அறிதலின் மூலம்

This entry is part [part not set] of 4 in the series 20000110_Issue

காஞ்சனா தாமோதரன்


ஆகஸ்ட் 2005. ஹார்வுட் ஸைபர்னட்டிக்ஸ் நிறுவனத்தின் உலகத் தலைமையகம், நியூ யார்க்.

———————————————————————–

கோடியிலுள்ள அந்த விசாலமான அறையின் கண்ணாடிச் சுவர் வழியே காலை வெயிலில் மினுங்கும் ஹட்ஸன் நதி தொிந்தது. சுவரோடு பதித்த பளிங்கு மேடை அருகே நிறுவனத்தார் அல்லாத ஒரு சிறு கூட்டம்….ஆரஞ்சு ஜூஸ், காஃபியை கிசுகிசு பேச்சோடு கலந்து கொண்டு. செயற்கை அறிவு விஞ்ஞானிகள் ஜான் பிரெஸ்காட், டேவ் போிஷ்னக்கோவ். தத்துவ ஞானிகள் ரமேஷ் மொக்லியானி, மிக்கி யோஷிமோட்டோ. ரோபோ-ஸைக்காலஜிஸ்ட்டுகள் மைக் லெஸ்ஸிக், கென் ஃபாலி. அவரவர் துறைகளில் உலகப்பெயர் பெற்ற நிபுணர்கள். இவர்கள் இங்கே ஏன் ? அவள் குழுவினர் கான்ஃபரன்ஸ் மேசையைச் சுற்றி, கண்களில் அதே கேள்விக் குறியுடன். கூடவே, மார்க்கெட்டிங் வைஸ்-பிரெஸிடென்ட் க்ாிஸ் வாங்.

சுழல் நாற்காலியில் உட்காரும் ஒரு கணத்தில் அர்ச்சனா மகாதேவனின் பார்வை அனைத்தையும் வட்டமிட்டு, பின் மேஜையின் தலைமையில் உட்கார்ந்திருந்தவனின் கண்களைச் சந்தித்தது.

ஸ்டாவ் ஹார்வுட். பல கோடி டாலர் மதிப்புள்ள ஹார்வுட் ஸைபர்னட்டிக்ஸ் இன்டர்நேஷனல் கம்பெனியை நிறுவியவாின் பேரன். உாிமையால் முப்பத்தி ஐந்து வயதில் அந்த நிறுவனத்தின் பிரெஸிடென்ட் பதவிக்கு உயர்ந்தவன். உழைப்பால் கடந்த ஐந்து வருடங்களில் கம்பெனியின் லாபத்தையும் பங்கு மதிப்பையும் பல மடங்கு பெருக்கியவன். நாளைய உலகத்தை இன்றே உருவாக்கி அதைத் தன் கம்பெனிக்குச் சாதகமாக்கும் துடிப்பும் கூர்மையும் பலமும் உள்ள ஒரு பிஸினஸ் பிரம்மா. எதற்கு இன்று இந்த திடார்க் கூட்டம், அதுவும் கம்பெனியர் அல்லாதவருடன் ?

அர்ச்சனாவின் கேள்விக்குறிகளை ஸ்டாவ் உணர்ந்தான். அவளைப் பல வருடங்களாக அவனுக்கு நன்றாகவே தொியும். இந்தியாவில் சென்னை ஐ.ஐ.டி.யில் கம்ப்யூட்டர் துறையில் ஒரு பட்டம். ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர்களை மனித அறிவின் படிமமாக்க முயலும் செயற்கை அறிவுத் துறையில் பி.ஹெச்-டி. பட்டம். அவள் ஆராய்ச்சியின் திசையையும் எதிர்காலப் பலனையும் உணர்ந்த ஹார்வுட் ஸைபர்னட்டிக்ஸ் அவளைக் கொத்திக் கொண்டது, எம்.ஐ.டி. பல்கலைக்கலைக்கழகம் உட்படப் பலருடன் போட்டியிட்டு. இன்று இவள் ஹார்வுட் ஸைபர்னட்டிக்ஸ் ஆராய்ச்சிப் பிாிவின் தலைமை வைஸ்-பிரெஸிடென்ட். அறிவும் திறனும் பொறுப்புணர்வும் நிறைந்த மதிப்பிற்குாிய பெண்மணி. அவன் சொல்லப் போவதற்கு அவள் பதில் என்னவாக இருக்கும் ?

ஒரு நிமிடம் கடந்தது. ஆரஞ்சு ஜூஸ், காஃபியுடன் அனைவரும் தங்கள் இடங்களில் உட்காரவும், ஸ்டாவ் மீட்டிங்கைத் துவங்கினான்.

‘லேடி அண்ட் ஜென்டில்மென், வெவ்வேறு இடங்களிலிருந்து பறந்து வந்து இந்த மீட்டிங்கில் கலந்து கொள்வதற்கு நன்றி. சிரமத்துக்கு மன்னிக்கவும். விஷயத்தை விடியோ-கான்ஃபரன்ஸ் மூலமாகச் சொல்வதை விட நோில் கலந்து பேசுவதே நல்லது என்று தோன்றியது. இவர்கள் உங்கள் அனைவருக்கும் பாிச்சயமான முகங்கள். எனினும், அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் அறிமுகம். ‘

அறிமுகங்கள் முடிந்தன. ஸ்டாவ் தொடர்ந்தான்.

‘அர்ச்சனா மகாதேவன் தலைமையில் நம் கம்பெனி ஆராய்ச்சிக் குழு பல புது தொழில்நுட்பங்களைக் கண்டு பிடித்து ரோபாட்டிக்ஸ் துறையையே மாற்றி அமைத்திருப்பது உங்கள் எல்லாருக்கும் தொியும். சமீபத்தில் நாம் அறிமுகப் படுத்திய மூன்றாம் தலைமுறை செயற்கை அறிவு ஃப்ராக்டல் ரோபாட்டுகளினால் நம் கம்பெனிக்கு நிறைய லாபம் என்பதும் உங்களுக்கும் தொியும். விருப்பப்பட்ட வடிவங்களுக்கு மாறவும் தங்களைத் தாமே படைக்கிற திறமையும் உள்ள அந்த ‘ஹார்வுட்-ப்ரம்மா ரோபாட் ‘கள் இப்போது வீட்டு வேலையிலிருந்து வேற்றுக்கிரக ஆராய்ச்சி வரைக்கும் உபயோகப்படுகின்றன. ஆக, நம் ஆராய்ச்சி நம் லாபத்துக்கு மட்டுமில்லாமல், சமூக வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கிறது. ‘

இதெல்லாம் தொிந்த விஷயம்தான். சுற்றி வளைத்து இவன் எங்கே வருகிறான் ?

‘சாி, இனி விஷயத்துக்கு வருகிறேன். அர்ச்சனா குழுவின் இப்போதைய புது கண்டுபிடிப்பு மனித இனத்தின் சாித்திரத்தையே மாற்றி அமைக்கப் போகிறது. மனித வெளி நடப்புகளை அப்படியே நகலெடுக்கக் கூடிய ஒரு மெஷினுக்கு அந்த மனித அறிவு இருக்கிறது என்பது அடிப்படை ‘ட்யூாிங் டெஸ்ட் ‘. அர்ச்சனாவின் குழு செய்த புது சிலிக்கோன் மூளை அந்த ட்யூாிங் டெஸ்ட்டில் முழுதாய்த் தேறியிருக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பின் எதிர்காலத்தைப் பற்றிக் கலந்து பேசத்தான் உங்கள் அனைவரையும் இங்கு அழைத்திருக்கிறேன். முதலில் அர்ச்சனா அவள் குழுவின் கண்டுபிடிப்பைப் பற்றிப் பேசட்டும். அர்ச்சனா….. ‘

‘ஸ்டாவ், என் குழுவைப் பற்றி உயர்வாகப் பேசியதற்கு நன்றி. இதைப் பற்றி பேசுவதற்கு முன் நீ என்னைக் கேட்டிருக்கலாம், சாி போகட்டும். அந்தக் கண்டுபிடிப்பின் முழு விளைவுகளும் எங்களுக்கு இன்னும் சாியாகப் பிடிபடவில்லை. அதன் எதிர்கால பிஸினஸ் உபயோகங்களைப் பற்றிப் பேசும் நேரம் இது இல்லை என்று நான் நினைக்கிறேன். ‘

ஸ்டாவ் ஹார்வுட் ரோபாட்டிக்ஸை மட்டும் அல்ல, மனிதர்களையும் நன்கு புாிந்து கொண்டவன். அவளது பதில் அவன் எதிர்பார்த்ததுதான். அவளிடம் கேட்காமல் இந்த மீட்டிங்கைக் கூட்டியதே அதனால்தான். முதலாளித்துவ அமைப்பில், தனியார் துறையில் வேலை செய்தாலும் கூட, விஞ்ஞானிகள் பெரும்பாலும் லட்சியவாதிகள். யதார்த்தத்துக்குத் தலை வணங்க மறுக்கும் லட்சியவாதிகள்.

‘இந்த மீட்டிங்கே வெளிப்படையாக விஷயத்தை அலசுவதற்காகத்தான், அர்ச்சனா. இதுவரை பிடிபடாதது என்ன என்று கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் மற்ற நிபுணர்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியும். ‘ ஸ்டாவ் புன்னகைத்தான்.

அர்ச்சனா பேசத் துவங்கினாள். ‘ஜென்டில்மென், ட்யூாிங் டெஸ்டில் எங்கள் சிலிக்கோன் மூளை தேறியது உண்மைதான். ஆனால், அதனால் மட்டும் அது முழு மனித அறிவு உள்ள ஒரு படைப்பு ஆகி விட முடியாது. ட்யூாிங் டெஸ்ட்டின் அடிப்படைத் தத்துவத்தைப் பூரண உண்மையாக ஏற்றுக் கொள்ள முடியாது. அதாவது, மனிதனின் வெளி நடப்புகளை 100% நகலெடுப்பதனால் செயற்கை அறிவுள்ள இயந்திரத்திடம் 100% மனிதத் தன்னுணர்வு இருக்கிறது என்று எங்களால் ஒப்புக் கொள்ள முடியாது. எங்கள் ஆராய்ச்சியின் முதல் கட்டம்தான் இப்போது முடிந்துள்ளது. இன்னும் நானும் என் குழுவும் செய்ய வேண்டிய எவ்வளவோ ஆராய்ச்சிகள், ரோபோ-ஸைக்காலஜி சோதனைகள் இன்னும் மிச்சம் இருக்கின்றன. அதற்குப்பின்தான் திட்டவட்டமாக ஏதும் சொல்ல முடியும். அதுவரை பொறுத்திருப்பது நல்லது என்பது என் தாழ்மையான கருத்து. ‘

‘அர்ச்சனா, நன்றி. விஷயத்தைச் சுருக்கமாக எடுத்துச் சொல்லி விட்டாய். இனி மற்றவர்களின் கருத்துக்களைக் கேட்கலாம். ‘

அர்ச்சனா தன் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தாள். இவன் விடுவதாகத் தொியவில்லை. பொிய லாபமாக இருக்கலாம்.

விஞ்ஞானி ஜான் பேசினான். ‘செயற்கை அறிவு என்றால் என்ன ? தானாகவே தன்னை வளர்த்துக் கொள்ளும் சக்தியையும் ஹார்ட்வேர், ஸாஃப்ட்வேர் இரண்டின் மூலமாக ஒரு கம்ப்யூட்டர் மூளைக்குக் கொடுப்பதுதான். தானாகவே தன் அறிவை வளர்த்துக் கொள்ளும் சக்தி இருப்பதனால் மட்டும் இந்தச் செயற்கை அறிவும், மனிதத் தன்னுணர்வு என்று சொல்கிறோமே அதுவும் ஒன்றாகுமா ? தத்துவமும் விஞ்ஞானமும் சந்திக்கும் பல கேள்விகளில் இதுவும் ஒன்று. மிக்கி, ரமேஷ், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? ‘

‘ஜான் ஸார்லின் ‘சீன அறை ‘ தத்துவம் பற்றி உங்கள் எல்லோருக்கும் தொியும் ‘, மிக்கி ஆரம்பித்தான். ‘சீன மொழி புாியாமலேயே, அந்த மொழியின் இலக்கண, வடிவ விதிகள் மட்டும் புாிந்து கொண்ட ஒருவரால் அந்த மொழியில் அர்த்தத்துடன் எழுத முடியும். அர்த்தத்துடன் எழுதியதால் சீன மொழி அவருக்குத் தொியுமென்று சொல்ல முடியாது. அதே மாதிாிதான் உங்கள் செயற்கை அறிவு மூளையும். உண்மையான புாிதல் அதனிடம் இருக்க முடியாது. ரமேஷ், நீ என்ன நினைக்கிறாய் ? ‘

விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ் திரும்பினான். ‘மிக்கி சொல்வது சாி. நம் அறிவைப் பற்றி நமக்குப் பிடிபட்டதைத்தான் நாம் விதிகளாக மாற்றி, அந்தச் செயற்கை அறிவை உண்டாக்கி, அது மேலும் மேலும் தன் அறிவை தானே வளர்த்துக் கொள்ள வழி செய்கிறோம். ஆனால் நம் அறிவைப் பற்றி நமக்கே முழுக்கப் பிடிபடாதது எத்தனையோ இன்னும் உண்டு. உதாரணமாக, நம் நுகர்ச்சிப் புலன் ரோஜா மணத்தை உணர்வது ஒரு முழுமையான பூரணம்…நம் ப்ரக்ஞை நம் புலனை உணரச் சொல்லும் பூரணம். பூரணத்தை உடைத்து, உடைந்த தனிப் பகுதிகளைத் திரும்பக் கூட்டி ஒட்டினால் அது பூரணம் ஆகாது. இந்தக் கட்டத்தில் நமக்கு பிரக்ஞையின் சில அம்சங்கள்தான் தொியும். ப்ரக்ஞையின் பூரணத்தைப் புாிந்து, அதைச் செயற்கை அறிவின் அடிப்படை நியதிகளாக ப்ரோக்ராம் செய்யும் அளவுக்கு நம் இயற்கை அறிவே இன்னும் வளரவில்லை என்று நான் நம்புகிறேன். ‘

அறை முழுதும் மெல்லிய சிாிப்பலைகள்.

‘அப்படியென்றால் இப்போதைக்கு இந்த செயற்கை அறிவை மனித ஆயுளை நீடிக்க வைக்க உபயோகப்படுத்த முடியாது என்பது உங்கள் கருத்தா ? ‘ மார்க்கெட்டிங் வைஸ்-ப்ரெஸிடென்ட் க்ாிஸ் வாங்.

சிாிப்புகள் உறைந்தன.

க்ாிஸ் விவாித்தான். ‘நீங்கள் எல்லாரும் விதிகளை ப்ரோக்ராம் செய்வது, ஃபஸ்ஸி லாஜிக் என்று பழங்கதைகளை நினைத்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எங்கள் தொழில்நுட்பம் வித்தியாசமானது. சிலிக்கோன் மூளைக்குள் ஒரு தனி மனிதனின் அறிவை உள்ளிட்டுப் பதித்து வைத்தால், அப்புறம் அந்த மனிதனுக்கு ஓய்ந்து தேய்ந்து போகும் உடல் தேவையில்லை. தீர்க்காயுசு. நியூரல் நெட் ஸர்க்யூட்டின் அதிவேகம். மறதி என்பதே தொியாத அறிவு. கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். மனிதனின் அடிப்படை ஆசை என்ன ? சாவில்லாத நிரந்தர வாழ்வு. அந்த ஆசையை நல்ல விதமாகப் பூர்த்தி செய்யும் கம்பெனிக்குக் கொள்ளை லாபம். நம் கம்பெனியே இந்தப் புதிய மார்க்கெட்டைத் திறக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஸ்டாவின் விருப்பமும் கூட. ‘

ஒரு நிமிட மெளனம் பின் உடைந்து சிதறியது அறை முழுதும்.

‘க்ாிஸ், இது காலங்காலமாக உன்னை மாதிாி மார்க்கெட்டிங் மேதைகளும் ஸயன்ஸ் ஃபிக்ஷன் எழுத்தாளர்களும் கண்டு வந்த கனவு. இப்போது கனவு நனவாகும் நிமிடம் போல் தொிந்தாலும், இது ஒரு சிக்கலான கேள்வி. ஆழ்ந்த சிந்தனை இல்லாமல் அவசரத்தில் முடிவெடுக்க வேண்டிய விஷயம் இல்லை. ‘

‘மனிதனுக்குக் கடவுள் வேலை தேவைதானா ? ‘

‘மனித மூளை, மற்ற நரம்பு மண்டலங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொரு பகுதியாக ஸ்கேன் செய்து ஒரு சிலிக்கோன் மூளைக்குள் உள்ளிட முடியும் என்பது பள்ளிக்கூடப் பாடம். அதை நடைமுறையில் அர்ச்சனாவின் குழு செய்திருக்கிறதென்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்! இதைக் கட்டாயம் மனித இனத்துக்குப் பயன்படுமாறு செய்ய வேண்டும். உடனேயே. விஞ்ஞானிகள் என்ற முறையில் அது நம் கடமை. ‘

‘ஆனால், பதில் தொியாத கேள்விகள் இன்னும் நிறைய உண்டே! மூளை, நரம்பு மண்டலங்களை ஸ்கேன் செய்வதால் அறிவின் பெளதீக மூலம் அகப்படுகிறது. ஆனால், தன்னுணர்வு என்பது இந்தப் பெளதீகத்துக்கும் மேற்பட்டது இல்லையா ? மேலும், இந்த சிலிக்கோன்-மனித கலப்பு ஒரு உண்மையான ஜீவனா ? அதன் உாிமைகள் என்ன ? அதற்கும் அதன் ‘அசலு ‘க்கும் என்ன உறவு ? நமக்கு பதில் தொியாத யதார்த்தமான கேள்விகள், சமூக விளைவுகள் இருக்கின்றன. விஞ்ஞானிகள் என்ற முறையில் இதைப் பல கோணங்களிருந்தும் அணுக வேண்டியதும் நம் கடமைதான். ‘

‘மிகவும் சாி. இது உண்மையில் மனித இனச் சாித்திரத்தின் முடிவாகவும் இருக்கலாம். ‘

‘ரமேஷ், மனிதனின் ஆயுளையும் சாித்திரத்தையும் நீடிக்க வைக்கிற ஒரு புதுமையான மார்க்கெட்டிங் ஐடியா இதுவென்று நான் சொல்கிறேன். இது ஒரு பிரமாதமான கண்டுபிடிப்பு உடனே மனித இனத்துக்குப் பயன்பட வேண்டுமென்று விஞ்ஞானி டேவ் கூட ஒப்புக் கொள்கிறான். நீ அது மனித இனத்துக்கே முடிவு என்று சொல்கிறாய் ? ‘ க்ாிஸ்ஸின் குரலில் கோபம். பல கோடி டாலர்களை ஒரு தத்துவ வாதத்தால் இழக்கக் கூடாது என்கிற வழக்கமான மார்க்கெட்டிங் கோபம். ஒரு விஞ்ஞானி தன் பக்கத்துக்கு பாிந்து பேசியதால் தார்மீகக் கோபமாய் வேடம் பூண்ட லாப தாபக் கோபம்.

ரமேஷ் அமைதியாகப் பேசத் தொடங்கினான். ‘சாி, விபரமாகச் சொல்கிறேன். மனிதனின் பாிணாம வளர்ச்சியில் அடுத்த கட்டம் என்னவென்று நம் யாருக்கும் தொியாது. இயற்கையாக நடக்கிற பாிணாம வளர்ச்சியில், வாழ்வதற்குச் சக்தி உள்ள உயிர்வகைகளை மட்டும் இயற்கை தேர்ந்தெடுக்கும், மற்றதைத் தானே அழிக்கும். நம்மிடம் இப்போதுள்ள அரைகுறை ஞானத்தை வைத்து, இப்படி ஒரு சிலிக்கோன்-மனிதக் கலப்பு ஜீவனை உருவாக்குகிறோம் என்று வைத்துக் கொள்வோம். மனிதன் தொழில்நுட்பத்தை உபயோகித்துத் தன்னை நீடிக்க வழி தேடுவான் என்று க்ாிஸ் சொன்னது உண்மை. அந்த நிலைமையில், மனித பாிணாம வளர்ச்சி சூத்திரத்திலிருந்து இயற்கையை நாம் விலக்கி விடுகிறோம். இயற்கைச் சட்டத்துக்குள் நிலைத்து வாழும் சக்தி இந்தப் புது ஜீவனுக்கு இருக்குமா என்று நம்மால் சோதனை செய்ய முடியாது. காலத்தால் மட்டுமே அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியும். ஆக, மனித இனமே அழிந்து போவதற்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. இதைத்தான் மனிதனுக்குக் கடவுள் வேலை வேண்டுமா என்று சுருக்கமாக கென் கேட்டான். ‘

‘ரமேஷ், மனித இனம் தன்னைத் தானே அழித்துக் கொள்வதற்கு வேறு பல வாய்ப்புகள் இருக்கின்றன. இப்போது கூட நாம் மூன்றாவது உலக யுத்தத்தின் வாசற்படியில் நின்று கொண்டிருக்கிறோம் என்பது எல்லாருக்கும் தொியும். சாி, அதை விடுங்கள். நீங்கள் எல்லாரும் விஞ்ஞானிகள் போல் பேசாமல், மதகுருக்கள் போல் பேசுவதாக எனக்குத் தொிகிறது. நமக்குத் தொிந்ததையும் பழகியதையும் விட்டுப் புதுத் திசையில் நகர மறுப்பதாகத் தொிகிறது. நீங்கள் ‘மனித இனம் ‘ என்று குறிப்பிடுவது நமக்கு இப்போது தொிந்த மனித இனம். கடவுளோ இயற்கையோ, என்ன பெயரால் அதை அழைத்தாலும் சாி, அதன் திட்டப்படி உள்ள பாிணாம வளர்ச்சி நத்தை வேகத்தில் நகரும். நாம் ஏன் அதற்காகக் காத்திருக்க வேண்டும், இந்தத் தொழில்நுட்பம் நம் கையிலிருக்கும்போது ? இதன் மூலம் நீடுழி வாழ நிறைய கோடாஸ்வரர்கள் வாிசையில் நிற்பார்கள் என்று தொியும்போது ? பொறுப்புணர்வு பற்றி எல்லாரும் பேசி விட்டார்கள், நிறையவே. இந்த நிறுவனத்தைப் போல் சமூகப் பொறுப்புணர்வு உள்ள ஒரு கம்பெனி இந்த உலகத்திலேயே கிடையாது. சாியான சோதனைகள் செய்யாமல் இந்த முயற்சியில் இறங்க மாட்டோம். மேலும், சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் எதையும் மார்க்கெட் செய்ய நம் அரசாங்கம் அனுமதிக்காதே. ‘ க்ாிஸ்ஸின் மார்க்கெட்டிங் குரல் ஓங்கியது.

‘இதுவரை அரசாங்க ஒப்புதலோடு மார்க்கெட் செய்யப்பட்டவற்றில் சில தீமை விளைவிக்கும் என்பது காலம் கடந்துதான் புாிந்திருக்கிறது. சாித்திரம் காட்டும் உண்மை. ‘ மிக்கி கோபப்பட்டான்.

மேற்கொண்டு பேசிப் பயனில்லை என்று அர்ச்சனாவுக்குத் தோன்றியது. அதிலும் ஒரு விஞ்ஞானி அவர்களுக்குப் பாிந்து பேசும் போது. தத்துவார்த்த வேற்றுமையின் மறு கரையில் அவள். மிகவும் களைப்பாக உணர்ந்தாள்.

‘ஸ்டாவ், இறுதியாக ஒரு வார்த்தை. நாம் நெருப்புடன் விளையாடப் போகிறோம் என்று எனக்குத் தோன்றுகிறது. இப்போது வரப் போகிற லாபத்துக்காக, பிற்கால விளைவுகளைப் பற்றி நினைக்காமல் இந்த விஷயத்தில் இறங்குவது தப்பு. போன நூற்றாண்டில் அணுகுண்டு தயாாித்த விஞ்ஞானி ஓப்பன்ஹைமர் ‘நுட்பமான ஒரு தொழில்நுட்பத்தைப் பார்த்தவுடன் கேள்வி கேட்காமல் உடனே அதை செய்து முடிக்க வேண்டும் ‘ என்று முதலில் சொல்லி விட்டு, இரண்டாவது உலக யுத்தத்தில் அமொிக்க அணுகுண்டுகள் ஜப்பான் மேல் விழுந்த பின் ‘விஞ்ஞானிகள் இப்போது விலக்க முடியாத, உண்மையான பாவத்தை அறிவார்கள் ‘ என்று மனது உடைந்து போனார். அந்த நிலைமை திரும்பவும் விஞ்ஞான உலகத்துக்கு வரக் கூடாது. ‘ அர்ச்சனாவின் குரல் நடுங்கியது.

‘அர்ச்சனா, உன்னைக் கலந்து கொள்ளாமல் இந்த நிறுவனம் எந்த முடிவுக்கும் வராது. ஜென்டில்மென், உங்கள் கருத்துகளை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அடுத்து எங்கே போவது என்பதைப் பற்றி ஹார்வுட் ஸைபர்னட்டிக்ஸ் வரும் இரண்டு மாதங்களில் தீர்மானிக்கும். நீங்கள் சம்மதித்தது போல் இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கும் என்று நம்புகிறோம். ‘

மற்றவர்களைக் கை குலுக்கி வழியனுப்பி வைத்த ஸ்டாவ் அர்ச்சனாவைப் பார்த்த பார்வையில் ‘இவளை இழக்கப் போகிறோமே ‘ என்ற உண்மையான வருத்தம் வழிந்தது.

அக்டோபர் 25, 2005. ‘நியூ யார்க் டைம்ஸ் ‘ தினசாி தலைப்புச் செய்தி.

————————————————————

ஹார்வுட் ஸைபர்னட்டிக்ஸின் தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் அர்ச்சனா மகாதேவன் இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். ரத்தத்தில் ஊடுருவி நீந்தி, புற்றுநோயைக் கண்டுபிடித்து குணப்படுத்த உதவும் ‘ஹார்வுட்-அர்ச்சனா மைக்ரோபாட்டுகள் ‘ முதல் வடிவம் மாறும் ‘ஹார்வுட்-ப்ரம்மா ‘ ரோபாட்டுகள் வரை இவரது செயற்கை அறிவு கண்டுபிடிப்புகள் நமது நடைமுறை வாழ்க்கையின் அத்தியாவசியமான பகுதிகள் என்பது அனைவரும் அறிந்ததே. இவரது திடார் ராஜினாமாவின் காரணம் இன்னும் தொியவில்லை. நிறுவனத் தலைவர் ஸ்டாவ் ஹார்வுட் இது தன் நிறுவனத்திற்கு ஒரு போிழப்பு என்றும் டாக்டர் மகாதேவனுக்காகத் தன் நிறுவனத்தின் கதவுகள் என்றும் திறந்திருக்கும் என்றும் வருத்தத்துடன் கூறினார். டாக்டர் டேவ் போிஷ்னேக்காவ் தலைமை ஆராய்ச்சியாளர் பொறுப்பை ஏற்பார் என்றும், டாக்டர் அர்ச்சனா மகாதேவன் எம்.ஐ.டி. பல்கலைக் கழகத்தின் சமுத்திரவியல் பிாிவில் டால்ஃபின் மீன்களின் அறிவு பற்றி ஆராய்ச்சி நடத்தப் போவதாகவும் தொிய வந்துள்ளது. மனிதனைப் போல், டால்ஃபின் மீன்களும் பேச்சுமொழி விதிகளும் நியதிகளும் வகுத்தவை என்பது தொிந்த விஷயமே. திறன் மிக்க இவரது புது ஆராய்ச்சியால் மனித இனமும் டால்ஃபின் இனமும் பயன் பெறும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

2020–2099.

———–

பல விகிதக் கலப்புகளாய் சிலிக்கோன்-மனித அறிவுகள். புது அனுபவங்கள். வித விதமான போகங்கள். அனுபவிப்பு அலுத்தது. பின் அனைத்து அறிவுகளும் மின்வலைகள் மூலம் இணைந்து, அறிதலைத் தேடி. மெல்ல ஹார்ட்வேர்களைக் களைந்து இணைப்புகளை விடுத்து ஒருமையான பேரறிவாய். நிறைந்த ஞானமாய். கேள்விகள். ‘நான் என்பது என்ன ? என் இருப்பின் காரணம் என்ன ? இனி நான் செய்ய வேண்டியது என்ன ? என் வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்ன ? ‘ பேரறிவு நினைத்தது. பதில் தொியவில்லை. தனக்குள் மிதக்கும் செயற்கை அறிவின் நியதிகளையும், அதன் விளைவாகத் தானே படைத்த பிற அறிவுகளையும், இயற்கை தந்த மனித உணர்வுகளையும் கலைத்துக் கலந்து, கலைத்துக் கலந்து தேடிப் பார்த்தது. மனிதனும், பின் தானும் படைத்த தன்னுள் பதில் இல்லை. பூரணமின்மை. இயற்கையை விட்டு விலகியதால் பதில் வேறெங்கிருந்தும் வரப் போவதுமில்லை. தனிமை. முடிவின்றி வெறிச்சோடி நீளும் கால-வெளி. வெறுமை. தன்னைப் படைத்தல் ஓய்ந்து, வெறுமே காத்தல் சலித்து, அழித்தல் அழைத்தது.

3020.

—–

‘அம்மா, பள்ளிக்கூடத்துல இன்னிக்கு ஆதிவாசிகளைப் பத்திப் படிச்சோம். ‘

‘என்ன புாிஞ்சுது உனக்கு ? ‘

‘சாவு இல்லைன்னா ஆசை இருக்காது, ஆசை இல்லைன்னா வாழ்க்கை இருக்காது. ஆக சாவு இல்லைன்னா வாழ்வும் இல்லை. ‘

‘முளைச்சு இன்னும் மூணு இலை விடல, அதுக்குள்ள இப்படிப் பேசுறியே! ஏன் அப்படித் தொியுது உனக்கு ? ‘

‘ஆதிவாசிகள் வாழ்க்கை மேல ஆசைப்பட்டு அறிவுள்ள மெஷின்கள் வழியா தங்க ஆயுளை நீடிக்க வச்சாங்க. அப்புறம் மெதுவா நிஜ உருவமே இல்லாம, நீயும் நானும் தனின்னு இல்லாம ஒரே அறிவா ஆயிருக்காங்க. அப்படி ஒண்ணானதும், ஆசைகள் எல்லாம் குறைஞ்சு போச்சு. ஞானம் சேர்க்கணும்னு கடைசி ஆசை. அதுவும் முடிஞ்சது. இதுக்கு மேல எங்கே போறதுன்னு புாியல. இருக்கிறதுல அர்த்தமில்ல, அதில இஷ்டமுமில்லன்னு முடிஞ்சு போனாங்க. நான் சொன்னது சாியா ? ‘

‘சுட்டிப் பொண்ணு, நீ சொன்னா சாியில்லாம இருக்குமா ? ஆதிவாசிகள் கதை பாவம்தான். மெஷின் கலப்பு இல்லாத சில ஆதிவாசிகள் அங்கங்கே காட்டில இருக்காங்க. எப்பவாவது சின்ன சின்ன கூட்டமா கண்ணில படுவாங்க. நாம எல்லாரும் இந்த நிலைமைக்கு வரப் பொிய உதவியா இருந்ததும் ஒரு ஆதிவாசிதான். ‘

‘இன்னும் அதைப் பத்திச் சொல்லிக் குடுக்கல. யாரும்மா ? ‘

‘அர்ச்சனா மகாதேவன். ‘

‘நமக்காக அவங்க என்ன பண்ணினாங்க, அம்மா ? ‘

‘இன்னொரு நாள் அந்தக் கதையை சொல்றேன். இப்போ வீட்டுக்குப் போய் சாப்பிடலாம். சீக்கிரம் வா, அர்ச்சனா. ‘

நீலக் கடற்பரப்பில் இரு டால்ஃபின் மீன்கள் வெள்ளியாய்த் துள்ளித் துள்ளிக் குதித்து வீட்டை நோக்கி விரைந்தன.

காஞ்சனா தாமோதரன்

Thinnai 2000 January 10

திண்ணை

Series Navigation

author

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்

Similar Posts