போவதே தெரியவில்லை.
எதிர்பாராமல் வந்தேன்… உனக்கான சிறு பரிசு – என்று எடுத்துத் தந்தான். ஓரு மயூர் சில்க் புடவை, மற்றும் பர்ஃபியூம் குப்பி. சற்று இருள்பூசிய வெளி அது, துணிச்சலாய் அவள் மீது பிஸ்க் பிஸ்க்கென்று நெல்வயலில் மருந்தடிக்கிறாப் போல அடித்தான். அடியே கொஞ்சம் வாசனை பிடிச்சிக்கட்டா? – என்றான் கண்களில் லகரியுடன்.
வீடு திரும்ப மனசே இல்லை. மணி பார்த்தாள் தற்செயலாக – ஆ மணி எட்டரை.
வீட்டில் தவித்துப் போயிருப்பார்கள்.
“ஞாயிறுவாக்கில் நாம சந்திக்கலாம்…. அதான் நல்லது. இப்படி நேரம் ஆகுதே ஆகுதேன்னு பயப்படவும் வேணாம். சொல்லாம வந்திட்டமேன்னு கவலைப்படவும் வேணாம்….”
“ஆமாண்டி என் கண்ணே. இந்த உலகின் மிகச் சிறந்த அறிவாளியே…” என்றான் அவன் கண்நிறைய இழப்புணர்ச்சியுடன். அவளைப் பிரிய அவனுக்கு மனசே இல்லை
அவளுக்கு மட்டும் எப்படி இருந்தது…. “சார்?…. பார்த்தது போதும். கிளம்பலாம்” என்கிறாள் அவன் தலையைக் கலைத்து.
அப்பா வாசல் அறைக்கும் உள்ளேயுமாய் நடந்து கொண்டிருந்தவர் அவர்களைப் பார்த்ததும் முகம் மலர்ந்தார். “அடேடே, வாங்க மாப்ளே….” என்று வாசல் விளக்கைப் போட்டார்
உள்ளேகூட அவன் வரவில்லை. “நீங்க கவலைப்படுவீங்கன்னுதான் நானே கொண்டு விட்டேன். ஞாயிறு சாவகாசமா வரட்டுமா….” என்று பரபரத்தான்.
“அட இருங்க. உள்ள வாங்க. ஒருவாய்க் காபி சாப்பிட்டுட்டுப் போலாமே?….”
உப்புமா, என அவன் சொன்னது ஞாபகம் வந்தது!
“நாங்க சாப்பிட்டுட்டோம்ப்பா” என்றாள் ஜானகி. “பார்க்கலாம். ஐ ரியலி எஞாய்ட் தி ஈவ்னிங். ஞாயிறுக்காகக் காத்திருக்கிறேன்….” என்றாள் எளிமையாய்.
அவன் வண்டி கிளம்பிப் போனது.
அடுத்த ஞாயிறு அவன் வரவில்லை. அவன் ஆளே இல்லை…. ஒரு கோர விபத்தில் சனியன்றே இறந்துபோனான்.


பாக்யா டாப் 1 மாதநாவல் இதழில் வெளியானது
தொ ட ர் கி ற து

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்