ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் -கடைசிப் பகுதி

This entry is part [part not set] of 24 in the series 20050520_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


திரேஸ் கிழவிஅவனிடம் காட்டிக் கொண்டதே இல்லை தன் உள்க் காயங்களை.

அவனும்…

தேவையும் இல்லை. காயப் படாதவனுக்குச் சாராயக்கடையின் முதலுதவி எதற்காக.

இவர்கள் முதலுதவி என நம்பி, மனக் காயங்களை உடலுக்கு ஏற்றிக் கொள்கிறார்கள். வரவழைத்துக் கொள்கிறார்கள்.

உள்க் காயம் படாத உயிர் உண்டா ?

சந்தோஷ கணங்களை விட, தோற்றுப் போன, வெருண்ட, இருண்ட கணங்களையே வாழ்க்கை பதிவு கொள்கிறது. எதிர்காலத்தில் அவை பாடங்களாக வழிகாட்டலாம் என்கிற சிற்றாசை. எதிர்பார்ப்பு.

ஆனால் பெரும்பாலும், அவை பயன்பட வேண்டிய நேரம், பயன்படுத்த லாயக்கில்லாத திருமணக் கூரைப் புடவைகளாக, கல்யாணக் கோட்டுகளாக… நைந்தோ அளவு சிறுத்தோ போய்விடுகின்றன.

திடாரென கண்ணை இருட்டிக் கொண்டு வரும் திரேஸ் கிழவிக்கு. மூச்சிறைக்கும். பசியோ என நினைப்பாள். தானாய்ச் சரியாய்ப் போகும் என நினைப்பாள். உள்ளே உருளும் வலி. வலிகள். கண்கள் தாமாக அழும்.

உடல் உறுப்புகள் ஒன்றையொன்று எவ்வளவு நேசிக்கின்றன.

சாவு-நினைவு அடிக்கடி வரும் கிழவிக்கு. செத்துப் போய்விட்டால் நல்லதுதானே ? இருந்து சாதிப்பதென்ன ? என்ன அனுபவம் தட்டுகெட்டுப் போகிறது.

ஹா, சாராயக் கடைக்குச் சாவைத் தேடித்தான் போனாள். வேடிக்கை. அங்கே வாழ்க்கை பட்டுப்பாய் விரித்து வரவேற்றது அவளை. இதுவரை, அவளது அறுபத்துச் சொச்ச வயதுவரை அவளுக்கு வாய்க்காத வாழ்க்கை! தன் சொந்தப் பிள்ளைக்கும் மேலான சிங்கராஜ்.

வாழ்க்கை, சீரற்ற அதன் அபத்தமான உணர்வுக் கலவைகள்.

மகன் மீது அலாதி ஆசையும் பிடிப்பும் நம்பிக்கையும் வைத்திருந்தாள். அவனுக்கு ஒரு கல்யாணங் கட்டி, பேரக் குழந்தைகளைக் கண்ணாறப் பார்த்து உச்சி முகர்ந்து கொஞ்சி சீராட்டி வளர்த்து…

மகன் இறந்து போனான்.

மனசின் கிளை விரித்தலில் விரிசல். நச்சென்று கோடரி வெட்டு.

இன்னொரு கையை நீட்டினால், கிட்டியதோ த ங் க வளையல்!

மீண்டு வாழ ஆசை ஆசையாய் இருந்தது. மனம் புத்துயிர்ப்பு கண்டு துளிர் அசைக்கிறது உற்சாகமாய். சிங்கராஜ் எத்தனை அருமையான பிள்ளை. தினசரி நேரத்துக்கு வீட்டுக்கு வருகிறான். கடை கண்ணி பார்த்து சாமான் செட்டு வாங்கிப் போடுகிறான். அவளைக் கிண்டலடித்து என்னமாச்சும் வாயாடிக் கொண்டே இருக்கிறான்.

சோகக் கடலில் இருந்து மீண்டு, புதிய தீவில் கரையொதுங்கினாற் போல அவனுக்கும் இருக்கிறது.

தனியே வாழ்க்கையில் சிரிப்பு என்றும் அழுகை என்றும் கிடையாதோ.

சிரிப்பின் விளிம்பில் கண்ணீர் வந்து விடுகிறது.

பாறை. பாறையடியில் நீரூற்று. என்ன குளுமையாய் இருக்கும் அது.

தலை சுற்றச் சுற்ற நடமாடியபடி வீட்டு வேலைகள் செய்கிறாள். வயதை ஆமாம், நான் மறந்துவிட வேண்டும். ஆ இவனுக்காகவது அவள் வாழ வேண்டும்.

யார் இவன். என்ன ஜாதி. இவனுக்கும் எனக்கும் என்ன விதத்தில் சம்பந்தம். ஒட்டும் இல்லை. உறவும் இல்லை. ஒரே மதக்காரனுங் கிடையாது.

ஒரே இரவில் பெரும் மாற்றங்கள். மாயாஜாலம்.

கல்லறை மேட்டில் வாசனை மரங்கள். பூத்துச் சிரிக்கின்றன.

பூக்களைப் பார்த்துச் சிரிக்கிறான் சிங்கராஜ். அடியே இருந்தது கருங்கல் கல்லறை.

அவன் வரும்போது எப்போதும் போலக் கதவைத் திறக்கிற கிழவி. சற்று கலவரத்துடனே அவன் கையைப் பிடித்துக் கொண்டு ‘எய்யா நீ இனிம குடிக்கப்டாது ‘ என்றாள்.

‘இப்ப நான் நேராச் சாராயக் கடைலேர்ந்துதான் வரேன் ஆயா… ‘ என்கிறான் அவன்.

‘எந்தக் கடைலய்யா காய்கறி விக்குறாக… ‘ என்று சந்தேகங் கேட்டாள் அவள்.

குடல் அரித்து, வெந்துபோய், குடல் செத்துப்போனதை அறிவிக்கும், தண்டோரா போடும் வலி நடமாட்டம்.

அவன் சாப்பிட உட்கார்ந்தான். உள்ளே யிருந்து சிப்பலில் சோற்றை எடுத்து வருகையிலேயே எப்படியோ நிகழ்ந்து விட்டது. கண்ணிருட்டி தலைசுற்றி சுடப்பட்ட பறவைபோல…

ஆகாயத்தில் முட்டிக் கொண்டதா பறவை.

அவன் முன்னே பொத்தென வீழ்ந்தாள். பதறிப் போனான் அவன்.

சுவரைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கலாம், என நினைத்துக் கொண்டாள். மயக்கம் தெளுந்து அவன் மடியில் படுத்திருந்த கணம் அது. அப்படியே செத்துப் போக மனம் ஏங்கிய கணம்.

‘என்னாச்சி உனக்கு ? ‘

‘வயசாச்சி. ‘

‘சரி வா. வைத்தியராண்ட காட்டிட்டு வரலாம். ‘

‘எதுக்கு ? எனக்கு இளமை திரும்பவா ? ‘

‘சிரிக்காதே நாயே ‘ என்று கத்தினான் அவன்.

‘நான் சிரிச்சா அழகா இருக்குன்னு நீதானே சொல்லுவே. ‘

‘நீ சிரிச்சா இப்ப அழுகை வருது ‘ என்றவனை விசித்திரமாய்ப் பார்த்தாள். வரியோடிய நடுங்கும் விரல்களால் அவன் முகத்தைத் தடவிக் கொடுத்தாள்.

‘சரி, நீ சிரி. நானும் சிரிக்கிறேன் ‘ என்றாள் கிழவி. ‘நீ அழப்டாது. உனக்கு அழத் தெரியாது… நீ எம்ஜியார்… ‘

‘எம்ஜியார் படத்துல முடிவும் சுபமாத்தான் இருக்கும். ‘

‘நாயே நாயே… ‘ என்றாள் கிழவி. ‘என்னடா இருக்கு இந்தக் கிழவிகிட்ட. என்மேல இவ்வளவு பாசம் வெச்சிருக்கே. ‘

‘ஒருவேளை எதும் உங்கிட்ட இருந்திருந்தா இந்தப் பாசமே போலியாக் கூட ஆயிருக்கும்… ‘ என்றான் சிங்கராஜ் தோரணையாய். மாப்ள, நீ அறிவாளிதாண்டா… எனத் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டான்.

‘வா டாக்டராண்ட போயி என்னா ஏதுன்னு பாத்துட்டு வருவம்… ‘

அவள் அவனைப் பார்த்தாள். விடமாட்டான் போலிருந்தது. ‘சரி சாப்பிடு மொதல்ல ‘ என்றாள்.

ரொம்ப நாளைக்கப்பறம் மனம் யேசுவே, என அரற்றியது. கர்ப்பப்பை கூசினாப் போல உள்க் கிளுகிளுப்பு. குரூஸ் கோவில் மணியடித்தது. கடல் அலையில் நிற்கிறாப்போல ஒரு தள்ளாட்டம்.

‘ஏண்டா நான் செத்துருவேன்னு பயமா இருக்கா ? ‘

‘என்னா சொல்ற நீயி ? அறை வாங்காதே. ‘ என்று கத்தினான். அவன் உடம்பு நடுங்கியது.

உண்மையில் அப்போது அவளுக்கு செத்துப் போக ரொம்ப ஆசையாய் இருந்தது.

‘மவனே… ‘ என்று புன்னகை செய்தாள். ‘ரொம்ப நாளாவே எனக்கு ஆசைடா… உன்கூட சைக்கிள்ல வரணும்னு… ‘

அவர்கள் சைக்கிளில் போவதை ஊரே சிரிப்பாய்ப் பார்த்தது.

கிழவியின் வயிற்றை அமுக்க அமுக்க ஆ ஆவென அலறித் துடிக்கிறாள். டாக்டர் உதட்டைப் பிதுக்கினார். ‘உள்ள குடலே இல்லையேய்யா. எல்லாம் அரிச்சிப் போச்சு. எக்ஸ்ரே, ஸ்கேன்னு டெஸ்ட்லாம் எழுதித் தாரேன். பார்த்திரணும்… ‘ என்றவர் அவனைப் பார்த்து ‘கிழவி குடிக்குமா ? ‘ என்கிறார்.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். முதலில் அவள் சிரித்தாள். அவன் தயங்கி, அப்பறம் மெல்ல புன்முறுவல் செய்து, பிறகு அழுதான்.

‘யார் இந்தக் கிழவி ? ‘ என்கிறார் டாக்டர் சிங்கராஜைப் பார்த்து.

‘தெர்ல ‘ என்றாள் கிழவி முந்திக்கொண்டு. சிரித்தாள். அவனுக்குச் சிரிப்பு வரவில்லை.

வரும் வழியில் மருந்துக் கடையில் டாக்டர் சீட்டு காட்டி மருந்துகள் வாங்கிக் கொண்டார்கள்.

‘மருந்து வேணா. சாராயம் வாங்கிக் குடு… ‘ என்று அவனைப் பார்த்தாள் திரேஸ்.

‘ஏன் என்னியப் போட்டு இப்பிடி வதைக்கிறே ? ‘ என்றான் அவன்.

‘உன்னியப் பார்த்தா காத்துப் போன சைக்கிள் டயர் மாறி இருக்குடே ‘ என்று சிரித்தாள் அவள்.

‘சிரிக்காதே… ‘

‘முந்தில்லாம் என்னியச் சிரி சிரின்னுவே. இப்ப சிரிக்காதே சிரிக்காதேன்றியே. ‘

அவன் பதில் சொல்லவில்லை.

உண்மையில் அவள் மனம், யேசுவே, இதுவே எனக்கு நல்ல சாவு. என்னைக் கூட்டிப் போ கூட்டிப் போ, எனப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தது.

அன்றிரவு மருந்து குடித்ததும் அவள் சொன்னாள்.

‘ஏல உனக்கொரு பொண்ணு பார்த்திருக்கேன்… ‘

அவன் திரும்பிப் பார்த்தான். ‘நிசுந்தான். பூக்காரிட்ட சொல்லி வெச்சிருந்தேன். ஒரு துப்பு கொண்ட்ட்டு வந்தா. ‘

பரிசோதனை முடிவுகள் வருமுன் அது நிகழ்ந்து விட்டது. கிழவி செத்துப் போனாள்.

அவனுக்குக் குளிக்க, என்று சுடுதண்ணி வைக்கப்போனவள் தள்ளாடினாள். குடத்து நீர் சிதறச் சிதற, நடக்கும்போதே ஊவென்று… வாயில் ரத்தம்.

கிழவி சுருக்கமாய்ச் செத்துப் போனாள்.

அவன் தலையில் தலையில் அடித்துக் கொண்டு அழுதான். நெஞ்சை உருக்குகிற சிவாஜி.

நம்ப இயலாத கனவுதானா வாழ்க்கை. கனவு கண்டால் குதிரைத் தள்ளல் தள்ளி, பின்காலால் எத்தி, விடுகிறது உதை. அழும்போது மிட்டாய் தருகிறது. கிலுகிலுப்பை ஆட்டுகிறது.

இருட்டில் தனியே வீட்டுக்குள் படுத்திருக்கிறான். புரள்கிறான். கிழவியின் சிரித்த முகம். தானறியாமல் சிரிக்காதே, என்று கத்தி எழுந்து கொள்கிறான். உடம்பு நடுங்கி வியர்த்து வழிகிறது.

அ ழு கி றா ன்.

‘அழாதே ‘ என்கிறாள் கிழவி. சுற்றுமுற்றும் பார்க்கிறான். யாரும் இல்லை.

எழுந்து கொண்டான் சிங்கராஜ். ‘எங்க போற ? ‘

‘வழியை விடு கிழவி ‘

‘நீ எங்க போறேன்னு எனக்குத் தெரியும். ‘

‘தெரியுதில்ல. வழியை விடு. ‘

ஆச்சரியம். ‘சரி போ ‘ என்று வழியை விட்டாள் கிழவி.

வெளுயே வந்தான். தெருவே இருட்டாய்க் கிடந்தது. டிரைனேஜுக்குள் அடைபட்ட உலகம். கிழவி சிரிக்கிறாப்போல இருந்தது. திரும்பிப் பார்த்தான். யாரும் இல்லை. ‘போ ‘ என்று காதில் குரல்.

வேண்டாம், என மறிக்கும் மனது. போவேன், எனப் பிடிவாதம் பிடித்தான். அழுகை குமுறியது. எனக்கு யாரும் இல்லை. யாருமே இல்லை.

நான் அழ விதிக்கப் பட்டவன். வேணாம் போகாதே, என மறித்தது மனது. தன்னையே பிடித்துத் தள்ளிக் கொண்டு போனான். கால் தயங்கியது. காலையும் இழுத்து நகர்த்திக் கொண்டு போனான்.

எனக்கு யாருமே யாருமே இல்லவே இல்லை.

சாராயக்கடையில் கூட்டம் இல்லை. ‘வாங்க தம்பி… ‘ என்று கல்லாவில் இருந்து சிநேகிதக் குரல். ‘பாத்து நாளாச்சுதே ‘ எனப் புன்னகைத்தான் அவன்.

வண்ணை பேசவில்லை. நேரே போய் பாட்டிலை வாங்கிக் கொண்டான். வேணாம், என மறித்தது மனசு. பாட்டிலையே பார்த்தான். குடி, என ஒரு குரல் சிரிப்புடன்.

– ஏ கிழவி இந்தக் கிண்டல்லாம் வேணா. நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் குடிக்கத்தான் போறேன்.

கடகடவென்று பாட்டிலைக் கவிழ்த்துக் கொண்டவன் திகைத்துப் போனான்.

போதை ஏறவேயில்லை.

என்ன செய்வது ? இன்னோர் ரவுண்ட் எடுப்பமா… ‘எட்றா ‘ என்றான் ஆவேசமாய்.

ராத்திரி தூங்கியாக வேண்டும்.

பாட்டிலைத் துீக்கிப் பார்த்தான். குடி, என்று கிழவி. பாட்டிலுக்குள் இருந்து சிரிக்கிறாள்.

– கிழவி, நீ ஜேயிச்சிட்டே. என்னால குடிக்க முடியல… என்றான் சத்தமாய்.

அவன் வைத்துப் போன பாட்டிலை யாரோ வந்து அவசரமாய் எடுத்துக் கொண்டார்கள்.

வீடு திரும்பியபோது போதையே இய்லலை. மழை விட்டாப் போலிருந்தது.

‘சந்தோஷம் ‘ என்று ஒரு குரல். சுற்றுமுற்றும் பார்த்தான். பிறகு சிரித்தான்.

சிங்கராஜ் மறுநாள்க் காலை கண் விழித்துப் பார்த்தபோது உலகம்வேறு மாதிரியாய் இருந்தது.

>>>

ஏப்ரல் 2002ல் நாலுவாரத் தொடராக ‘க ல் கி ‘ வெளுயிட்டது

storysankar@rediffmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்

ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன் – 3

This entry is part [part not set] of 32 in the series 20050513_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


/3/

சிங்கராஜ் காலை கண் விழித்தபோது உலகம் வேறு மாதிரி யிருந்தது.

வாழ்க்கையே ஒரு விசித்திர நிஜம். இரவில் தெரிகிற வாழ்க்கை முகம் வேறாகவும், பகலில் முற்றிலும் புது விதமாகவும் அல்லவா அமைந்து விடுகிறது. வெளிச்சம் மனிதனை மிருகமாக, சற்று /மதங் கொண்ட யானைத் தனமாக/ ஆக்கி விடுகிறது. இரவு நல்லமைதியின் வாசனை நிரம்பியது. சற்றே இளக்கமான நெகிழ்ந்த மனது, ஈரமனது அப்போது வாய்க்கிறது. கனவுகளைப் பூக்கூடையில் எடுத்து வந்து கொட்டினாப்போலக் கொட்டுகிறதே இரவு. பகலில் அப்பூக்கள், சூடு தாளாமலோ என்னமோ, வாடி விடுகின்றன.

அருகில் கிழவி ஒருத்தி படுத்திருக்கிறாள். யார் இவள்!

அவள் திரேஸ். மகன் இறந்து அத்தோடு அவளது வாழ்க்கை, பஞ்சுகள் சிதறடிக்கப்பட்ட தலையணையாகி விட்டது. எல்லாம் கடந்ததோர் விரக்தி. அவள் ஊரைவிட்டு – திருச்செந்துார் பக்கம் எதோ ஊர் சொன்னாளே – எங்கெல்லமோ சுற்றி அலைந்து திரிந்து…

உறவுப் பிடிகள் கழன்று… இற்று வீழ்ந்த நிலைதான், எனினும் காலப்போக்கில் அதுவும் பழகி விட்டது. தினசரி மணித்துளிகளைக் கடப்பது கூட சாதனை என்ற அளவில் நெருக்கடிகள். பசி தாங்கும் வயதுமல்ல. பசி அவளை வாட்டியெடுத்தது. புரட்டி யெடுத்தது. உடம்பே சருகென வற்றி உலர்ந்து விட்டது. பிறந்த நாளுக்குச் சுருள் சுருளாய்க் கட்டிய காகிதத் தோரணம் போல, எண்ணெயில் சரியாய்ப் பொறிபடாத அப்பளம் போல, உட் சுருண்ட சருகு மேனி. அதன் உட்பக்க சிறு ஈரமாய் உயிரின் மிச்சம்.

மகனின் சாவு எனக்கு வந்திருக்கலாம்… என்று கிழவி நேற்று அலட்சியமாய்ப் பேசினாள். அவளது ஒவ்வொரு பேச்சும் அவனை அயர்த்தியது. மிக அபூர்வமானது அவள் சிரிப்பு. எளிய நேர்மையான சிரிப்பு.

பார்த்த கணத்தில் அவனைக் கவர்ந்து விட்டாள். தனக்கான சிறு தேவைகளை – ஆ அதில் சாராயமும் அடக்கம் – யாரிடமும் கெஞ்சாமல் கூசாமல் அவளால் பெற முடிந்தது.

எப்போது குளித்தாளோ… முகங் கழுவிக் கொள்வாளோ, பல் விளக்குவாளோ, என்பதெல்லாங் கூட சந்தேகம்தான். என்றாலும் அந்தக் கண்களின் அசாதாரணத்தன்மை, சுதந்திரம் அவனுக்குப் பிடித்திருந்தது.

ஒரு புலப்படாத ஒளி தன்னை வந்தடைந்ததைப் போல, விளக்கவொண்ணா பிடிப்பு அவனுள். மனைவி இறந்த பின் இத்தனை நெருக்க உணர்வு, பிணைப்பு, அன்பின் கிரணம் அவனைத் தீண்டியதே இல்லை. மனசு பாரமற்று இருந்தது.

அவளை எழுப்பாமல் வெளியே வந்தான். இரவின் காட்சிகள் மெல்ல துாரத்தில் போன ரயிலின் மிச்ச சொச்ச படபடப்பாய் அலை தளும்புகின்றன.

இருவரும் குடித்திருந்தார்கள். தள்ளாடி ஒருவரை யொருவர் சாரைப் பாம்புகள் என உறவைப் பின்னிக்கொண்டபடி வீடுநோக்கி வந்தார்கள். நினைக்கவே வேடிக்கை.

‘இதா ஓ வீடா ? ‘

‘நம்ம வீடு… ‘ என்றுவிட்டு அவளைப் பார்த்துப் பிரியமாய் சிங்கராஜ் சிரித்தான். சிரித்து எத்தனை காலம் ஆயிற்று.

‘இனிம நீ யார்ட்டயும் கைநீட்டி காசு கேட்கக் கூடாது… ‘

‘எம்ஜியார்! ‘

பித்தம் தலைக்கேறிப் போனது அதைக் கேட்க. புதிய வானம் புதிய பூமி… புதிய வீடு, புதிய மனிதன்… ராத்திரி கிழவி ஒருத்தியுடன் நடனமாடியபடி வீடு நோக்கி. அவனாலேயே நம்ப முடியவில்லை.

‘உனக்கு நான் இருக்கேன். தாயில்லாமல் நான் இல்லை. தானே எவரும் பிறப்பதில்லை… வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்… ‘

‘என்னா சிங்கம், பாட்ல எறங்கிட்ட… ‘ என்கிறாள் அவளும் ஆனந்தக் கிறுகிறுப்புடன். அவளது சிரிப்புக்காகவே அவன் மேலும் மேலும் உளர ஆசைப்பட்டான்.

உலகத்தில் விருப்பம்போல உளர ஆசைப்படாதவர் யார் ?

குழந்தை எத்தனை ஆசை ஆசையாய் உளறி தன்னை தன் சந்தோஷத்தை எத்தனை அழகாய்க் கொண்டாடுகிறது.

சாராய போதையைவிட இந்த உறவு தரும் போதை… அதுவும் இழந்த பின் கிடைக்கும் மடி. தலையணை. ஆறுதல்…

அவள் முகக் குறிப்பு பார்த்தே அவள் கேட்டதை வாங்கிக் கொடுத்து விட்டால், சாமந்தி அன்றுபூரா உற்சாகமாய் இருப்பாள். அதைப் பார்க்கவே மனசில் எம்ஜியார்ப் பாட்டு வரும்.

கிழிஞ்ச வேட்டி, பழைய சோறு… என்ற பாடல் மாறி, புதிய வானம் புதிய பூமி.

டேய் சாமந்தியும் இந்தக் கிழவியும் ஒண்ணா… என்றது மனம். இல்லைதான். இல்ல்ல்லவே இல்ல்ல்லைதான். எந்த உறவும் எதற்கும் நேரானது அல்ல. ஒவ்வொன்றுக்கும் அதன் அதன் பிரத்யேக அம்சங்கள் அழகுதான்.

பால் மேலாடை விலகினாற் போல அவனில் என்னவோ யோசனை. மாப்ள நீ கூட அறிவாளிிதானோ என்னமோ…

அர்த்தமற்றுத் தெரிகிற திரிகிற வாழ்க்கை… சிறு அலைச்சல். பிறகு திசைகள் மாறுகின்றன. கலங்கித் தெளிந்தது நியதிகளின் நீரோட்டம். மட்டுமல்ல, ஆடி ஓய்ந்த மனம் பிறகு புதுப்பித்த மனநிலையில் நெல்போகம் முடிந்து தானியப் பயிர்கள் விளைவிப்பதைப் போல…

இயக்கங்கள். மாற்றங்கள். காட்சிகளின் தாயக்கட்டைகள் உருண்டபடி.

வெளியே டா குடித்துவிட்டு சிங்கராஜ் திரேஸ் கிழவிக்கு என ஒரு தம்ளரில் வாங்கி வந்தான். ‘என்னா சிங்கை, வீட்ல விருந்தாளியா ? ‘ என்கிறான் கடைக்காரன்.

கிழவி எனக்கு உறவா விருந்தாளியா ?

‘தெர்ல ‘ என்கிறான் சிங்கராஜ். சிரிப்பு வந்து விட்டது.

துாரத்திலேயே தெரிந்து விட்டது. கிழவி வாசல் தெளித்து கோலம் போடுகிறாள்.

‘எங்க போயிட்டே ? ‘ என்றாள் அவனைப் பார்த்து.

‘ஏன் ? ‘ என்கிறான் ஆனந்தமாய். எலேய் உன்னியத் தேடக்கூட லோகத்ல ஆள் இருக்குடா. தெருநாய்களுக்கும் வேண்டும் வேண்டும் துணை.

‘இல்லே சாராயக்கடைக்குதான் சவாரி வுட்ட்டியோன்னு பார்த்தேன்! ‘

அவனும் உற்சாகமாய் ‘உனக்கும் வாங்கிட்டு வந்திருக்கேன்… ‘ என்கிறான் டா தம்ளரை நீட்டியபடி.

‘வீட்லயே போடலாம்டா. பக்கத்ல மீனு கீனு கிடைக்குமாவே. ‘

அவள் சுவாதீனமாய் நடமாடியது பிடித்திருந்தது. ஈரக்குளுமை வீட்டிலும் மனசின் உள்ளிலும் வந்திருந்தது. புல்லின் தலை என அவனில் எதோ எட்டிப் பார்க்கிறதா. வண்ணை புதுப்பாட்டு பாடுறா… அப்பிடிப் போடு போடு போடு… அப்பிடிப் போடு போடு தன்னானே…

மாப்ளை இருப்பதில் நல்ல சட்டை போட்டுக் கொண்டு அலுவலகம் கிளம்பினான்.

‘ஏன் ராசா, சைக்கிள் வெச்சிருக்கியே. அதுல போறதுதானே ? ‘ என்றாள் திரேஸ்.

சாமந்தி இறந்தபின் அதைத் தொடுவதே யில்லை. சினிமா என்றும் வெளியிடங்களுக்கு என்றும் அவளைப் பின்னால் அமர்த்திக் கொண்டு போய்வந்த பொற்காலங்களை எப்படி மறக்க முடியும். சைக்கிள் மிதியே தெரியாது. தெரு திரும்ப பூக்காரி. வண்டி தன்னைப்போல நிற்கும் அங்கே. இவர்கள் வருகையைப் பார்த்ததுமே அவள் கைகள் தன்னைப்போல பூவை எடுத்து முழம் போடும்.

சாமந்தியின் உடலை அறுததுக் கொடுத்தார்கள்…

ச். உள் சிசுவாவது பிழைத்திருக்கலாம். ஆ அது தழைக்காததும் நல்லதுதான். அவள் இல்லாமல் அதை வைத்துக்கொண்டு அவன் என்ன பண்ணுவான்.

தெருவே வீட்டில் கூடி விட்டது. எந்தப் பாதகத்தி கண்ணு போட்டாளோ என்று எல்லாப் பொம்பளைகளுமே அழுதார்கள். உங்கள்ல ஒருத்தி தாண்டி… என ஆத்திரம் குமுறிய கணங்கள்!

கண்ணீர்க்கதை என தினத்தந்தியில் போட்டதற்கு அத்தனை கூட்டம்.

அவனுக்கே அழுகை வரவில்லை. சிவாஜி அழுகை அழ நினைத்து எம்ஜியார் அழுகை அழுதான்.

தெருமுனை பூக்காரி பூ கொண்டு போட்டுவிட்டு அவளும் அழுதபடி, காசுக்கு நின்றாள்.

நாலு வீடு தள்ளிய ராமாஞ்சம், அவனும் வந்து அழுதான். அவன் பெண்டாட்டியும் விபத்தில் செத்ததுதான். தினத்தந்தி கண்டுக்கவே யில்லை. எதுக்கும் கொடுப்பினை வேணும்டா… என்று சொல்லிச் சொல்லி அழுதான் ராமஞ்சம்.

நீ சாவு மாப்ளை. உனக்குக் கொடுப்பினை இருக்கா பாப்பம்.

திரேஸ் மறுநாள் துாங்கி எழுந்து பார்த்தபோது சிங்கராஜ் வண்டியை எண்ணெய் கிண்ணெய் போட்டு துப்புரவாத் துடைத்துக் கொண்டிருந்தான். ‘எலேய் என்னிய வண்டில உக்கார வெச்சிக்கிட்டுப் போவியா ? ‘ என்று சிரித்தாள் திரேஸ்.

‘பூவும் வாங்கித் தாரேன்… ‘ என்று கிண்டலடிக்கிறான் வண்ணை.

வீட்டில் ஜன்னல்கள் திறந்து விடப் பட்டுள்ளன. தரை பெருக்கி சுத்தமாய். புதுக்காற்றின் குளுமை. அடுப்பங்கரையில் ஒலிகளின் சங்கீதம்.

சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினான்.

ஒருவரை யொருவர் சீண்டிக் கொள்வதில் வஞ்சனையில்லை.

திடாரென கிழவி பேசினாளே இப்படி. ‘யப்பா, இந்தக் குடிய விட்ருப்பா… ‘ என அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

‘அப்டிப்போடு… இத்தினி நாள்ல ஒரேயொரு தரம் இந்த வார்த்தையை உனக்கு, உனக்கே உனக்குச் சொல்லிக்கிடக் கூடாதா நீ ? ‘

‘எனக்கு எம் மவன் கிடைச்சிட்டான் இப்ப… ‘

‘ஒம் மவன் குடிப்பானா ? ‘

‘சே தொட மாட்டான்… ‘ என்றாள் பெருமையாய். ‘எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது அவனுக்கு. ‘

‘பின்ன ஏன் அவனைத் தேடி சாராயக் கடைக்குப் போனே ?! ‘

‘அட சும்மா இருவே… கடேசில அவங்கதானே எனக்கு எம் மவன் கிடைச்சான்… ‘ என்றான் அவள் விடாமல்.

சைக்கிள் அலுவலகம் நோக்கி ஓடிக் கொண்டிருக்கையிலேயே மனசெல்லாம் பூ பூத்தபடி இருந்தது. தெக்கத்தி ஆளுகளுக்கே லொள்ளு கொஞ்சம் அதிகந்தானப்போவ். படிச்சாளு படிக்காத ஆளுன்னுல்லாம் இல்லை. காசுப் பிரச்னை கடந்து சந்தோசமாய் வாழ்கிற ஜனங்கள்.

‘ஒனக்குத் தெரியாம நான் போய்ட்டு வந்தா என்னா பண்ணுவே கிழவி ? ‘

‘நீ போகமாட்டே… எனக்குத் தெரியும்… ‘ என்றாள்.

‘எம் மவன் போக மாட்டான்… ‘ என்றாள். ‘உன்னை நான் நம்பறேன் ‘ என்றாள்.

‘நீ வேற, என்னை நானே நம்ப மாட்டேன்… ‘ என்றாலும் கிழவிக்கு எதோ சக்தி இருக்கத்தான் செய்தது.

அவள் எனக்கு ஆதரவா, அவளுக்கு நானா ?

எல்லாம் நன்றாய்த்தான் இருந்தது.

… கிழவி இரத்த இரத்தமாய் வந்தி எடுத்த அந்த நாள்வரை…

முடிகிறது அடுத்த இதழில்

நன்றி க ல் கி வார இதழ்

storysankar@rediffmail.co

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்