அணு ! அண்டம் ! சக்தி !

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

சி. ஜெயபாரதன், கனடா



பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி
ஒரு பொரி உருண்டை
பரமாணுக்களாகி,
துணுக்காகி அணுவாகி,
அணுவுக்குள் அணுவாகித் திரண்டு
அண்டமாகி,
அண்டத்தில் கண்டமாகித்
கண்டத்தில்
துண்டமாகிப் பிண்டமாகி,
பிண்டத்தில் பின்னமாகிப்
பிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில்
பேரளவுச் சக்தி யாகித்
துணுக்குகள்
பிணைந்து, பிணைந்து பேரொளி யாகிப்
பிரம்மாண்டப் பிழம்பாகி,
பரிதியாகி,
பரிதியின் பம்பரப் பந்துகளாகி,
அன்னை
அம்மானை ஆடினாள் !
நீராகி, நிலமாகி, நெருப்பாகிப்
வாயுவாகிக்
கல்லாகி, மண்ணாகிக் காற்றாகி
புல்லாகி, நெல்லாகிப்
புழுவாகி, மீனாகி, பறவையாகி
ஒன்றுக்குள் ஒன்றாகி வெளியாகிப்
புணர்ச்சியில்
உருவுக்குள் கருவாகி,
தாயின்
கருவுக்குள் உருவாகி
நீயாகி, நானாகி, அவராகி, விலங்குகளாய்
வடிவாகி, வளர்ந்து,
வயதாகி
முடிவில் அவற்றை அழித்தாய்!

பெண்ணுக் குள்ளே எப்படி
என்னை வைத்தாய் ?
கண்ணுக் குள்ளே எப்படி
வண்ணம் வைத்தாய் ?
வான வில்லை எப்படி ஓவியமாய்
வளைத்தாய் ?
புயலையும், பேய் மழையும் எவ்விதம்
வியப்பாகப் படைக்கிறாய் ?
மின்னலை எப்படி
விண்ணில் வெடிக்கிறாய் ?
கன்றுக்குள் பசுவாகிப் பாலாகி,
காயாகிக் கனியாகி
ஒன்றுக்கு ஒன்று வித்தாகி,
ஒன்றும், ஒன்றும் இணைந்து மூன்றாகி,
மூன்று மூவாயிரம் கோடியாகித்
தொடர்ந்து
வித்திட்டாய் ! வேரிட்டாய் ! கிளை விட்டாய் !
விழுதிட்டாய் !
சந்ததி பெருக்க வைத்தாய் !
முதிர்ந்து மூப்பாகி
உதிர்ந்து விழ வைத்தாய் !
முதலாகி முதலுக்கு மூலமாகி,
மூலத்தின் புரியாத முதன்மை யாகி
முடிவே இல்லாத
மூத்தோனாகி,
வடிவே இல்லாத உருவாகி
உள்ளத்தைக் கடந்த
ஒளியாகிக் கனலாகி அகிலாண்டமாய்
உப்பிடும் குமிழாகி
உன்னைக் காட்டிச் செல்கிறாய் !

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan November 9, 2006] (R-1)

Series Navigation