இத்தருணத்தின் கடைசி நொடி

This entry is part [part not set] of 24 in the series 20070215_Issue

ஹெச்.ஜி.ரசூல்


1)அந்த நதி அமைதியாக பாய்ந்தது.
அதன் கரைகளில் நின்று
தாகம் தணிப்பதற்கு நீர்குடித்தவர்கள் ஏராளம்
கால் நனைத்தும் முகம்தழுவியும்
பயணித்தவர்கள் உண்டு.
நதியில் மூழ்கி
அதனை கொஞ்ச கொஞ்சமாய்
குடிக்க முயன்றவர்களையும் கண்டதுண்டு.
நாணல்புதர்களை கைதைகளை
காட்டுப்புன்னைகளை ஊடுருவி
ஓயாமல் பயணித்த நதி
தற்போது ஓய்வெடுத்துக் கொண்டது.
மரணத்தின் சுவையை
அறிந்து கொண்ட அந்த நதியின்
வாடாத இதழ்களில்
இன்னும் தேன் குடிக்கலாம்

2)நீந்திச் செல்லும் பறவைகள்
அந்தியில் கூடடைய வருகின்றன
கூட்டின் குஞ்சுகளோடு கூடிக் குலாவுகின்றன.
காலச் சிறகுகளில் மிதந்தவாறு
உச்சாணிக் கொம்புகளில் உட்கார்ந்து
அவை திரும்பவும் பாடத்துவங்குகின்றன
கூடடையும் சந்தோசங்கள்
எப்போதேனும் இல்லாமல் போவது
மிகுந்த வருத்தத்தை தோற்றுவிக்கிறது.

3)அறைந்து சாத்தப்பட்ட கதவுகள்
என்னை மிரட்டிப் பார்க்கின்றன
வெவ்வேறு மனநிலைகளை சுமந்து கொண்ட
ஆள் ஓவியங்கள் அலைந்து திரிந்து
களைப்பு மேலிட துயில்கின்றன.
வாழ்தலின் வலி குறித்த கவலைகளை அனுபவித்து
சிதைவுற்று துடிக்கும் மனம்
உன் முகங்காணத் துடிக்கும்
முன்னும் பின்னுமாய் அருகிருந்தும்
முகங்காண முடியாத
இத்தருணத்தின் கடைசி நொடி இது.


Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்