ஆறு வாரத்தில் அருமையான உடல்நலம்

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

ரா.சரவணன்


(முதுகலை மீன்வள அறிவியல்)

நம் உடலை ஆரோக்கியமாக பேணுவதில் நமக்குத்தான் முதலில் அக்கறை இருத்தல் அவசியம். கண்டபடி உணவு உண்டு, ஒரு முறையான உணவுப்பழக்கம் இல்லாமை, நோய்களுக்கு வழிவகுக்கும். உணவுப்பழக்க வழக்கம் என்பது சிறுவயது முதலே கடைபிடிக்கக்கூடிய ஒரு வழிமுறையாகும், நோய் வந்தபின் கடைபிடிக்கும் பத்தியத்தால் என்ன பயன் ?

இன்றைய அறிவியல் உலகில் மட்டும்மன்று, நம் தமிழ் இலக்கியங்களில் இத்தகைய அறிவுரைகள் செழித்துக்கிடக்கின்றன. உலகப்பொதுமறையாம் திருக்குறளின் பொருட்பாலில் அமைந்துள்ள குறள்கள் ஆலோசனைகளை அள்ளித்தருபவையாக அமைந்துள்ளன.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்ற போற்றி உணின்(942)

முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

அற்றல் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கு மாறு (943)

முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும்; அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.

அற்றது அறிந்து கடைபிடித்து மாறல்ல

துய்க்க துவரப் பசித்து.(944)

முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறுபாடில்லா உணவுகளைக் கடைப்பிடித்து, அவற்றையும் நன்றாகப் பசித்த பிறகு உண்ணவேண்டும்.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

மாறுபாடு இல்லை உயிர்க்கு.(945)

மாறுபாடில்லாத உணவை அளவு மீறாமல் மறுத்து அளவோடு உண்டால், உயிர் உடம்பில் வாழ்வதற்கு இடையூரான நோய் இல்லை.

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்

கழிபே ரிரையான்கண் நோய். (946)

குறைந்த அளவு இன்னதென்று அறிந்து உண்பவனிடத்தில் இன்பம் நிலை நிற்பதுபோல, மிகப் பெரிதும் உண்பவனிடத்தில் நோய் நிற்கும்.

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்

நோயள வின்றிப் படும்.(947)

பசித்தீயின் அளவின்படி அல்லாமல், அதை ஆராயாமல் மிகுதியாக உண்டால், அதனால் நோய்கள் அளவில்லாமல் ஏற்பட்டுவிடும்.

மேற்சொன்னக்கருத்துக்களை சுருக்கமாக இப்படித்தான் கூறமுடியும்.

ஒரு நேரம் உண்பவன் யோகி

இரு நேரம் உண்பவன் போகி

மூன்று நேரம் உண்பவன் ரோகி….

வள்ளுவரின் வாய்மொழிகளைக்கடைபிடிக்க நம் செரிமான மண்டலம் சீரான முறையில் இயங்குகிறதா எனத் தெரியவேண்டும். பேட்ரிக் ஹாக்போஃர்டு என்பார் தமது அறே வாரத்தில் அருமையான உடல் நலம் என்ற புத்தகத்தில் கீழ்கண்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் நமது ஜீரண உறுப்புகளின் செயல்பாடுகளை எளிதாக அறிய முடியும் என்று கூறுகிறார்.

1. உணவை நன்கு மென்று விழுங்குகிறீர்களா ?

2. வாய் துர்நாற்றம் வீசுகிறதா ?

3. வயிற்றெரிச்சல் உள்ளதா ?

4. வயிறு நிரம்பிய உணர்வு உணவு உண்டபின் உள்ளதா ?

5. கொழுப்பு சத்துள்ள உணவு உண்ட பின் செரிமானத்தில் பிரச்சனை ஏற்படுகிறதா ?

6. செரிமானத்திற்கு ஏதும் மருந்து சாப்பிடுகீறீர்களா ?

7. அடிக்கடி டையரியா ஏற்படுகிறதா ?

8. அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறதா ?

9. அடிக்கடி வயிற்று உப்புசம் ஏற்படுகிறதா ?

10. அடிக்கடி ஏப்பமோ அல்லது வாயு வெளுயேறுவதோ உள்ளதா ?

11. அடிக்கடி வயிற்றுவலி உள்ளதா ?

12. வாந்தியெடுப்பது போன்ற உணர்வு அடிக்கடி ஏற்படுகிறதா ?

13. மலத்துவாரத்தில் எரிச்சல் ஏற்படுகிறதா ?

14. ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் மலம் கழிக்கீறீர்களா ?

15. மலம் கழிக்கும்போது, மலம் நீரில் மிதக்கிறதா ?

• 7 அல்லது அதற்கும் அதிகமான கேள்விகளுக்கு ஆம் என்ற பதிலானால், உங்களது உணவு பழக்க வழக்கம் மற்றும் செரிமானத்தில் மாற்றம் ஏற்படுத்தவேண்டும்.

• 4லிருந்து 7 கேள்விகளுக்கு ஆமாம் என்றால், உங்களது செரிமான வேகம் குறைய ஆரம்பித்ததின் அறிகுறி.

• 4க்கும் கீழ் ஆம் என்றால், உங்களது செரிமான வேகம் நல்ல விதத்தில் உள்ளதாக அர்த்தம்.

****

stingray_mr@yahoo.com

Series Navigation

ரா.சரவணன்

ரா.சரவணன்