இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மக்கள் நல திட்டங்கள் – சரியான பாதையில் திரும்புகிறது என நம்புவோமாக

This entry is part [part not set] of 28 in the series 20060106_Issue

முத்துசாமி


இந்தியாவின் பிரதம மந்திரி பேராசிரியர் மன்மோகன் சிங்கின் அரசு கடந்த சில வாரங்களாக அறிவித்து வரும் கிராம வளர்ச்சி திட்டங்களும், சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிற்படுத்தபட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு சட்டமும், சமீபத்தில் அவர் ஆற்றி வரும் உறைகளும் இந்தியாவின் வளர்ச்சியில் உண்மையிலேயே இந்த அரசு ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. சாதி மத மோதல்களை தூண்டிவிட்டு, வேள்விகள் வளர்த்து மதக்கலவரத்தை தூண்டி, காமதேனு பசுதேவகுடும்பம் பால் கொடுக்கும் என பொய் சொல்லி, இந்தியா ஒளிர்கிறது என பொய் சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்ட கட்சிகளை விட தற்பொழுதுள்ள அரசு செய்யப்போவதாக சொல்லிவரும் திட்டங்கள் வரவேற்க்கதக்கவை. வள்ளுவன் சொல்லியது ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார், மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் ‘. இது இந்தியாவைப் பொறுத்தவரை எக்காலத்திற்கும் பொருந்தும். வேளாண்மை துறையிலும் கிராமங்களின் வளர்ச்சியிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கபட்டு, விவசாயிகளின் விவசாய தொழிலாளர்களின் சமூக அந்தஸ்தும், நலனும், அவர்களின் உற்பத்திகளுக்கு உரிய மதிப்பும் (value addition) கிடைக்கப் பெரும் வகையில், படித்த இளைஙர்களும் வேளாண்மைதுறை சார்ந்த தொழில்களில் ஆர்வம் காட்டும் வகையில் இந்தியாவின் பொருளாதார, கல்வி, மற்றும், தொழில் திட்டங்கள் அமைக்கப்படுவது மிக அவசியம்.

ஆனால் இந்த கிராம மற்றும் நகர்ப்புற திட்டங்கள் உண்மையிலேயே மக்களை சென்றடையும் வகையிலும், அதனால் இந்திய மக்களின்

மனித, சட்ட உரிமைகள் (civil & human rights) மேம்படச்செய்யவும், உழைப்புக்கேற்ற ஊதியத்தை உறுதி செய்யும் வகையிலும்,

பின்தங்கிய மக்களின் தொழில்களில் நவீன தொழில்னுட்பத்தின் மூலம் அவர்கள் வாழ்வின் கண்ணியத்தை (life & job dignity) மேம்படுத்துவதாகவும், நவீன கல்வி, நவீன சுகாதாரம், வேளாண்மை உற்பத்தி, மருத்துவ வசதிகள் போண்றவற்றை அடிப்படையாக கொண்ட கிராமப்புற பொருளாதாரத்தை உருவாக்கும் வகையில் திட்டமிட்டு மிகக்குருகிய காலத்தில் செயல்படுத்த படவேண்டும். நவீன தொழில்நுட்ப தேசம் என்று சொல்லிக்கொண்டு இன்னும் துப்புறவு தொழிலாளர்களும், சாலைப் பணியாளர்களும் உயிரை பணயம் வைத்து உழைப்பது எந்த விதத்தில் நியாயம்.

இந்த திட்டங்கள் அந்தெந்த மாநிலங்களில் உள்ள மொழி, பண்பாடு, கலை இலக்கிய மேம்பாட்டினை பாதுகாத்து வளர்த்தெடுக்கும் வகையிலும் செயல்படுத்துதல் அவசியம். இதற்கான கணக்கு வழக்கு மற்றும் செலவுக்குரிய உரிமைகள், ஒப்பந்தக்காரர்களை தேர்வு செய்யும் உரிமை, மாநில மொழியை பேசும், மக்களை நேசிக்கும், நிர்வாக மற்றும் தலைமைப் பண்புகள் நிறைந்த இளம் ஆட்சித்துறை அதிகாரிகள், வேளாண்மை துறை மற்றும் தொழில்துறை சார்ந்த மேலாளர்கள், அடங்கிய குழுக்களிடம் வழங்கப்பட வேண்டும். இதில் அரசியல்வாதிகளின் பங்கு – திட்டங்களின் ஆரம்ப நிலையில் இடம், அமைப்பு தேர்வு செய்யும் உரிமையையும், குறித்த திட்டசெயல்பாடுகளை மேற்பார்வையிடுவதற்கான உரிமையையும், கணக்கு வழக்குகளை சரிபார்த்திடும் உரிமையை மட்டுமே பெற்றிருக்க வேண்டும்.

திட்டங்களை செயல்படுத்துவதில் குறைபாடுகள் இருப்பின் அதற்கு அதிகாரிகளே பொறுப்பேற்கும் வகையில் கட்டுபாடுகளையும், அளவீடுகளையும், சலுகைகளையும், பதவி உயர்வுகளையும் (performance measures, controls, incentives, promotions) அமைத்திடவேண்டும். இந்த திட்டங்களை மன்மோகன் சிங் அவர்களே கூறியிருப்பது போல, ஏற்கனவே சாலை, மற்றும் ரயில்களால் இணக்கப்பட்ட சிறிய நகர்கள் மட்டுமல்லாது, புதிய குடியிருப்புகளை(townships) அமைத்து செயல்படுத்திடவேண்டும். இத்தகைய குடியிருப்புகள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் (விளை நிலங்களை பாதிக்காத வகையில்)அமைக்கபட வேண்டும். இத்தகைய குடியிருப்புகளில் சிறந்த பள்ளிகள், நவீன மருத்துவ கூடங்கள், நூலகங்கள், வேளாண்மைத்துறைக்கு ஆதரவான எல்லா விவசாயிகளுக்கும் தொழில் உபகரணங்களை வழங்கும் கூட்டுறவு அமைப்புகள், என அனைத்து வசதிகள்

கொண்டதாகவும் அமைக்கப்பட வேண்டும், இந்த புதிய குடியிறுப்புகள் புதிய ரயில் தடங்களாலும், சாலைகளாலும் இணைக்கப்பட வேண்டும். இந்த குடியிருப்புகளில் அடிப்படை கல்வி ஆண், பெண் இருபாலருக்கும் கட்டாயமாக்க படுதல் அவசியம். இத்தகைய குடியிருப்புகளின் கட்டுமானத்திலும், நிர்வாகத்திலும் தனியார் முதலீடுகளும் (domestic) செய்ய வழிவகுக்கலாம் ஆனால் இந்த தனியார் நிறுவனங்கள் அரசின் சட்ட திட்டங்களுக்கும், மக்களின் மொழி பண்பாட்டு உரிமைகளுக்கும், விவசாயிகளுக்கும், விவசாயிகளின் பொருள்களுக்கு உரிய விலைகளுக்கும் உத்தரவாதம் கொடுக்கும் வகையில் இத்தகைய குடியிருப்புகளின் நிர்வாகம் அமைக்கப் படவேண்டும்.

உதாரணமாக, பொதுத்துறை நிறுவனங்களை சார்ந்து இத்தகைய குடியிறுப்புகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன; பெரும்பாலும் அவை மேல்தட்டு மக்களின் நலத்தைதான் காட்கின்றன. இவைகள் வேளாண்மைதுறை சார்ந்தும் கிராமங்களில் அமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள பஞ்சாயத்து யூனியன்கள் திறனிழந்து, ஊழல் மயமாகி திட்ட நோக்கங்கள் சிதறிவிட்டன. தாலுக்கா அலுவலகங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவைகள் செல்லரித்து போய் நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தகைய புதிய திட்டங்களை செயல்படுத்துவதற்கு பஞ்சாயத்து அமைப்புகள் சீரமைக்க பட்டு புதிய நிர்வாக அமைப்பிற்குள் கொண்டுவரப்பட வேண்டும்; இல்லையெனில் புதிய குடியிருப்புகள்தான் சரிப்படும். இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களை(public sectors and research & education establishments) தவிர ஒரு தொலை நோக்குடன் (as a strategic design), எந்த ஒரு திட்டமும் வெற்றிகரமாக செயலாக்கப் பட்டதில்லை. இந்த நிறுவனங்கள் பலவும் ஊழலினாலும், நிர்வாகச் சீரழிவினாலும், திறமையற்ற மேலாளர்களாலும், வறட்டு சித்தாந்தங்களை வைத்து வாதிடும் அரசியல்கட்சிகள் சார்ந்த மேல்தட்டு தொழிற்சங்க பிரதிநிதிகளாலும், இந்த பொதுதுறை நிறுவனங்களை அட்டைப் பூச்சிகள் போல் உறின்ஞ்சி வாழும், ஒழுங்காக வரிகூட கட்டாதா தனியார்துறை நிறுவனங்களாலும் சீரழிந்து விட்டன. கிராமப் புற வளர்ச்சியில் இவைகளின் பங்கும் அதிகப்படுத்த வேண்டும்.

போக்குவரத்து துறையிலும் இந்தியா நவீன ரயில் இருப்புபாதை திட்டங்களுக்குதான் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல எல்லா நகரங்களையும் இணைக்கும் நவீன ரயில் திட்டங்கள் இந்தியாவைக் கரை சேர்க்கும். Personal transport சார்ந்த முதலீடுகள் இந்தியாவை இன்னும் அதிக பிரச்சனைகளில் ஆழ்த்திவிட வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்யும் எந்த துறையை சார்ந்த நிறுவனமும் இந்திய கிராமங்களின் வளர்ச்சிக்கு உதவி செய்யும் வகையில் அவைகளின் திட்டங்கள் செயல்படுத்த பட வேண்டும்.

இத்தகைய திட்டங்ளை அருகில் உள்ள நாடுகளில் உள்ள ஏழை மக்களும் பயன் அடையும் வகையில் செயல்படுத்தினால் இந்தியாவின் நலம் இன்னும் உயரும். இந்தியாவின் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு உறவு கொள்கைகளும் சமத்துவ குடியரசுக்கான அடிப்படைகள் அமைந்த, மக்களின் மொழி, பண்பாட்டு அடையாளங்களையும், உரிமைகளையும் மதிக்கும் வகையில் செயல்பட்டால் இந்தியாவின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.

—-

Series Navigation

முத்துசாமி

முத்துசாமி