ஆரியம் இருக்குமிடம், அக்ரகாரம் மட்டுமல்ல

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

அண்ணா


( ‘திராவிட நாடு ‘ வார ஏட்டில் பேரறிஞர் அண்ணா 9/10/1955 அன்று தம்பிக்கு எழுதிய மடல்)

‘ஆரியம் அனந்தாச்சாரியிடம் மட்டும் இல்லை. அம்பலவாண முதலியாரிடமும் இருக்கிறது ஆதிசேஷ

செட்டியாரிடமும் இருக்கிறது. நெய்யாடிவாக்கம் முதலியாரிடமும் இருக்கிறது. குன்னியூர் ஐயரிடமும்

இருக்கிறது. விநாயகம் எடுத்துக் காட்டியபடி, உச்சிக் குடுமியும், பூணூலும் கூட ஆரியரிடம் மட்டுமல்லவே,

படையாச்சிகளிடம் இருக்கிறது, பக்தர்களிடமும் இருக்கிறது. நாயுடுகளிடம் இருக்கிறது, ஏன் காமராஜரின்

நாடார் சமூகத்தில் கூட பழமை விரும்பிகளிடம் இருந்திடக் காண்கிறோம்.

எனவேதான், ஆரியரை ஒழிப்பது என்பது நமது திட்டமாகாமல், ஆரியத்தை ஒழிப்பதுதான் நமது

திட்டமாக இருக்கிறது. இதிலே நமக்குத் தெளிவும், நம்பிக்கையும் ஏற்படும் வகையில் பெரியார் அறிவுரை

கூறியிருக்கிறார். நாம் அந்தப் பாதையில் செல்கிறோம்.

ஆரியம், ஆரியரிடம் மட்டுமல்ல. திராவிடரிடமும் புகுத்தப்பட்டிருக்கிறது; அதைப் புகுத்தி,

பாதுகாத்து வரும் பணியில் ஆரியர், ஆரியக் கோலத்தில் இல்லாவிடினும் ஈடுபடக் காண்கிறோம். எனவே,

ஆரியம் களையப்படுவதற்கான அறிவுப் பிரச்சாரத்தைத் திறம்பட நடத்துவதுதான் முறையே தவிர,

அக்ரகாரத்தில் தீ மூட்டுவதல்ல என்று கூறுகிறோம்.

எனவே தம்பி! நாம் ஆரியத்தை, அறிவுச் சுடரால் அழித்தொழிக்க வேண்டும் – அந்த ஆரியம்

அக்ரகாரத்தில் மட்டுமில்லை!

எட்டிப் போடா சூத்திரப் பயலே – என்ற ஐயர் பேச்சும் ஆரியம்தான்!

கிட்டே வராதே சேரிப்பயலே! – என்று பேசும் முதலியார் முடுக்கும் ஆரியம்தான்!

மறவர் முன்பு மட்டு மரியாதையோடு நட! தேவர் வருகிறார் – எழுந்து நில்! நாடார் அழைக்கிறார்

ஓடிவா!

செட்டியார் கேட்கிறார், தட்டாமல் கொடு! – என்று ஆரியம், பலப்பல முறைகளிலே

தலைவிரித்தாடுகிறது தம்பி – பல முறைகளில்!

ஆரியம், ஒரே இடத்தில், ஒரே கூட்டத்தாரிடம் ஒரே முறையில் இருக்குமானால், அந்த ஒரு இடத்தை,

ஒரு கூட்டத்தை, ஹிட்லர் யூதர்களை விரட்டினானே, அதுபோலச் செய்துவிடவேண்டும் என்று பேசுவது,

ஓரளவுக்காவது பொருத்தமானதாகத் தெரியக்கூடும். ஆனால், ஆரியம் இருக்குமிடம், அக்ரகாரம் மட்டுமல்ல! ‘

—————-

Series Navigation

அண்ணா

அண்ணா