அவன் மீண்டான்

This entry is part [part not set] of 34 in the series 20051209_Issue

நடராஜன் ஸ்ரீனிவாசன்.


நீண்ட வெண் மணல் பரப்பில் ஓர் இளம் காலைப் பொழுது. வங்கக் கடலின் கீழ்க்கரையில் இருந்த அந்த சிறிய மீன் குப்பம் அநேகமாக அமைதியாக இருந்தது. காலையில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டியவர்கள் எல்லோரும் கடலுக்குச் சென்றுவிட்டார்கள். சற்று தூரத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னைக்கும் பாண்டிக்குமாய் விரைந்துகொண்டிருந்த வாகனங்களின் மெல்லிய சீறல் ஒலிகளும், அவ்வப்போது அவற்றின் ஒலிப்பான்கள் எழுப்பும் பிளிறல்களும், அருகே ஆர்ப்பரிக்கும் அலைகடலின் ஓசையுமே அந்தப் பிராந்தியத்தின் ஒலிகளாக இருந்தன. ஆனால் இந்த ஒலிகளில் எதுவுமே காதுகளில் நுழையாத ஓர் ஆழ்ந்த நிலையில் அந்த மணல்வெளியில் அமர்ந்திருந்தான் மாறன்.

சுருட்டி வைக்கோல்போர்போல் வைக்கப்பட்டிருந்த கயிற்றுக்கட்டு ஒன்றின் சிறு நிழலில் தன் கால் முட்டிகளில் முகம் புதைத்து மாறன் அமர்ந்திருந்தான். சற்று நேரம் கழித்து கயிற்றில் சாய்ந்து வானத்தை அண்ணாந்து வெறித்து நோக்கினான். அந்தக் குப்பத்தின் பெண்கள் தங்கள் வழக்கமான வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். கொஞ்ச நாளாக அவன் இவ்வாறு அமர்ந்திருப்பது வழக்கமாகிவிட்டபடியால் யாரும் அவனைக் கண்டுகொள்ளவில்லை. சற்று தூரத்தில் மீன்களைக் காயவைத்துக் கொண்டிருந்த அவன் தாய் இவனை நோக்கி வந்தாள். அவனைத் தொட்டு எழுப்பினாள்.

‘மாறா, ஏந்து வா, கொஞ்மாச்சும் சோறு துன்னு ‘. அமைதியாக எழுந்து அவளுடன் குடிசைக்குள் சென்றான்.

‘மாறா, செல்லிக்காக கவர்மண்டு பணம் வந்திருக்காம், ஒன்னப் போய் வாங்கிக்க சொல்றங்க ராசா. ‘

மெளனமாய் கொஞ்சம் உணவை சாப்பிட்டுவிட்டு வந்தவன் குடிசைக்கு வெளியே குடிசை சுவரிலேயே சாய்ந்து அமர்ந்தான். அவன் அம்மா தன் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டாள். அவளுக்குத் தெரியும் அவன் நினைவு முழுவதையும் செல்லி ஆக்கிரமித்திருக்கிறாள் என்று. அவளுக்கு மட்டுமல்ல அந்தக் குப்பத்திற்கே தெரியும். அவனை சரி படுத்த முயன்று தோற்ற அந்தக் குப்பத்தில் அவன் ஓர் ஒற்றை ராகம். செல்லியிடம் அவனுக்கு லயிப்பு ஏற்பட்ட அந்த நாள் அவனுள் ஒரு திரைப்படம் போலவே திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.

அந்தக் குப்பத்தின் அமைதியான ஒரு பெண் செல்லி. அன்று ஞாயிற்றுக்கிழமை. அந்த நெடுஞ்சாலையில் இருந்த சிறிய மீன் சந்தையில் இந்தக் குப்பத்தினர் மீன் விற்பது வழக்கம். ஞாயிற்றுக்கிழமை விற்பனை மிக அதிகமாக இருக்கும். காலையிலேயே தன் மீன்களை மொத்தமாக விற்றுவிட்ட மாறன் அந்த சந்தையை தன் சகாக்களுடன் வளைய வந்து கொண்டிருந்தான். தன் குப்பத்துக் காரர்கள் ஒவ்வொருவரின் கடையையும் பார்த்துக்கொண்டே வந்தவன் செல்லியைப் பார்த்தான். அவள் மீன் விற்கும் முறை சற்று வித்தியாசமாய் இருந்ததைக் கவனித்தான். செல்லியும் அவள் தாயும் அருகருகே கடை விரித்திருந்தார்கள். மீன் சந்தைக்கே உரிய பேரம் பேசுதலும் அதைத் தொடர்ந்த வாத, எதிர்வாதங்களுமாய் களை கட்டியிருந்தது அந்த சந்தை. செல்லி ஏறக்குறைய ஓர் ஊமை போல் இருந்தாள். தன்னிடம் மீன் வாங்க வந்தவர்கள் கேட்ட விலை கட்டுப்படியாகிறபடி இருந்ததால் உடனே ஏதும் பேசாமல் விற்றுக் கொண்டிருந்தாள். அவள்முதலில் சொல்லிய விலையையே சரி விலைக்கு அருகில் சொன்னாள். விலைகள் சல்லிசாக இருந்ததால் ஒரு நிதான கதியில் அவள் கடையில் மீன்கள் விற்பனை ஆகிக்கொண்டிருந்தது. அடாவடியாக விலை கேட்டவர்களிடம் முருவலுடன் இல்லையென்று தலையசைத்தாள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மாறன் அப்போது அவளை ஆராய்ந்து நோக்கினான். ஒரு சிறுமியினுடையதைப் போன்ற முகத்தில் இப்போதுதான் பேசக் கற்றுக்கொண்டிருக்கும்போல் கண்களைக் கொண்டிருந்தாள். கவரும் படியாகவோ அதே நே

ரத்தில் கன்னாபின்னவென்றோ உடையணியாமலிருந்தாள். ஒடிசலான தேகமும் சுருட்டிக் கட்டிய கேசமுமாய், ஒரு சட்டத்திற்குள்ளிட்டால் ஓவியம் போல் இருப்பவளாய் இருந்தாள். எப்படி ஒரே குப்பத்திலிருந்துகொண்டே இவளைக் கவனிக்காமல் இருந்தோம் என்று யோசித்துக் கொண்டே சந்தையின் வேறுபுறம் சென்றான்.

ஒரு சிறு சலசலப்பு அவனை அவளருகே இட்டுச்சென்றது. ஒரு முற்றிய மாது அவளுடன் வாதம் செய்து கொண்டிருந்தாள்.

‘இன்னாம்மா பொண்ணு அவ்ளவு அமத்தலா சிரிச்சிகினு தலையாட்றியே, இன்னா கிண்டலா ? ‘

செல்லியின் முகம் இறுகியது.

‘நீ கேட்ட விலைக்கு வராதும்மா ‘ என்றாள்.

‘முந்தா நாள் மீன வச்சிகினு இம்முட்டு வெல கேக்கிறியா ? ‘ அவள் விடுவதாக இல்ல. பேச்சு முற்றியதும் செல்லியின் தாய் உதவிக்கு வந்தாள். தடித்த வார்த்தைகளின் போது மாறன் செல்லியைக் கூர்ந்து நோக்கினான். இதுபோன்ற சூடான சமயங்கள் சகஜமான மீன் சந்தையில் மழையில் நனைந்த கோழிகுஞ்சைப் போல் தன் தாயிடம் ஒண்டியிருந்த செல்லி சூழலுக்கு ஒவ்வாது தெரிந்தாள். இளமை தத்தெடுத்து முழு ஒப்பனை செய்திருந்த அவளை இப்போது மிக அருகில் பூரணமாகப் பார்த்திருந்தவனை சூழலின் உக்கிரமான உச்சம் கலைத்தது. அந்த சலசலப்பை தன் ஆளுமையினால் ஒரு நிமிடத்தில் சரி செய்து இயல்பை மீட்டான். ஆனால் அன்றிலிருந்து தன் இயல்பு மாறியதைபோல் உணர்ந்தான்.

கடல் நடுவில், கட்டுமரத்தில், கயிற்றுக் கும்பலில், வலை சிக்கலில், மாறனுக்கு செல்லி தெரிந்துகொண்டே இருந்தாள். அலை ஒன்றிலிருந்து பிய்ந்து வந்த தண்ணீர் பத்தை அவளாகத் தோன்றியதும், எப்போதாவது கடல் மட்டத்தின் மேல் துள்ளி வெள்ளியாய் மின்னும் மடவை மீனெல்லாம் செல்லியாய் தெரிந்ததும், மாறன் தீவிரமானான். சகாக்களிடம் கலந்துகொண்டபோது,

‘மாறா, இது இன்னான்னு தெர்ல ? கன்னாலம் கட்டிக்கோ, அல்லாம் சரியாப் பூடும். ‘

‘எங்களுக்கு தெர்ஞ்ச வரிக்கும் அந்தப் பொண்ணும் அவ அம்மாவும் கன்னாலத்துக்கு ஒட்னே ஒத்துகுவாங்க. ‘

ஒரே குப்பத்தில் தூரத்து உறவினர்களாக இருந்த இருவரின் திருமணமும் விரைவில் பேசி முடிக்கப்பட்டது. கோலாகலமாக பரிசமும் போடப்பட்டது. ஆனால் விதி அவளை மரணத்துடன் பரிசம் போட்டிருந்தது. மாறனிடம் திடாரென காதலைக் கொண்டுவந்த விதி சுனாமியையும் கொண்டுவந்தது.

எவருமே எதிர்பாராத சுனாமிப்பேரலைகள் கிழக்கு கரை முழுவதையும் தாக்கியபோது இவர்களுடைய குப்பமும் சினாபின்னமாகியது. வெளியுலகிலிருந்து சற்றே விலகிய சிறிய குப்பமாகையால் அவர்களுக்கான உதவியை அவர்களே செய்யவேண்டியிருந்தது. மாறனும் சகாக்களும் இரண்டு நாட்கள் கண் மூடாமல் சூறாவளியாய் வேலை செய்து கொண்டிருந்தனர். இறந்தவர்களை தேடியெடுத்து ஈமக்கிரியை செய்வதிலும் தொலைந்து போனவர்களை தேடுவதுமாகக் கழிந்த இரண்டு நாட்களிலுமே செல்லியைக் காணவில்லை. மணலில் புதைந்திருந்த ஒரு குடிசையைத் தோண்டியதில் செல்லியின் தாய் மட்டும் பிணமாகக் கிடைத்தாள். எவ்வளவு தேடியும் செல்லி அகப்படவில்லை. அதன் பிறகு மாறனுக்கு ஏற்பட்ட நிலைமைலிருந்து அவன் இன்றுவரை மாறவில்லை. பல நாட்கள் கடலுக்கே செல்லவில்லை. தாடியும் மீசையும் பரட்டையும் அழுக்குமாய் பரிதாபமாய் இருந்தான்.

குடிசைக்கு வெளியே கண்ணயர்ந்த மாறனை செல்லியின் நினைவுகள் ஒரு கனவிற்கு இட்டுச்சென்றது. சுனாமியில் செல்லியை தொலைத்தவனின் கனவில் இன்னொரு சுனாமி வந்தது. முப்பதடிக்கு தண்ணீர் சுவராய் வந்த பேரலை இவனை அப்படியே விழுங்கி கடலுக்கடியில் கொண்டுசென்றது. ஏனோ தெரியவில்லை மாறனுக்கு உற்சாகம் பிய்த்துகொண்டு வந்தது. செல்லியை நோக்கி செல்வதாக உணர்ந்தானோ ? மீன்களோடு மீனாய் கடலெங்கும் நீந்தினான். கீழ் நீச்சலில் இன்னும் ஆழாமாய் சென்றான். அங்கங்கே மச்சக்கன்னிகள் எதிர்பட்டனர். வானுலகின் தேவதைகள்போல் ஓரிடத்தில் நிறைந்திருந்த மச்சக்கன்னிகளூடே சென்றான். அங்கே இருகரம் நீட்டி தன்னை வரவேற்பது யார் …. செல்லியேதான். ஜோடி மீன்களாய் அவளோடு நீந்திமகிழ்ந்தான். அவளுடன் ஒரு திமிங்கலம் மீதேறி கடலுக்குள் உலா சென்றான். அவன் இது நாள் வரை ஏங்கிய கணங்கள் இப்போது கிடைக்க ஆரம்பித்தன. திமிங்கிலம் சென்ற ஓரிடத்தில் ஆ….இது என்ன ? உடைந்த படகுகள், கிழிந்த ஆடைகள்….சிதைந்த உடல்கள்….திடாரென மூக்கில் ஏறிய பிண நாற்றம். ஏறிட்டு செல்லியை நோக்கினான். அவளுக்குரிய புன்முருவலும் தலையாட்டலுமாக செல்லி மேல் நோக்கி கடல் மட்டத்தைக் கை காட்டினாள். மாறனுக்கு ஏதோ உரைத்தது போலிருந்தது. மாறன் தரை நோக்கி பாய்ந்து விரைவாய் மேல் நீச்சல் போட்டான்.

திடுக்கிட்டு விழித்த மாறன் கண்ட காட்சி….கனவில் வந்த சுனாமியால் அல்லோலகலமான கடற்கரை….அங்குமிங்கும் ஓடும் மனிதர்கள்….சின்னாபின்னமான குடிசைகள்….சிதைந்த படகுகள்….எங்கும் மரண ஒலம்…. இவையேதும் இல்லை. நிசப்தத்துடன் வழக்கமாக இருந்த கடற்கரையில் ஓர் ஒற்றைப் பறவையின் கறீச்ச் என்ற ஒலியால் அவனுக்கு மயிக்கால்கள் குத்திட்டு நின்றது. சில கணங்கள் விழித்தபின் ஒரு தீர்மானத்திற்கு வந்த மாறன் மெதுவாய் எழுந்து சாலையில் இருக்கும் முடித்திருத்தகத்தை நோக்கி நடந்தான்.

‘மாறா அந்த ஆபீசுக்கு போ ராசா ‘, மாறனின் தாய் கூவினாள்.

திரும்பி கடலை நோக்கினான். ஆழ்க்கடலில் தன் வழக்கமான புன்முருவலுடன் கைகளை ஆட்டினாள் செல்லி. சிரித்த முகத்துடன் திரும்பி நடந்தாள். நீண்ட நாட்களாய் மழிக்காத முகத்திற்கும் காடாக மண்டிக்கிடந்த தலைக்கும் இன்று விடுதலை. கண்களில் பனித்திரையும் உதடுகளில் முருவலும் நடையில் தெம்பும் ஒரே நேரத்தில் அவனிடம் பூத்தது.


sn_in@yahoo.com

Series Navigation

நடராஜன் ஸ்ரீனிவாசன்

நடராஜன் ஸ்ரீனிவாசன்