அரசியல் குருபெயர்ச்சி

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

புதியமாதவி, மும்பை.


தேர்தல் முடிவுகள் வந்த நாள்.. மறக்க முடியாத நாளாக இருந்தது.
முந்தின நாள்: இரவில் தூக்கம் வரவில்லை.
வீனஸ் சேனலில் வேலைக்குச் சேர்ந்தப் பின் நண்பர்கள் வட்டம் அதிகமாகிப்போனது
ஒருவகையில் எரிச்சலாகவே இருந்தது.
எலெக்ஷன் ரிசல்ட் விடிந்தால் காலை 10 மணிக்கெல்லாம் தெரிந்துவிடப் போகிறது.
இருந்தாலும் ஏன் தான் இந்த மாதிரி எல்லாம் கேள்விக் கேட்டு
தொந்தரவு செய்கிறார்களோ தெரியவில்லை.

அரசியல் கட்சியில் இருப்பவர்களும் தேர்தலில் போட்டி இடும் வேட்பாளர்களும்
கேட்டால் ஏதொ அதற்கு காரணம் இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால்
சொந்தக்காரர்கள் முதல் கல்லூரியில் ஒன்றாய் படித்த தோழியின் கணவர் வரை
போன் செய்து விசாரித்தார்கள்.

எங்கள் கணிப்பு இதுதான் என்று சொன்னால் அப்படியா என்று கேட்டுவிட்டு
இருக்க வேண்டியதுதானே. காரண காரியங்கள் எல்லாம் கேட்பார்கள்,
அவர்கள் திருப்தி படுகிறமாதிரி பதில் சொல்லியாக வேண்டும்.
இல்லை என்றால் நாங்கள் செய்த கருத்துக் கணிப்பு வேலை எல்லாம்
ஒரு பைத்தியக்காரத்தனம் என்கிற மாதிரி பேசுவார்கள்.
அப்படிச் சொல்கிறவர்களிடம் அப்புறம் நீங்கள் ஏன் சார் போன் போட்டு
எங்களிடன் கேட்கிறீர்கள் என்று கேட்டால் சரியான பதில் வராது.

வீனஸ் சேனலில் நாங்கள் கொடுத்திருந்தக் கருத்து கணிப்பு நான்கு மாநிலங்களிலும்
சரியாக இருந்தது. அந்த டீமுக்கு நான் தான் பொறுப்பு என்பதால் மேலிடத்திலிருந்து
ஏகப்பட்ட பாராட்டு வந்தது.
ஸ்டார், ஹெட் லைன்ஸ் என்று நான் இதற்கு முன்பு வேலைப் பார்த்த சேனல்
நண்பர்களும் எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள். உங்களை ரொம்ப மிஸ் பண்ணினோம்
என்று சொன்னது எனக்கு கொஞ்சம் பெருமையாகத் தான் இருந்தது.

எல்லோரின் கருத்துக் கணிப்பையும் மீறி ஜெயலலிதா அதிரடியாக இவ்வளவு
இடங்களைப் பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று
அரசியல் பிரிவில் வேலைப்பார்க்கும் நரேஸ் நாலு பத்திரிகை காரர்களை
வைத்துக் கொண்டு அலசிக் கொண்டிருந்தான்.

செல்வி ஜெயலலிதா பழைய தவறுகளைச் செய்ய மாட்டார் என்றும்
இன்னும் 10 வருடத்திற்கு அவரை அசைக்க முடியாது என்றும்
சிலர் சொன்னார்கள்.

ஜெயலலிதா, மம்தா இருவரின் ஜாதகப்படி எதிரிகள்
இருந்த இடம் தெரியாமல் போவார்கள் என்றும் அவர்கள் வெற்றிக்கு
குருபெயர்ச்சியே காரணம் என்றும் ஒரு பண்டிதர் அலசிக் கொண்டிருந்தார்.
.
தேர்தல் முடிவுகளை நக்கீரன் ஆசிரியரை வைத்துக்கொண்டு அட்டகாசமாக
ஆரம்பித்த கலைஞர் டிவி 10 மணிக்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல்
அல்லாடிக் கொண்டிருந்தது பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ரொம்பவும்
பரிதாபமாக இருந்தது. எப்படியோ ‘மானாட மயிலாட’ போட்டு அன்றைய
பகல் பொழுதை ஓட்டினார்கள்.

ஸ்டாலின் பின்னடைவு என்ற செய்தி அடிக்கடி வந்து பயமுறுத்தியது உண்மை!
உண்மையாப்பா? என்று சென்னை நண்பர்களைத் தொடர்புக் கொண்டால்
ஒவ்வொருவரும் அவரவர் கேள்விப்பட்டதைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

என் கருத்துக்கணிப்புக்கு மிகவும் பலமாக இருந்தது திமுகாவின் பழம் பெரும்
தொண்டர்களின் ரகசிய வாக்குமூலங்கள் என்று நான் யாரிடமும் வெளியில்
சொல்லவில்லை.

எங்கள் ஊரில் திமுகாவின் பழம் பெரும் தொண்டர் ஒருவர் சொன்னக் கருத்துதான்
என்னை ரொம்பவும் யோசிக்க வைத்தது. அவரும் என் அப்பாவும் நெருங்கிய
நண்பர்கள். இருவரும் கலந்துக் கொள்ளாத திமுக மாநாடுகளே கிடையாது.
இரண்டு பேருமே மனைவி பிள்ளைகள் என்று கவலைப்பட்டதே இல்லை.
என் அப்பாவுக்காவது மாசச்சம்பளம் வரும் உத்தியோகம் இருந்தது.
அவருக்கு அதுவும் கிடையாது. இரண்டு வீட்டிலும் பிள்ளைச் செல்வங்களுக்கு
மட்டும் குறைவில்லை. எந்தப் பிள்ளை எந்த வகுப்பு படிக்கிறது, என்ன செய்கிறது
என்று இருவரிடமும் கேட்டால் தெரியாது. ஆனால் கட்சியில் யார் யார் என்ன
செய்து கொண்டிருக்கிறார்கள், என்ன எழுதினார்கள், இத்தியாதி விசயங்கள்
அத்துப்படியாகத் தெரியும். அதெல்லாம் ஒரு பெரிய கதை.
.
அவரிடம் தான் எலெக்ஷனுக்கு முந்தியே கொஞ்சம் பல்ஸ் பிடிச்சி
பார்ப்பதற்காக போனில் பேசிக்கொண்டிருந்தேன்.

ஆவடையப்பன் தோற்கட்டும்..
எல்லாரும் தோக்கட்டும் அப்போ தான் புத்தி வரும்..
மூணே மூணு பேரு ஜெயிச்சா போதும்..
தலைவரு, ஸ்டாலினு அப்புறம் நம்ம பேராசியர்..'”

நான் வேறு அவர் வேறல்ல, நான் தான் அவர், அவர்தான் நான்… என்று
அடிக்கடி அன்பழகன் சொல்வாராம் நெல்லை நண்பர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
பாவம் அவருக்கு ரொம்பவும் வேண்டியவரு அவுட் போலிருக்கே என்று
அன்பழகனின் தோல்வியைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் விழித்தெழு இயக்கத்திலிருந்து தம்பி ஸ்ரீதர் வீட்டுக்கு
வந்தான். எலெக்ஷன் ரிசல்ட் குறித்து ரொம்பவும் காரசாரமாகப்
பேசிக்கொண்டிருந்தான்.
அன்பழகன் தோல்விக்கு மிகவும் சரியாக ஒரு நியாயத்தை முன் வைத்துப்
பேசினான்.

பிறகென்ன அக்கா, மக்களுக்கு இப்போதெல்லாம் புரிந்துவிட்டது,
குற்றம் செய்பவன் மட்டும் குற்றவாளி இல்லை,
அந்தக் குற்றத்தைக் கண்டும் காணாமல் கூட இருப்பவன் மிகப்பெரிய குற்றவாளி.
அதற்குரிய தண்டனையைத் தான் வழங்கி இருக்கிறார்கள்! வாழ்க.

என்றான். அவன் எதைப் பேசினாலும் கொஞ்சம் சூடாகத்தான் பேசுவான்.
அவன் சொல்வதிலிருந்த நியாயங்கள் எனக்கும் புரிந்தது.
செம்மொழி மாநாட்டு மேடையில் மியுசிக் சேரில் உட்கார இடம் பிடிப்பது
மாதிரி வாரிசுகள் போட்டிப் போட்டதைக் கண்டும் காணாமல்
இடிச்சப்புளி மாதிரி மனுசன் உட்கார்ந்திருந்தக் கோலம் நினைவுக்கு வந்தது.

அன்றிரவு,
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே படுத்திருக்கிறேன்.
ஒவ்வொரு நட்சத்திரமாக கடலில் விழுந்துக் கொண்டிருக்கிறது என்று
காற்று வந்து மெதுவாகச் சொல்கிறது.
புதிய வானம், புதிய நட்சத்திரங்கள் வரட்டும், என்கிறேன்.
ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டையை புதிய வானம் புனரமைக்குமா?
காற்று கேட்கிறது கண்ணீருடன்.
கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்ல கைகளை நீட்டியவுடன்
காற்று காணாமல் போகிறது..
தெற்கிலிருந்து அழும் விம்மல் ஓசை..
முட்புதரில் கிழிந்துத் தொங்கும் உள்ளாடை
மருத்துவமனைகள் எங்கும் பிணவாடை.
சாபமிடுகிறாள் என் ஆதித்தாய்.
பயமாக இருக்கிறது.. குருதி வழிய காயத்துடன்
அவள் நின்ற கோலம்..
மன்னித்து விடு தாயே … என்று அலறுகிறேன்.
அவள் கருப்பை வெடித்துச் சிதறுகிறது
ரத்த வெள்ளத்தில் மிதக்கிறது அவள் குழந்தை பிணமாக..
மயங்கி விழுகிறேன்.
எழுந்து நிற்கத் தெம்பில்லை.
ஆதித்தாயின் சாபம் என்னைத் துரத்துகிறது.
என் இருத்தலை ஆயிரம் ஏவுகணைகளால் துளைத்து எடுக்கிறது.

ஊரில் அப்பா பெயரால் ஏற்றப்பட்டிருந்த கொடிக்கம்பம் சாய்ந்து
விழுந்துவிட்டதாம். மீண்டும் கொடிக்கம்பதை தூக்கி நிறுத்தவா?
அல்லது விழுந்தது விழுந்ததாகவே இருக்கட்டுமே என்று
விட்டுவிடவா? கேட்கிறான் தம்பி, புரியவில்லை.
அவனுக்கு என்ன பதில் சொல்லட்டும்?
காலம் என் பதிலுக்காக காத்திருக்கப் போவதில்லை.
கொடிக்கம்பத்தில் பொறிக்கப்பட்டிருந்த
அப்பாவின் பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதைகிறது.
பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.. மவுனமாக.
அந்தப் பெயர், அந்த மனிதர், அந்த முகம், அந்த வாழ்க்கை…
அதில் எனக்கான இடம் ஒரு சின்னப் புள்ளிதான் என்றாலும்
ஓ வென்று அழ வேண்டும் போலிருக்கிறது.

என்னையும் அறியாமல் என் கண்களில் கண்ணீர்..
நான் தூக்கத்தில் அழுதேனா.. தெரியவில்லையே
நட்சத்திரத்தில் தொங்கிக்கொண்டிருந்த அப்பாவின் நீண்ட நேரியல்
என் கண்ணீரைத் துடைக்கிறது.

காலையில் திமுக தொண்டர் தோல்வி தாங்காமல்
தற்கொலை என்ற செய்தியை வாசித்தவுடன் கோபம் வந்தது.
உங்கள் ஊரில் மட்டும் ஏன் எதற்கெடுத்தாலும் தற்கொலை, தீக்குளிப்பு!
அடிப்படையில் உங்கள் எல்லோருக்குமே எதோ ஒரு வகை மனவியாதி
ப்டித்திருக்கிறது என்கிறார்கள் என்னுடன் வேலைப்பார்க்கும்
வீன்ஸ் டிவி நண்பர்கள்.

இருக்கலாம் ! என்று சொல்லிவிட்டு
சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல் நலம்பெற
மராட்டிய மாநில ரஜினி ரசிகர் மன்ற தலைவர்
எனக்குத் தெரிந்தவர்தான், ஆதிமூலம் ஏதொ யாகமெல்லாம் செய்யப் போகிறாராம்
அதைக் கவர் செய்ய காமிராமேனுடன் வேகமாக வெளியில் புறப்பட்டேன்.

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை