அப்சல் குரு : மரண தண்டனையா, மன்னிப்பா ?

This entry is part [part not set] of 36 in the series 20061006_Issue

ரவி ஸ்ரீநிவாஸ்


முகமது அப்சல் குருவின் மரண தண்டனையினை நிறுத்தக் கோரியும், அவருக்கு கருணை காண்பித்து தண்டனையினை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரியும் சில கட்சிகள், தனி நபர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.அவரை தூக்கிலிட்டால் அது இந்திய-பாகிஸ்தான் அமைதி நடவடிக்கைகளை பாதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள இந்திய கம்யுனிஸ்ட் கட்சி(மார்க்ஸிட்)யின் மூத்த தலைவரும் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று கூறியுள்ளார். இன்னும் சிலர் அவரது விசாரணை முறையாக நடக்கவில்லை என்ற வாதத்தினை முன் வைக்கின்றனர். அவர் தீவிரவாத இயக்கத்தினைச் சேர்ந்தவர் அல்ல என்பதால் அவருக்கு இந்த தண்டனை தரக்கூடாது என்பது இன்னொரு கருத்து.ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினைப் படித்தால் மேற்க்கூறிய வாதங்கள் வலுவற்றவை என்பதைப் புரிந்துகொள்ளலாம்(1).

அன்று தீவிரவாதிகள் செய்ய நினைத்தது என்ன? பாராளுமன்றத்தினை தாக்கி பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை கொல்வது அதன் மூலம் நாட்டில் பதற்றத்தினையும், குழப்பத்தினையும் ஏற்படுத்துவது. பிரதமர் உட்பட பல அமைச்சர்கள், பாரளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று ஊகிப்பது எளிதல்ல. நிலவும் குழப்பத்தினை பயன்படுத்திக்கொண்டு தீவிரவாதிகள் வேறு பல தாக்குதல்களை நடத்தியிருக்கக் கூடும். அரசியல் குழப்பம் ஏற்பட்டு அது மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியிருக்ககூடும். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொண்டு தேசவிரோதிகள், தீவிரவாதிகள் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார்களோ, எல்லைக்கு அப்பாலிருந்து எந்த விதங்களில் கட்டளைகள்,உதவிகள் வந்தனவோ- யாருக்குத் தெரியும். எனவே பாராளுமன்றத்தினை தாக்குவது என்பது சாதாரணமான செயலா இல்லை தேசத் துரோகமா என்பதை முடிவு செய்வதில் எந்த தயக்கமும் தேவையில்லை.

இச்செயல் இந்தியக்குடியரசிற்கும், அதன் குடிமக்களுக்கும் எதிரான வன் செயல். ஒரு தேசத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளையும் கொல்லும் முயற்சிக்கு ஒருவர் உதவுகிறார் என்றால் அவரை எப்படி நடத்த வேண்டும், என்ன செய்ய வேண்டும். அன்று போராடி உயிர் நீத்த காவலர்கள் 11 பேர். அவர்களின் அளப்பரிய தியாகத்தினை நாம் மதிக்க வேண்டுமா இல்லை, அதை அர்த்தமற்றதாக்கும் வகையில் , ஒரு கொடுஞ்செயலுக்கு உதவியவருக்கு, பொது மன்னிப்பு வழங்க வேண்டுமா. பொது மன்னிப்பு வழங்கினால் எந்த முகத்துடன் தீவிரவாதத்தினை எதிர்த்து போராடுங்கள் என்று ராணுவத்தினரையும், காவலர்களையும ் நோக்கி ஆட்சியில் இருப்பவர்கள் கூற முடியும். இந்த வழக்கில் மரண தண்டனை ஏன் நியாயமானது என்பதை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும் வழக்கில் குற்றம் சாட்டபட்ட அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்படவில்லை. ஒருவருக்கு மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுள்ளது. முறையான விசாரணை நடத்தப்பட்டு, மூன்று நீதிமன்றங்கள் விசாரித்த வழக்கு இது. அப்சல் சார்பிலும், குற்றம் சாட்டப்பட்ட பிறர் சார்பிலும் வழக்கறிஞர்கள் வாதாடினர். உச்ச நீதிமன்றமும், உயர் நீதி மன்றமும் தன்னிச்சையாக அளித்த தீர்ப்பல்ல.(2)

மனித உரிமைகள் என்ற பெயரில் தீவிரவாதிகளுக்கும், தேசத்துரோகிகளுக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராக செயல்பட்டு கொலைகள் செய்வோரை ஆதரிப்பது மனித உரிமைகள் தத்துவத்திற்கே விரோதமானது. ஏனெனில் மனித உரிமைகள் அனைவருக்கும் உண்டு. ஒரு சிலர் ஒரு பெரிய சதிதிட்டத்தினை தீட்டி, பாராளுமன்றத்தினை தாக்குவார்கள், அவர்களுக்கு மன்னிப்பு தர வேண்டும் என்றால் அது கேலிக்கூத்து. இந்த மனித உரிமை ஆர்வலர்களுக்கு சராசரி இந்தியரின் மனித உரிமைகள், உயிர்களை விட தீவிரவாதிகளின் உரிமைகளும், உயிர்களும் அதிக முக்கியத்துவம், மதிப்பு வாய்ந்தவை என்றால் அதை வெளிப்படையாகத் தெரிவித்துவிடலாம்.(3)

அரிதினும், அரிதாக வழங்கப்படும் மரண தண்டனை இந்த வழக்கில் பொருத்தமான தண்டனைதான். இதை நிறைவேற்றுவதே சரியான முடிவு. மன்னிப்பு வழங்குவது என்பது இந்தியாவைத் தாக்குங்கள், இந்தியர்களை கொல்லுங்கள், நாட்டில் குழப்பம் விளைவியுங்கள், சேதம் ஏற்படுத்துங்கள் என்று தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுவதற்கு சமம். மேலும் மன்னிப்பு வழங்குவது இந்தியா தீவிரவாதத்தினை ஒரு பெரிய பிரச்சினையாக கருதவில்லை என்றே பிற நாடுகளால் பொருள் கொள்ளப்படும். பாராளுமன்றத்தினை, அதுவும் பிரதமர் உட்பட உறுப்பினர்கள் அதில் அமர்ந்திருக்க, அவை தன் அலுவல்களை செய்யும் போது தாக்குவதை நாம் மன்னித்தால் உலகம் நம்மை எப்படி மதிக்கும்.

(1) முழுத் தீர்ப்பு (சுமார் 150 பக்கங்கள்) இணையத்தில் இந்த முகவரியில் கிடைக்கிறது.
http://judis.nic.in/supremecourt/qrydisp.asp?tfnm=27092
(CASE NO.:Appeal (crl.) 373-375 of 2004
PETITIONER: STATE (N.C.T. OF DELHI)
RESPONDENT: NAVJOT SANDHU@ AFSAN GURU
DATE OF JUDGMENT: 04/08/2005
BENCH:P. VENKATARAMA REDDI & P.P. NAOLEKAR
JUDGMENT :WITH
CRIMINAL APPEAL Nos. 376-378 OF 2004
STATE (N.C.T. OF DELHI)  APPELLANT
VERSUS
SYED ABDUL REHMAN GILANI  RESPONDENT
CRIMINAL APPEAL Nos. 379-380 OF 2004
SHAUKAT HUSSAIN GURU  APPELLANT
VERSUS
STATE (N.C.T. OF DELHI)  RESPONDENT
CRIMINAL APPEAL NO. 381 OF 2004
MOHD. AFZAL  APPELLANT
VERSUS
STATE (N.C.T. OF DELHI)
“IN THE RESULT, we dismiss the appeal filed by Mohd. Afzal and the death sentence imposed upon him is hereby confirmed. The appeal of Shaukat is allowed partly. He stands convicted under Section 123 IPC and sentenced to undergo RI for 10 years and to pay a fine of Rs. 25,000/- and in default of payment of fine he shall suffer RI for a further period of one year. His conviction on other charges is hereby set aside. The appeals filed by the State against the acquittal of S.A.R. Gilani and Afsan Guru are hereby dismissed.”

இத்தீர்ப்பில் தீவிரவாதம், தேசத்தின் மீது போர் போன்றவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன.மேலும் அப்சலுக்கும் இத்தாக்குதலுக்கும் இடையே உள்ள தொடர்பினையும் நீதிபதிகள் விரிவாக ஆராய்கிறார்கள். அவர் எப்படியெல்லாம் உதவினார் என்பதையும் எடுத்துரைக்கிறார்கள்.அவர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் முன் வைத்த வாதங்களையும் இத்தீர்ப்பினைப் படித்தால் புரிந்து கொள்ளலாம். ஆனால் மேம்போக்காக இத்தீர்ப்பினை விமர்சிப்பது எளிது. அவர் இதற்கு உடந்தையாகத்தான் இருந்தார், எனவே அவருக்கு மரண தண்டனைத் தந்திருக்கக் கூடாது என்றெல்லாம் வாதங்கள் எழுகின்றன.தீர்ப்பு தெளிவாக இருக்கிறது. ஏன் மரண தண்டனை தரப்படுகிறது என்பதையும் விளக்குகிறது.

(2) இதையெல்லாம் குறிப்பிட்ட காரணம் அருந்ததி ராய் என்கிற ‘அதி மேதாவி’ இவ்வழக்கு விசாரணையை குறை கூறி, பாராளுமன்றம் இதை விசாரிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவர் எதைச் சொன்னாலும் கை தட்டவும், அதை ஆதரித்து எழுதவும் ஒரு கூட்டம் இருக்கிறது. அந்த கூட்டத்திற்கு இது வேத வாக்குப் போன்றது. எனவே இந்த வாதம் தமிழில் பலரால் முன் வைக்கப்பட்டு, ராய் மேற்கோள் காட்டப்பட்டால் ஆச்சரியமடைய ஒன்றுமில்லை.

(3) இந்தியாவில் உள்ள பல மனித உரிமை அமைப்புகள்/ஆர்வலர்கள் மனித உரிமைகள் குறித்து உண்மையான அக்கறைக் கொண்டிருந்தாலும் தவறான நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள். நந்திதா ஹக்ஸர் நாகாலாந்தில் ராணுவத்தின் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடினார்.அதை நான் மதிக்கிறேன், அதே சமயம் அவரது அனைத்து நிலைப்பாடுகளையும் நான் ஏற்க முடியாது.சிவில் உரிமைகளுக்கான மக்கள் கூட்டமைப்பு (பியுசில்) எடுக்கும் சில நிலைப்பாடுகளையும் நான் ஏற்கவில்லை.அதன் பணிகளை மதிக்கிறேன். சில அமைப்புகள் மத சார்புடைய அமைப்புகளுடன் சேர்ந்து இயங்குகின்றன. இது தவறான முன்னுதாரணமாக முடியும். பொதுவாக ஹிந்த்துவ எதிர்ப்பில் தெளிவாக இருக்கும் அமைப்புகள், தனி நபர்கள் தீவிரவாதம் குறித்து சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று கருதுகிறேன். மேலும் மரண தண்டனை எதிர்ப்பு என்ற கண்ணோட்டத்திலும் அவர்கள் இதை நோக்குவதால் தவறான நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள்.

ravisrinivas@rediffmail.com

Series Navigation