இன்டெர்நெட்டில் திவசம்

This entry is part 27 of 49 in the series 19991203_Issue

ஷோபா நாராயணன்


ஷீலா அத்தை இறந்து போய்விட்டாள்

எங்கள் குடும்பத்தில் ‘நினைவு நாள் ‘(wake) கொண்டாடுவது பாரம்பரியத்தில் சேர்ந்தது இல்லை என்றாலும் (நாங்கள் இந்துக்கள்), எங்கள் தாத்தா இந்த பழக்கத்தை தனது பிரிட்டிஷ் முதலாளியிடமிருந்து கற்றுக்கொண்டு எங்கள் குடும்பத்தில் நிலைப்படுத்தி விட்டார்.

உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கும் எங்கள் பெரும் குடும்பம் ஒரு இடத்தில் ‘நினைவு நாளுக்காக ‘ ஒன்று சேர்வது என்பது இயலாதது. எனவே எனது சொந்தக்காரனான விக்ரம் (விக்கி) இன்டெர்நெட்டில் இதைப்பண்ணலாம் என்று யோசனை சொன்னான்.

பிறகு, எனது எதிர்ப்பையும் மீறி, என்னை இரங்கல் சொற்பொழிவு செய்யவும் தேர்வு செய்தான். (ஷீலா அத்தை பற்றிய எனது அன்பான நினைவு, குழந்தைகளான எங்களை ஒவ்வொரு ஞாயிறு காலையும் கரண்டி நிறைய விளக்கெண்ணைய் குடிக்க வைத்ததுதான்)

‘ஏன் நான் ? ‘ என்று கேட்டேன். ‘ஏனெனில் வேறு யாரும் செய்ய மாட்டேன் என்கிறார்கள் ‘ என்று விக்ரம் பதில் சொன்னான்.

என் குடும்பத்தினர் ஏற்கெனவே இன்டெர்நெட்டில் இருந்தார்கள். 36 சொந்தக்காரர்களும் சேர்ந்து KDS குடும்ப செய்திக்குழு என்று ஒன்று உருவாக்கி கடந்த ஒரு வருடமாக மின்னஞ்சல் மூலமாக ஐந்து கண்டங்களை அளவளாவி தொடர்பு கொண்டுவருகிறோம்.

எங்கள் பேச்சு பலவிதமான விஷயங்களைப்பற்றியது. பெங்களூரில் உள்ள எங்கள் சொந்தக்காரன், புது வீடு வாங்கி புதுமனை புகுவிழாவுக்கு எங்களுக்கு எலக்ட்ரானிக் அழைப்பிதழ் அனுப்பினான். ஸிட்னியிலுள்ள சொந்தக்காரன் அவனது பெண்ணுக்கு பெருமை மிகுந்த ஆஸ்திரேலிய மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்ததை எங்களிடம் சொன்னான்.

அமெரிக்க மாநிலமான ஆரிகோன்-இல் இருக்கும் போர்ட்லேண்ட் நகரத்தில் இருக்கும் ஒரு சொந்தக்காரன் தான் ஒரு வியாபாரம் ஆரம்பிக்கப்போவதாகவும் அதற்கு பணம் தர பணக்கார முதலீட்டாளர்களை தேடிக்கொண்டிருப்பதாகவும் சொன்னான். ஒருவன், இந்தியாவுக்குப் போக விலை கம்மியான ஆகாயவிமான டிக்கெட்டுகள் எங்கே கிடைக்கும் என்று கேட்டான். ஸாம்பியாவில் வேலைவாய்ப்பு எப்படி என்று இன்னொருவன் கேட்டான்.

எனது 40 வயதான மாமா தான் இமயத்துக்கு பிரயாணம் சென்றதைப்பற்றி நீண்ட பிரயாணக் கடிதம் எழுதினார்.

நேரில் பார்த்தால் பேசுவதை விட இன்டெர்நெட்டில் எங்கள் சத்தம் சற்று அதிகமாகவே இருந்தது. அது பிரச்னையாகவும் ஆனது. எங்கள் தாத்தா பாட்டிக்கு 10 பிள்ளைகள். அந்த பிள்ளைகளுக்கும் நிறைய பிள்ளைகள். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வயது, வெவ்வேறு குணம்.

என் அத்தைகளும், மாமாக்களும், பெரியம்மாக்களும், பெரியப்பாக்களும் இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் இருந்தார்கள். அடாவடி டெல்லி, அறிவார்த்த கல்கத்தா, வியாபார பம்பாய், பாரம்பரிய சென்னை.. இவர்களது பிள்ளைகள்தான் என் சொந்தங்கள். பம்பாயில், மினி ஸ்கர்ட்டும், பாப்பிசையும் ஆதாரமாய்க் கொண்டு வாழ்பவை, பாரம்பரிய உடையும், எண்ணை வழியும் தலையுமாக அலையும் தெற்கே இருக்கும் எங்களை பட்டிக்காட்டான்களாக பார்க்கும்.

எனது தலைமுறை வளர்ந்து, பொறியியலாளர்களாக, மருத்துவர்களாக, விளம்பரக் கம்பெனியில் எழுத்தாளர்களாக, சமையலாளர்களாக, வக்கீல்களாக, சொந்தக்கம்பெனி நடத்துபவர்களாக, இன்னும் ஆடு வளர்ப்பவர்களாக, தேயிலைத் தோட்டக்காரர்களாக வளர்ந்தபோது, பூகோள ரீதியாகவும் எங்களுக்குள் தொலைவு வந்தது. இது நாங்கள் ஒருவரை ஒருவர் வெறுத்தோம் என்று பொருளில்லை. அதாவது, எங்கள் முன்னோர்களைத்தவிர எங்களிடம் பொதுவான விஷயங்கள் அதிகமில்லை என்பதுதான்.

ஆனால் இடையே இன்டெர்நெட் குறுக்கிட்டது.

ஒரு நாள், என்னை KDS செய்திக்குழுவில் சேர அழைத்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. இதன் நடுநிலைமையாளர் எனது லண்டனில் இருக்கும் சகோதரன்.

‘நீ இந்தக் கும்பலோடு சேர விரும்புகிறாயா என்ன ? ‘ என்றேன். ‘ஏனென்றால், நான் ஒரு அப்பா. நமது குழந்தைகள் அவர்களது குடும்பத்தைப்பற்றி, அவர்களது வேர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ‘ என்று பதில் சொன்னான்.

ஆகவே இது ஆரம்பித்தது. சிறு தூறலாக ஆரம்பித்த மின்னஞ்சல் கடிதங்கள், மேலும் மேலும் சொந்தங்கள் இணைய, பெரும் கோடைமழையானது. எனக்குப் பிடித்த சொந்தங்களோடு என் நட்பை உறுதிப்படுத்திக் கொண்டேன். எனக்குப் பிடிக்காதவர்களின் வேலை உயர்வோடு எனது வேலையை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டேன். பிரச்னைகள் உடனே வெளிவரத் தொடங்கி விட்டன.

இன்டெர்நெட்டின் பிரச்னை என்னவென்றால் எல்லாமே சத்தமாக சொல்லப்பட்டு விடுகிறது. காதோரக் கிசுகிசுக்களோ, யாருமறியாமல் தாடையைத் தோளில் இடிப்பதோ முடியாது.

தினோ என்கிற என் மூத்த கஸின் லியான்ஸ் பிரான்ஸிலிருந்து, தான் எவ்வாறு எவர் துணையுமின்றி இவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறான் என்று எழுதியபோது, நான் எனக்குப் பிடித்தவளான கீதாவின் பக்கம் திரும்பி வழக்கம்போல் ‘பீத்தல் கழுதை ‘ என்று கிசுகிசுக்க முடியவில்லை. நான் யாரோடு பேச விரும்புகிறேன் என்று தேர்வு செய்யவும் முடியவில்லை.

தனித்தனியான மின்னஞ்சல் முகவரிகளைத் தேடி எடுத்துப் பேசாவிடில் எல்லா சொந்தங்களோடும் தான் பேசியாகவேண்டும். இதில் ஒரு முறை, எல்லாருக்கும் முன்பாகவே, ஒருத்தி நான் அவளது சொத்தை திருடிக்கொண்டதாக (தவறாக) பறை சாற்றியதும் சேர்த்தி. வம்பு பேச முடியவில்லை என்பதுதான் பெரிய பிரசினை.

மிகச்சாதாரணமான கேள்வியைக் கூட, பெரும் விஷயமாக இன்டெர்நெட் சிலசமயம் மாற்றி விடுகிறது. இது பொங்குமாங்கடலான எங்கள் குடும்பத்தின் நடுவே ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தது.

உதாரணமாக, விக்ரம் என்ன வேலை செய்கிறான் என்று எங்கள் யாருக்கும் தெரியாது. அவன் தனது பள்ளிக்கூடத்துக் காதலியோடு வீட்டைவிட்டு ஓடிப்போனதை குடும்பம் மன்னிக்கவேயில்லை. அவனும், குடும்பம் அவனை மன்னிக்காததை மன்னிக்கவேயில்லை. ஆகவே அவன், நியூஸிலேந்துக்கு தன்னைத்தானே நாடுகடத்திக் கொண்டான். ஒரு பெரும் பணக்காரிக்கு அவன் ஆடு மேய்க்கிறான் என்றும் அவள் இவனை ‘வைத்து ‘க்கொண்டிருக்கிறாள் என்றும் எங்களிடம் வதந்தி.

ஏதாவது கல்யாணம் கார்த்தியில் சந்தித்திருந்தோமானால், ‘டேய் விக்கி, ஆக்லேந்தில் என்ன பண்றாய் ? ‘ என்று கேட்டிருப்போம். அதே கேள்வியை இன்டெர்நெட்டில் கேட்டால் அவனை விரோதிப்பது போலாகிவிடுகிறது.

ஷீலா அத்தைக்காக எங்கள் பழைய விரோதங்களைச் சற்று ஒதுக்கி வைக்கத் தீர்மானித்தோம். அதே நேரம் நாங்கள் இப்போது ‘உடனடிப் பேச்சு ‘க்கான (realtime chat) மென்பொருளை உபயோகப்படுத்த ஆரம்பித்திருந்தோம்.

விக்ரம் 7 மணி மாலை ஆக்லேந்திலிருந்து ஆரம்பித்தான். நியூயார்க்கில் அது காலை 3 மணி.

உள்ளே சென்று என்னை அடையாளம் சொன்னபின் கவனித்தால் அங்கே எல்லோரும் இருந்தார்கள், வழக்கம்போல் தாமதமாக வரும் எனது கஸின் தினோ தவிர.

‘ஏதோ மாலிக்யூலர் பயாலஜியில் டாக்டரேட் பண்ணுவதால் அவனுக்கு என்னமோ எப்போதும் தாமதமாய் வருகிற, absent minded professor மாதிரி தன்னை காண்பித்துக்கொள்ள ஆசை ‘ என்று நான் டைப் அடித்தேன்.

‘நாம் இங்கே ஒரு புனிதமான நிகழ்ச்சிக்காக கூடியிருக்கிறோம் என்பதை எல்லோருக்கும் ஞாபகப்படுத்துகிறேன் ‘ என்றான் விக்ரம் ஆடம்பரமாக.

‘மக்களே, மன்னிக்கவும், பரிசோதனைச்சாலையிலிருந்து வெளியே வரத் தாமதமாகிவிட்ட்டது ‘ என்று டைப் அடித்தான் தினோ.

‘Dearly beloved ‘ என்று ஆரம்பித்தான் விக்ரம்.

‘இது கல்யாணமல்ல, நினைவாஞ்சலி ‘ என்று ஞாபகப்படுத்தினான் எனது சகோதரன். ‘எனக்குத் தெரியும் ‘ என்று விக்ரம் பதிலுக்கு டைப் அடித்தான். ‘நான் இதுவரை ஏதும் நினைவாஞ்சலி செய்ததில்லை. கொஞ்சம் பொறுமை தேவை ‘

‘இந்துக்கள் நினைவாஞ்சலி செய்வதில்லை ‘ என்றான் டாக்டரேட் பண்ணும் தினோ. ‘மேலும் ஷீலா அத்தையை எரித்தார்கள், புதைக்கவில்லை ‘

‘எனக்குத்தெரியாதா ? ‘ விக்ரம் சொன்னான் ‘நாம் நினைவாஞ்சலி போல ஏதாவது செய்யவேண்டும் என்றுதான் கேட்டேன். சற்று நேர மெளனம். இதுமாதிரி ஏதாவது. இத்தனைக்கும் அவள் நமது அன்பார்ந்த அத்தை ‘

‘அன்பார்ந்த – என்று சொன்னாயா ? ‘ பெங்களூர் கஸின் குத்தலாகக் கேட்டான் ‘ஒரே ஆளைப்பற்றிதான் நாம் பேசிக்கொண்டிருக்கிறோமா ? ‘

‘இறந்தவர்களைப் பற்றிக் குற்றம் சொல்லாதே ‘ என்றான் தினோ.

‘பெருமான்களே, பெருமாட்டிகளே, கொஞ்ச நேரம், நாம் நமது வயசுக்கு ஏற்றாற்போல நடப்போமா ? ‘ என்றான் விக்ரம் ‘ஷோபா இப்போது இரங்கல் சொற்பொழிவு நிகழ்த்துவாள் ‘

நான் என் தொண்டையைச் சரிசெய்து கொண்டேன். ‘சொந்தங்களே, நண்பர்களே, முன்னோர்களே, ‘ நான் டைப் அடித்தேன் ‘ நாம் இங்கே நமக்குப் பிரியமான ஷீலா அத்தையின் வாழ்வைக் கொண்டாடவும், அவளது இழப்பை வருந்தவும் இங்கே கூடியிருக்கிறோம். ‘ என் கணவரின் தாளம்போன்ற குறட்டையும், என் குழந்தையும் என்சொற்பொழிவில் குறுக்கிட்டன. கம்ப்யூட்டர் இருண்ட அறையில் கலங்கரை விளக்கு போல ஒளிர்ந்தது. இருண்ட நியூயார்க் வானம் விடியலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. எனக்கு மகா கிறுக்குத்தனமாகத் தெரிந்தது.

‘நம்மை அவள் விளக்கெண்ணையால் விஷம்வைத்து, குடலைப்பிரட்டி, சிலசமயம் வாந்தி யெடுக்கவைத்து, பல சமயம் நாள் முழுக்க பாத்ரூமிலேயே இருக்க வைத்ததாகவே இருக்கலாம் ‘ நான் டைப் அடித்தேன். ‘நம்மைப் பார்த்து சொன்ன அன்பார்ந்த வார்த்தையே – பொண்ணே நகருடி என்வழியை விட்டு – என்பதாகவே இருக்கலாம். முதுமை வந்து தள்ளாத வயது வரை நமது பெயரையே ஞாபகம் வைத்துக் கொள்ளாதவளாகவே அவள் இருக்கலாம். நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கல்யாணமே பண்ணிக்கொள்ளாத நமது ஷீலா அத்தை நமக்கு நல்லதையே நினைத்தாள். இந்த எண்ணத்தையே நாம் இந்த நேரத்தில் அவளது வாழ்வைக் கொண்டாடும்போது நினைத்துக்கொள்ளவேண்டும் ‘

என்னால் போக முடிந்த அளவு அவ்வளவுதான். நீண்ட பெருமூச்சு விட்டேன். இரங்கலுக்குப் பின் பேச்சில் இருக்க மனமில்லை எனக்கு.

‘அவளது சாம்பல்கள் அமைதியில் நிலைக்கட்டும் ‘ திடாரென முடித்தேன். மனதார ஓமென்று உரைத்தன பதில்கள். நான் கம்ப்யூட்டரை நிறுத்தினேன்.

 

Thinnai 1999 December 3

திண்ணை

Series Navigation<< வெள்ளைத் திமிர்தமிழ் இனி 2000 >>

Scroll to Top