இப்படியும் ஒரு தமிழரா ?

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

புதுவை ஞானம்முப்பது வருடங்கள் போனதே தெரியவில்லை.

பூனா திரைப்படக் கல்லூரியின் பேராசிரியர்.சதீஷ் பகதூர் ‘திரைப்பட ரசனை’ பற்றி வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார், அடையார் திரைப்படக் கல்லூரியில். வகுப்பு முடியும் தருணம் திடீரென்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். அமெரிக்க நூலகத்தில் Dances of Siva என்றொரு செய்திப்படம் திரையிடப்படுகிறது, விருப்பமுள்ளவர்கள் சென்று காணலாம் என்பதாக.
அந்தப்படம் ஆனந்த குமாரசாமி பற்றியது. பார்த்து பிரமித்துப் போனோம். இப்படி ஒரு ஆய்வாளரா? என்பதற்கு மேல், நமக்கு இப்படிப்பட்ட கலாச்சார பொக்கிஷங்கள் இருக்கின்றானவா? ஆச்சரியம் கவிந்து எல்லாமும் மூடிப்போய் விட்டது. அப்போதிருந்த
அரசியல் வெறியில் மீண்டும் அவர் பற்றி எதுவும் தேடவில்லை என்பதை விட தேடத்தெரியாது என்பது தான் உண்மை.

மேடம் பிளாவட்ஸ்கி , ஓஷோ போன்றோரைப் படிக்கப்போய் Tibetian book of Death மேல் ஒரு விபரீத மோகம் பிடித்தது. .பலரையும் விசாரித்து ஒரு வழியாய் நண்பர் க்ரியா ராமகிரு¢ஷ்ணன் அவர்களிடம் யாசித்துப் பெற்றுப் படித்ததில் ஆனந்த குமாரசாமி மீண்டும் பிரசன்னமானர்.

அந்த நூலுக்கான அறிமுக முன்னுரை எழுதிய ‘லாமா அநகாரிக கோவிந்தா’ அவர்கள் ஆனந்த குமாரசாமி எழுதிய வாசகங்களை எனக்கு நினைவு படுத்தினார். அது கீழ் வருமாறு இருந்தது :

“The Bardo Thodol is a treatise which needs more than philological knowledge of its traditional background and of the religious experience of one who either has grown up in the tradition or who has imbibed its tradition from a competent living guru. In times of old it was not considered that the mere knowledge of language sufficed to make a man a “translator” in any serious sense of the word; no one would have undertaken to translate a text who had not studied it for long years at the feet of a traditional and authoritative exponent of its teaching, and much less would anyone have thought himself qualified to translate a book in the teachings of which he did not believe.”
Our modern attitude, unfortunately, is a complete reversal of this: a scholar is regarded as being all the more competent (‘scholarly’) the less he believes in the teachings which he has undertaken to interpret. The sorry results are only too apparent, especially, in the realm of Tibetology, which such scholars have approached with an air of their own superiority, thus defeating the very purpose of their endeavors.
(cf.Ananda K.Coomaraswami, Hinduism and Buddhism (Philosophical Library, New York,n.d.), P.49; and Marco Pallis, Peaks and Lamas (Cassell & Co., London 1946),pp.79-81. The latter is probably the best and most readable introduction to Tibetan Buddhism which so far has been written.

மேற்கண்ட வாசகங்கள் என்னைப் போன்ற அரைவேக்காட்டுத்தனமான, “இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை” மொழிபெயர்ப்பாளர்கள் மனப்பாடம் செய்ய வேண்டியவை ஆகும்.
இந்த மேற்கோளைப் படித்த பின்னர் தான் ஆனந்த குமாரசாமி பற்றி தேடினேன். தேடல் வீண் போகவில்லை. கிடைத்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. திரு பி.சீனுவாச ராவ் என்பவர் ஆங்கிலத்தில் எழுதியதை நான் தமிழில் மொழி பெயர்த்து திண்ணை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அன்னாருக்கு எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக.
———————————————————————————————————————————-

“சிலோன் எனவும் இலங்கை எனவும் அழைக்கப்படும் பிறந்து இங்கிலாந்தில் வளர்ந்த ‘ஆனந்த கெண்டிஷ் குமாரசாமி’ , மேலை நாட்டினருக்கு, இந்தியக் கலைகளை எவ்வாறு அணுக வேண்டும், எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்ற வழி முறையைக் கற்றுக் கொடுத்தவர் ஆவார். அவரது மொத்த வாழ்வும் இந்தியக் கலாச்சாரத்தினையும் கலைகளயும் ஆய்வு செய்வதிலும் விளக்குவதிலும் அர்ப்பணிக்கப்பட்டது. அவரது வாழ்க்கை வரலாறு பற்றி எழுத விரும்பிய நண்பர்களுக்கு அவர் சொன்னார் “ என்னுடைய படைப்புகளை ஆய்வு செய்யுங்கள் !”

குமாரசாமிக்கு விசித்திரமானதொரு இடைச்சொல் .அவ்வளவாக யாருக்கும் பரிச்சயமில்லாத ‘கெண்டிஷ்’ எல்லோருக்கும் பிரபலமான ‘ஆனந்த’ மற்றும் ‘ குமாரசாமி’ என்ற சொற்களுக்கு இடையில் வருகிறதே ! அந்த மனிதரின் தேசீயமென்ன என வியக்க வைக்கிறதே ! அவர் ஒரு சாமியாரா? சன்னியாசியா ?

டாக்டர்.ஆனந்த குமாரசாமி வழக்கமான மனிதரல்ல, மிகவும் விசேஷமானவர். அவர் ஒரு இல்லறத்தானாகவும் இருந்தார், சன்னியாசியாகவும் இருந்தார். அல்லது அவர் இரண்டிலிலும் இல்லை.கன்னடத்தில் சொல்வது போல் சாப்பாடு அவரது விரதத்தைப் பங்கப் படுத்தவில்லை.

1879 இல் ஒரு நாள். ஒரு பயணிகள் கப்பல் கொழும்புவிலிருந்து இங்கிலாந்து நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதில் ஒரு பயணி . அழகிய ஆங்கிலேய மாது. அவள் தனது மடியில் இரண்டு வயது ஆண் குழந்தையை உட்கார வைத்து அதன் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது முகத்திலோ மகிழ்ச்சியும் துயரமும் விரவிக் கிடந்தன. அந்தக் குழந்தை மாநிறமாகவும் கருத்த தலை முடியுடனும் பளபளக்கும் விழிகளுடனும் இருந்தது. அம்மாவைப் பார்த்து சிரித்தது.

அந்த அம்மா, இந்தக் குழந்தையை _ அப்பா இல்லாத குழந்தையாய்த் தவிக்க விட்டு இரண்டு ஆண்டுகளூக்கு முன் காலமான தனது கணவர் முதுக்குமாரசாமி முதலியார் பற்றி நினைத்தார். அவளது மனக்கண்ணில் அவரது முகம் தெளிவாய்த் தெரிந்தது.

முத்துக்குமாரசாமி ஒரு விதி விலக்கான நபர். தமிழ் நாட்டிலிருந்து கொழும்பு வந்து குடியமர்ந்த அவர் குடியுரிமை பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.பிரபலமான வழக்கறிஞரான அவர்தான் முதன் முதலில் பொது சேவைக்காக ‘ஸர்’ ( Knight ) பட்டம் பெற்ற ஆசியர் ஆவார்.

அவர் சொந்த வேலையாக இங்கிலாந்து சென்றபோது ELIZABATH CLAY என்ற பெண்ணைச் சந்தித்தார். அவரது ஆளுமையால் ஈர்க்கப்பட்ட அம்மாது அவரை மணந்து கொண்டார். அவர்கள் இலங்கைக்குத் திரும்பி வந்தனர். 22, ஆகஸ்டு 1877 இல் அவர்களின் மகனான ஆனந்த குமாரசாமி பிறந்தார்.

எலிசபெத் தனது சொந்த நாட்டை விட்டு தொலைதூரமான இலங்கைக்கு தனது கணவருடன் வந்து விட்டார். அந்த தூரப்பயணத்தின் போது அவர் உற்சாகமாகவும் நம்பிக்கையுடனும் இருந்-தார். தனது கணவரை உறித்தெடுத்தாற் போன்ற குழந்தையுடன் மீண்டும் தாயகம் திரும்புகையில் துயரச்சுமை அவளை அழுத்தியது. தன்னந்தனியாக குழந்தையை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு அவளுக்கு இருந்தது. தாய்மை அவளது ஆளுமையை ஈர்த்துக் கொண்டது. இரண்டு பணங்களுக்கு இடையில் தான் எத்தகையதொரு வேறுபாடு ?

வெகு குறுகிய காலத்தில் அவளது மண வாழ்வு முடிந்து போனது.அவள் கையில் இருந்த குழந்தை கடந்த காலக் காதலையும் மகிழ்ச்சியையும் நினைவு படுத்தும் பிரதிநிதியாக இருந்தது. தன் வாழ்வில் எதிர்ப்படவிருக்கும் பல இடையூறுகளையும் தாண்டி அந்தக் குழந்தையை, அவனது தந்தையைப் போலவே பெருமை மிகு மனிதனாய் வளர்த்தெடுக்க முடிவு செய்தாள். திரும்பி இங்கிலாந்து சென்றதும் தனது மகனின் பராமரிப்புக்கும் கல்விக்குமாய்த் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

அவள் என்ன செய்தாலும் என்னவென்று அக்குழந்தை கேட்பது வழக்கம்.

“அம்மா, நீங்கள் ஏன் கண்ணை மூடிக்கொண்டு கை கூப்பி நிற்கிறீர்கள் ?”

“இந்தப் படங்கள் என்ன? படத்தில் இருப்பது யார் ?”

“அதில் ஒன்று உனது அப்பா. மற்றொன்று கடவுள் குமாரசாமி.” அம்மா சிரித்துக் கொண்டே விளக்குவாள்.

“நான் அப்பாவைப் பார்த்ததே இல்லை. அவர் இப்போது எங்கே இருக்கிறார் அம்மா ?”

“ அவரது படத்துக்குப் பக்கத்தில் உள்ள கடவுள் குமாரசாமியுடன் இருக்கிறார் பார்.”

“அது கடவுளுடைய படமா ? ஆனால் அதற்கு ஆறு முகங்கள் இருக்கிறதே !”

“ஆமாம் மகனே. கடவுளுக்கு ஆறு முகங்கள். அவரை ஷண்முகம் என்றும் அழைப்பதுண்டு. அந்தக் கடவுளின் பக்தர்தான் உனது அப்பா. அதனால்தான் உனக்கு குமாரசாமி என்று பெயர். உன் அப்பா தினமும் அந்தக் கடவுளைக் கும்பிடுவார் – தொழுவார். நீயும் கண் மூடி கை கூப்பி வணங்கு. நீ நல்லவனாக வளர வேண்டும் என்று வேண்டிக்கொள்.”

கடவுள் என்பது என்னவென்றோ , பக்தி என்பது என்னவென்றோ அறியாத அந்தச் சின்னஞ்சிறு பாலகன் குறும்புத்தனமான தனது கண்களை மூடிக்கொண்டு அம்மா சொன்னபடி கை கூப்பித் தொழுவான்.

இப்படித்தான் குமாரசாமி இந்து மதத்திற்கும் அதன் கடவுளின் மொத்த வடிவத்துக்கும் அறிமுகப் படுத்தப் பட்டார். அவனுக்குப் புரிந்த எளிய வார்த்தைகளில் இந்தியாவின் மிகச் சிறந்த ஆன்மீகப் பெரியவர்கள் பற்றி அம்மா எலிசபத் கதைகள் சொல்லிக் கொடுத்தார்.

வருடங்கள் உருண்டோடின. தாயின் அரவணைப்பில் ஆனந்த குமாரசாமி வளர்ந்தார். 1889 ஆம் ஆண்டில் Wycliffe கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் எட்டு ஆண்டுகள் படித்தார்.

குழந்தை வளர்ந்து வாலிபராகி விட்டது. இருபது வயதான அழகிய அந்த வாலிபனுக்குள் அவனது தந்தையின் மறு பதிப்பை எலிசபத் கண்டார். ஒரு வளர்ந்த மனிதர் என்ற நிலையில் இயல்பாகவே குமாரசாமி மிகவும் கருத்தாழம் மிக்கவராக தோற்றமளித்தார். ஒவ்வொரு நாளும் குளித்து முடித்து ஷண்முகக்கடவுளை வழிபட்டதுடன் கீதையை மனப்பாடம் செய்தார். தனது ஓய்வு நேரத்தில் இந்தியக் கலாச்சாரம் மற்றும் கலைகள் பற்றி ஆய்வு செய்தார். தனக்குத் தேவையான நூல்கள் இங்கிலாந்தில் கிடைக்காத போது அவற்றை கொழும்பிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் தருவித்தார்.

குமாரசாமி சுருட்டை முடியோடும் எடுப்பான மூக்கோடும் அழகாக இருந்தார். அவருக்கு நீண்ட விரல்கள் இருந்தன. கருத்தாழம் மிக்க வாலிபராக இருந்தார். தனது பேச்சிலும் நடப்பிலும் மென்மையானவராக இருந்தார்.

NOTE : you can get the pictures of young and old Coomaarasaami from internet and insert in appropriate place.If you visit ‘ Amazon . com’ you can get a list of his books.

———————————————————————————————————————————–

ஆனந்த குமாரசாமி லண்டன் பல்கலைக்கழகத்தில் 1909 ஆம் ஆண்டு சேர்ந்தார். கல்லூரியில் புவி இயல் (GEOLOGY & NATURAL SCIENCES) மற்றும் இயற்கை அறிவியலைத் தனது விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தார். ஆனால் அவரது ஆன்மா, இந்தியா, அதன் கலை கலாச்சாரம் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டிருந்தது. தனது ஆடையிலும் கூட இந்தியராகத் தோற்றமளிக்க அவர் விரும்பினார். மேற்கத்திய ஆடைகளை உடுக்க வேண்டி வந்த போதும் நெற்றியில் சந்தனப் பொட்டிட்டு அதன் நடுவில் குங்குமம் இட்டுக்கொண்டார்.

இந்தியா மீதும் அதன் கலாச்சாரம் மீதும் அவர் கொண்டிருந்த நேயம் வளர்ந்தது .இந்தியத் தந்தையின் குருதி அவர் உடலில் பாய்ந்ததாலும், வேதங்கள்,உபநிடதங்கள், பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம் பற்றிய ஆய்வுகளாலும்; இந்தியாவின் மீதான பக்தியும் மதிப்பும் வளர்ந்தது. அவரது மனமும் அறிவும் முதிர்ச்சி அடைந்த போது இந்தியக் கலாச்சாரத்தின் பக்தராக ஆகிவிட்டார். இந்தியக் கலாச்சாரத்தின் அடையாளங்களான எளிய வாழ்வும் உயர்ந்த சிந்தனையும் அவரது ஆளுமையில் பதிந்து விட்டன.

அவரது வயதை ஒத்தவர்களூக்கு, கருத்த நிறம் கொண்ட ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருக்கும் அவர் விசித்திரமாகத் தோன்றிய போதும், அவர் மீது மரியாதை செலுத்தினர். அவர் மிகவும் பிரகாசமான மாணவர் ஆக இருந்தார். மாலையில் கல்லூரி ஓய்வு வேளையில் கூட அவர் நூலகத்தில் தனக்குப் பிடித்தவற்றை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார்.

அவரைப் போலவே தொடர்ந்து நூலகத்துக்கு வந்து கொண்டிருந்த அவரது வகுப்பில் படிப்பவரான Ethel Mary அவருடன் அறிமுகமாக விரும்பினாள். ஆனால் அவரது நடத்தை அவளை தயங்க வைத்தது. பண்டைய இந்தியா மீது அவருக்கு இருந்த ஆர்வத்தை அவளும் பகிர்ந்து கொண்டாள் என்பதுடன் மேலும் தெரிந்து கொள்ளவும் விரும்பினாள்.

ஒரு நாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு குமாரசாமியிடம் சென்று “ நான் இந்தக் கல்லூரியில் தான் படிக்கிறேன். இந்தியக் கலை மற்றும் கலாச்சாரம் பற்றிய உங்கள் கட்டுரைகளை நான் படித்திருக்கிறேன். அவை பற்றி உங்களிடமிருந்து நான் மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன் தொல்லையாக நினைக்கவில்லை என்றால் எனக்கு சொல்லித்தருவீர்களா ?” எனக்கேட்டாள்.

தான் படித்துக் கொண்டிருந்த புத்தகத்திலிருந்து கண்ணை உயர்த்திய குமாரசாமி சொன்னார், “நூலகத்துக்குள் நாம் பேசக்கூடாது. வெளியே போய் விடலாம்.” இவ்வாறாக அவர்கள் ஒரு மரத்தடிக்கு வந்து சேர்ந்தனர்.

தனக்கு ஆர்வமுள்ள விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள இங்கிலாந்தில் ஒரு நண்பர் கிடைத்தது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. அவர்கள் தினமும் சந்தித்து இந்திய கலை கலாச்சாரம் குறித்த தம் கருத்துக்க¨ளைப் பரிமாறிக் கொண்டனர்.

அவர்களது நட்பு தொடர்ந்தது, ஆழமாகியது. அவரது தாயைச் சந்திக்க வேண்டுமென்ற விருப்பத்தை ‘ஈதெல் மேரி’ வெளிப்படுத்தினாள். குமாரசாமி ஒருநாள் அவளை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். மேரி மிகவும் அழகும் ரசனையும் கொண்டவளாக இருந்ததால் அவளைத் திருமணம் செய்து கொள்ள குமாரசாமி விரும்பினார்.

அவர் தனது விருப்பத்தை தாயிடம் தெரிவித்து சம்மதம் பெற்று ஈதெல் மேரியைத் தனது இருபத்து நான்காவது வயதில் திருமணம் செய்து கொண்டார்.

அவரது திருமனத்துக்குப் பின் அவர் புவி இயலில் முனைவர் பட்டம் பெற்றார். அதிலிருந்து டாக்டர்.ஆனந்த குமாரசாமி என அறியப்பட்டார்.

அதே ஆண்டில் அவர் கொழும்புவின் சுரங்க ஆய்வு அதிகாரி ஆக நியமிக்கப் பட்டார். தான் பிறந்த மண்ணுக்கும் ,தனது தந்தை வாழ்ந்து புகழீட்டியதான மண்ணுக்கும் திரும்பிச் செல்வதில் அவர் பெருமகிழ்ச்சி அடைந்தார். அவ்ரது மனைவி ஈதெல் மேரியும் உடன் சென்றார்.

இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் தன் தாயுடன் இங்கிலாந்து சென்றார். அப்போது அவர் குழந்தையாய் இருந்தார் என்பது மட்டுமல்ல அவரது எதிர்காலமே கேள்விக்குறியாக இருந்தது. .இப்போதோ படிப்பை முடித்துவிட்டு மனைவியுடன் இலங்கை திரும்புகிறார். புவி இயல் துறை அதிகாரியாக புது வாழ்வின் தோரண வாயிலில் நுழைந்தார்.

பதின்மூன்று மாத கடல் வாசத்துக்குப்பின் கப்பல் இலங்கை வந்து சேர்ந்தது.

ஆனந்த குமாரசாமி பெரு மகிழ்ச்சி அடைந்தார். இலங்கைக்கு வந்து சேர்ந்ததும் தினமும் ஒழுங்காக வேலைக்கு சென்றார். அவரது வேலை புவி இயல் ஆய்வு சார்ந்ததாக இருந்த போதிலும், அவரது பாதை வேறு எங்கோ இருந்தது.

இலங்கை திரும்பிய கொஞ்ச காலத்துக்குள், அங்கு மிகவும் புகழ் பெற்ற குகைச் சிதைவுகளைச் சென்று பார்த்தார். அந்தப் பயணம் அவரது மொத்த வாழ்க்கையையும் மாற்றி விட்டது. அந்தச் சிதைவுகளின் கலை நேர்த்தியும் சிறப்பும் அவரை வியப்பில் திகைக்க வைத்தது. அந்தக் கலயின் அழகையும் ,அதன் பொருள் விளக்கத்தையும் உலகிற்கு எடுத்துச் சோல்ல வேண்டும் என்ற ஒரு தூண்டுதல் அவருக்குள் ஏற்பட்டது. தனது மனைவியின் துணையுடன் நான்கைந்து ஆண்டுகள் இலங்கையின் கலைகள் பற்றி ஆய்வு மேற்கொண்டார். 1909 ஆம் ஆண்டில் அவரது மெச்சுதற்குறிய படைப்பான ( Medival Sinhalese Art ) ‘இடைக்கால சிங்களக் கலை’
பதிப்பிக்கப்பட்டது. அந்த நூல் கீழ்த்திசைக் கலைகள் காட்டுமிராண்டித் தனமானவை என்ற மேற்கத்தியர்களின் தவறான நம்பிக்கையை மாற்றி , அவர்களின் கண்களைத் திறக்க வைத்தது.

இலங்கையின் கலைகள் பற்றி ஆய்வு செய்த ஆனந்த குமாரசாமிக்கு,இந்திய கலை கலாச்சாரம் பற்றியும் ஆய்வு செய்யும் ஆர்வம் உண்டானது.அவரது ஆய்வு தொடரத் தொடர முற்றிலும் புதியதோர் உலகில் அவர் நுழைந்து விட்டதை உணர்ந்தார். பிரஞ்சு,ஜெர்மன்,இலத்தீன்,கிரேக்கம்,சம்ஸ்கிருதம்,பாலி,இந்தி மொழிகளைக் கற்றார் ஏற்கனவே அவருக்கு இத்தாலியன்,ஸ்பானிஷ், டச்சு,பெர்ஷியன், மற்றும் சிங்கள மொழிகளில் பரிச்சயம் இருந்தது. அவரது தாய் மொழியான ஆங்கிலத்தோடு கூட பன்னிரண்டு மொழிகளில் புலமை பெற்றார்.

அதே சமயத்தில் அவருக்கு ‘ஈதெல் மேரிக்கும்’ மனவருத்தம் உண்டானது. அவரது ஆய்வுப்பணிகள் அதற்கு காரணமாக இருந்திருக்கக் கூடும். அவள் இளையவளாக இருந்ததால் பல இடங்களைச் சுற்றிப் பார்க்கவும் வாழ்க்கையை அனுபவிக்கவும் ஆசைப்பட்டாள். ஆனால் அவளது கணவரோ எப்போதும் ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவர்களது பாதை வெவ்வேறாக இருந்ததால் ஏமாற்றம் அடைந்த ஈதல்
மேரி தனது நாட்டுக்குத் திரும்பிச் சென்று விட்டாள்.

பல மாதங்கள் கடந்தன, அவரது ஆய்வுகள் குறுக்கீடின்ரித் தொடர்ந்தன.இந்திய இசை பற்றி ஆய்வு செய்யவும் அவருக்கு ஆர்வம் தோன்றியது. அத்தகைய காலகட்டத்தில் ரத்னா தேவி என்ற சிங்களப் பெண்ணின் அறிமுகம் அவருக்கு ஏற்பட்டது. பின்னர் அவளத் திருமணம் செய்து கொண்டார்.

இரவும் பகலுமாக தமது ஆய்வுகள் பற்றியே குமாரசாமி சிந்தித்துக் கொண்டிருந்தார். புத்தகங்கள் மூலமாக அறிந்து கொள்வதில் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. இந்தியாவுக்குச் சென்று சுற்றிப் பார்த்து, புத்தகங்களில் தான் படித்ததை எல்லாம் நேரில் பார்க்க விரும்பினார்.

ஆனால், அவரோ இலங்கை அரசின் கணிமவியல் ஆய்வுப் பிரிவின் இயக்குனர் என்ற பொறுப்பான பதவியில் இருந்தார் . என்பதனால் அவரது பெரும்பாலான நேரம் அலுவகப் பணிகளில் செலவழிந்தது. எனவே தனது ஆய்வுப் பணிகளைத் தொடருவதற்காக பதவி விலகினார்.

அவர் முற்றிலும் தனது ஆய்வுப்பணிகளில் மூழ்கியிருந்த போதிலும் தன்னைச் சுற்றியிருந்த உலகினை மறக்கவில்லை. சமுதாயத்தில் இருந்த கெடுதிகளை ஒழித்துக் களைய விரும்பினார். ‘ceylone social reform society’ இலங்கை சமூக சீர்திருத்த மையம் என்ற அமைப்பினையும், ‘celon National Review’ என்ற பத்திரிக்கையையும் தொடங்கினார்.

தனது மனைவி ரத்னாதேவியுடன் ஐரோப்பாவுக்கும் சில கிழக்கத்திய நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இங்கிலாந்தில் Broad Campden என்ற இடத்தில் ஒரு அச்சகத்தைத் தொடங்கினார். அவரது ‘Medieval Sinhalese Art’ என்ற நூல் அங்கு தான் அச்சிடப்பட்டது.

அஜந்தா எல்லோரா குகைகளுக்கு சென்று இந்தியக் கலையின் மகோன்னதத்தை தரிசித்தார். அப்போது இந்தியக்கலைகளுடன் நேரடிப் பரிச்சயம் ஏற்பட்டது.

1910 – இல் நடந்த ஒரு சம்பவம் குமாரசாமியை ஆழ்ந்த வேதனையில் ஆழ்த்தியது.

Sir. George Birdwood என்பவர் ஒரு கலை விமரிசகர். மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய கலைகள் பற்றி அவர் ஒரு முறை சொற்பொழிவாற்றினார். “கிழக்கில் கலைஞர்கள் சித்திரங்களையும் சிற்பங்களயும் உற்பத்தி செய்து அவற்றை கலைப்படைப்பு என்று சொல்கின்றனர், ஆனால் அவர்களுக்கு அழகு என்பது என்னவென்று தெரியாது” _ என்று குறிப்பிட்டார். அவரது கூற்றுக்கு எடுத்துக்காட்டாக கிழக்கத்திய புத்தர் சிலைகளை சுட்டிக்காட்டினார். “ அவற்றில் என்ன அழகு இருக்கிறது ? மரத்தூள் கொண்டு சமைக்கப்பட்டது போல இருக்கின்றன.” என்றார்.

ஆனந்த குமாரசாமிக்கு வருத்தமும் ஏமாற்றமும் ஏற்பட்டது. Bird wood போன்றவர்களுக்கு கிழகத்திய கலைகளின் தோற்றுவாய் மற்றும் வளர்ச்சி பற்றி ஏதும் தெரியாது என்று அவர் உணரத் தலைப்பட்டார். தங்களது சொந்த நாட்டின் கண்ணோட்டத்திலிருந்து அவர்கள் பேசினார்கள். ஆனாலும் பல கிழக்கத்தியர்கள் அவர்தம் மேற்கத்திய கண்ணோட்டத்திலிருந்து உருவான கூற்றை நம்பியதோடல்லாமல், தாங்களும் தங்கள் சொந்தக் கலைகளை மேற்கத்திய கண்ணோட்டத்தில் காணத்தொடங்கினர். இந்த அநியாயம் குமாரசாமியை ஆழமாக பாத்தித்தது. கிழக்கத்திய கலைகள் பற்றி விளக்க வேண்டியதன் அவசியம் தெள்ளத்தெளிவாகியது.

சிறிது காலம் கழித்து , அவர் புத்தர் வடிவத்தின் தோற்றுவாய் (The origin of Buddha Image) என்ற நூலினை எழுதினார்.

ஆனந்த குமாரசாமியும் ரத்னா தேவியும் மீண்டும் இலங்கைக்குப் பயணமானார்கள். கொஞ்ச காலத்தில் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு நாரதா எனப் பெயரிட்டனர். ‘நர’ என்பதற்கு அறிவு எனவும், ‘ தா’ என்பதற்கு தருபவன் என்றும் பொருள் படும்.( அதாவது அறிவைத் தருபவன்.)

குமாரசாமி எழுதத் தொடங்கினார். பாரம்பரிய இந்திய கலைகள் பற்றிய கட்டுரைகளப் பதிப்பித்தார். அவரது உலகச் சுற்றுப் பயணத்தை ஒட்டி வெளிவந்த முதல் நூல், ‘கலையும் சுதேசியமும்’ (Art and Swadeshi) ஆகும். உலகெங்கிலும் உள்ள கலாரசிகர்கள் அதனை வரவேற்றனர். அகில உலக அறிஞர்களும் போற்றிப் பாராட்டினர்.

இதர நூல்கள் தொடர்ச்சியாக வெளிவந்தன. அவ்ற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று “ The Art and Crafts of India and Ceylon” என்ற படங்களுடன் கூடிய 250 பக்கங்கள் கொண்ட நூலாகும். அது இந்திய சிற்பங்கள் ஒவியம் மற்றும் கைவினைப் பொருட்கள் பற்றிப் பேசியது.

அப்போது நாரதா குழந்தைப் பருவத்தைத் தாண்டி விட்டான். தந்தையின் புத்திக்கூர்மை அவனுக்கு வழிவழியாக வந்துற்றது. அவன் அபோதே சில கட்டுரைகளை எழுதி வெளியிட்டிருந்தான். தந்தையின் அடிச்சுவட்டில் நடக்க விரும்பினான். பயணம் செய்யவும் அறிவு ஈட்டவும் அவனுக்குப் பேரவா இருந்தது.

ரத்னாதேவி ஒரு பெண் குழந்தையைப் பெற்றார். அதற்கு ரோஹினி எனப் பெயரிட்டனர்.

1917 ஆம் ஆண்டில் Boston Museum of Fine Arts என்ற நிறுவணத்தில் இந்திய ,பெர்ஷிய, இஸ்லாமியகலைகள் பற்றிய ஆய்வுப் பிரிவின் இயக்குனராகப் பணி புரியும்படி அழைக்கப்பட்டார். அது அவரது வாழ்க்கையின் திருப்பு முனை ஆக அமைந்தது.

அமெரிக்காவின் இந்த அழைப்பை அவரால் புறக்கணிக்க இயலவில்லை. அவரது மனவியும் இதற்கு சம்மதித்தார். அவர் குடும்பத்தோடு அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். பாஸ்டனில் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர் கை நிறைய சம்பாதித்தார். அவரது பணி நிறைவு தரக்கூடியதாக இருந்தது.

அங்கு அவர் சிஸ்டர் நிவேதிதாவைச் சந்தித்தார். அவரது பூர்வீகப் பெயர் Miss.margaret E. Noble என்பதாகும். அவர் பின்னர் ஸ்வாமி விவேகானந்தரின் சீடரானார். அந்த வீரத்துறவியின் ஆளுமை அவர் மீது மட்டற்ற செல்வாக்கு செலுத்தியது. அவர் இந்து மதத்தைத் தழுவிய போது அவருக்கு நிவேதிதா எனப் பெயர் சூட்டப்பட்டது.

அவருடன் இணைந்து ஆனந்த குமாரசாமி ஆய்வு செய்ததில் ‘ Myths of of the Hindus and Buddhists’ என்ற நூல் வெளிவந்தது.

அமெரிக்காவிலும் கூட தனது இந்திய வாழ்க்கை முறையை ஆனந்த குமாரசாமி தொடர்ந்தார். ஒவ்வொரு நாளும் சடங்காச்சாரத்தோடு ஷண்முகப் பெருமானை வழிபட்டார். அவரது நெற்றியில் எப்போதும் சந்தனமும் குங்குமமும் துலங்கின. மேற்கத்திய உடைகளை உடுத்திய போதும் கூட தொப்பிக்குப் பதிலாக தலைப்பாகை (TURBAN) அணிந்தார். அவரது தலைப்பாகை பாஸ்டனில் பிரபலமாகி விட்டது.

பாஸ்டன் அருங்காட்சியகத்தில் அவர் ஆற்றிய நற்பணியைப் பாராட்டி அரசு அவரை அதன் இயக்குனராக நியமித்தது.

குமாரசாமியின் மன் நாரதா ஒரு எழுத்தாளராகப் பயிற்சி எடுத்துக் கொண்டார். வளர்ந்து வரும் ஒரு இளம் எழுத்தாளராக அவர் இருந்தார். இசை பயின்று வந்த ரோஹினிக்கு பிரகாசமான ஒரு எதிர் காலம் இருந்தது. கொஞ்ச காலம் அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக ஓடிற்று. ஆனால் அப்படியே நீடிக்கவில்லை.ரத்னாதேவியின் உடல் நிலை மோசமாகத் தொடங்கியது.

நாரதாவின் ஊர் சுற்றும் ஆசையை குமார சாமி கிண்டலடிப்பது வழக்கம். “உனக்கு நாரதா என்று பெயர் வைத்தாலும் வைத்தேன். நாரதரைப் போலவே நீயும் திரிலோக சஞ்சாரியாய்
ஊர்சுற்றுகிறாய்.”

அப்பாவின் நக்கலைக் கேட்டு மகனுக்கு சிரிப்பு வரும். ஓய்வாய் இருக்கும் போது தனக்கு புரிந்து கொள்ளச் சிரமமாய் உள்ள விஷயங்கள் பற்றி தந்தையோடு விவாதிப்பார்.

ஒரு நாள் நாரதா விமானத்தில் பயணம் போனார் .ஆனால் திரும்பி வரவேயில்லை. அவர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளாகி அகால மரணம் அடைந்தார். மகன் இறந்த சேதியைக்கேட்டு ரத்னாதேவி சோகத்தில் உயிர் துறந்தார். ஆனந்த குமாரசாமிக்கு இடிமேல் இடி விழுந்தது போலாயிற்று. துயரிலிருந்து மீள கீதையிலும் உபநிடதங்களிலும் மூழ்கினார்,படிப்படியாக அவருக்கு அமைதி திரும்பலாயிற்று.

சில நாட்கள் கழித்து அவரது மகள் ரோஹினி வந்து, “ அப்பா! உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டுமே என்றாள்”.
“என்ன குழந்தை?” சொல்லு என்றார்.
“நான் சொல்வது உங்களுக்கு பிடிக்காமல் போகலாம்!” என்று இழுத்தாள்.
“பரவாயில்லை .சொல்லம்மா” என்றார்.
“அப்பா நான் ஒரு அமெரிக்கரைக் காதலிக்கிறேன்.அவரைத் திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகிறேன்.உங்கள் சம்மதம் தேவை என்றாள்.”

அப்பாவுக்குத் தூக்கிவாரிப் பொட்டது.

“ரோஹினி உன் அம்மா அண்ணா இருவருமே போய் விட்டார்கள்.உன்னைத்தான் மலை போல் நம்பியிருந்தேன். இந்திய சங்கீதம் உனக்கு நன்றாக வருகிறது. அதனால் ஒரு இந்தியரைத் திருமணம் செய்து கொள்வாய் இந்தியாவுக்குச் சென்று புகழீட்டுவாய் என நம்பியிருந்தேன்.”

“இல்லை அப்பா. எனக்கு அதுவெல்லாம் பிடிக்கவில்லை. நான் ஏற்கனவே இது பற்றி முடிவு செய்து விட்டென். தயவு செய்து அனுமதி கொடுங்கள்” என்றாள்.

குமாரசாமியின் மனம் புண்பட்டது. ஆனாலும் ரோஹினியின் சந்தோஷம் தானே முக்கியம் என்று நினைத்து , “ கடவுள் துணையிருப்பார். நன்றாயிரு மகளே!” என்று ஆசீர்வதித்தார்.

இப்போது அவர் தனிமையில் இருந்தார். எழுதுவது ஒன்று தான் அவருக்கு ஆறுதல் அளித்தது.

‘THE DANCE OF SIVA’ ,TRANSFORMATIN OF NATURE IN ART’ , ‘ CHIRISYIAN AND ORIENTAL PHILOSOPHY OF ART’ , ‘ HISTORY OF INDIAN AND INDONESIAN ART’, ‘ BUDDHA AND THE GOSPEL OF BUDDHISM’ ஆகிய நூல்களை எழுதினார்.

அவரது வாழ்க்கை ஒரு துறவியைப் போல் தனிமை வாய்ந்ததாய் இருந்தது. தானே சமைத்து சாப்பிட்டார். தனது வேலைகளைத் தானே செய்து கொண்டார். அவரது ஆய்வுகள் தொடர்ந்தன. காலம் ஒடியது.

பாஸ்டனில் DONA LUSA என்ற அர்ஜந்தினாவைச் சேர்ந்த ஒரு பெண்ணை அவர் சந்தித்தார். அவள் ஒரு விதவை. அந்தப் பெண் அவரைக் கவனித்துக் கொண்டாள். அவள் நல்ல உதவியாளராகவும் துணைவராகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டாள். ஆனந்த குமார சாமியின் படைப்புகளை பதிப்பதற்கு ஏற்றவாறு திருத்தங்கள் செய்து உதவினார். அவளது துணையில் குமாரசாமி தன் துயரங்களை மறந்தார்.

அவருக்கும் டோனாலூசாவுக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு ராமா எனப் பெயரிட்டனர். அந்தக் குழந்தையை வளர்ப்பதில் குமாரசாமி அதிக கவனம் செலுத்தினார்.அந்தக் குழந்தைக்கு இந்தியக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஹரித்வாரில் இருந்த குருகுல பல்கலைக் கழகத்துக்கு அனுப்பினார். ராமா பட்டதாரி ஆகி அமெரிக்காவில் இருந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவ மனையில் அறுவைச் சிகிச்சை நிபுனராகப் பயிற்சி எடுத்தார். இப்போது அவர் அமெரிக்காவில் மருத்துவராகப் பணி புரிகிறார்.

ஆனந்த குமார சாமியின் வாழ்வு கிழக்கத்திய கலைகளுக்கான ஆய்வுகளுக்காகவே அர்ப்பணிக்கப் பட்டிருந்தது. அவரது இறுதிக் காலம் நடைமுறையில் ஏகாக்கிரக சிந்தனை வயப்பட்டிருந்தது. அவர் அமெரிக்காவில் வாழ்ந்த போதிலும் கூட, அவரது ஆன்மா இந்தியாவிலேயே சஞ்சரித்தது. அவரது மனமும் அறிவும் இந்திய ஓவியம், நடனம், நாடகம், இசை, மறை நூல்கள்,இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தால் நிரப்பப் பட்டிருந்தது.

செப்டம்பர், எட்டாம் நாள், 1947 இல் அவர் திடீரென மறைந்தார். அதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் தான் அவர் தனது 80 ஆவது வயதைக் கடந்திருந்தார். அவரது விருப்பப்படியே மகன் ராமா அவரது அஸ்தியைக் கங்கையில் கரைத்தார். வெகு தூரத்தில் வாழ்ந்த போதிலும் இந்தியாவுக்காகவே அர்ப்பணித்துக் கொண்ட அந்த ஆத்மா இந்தியாவுடன் சங்கமித்தது.

செல்வாக்கு வாய்ந்த மேற்கத்திய கலை விமர்சகர்கள்கிழக்கத்திய கலைகள் பற்றிப் புரிந்து கொள்வதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் பொறுப்பற்ற முறையில் பேசிக்கொண்டிருந்த காலத்தில் அவர்களது கண்களை ஆனந்தகுமாரசாமி திறந்து விட்டார். Vicent Smith, Bird Wood, Mascal , Archer ஆகியோர் இந்தியக் கலைகளை இவ்வாறு ஏளனம் செய்து கொண்டிருந்தனர் என்பதோடு அவற்றை வெறுக்கவும் செய்தனர். இந்தியக்கலைகளில் இந்து கடவுளர் உருவங்களே அதிகப்படியாக இருந்ததால் இந்திய சிற்பங்கள் மீது அவர்களுக்குப் பகைமை ஏற்பட்டிருந்தது.

இது குமாரசாமிக்கு ஆத்திரம் ஊட்டுவதாக இருந்தது. வரிசையாய் ஒன்றன் பின் ஒன்றாக இந்தியக் கலைகள் பற்றி விளக்கிய, தனது கட்டுரைகளின் வலிமையான தாக்கத்தின் மூலம் அவர்களைத் தலை குனியும்படி செய்தார் குமாரசாமி. இந்தியக் கலைகளின் உயிர்த்துடிப்பினையும் காலத்தால் வெல்ல முடியாத் தன்மையையும் எல்லாரும் காணும் படி செய்தார். கலைஞர்களையும் சாமானியர்களயும் ஒரு சேரக் கவர்ந்திழுக்கும் அஜந்தா,எல்லோரா போன்ற கலைப் பொக்கிஷங்கள் பற்றி விரித்துரைத்தார்.

ஆனந்த குமாரசாமி தனது பல நூல்களிலும் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய கலைகளின் முக்கியமான வேறுபாடுகள் பற்றி விரித்துரைத்தார். “ கிழக்கத்திய கலைகளை மேற்கத்திய கண்ணோட்டத்தில், மனதாலும்_ விழியாலும் பார்ப்பதை விட்டொழிக்க வேண்டும்.” என அவர் வலியுறுத்தினார்.

பண்டைய இந்தியாவில் பாடல்கள்,சிற்பங்கள்,கவிதைகள் இயற்றியோர் தமது பெயரை எப்போதுமே வெளிப்படுத்தியதில்லை. அப்படியே படைப்புகளில் பெயர் வெளிப்பட்டபோது கூட விவரங்கள் கொடுக்கப்பட்டதில்லை.

இந்த நாட்டில் கலைஞர்கள் முழுக்கவும் தமது சொந்தக் கற்பனையில் எதையும் படைப்பதில்லை. ஒரு புத்தர்,ஒரு நடராஜர் அல்லது ஒரு மகிஷாசுரமர்த்தினியின் பிம்பத்தை உருவாக்கும் போது “நடராஜர் இப்படித்தான் தாண்டவமாடுவார், புத்தர் இப்படித்தான் தோற்றமளிப்பார்,மகிஷாசுரமர்த்தினி இப்படித்தான் இருப்பாள்” என்று தனக்குள் சொல்லிக்கொள்வதில்லை.

ஒரு சிற்பி தனது இரத்த நாளத்தில் ஓடும் பாரம்பரியமானதும், மொத்த சமுதாயத்தின், மொத்த இனத்தின் நம்பிக்கையை உள்வாங்கித்தான் தனது படைப்பைத் தொடங்குகிறான். மேற்கில் கலைஞன் என்பவன் தனி மனிதன். அவனது உணர்வுகள்,கற்பனைகள்,கவர்ச்சி ஆகியவை
அவனது ஓவியங்களுக்கும் சிற்பங்களுக்கும் அடிப்படை ஆகின்றன. ஆனால் இந்தியாவில் ஒரு ஓவியமோ, சிற்பமோ,பாடலோ ஒட்டு மொத்த சமுதாயத்தின் நம்பிக்கை கற்பனை ஆகியவற்றைத்தான் ஆணி வேராகக் கொண்டுள்ளன.

ஒருவர் இந்தியக் கலைப்படைப்புகளைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அவருக்கு அனைத்து இந்து சமுதாயத்தின் உணர்வுகளும் நம்பிக்கைகளும் புரிந்திருக்க வேண்டும். இவை யதார்த்தமான கலைகள் அல்ல, அடையாள பூர்வமான சின்னங்கள். அதாவது ஒரு புத்தரின் வடிவமோ,நடராஜரின் வடிவமோ அல்லது கணபதியின் வடிவமோ அந்தக் கலைஞன் அல்லது அவனது சமகாலத்தவர்கள் இத்தெய்வங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற அவனது சொந்த நம்பிக்கையில் பிறந்தவை அல்ல.

தாமரைமலர் மேல் புத்தர் அமர்ந்திருக்கும் வடிவத்துக்கு அந்தக் கலைஞனும் அந்த காலத்து மக்களும் தாமரை மலர் மேல் புத்தர் அமர்ந்திருந்தார் என நம்பினார்கள் என்று பொருள் படாது. அந்தத் தாமரை, இரு கரங்கள்,நான்கு கரங்கள்,எட்டுக்கைகள் போன்றவற்றுக்கு ஆழமான அர்த்தங்கள் உண்டு. ஒரு நடராஜ வடிவமானது சிவபெருமானின் ஆக்கல் ,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,முக்தி அளித்தல் என்ற ஐந்தொழில்களைக் குறிக்கின்றது. உடுக்கு படைப்புத் தொழிலின் துவக்கத்தைக் குறிக்கின்றது. அபய கரம் எனும் திறந்த கையின் தோற்றம் காக்கும் தொழிலைக் குறிக்கின்றது. ஒரு கையில் உள்ள எரியும் நெருப்பு அழித்தல் தொழிலைக் குறிக்கின்றது. தூக்கிய பாதம் முக்தி அளித்தலைக் குறிக்கின்றது.பாதத்தை சுட்டிக்காட்டும் நான்காவது கையானது ஆன்மாவின் சரணத்தைக் குறிக்கின்றது. இடுகாடு அல்லது சுடுகாடு தான் மனிதனின் ஆன்மாவும் இதயமும் ஆகும். சிவபெருமான் எல்லா ஆசைகளையும் மாயைகளையும் இங்கே எரித்துக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறாக நடராஜர் சிலையின் ஒவ்வொரு அம்சத்துக்கும் ஒரு உள்ளர்த்தம் உண்டு. சிற்பி மட்டும் தானே இந்த விவரங்களைத் தீர்மானிப்பதில்லை. மொத்த சமுதாயத்தின் கற்பனைகளும் உணர்வுகளும் அந்த வடிவத்தில் உட்பொதிந்து இருக்கிறது. “ இப்படித்தான் நடராஜர் தோற்றமளிப்பார்” என்று பார்வையாளர்களிடம் சொல்வது சிற்பியின் நோக்கமல்ல. இந்தப் பிரபஞ்சத்தை படைத்த காக்கின்ற, அழிக்கின்ற ஒரு சக்தி இருக்கிறது.அந்த சக்தி மனிதனின் ஆசைகளையும் மாயைகளையும் ஒழித்து முக்தி கொடுக்கும் என்பதைத்தான் சிற்பி தனது படைப்பின் மூலம் வெளிப்படுத்த விரும்புகிறான். இந்த நோகத்தில் தான் கால் , கரங்கள் ,உடுக்கு போன்ற எல்லா அம்சங்களையும் வடிவமைக்கிறான்.

குமாரசாமிக்கு இந்திய இசையிலும் ஈடுபாடு அதிகம். “ இந்திய இசை பல தளத்திலான உணர்ச்சிகளின் அனுபத்தினை வழங்குகிறது. அது விளைவிக்கும் வருத்தம் கண்ணீர் தோய்ந்ததல்ல,மகிழ்ச்சி வெறியூட்டுவதல்ல,உணர்வுகளின் செறிவு சாந்தமானது” என்றார் அவர்.

இந்தியக் கலைகளின் வரலாறு குறித்து எழுதுகையில், “ இந்து மக்களின் மதத்தில் அழகுக்கும் அறிவியலுக்கும் இடையே வேறுபாடுகளோ முரன்பாடுகளோ இல்லை. அவர்களது சிறந்த படைப்புகளில், இசையோ ,இலக்கியமோ, இதர கலை வடிவங்களோ, இவற்றில் எல்லாம் பிரிக்கவொண்ணாத ஒரு ஒற்றுமை இருக்கிறது.” எனக் குறிப்பிடுகிறார்.

இந்தியக்கலைகள் பற்றிய குமாரச்சமியின் எழுத்துக்கள் மேலை உலகில் விளவித்த தாக்கத்தின் சாட்சியத்தை உலகப் புகழ் பெற்ற ENCYCLO PAEDIA BRITANICA_ வில் காணமுடியும். இந்நூல் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கியது ஆகும். தகவல் தேடும் ஒருவர் கலைக்களஞ்சியத்தைப் புரட்டினால் போதும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் மேலே குறிப்பிட்ட கலைக் களஞ்சியத்தில் பதிமூன்றாம் தொகுதி வரை இந்தியக் கலைகள் பற்றி எந்தக் குறிப்பும் காணக்கிடைக்காது.

குமாரசாமி பல நூல்களை எழுதிப் பதிப்பித்த பிறகு அந்தக் கலைக் களஞ்சியத்தின் தொகுப்பாளர்களின் கண்கள் திறந்தன. கட்டுரைகள் அனுப்பும் படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். அதன் பதிநான்காம் தொகுதியில் ஆனந்த குமாரசாமியின் எட்டு கட்டுரைகள் இடம் பெற்றன.

இந்தியர்களுக்கு, தம் பாரம்பரியம் தெரியவில்லையே என அவர் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்தார். ஆங்கிலேயர்களால் விதைக்கப்பட்ட கல்வி முறை பல தலைமுறையினரை மேற்கத்தியர்களாகவும் இல்லாத கிழக்கத்த்¢யராகவும் இல்லாத இரண்டும் கெட்டான் நிலைக்குத் தாழ்த்தி விட்டது என்று அவர் சொல்வது வழக்கம்.

அமெரிக்காவுக்கு கல்வி பயிலச் சென்ற ஒரு இளைஞர் குழுவுடன் உரையாடுகையில், “ நீங்கள் இந்தியக் கலாச்சாரம் பாரம்பரியம் ஆளுமை ஆகிய பின்புலத்தை எப்போதுமே மறக்கக் கூடாது. நீங்கள் எங்கெங்கு இருந்தாலும் இந்தியராகவே இருந்து தாய் நாட்டின் தூதுவர்களாகப் பணி புரிய வேண்டும்.” என அறிவுருத்தினார்.

அவரே இந்தியக் கலாச்சாரத்தின் உலகத்தூதராய்த்தான் இருந்தார்.

அவர் மிகவும் எளிமையான கூச்ச சுபாவம் உள்ள மனிதர். அவரது சொந்த வாழ்க்கை பற்றி அதிகம் தெரியாது. படாடோபமற்ற உண்முகச் சிந்தனையாளராக இருந்த போதிலும் பிறரிடம் இயல்பாகக் கலந்து விடுபவர் அவர். அவர் எப்போதும் தன்னைப் பற்றிப் பேசியதில்லை என்பதோடுகூட யாராலும் புகழப்படுவதை விரும்பியதில்லை. சொல்லொன்றும் செயலொன்றுமாக இருப்பதை வெறுத்தார், தான் எதை நம்பினாரோ அதை நடைமுறை படுத்தினார்.

ஒரு முறை துரைசிங்கம் என்னும் அவரது நண்பர் குமாரசாமின் வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்பி அவரை அணுகி வாழ்க்கைச் சம்பவங்களை விவரமாக தனக்குச் சொல்லும்படி கேட்டார். ஆனால் குமாரசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவர் தனது நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில், “ நான் எப்போதும் மறைவாக இருக்க விரும்புகிறான். என்னைப் பற்றி எழுதுவதை விட்டு எனது நூல்களைப்பற்றி எழுதுங்கள். எனது நூல்களை விமர்சனம் செய்து மதிப்பீடு செய்யுங்கள். அது போதும். நான் இந்தியக் கலாச்சாரதை வழிபடுபவன் அதன் படி பார்த்தால்,ஒருவரது வாழ்க்கை வரலாற்றினை எழுதுவது அவருக்கு முக்தி பெற வழி வகுக்காது என நான் நம்புகிறேன். நான் அடக்கத்தின் காரணமாக இவ்வாறு சொல்லவில்லை, இதுதான் எனது வாழ்க்கை நெறிமுறை.” என்று குறிப்பிட்டார்.

திண்ணையில் புதுவை ஞானம். J.p.pandit@gmail

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்